மலையக மக்களின் அடையாள அட்டை பிரச்சினையை நிறைவேற்றதிகார ஜனாதிபதியே தீர்க்க வேண்டும் – அரவிந்குமார்

identity-card-sri-lanka.jpg“மலை யகத்தில் இலட்சக்கணக்கானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பதனால், அவர்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். காலாகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது விடயத்தில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கூடிய கவனம் எடுத்து, தீர்வினை ஏற்படுத்துவதே இப்பிரச்சினையின் தீர்விற்கான வழியாகும்.

இவ்வாறு, ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார், முன்னணியின் பதுளைப் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊவா மாகாண சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை, சமஉரிமை வேண்டுமென்று எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்களை, சிறிது காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, மலையக மக்களின் ஆளடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள அத்தியாவசியமான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டுமென்ற கோஷத்தையே முதலில் எழுப்ப வேண்டும். இதுவே, தற்போது மிக அவசியமானதாக இருந்து வருகின்றது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களே, மலையக மக்களிடம் இல்லாதுள்ளன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாது எந்த வகையிலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆகையினால், மலையக மக்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேசிய அடையாள அட்டை என்ற ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே, எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஆளடையாள ஆவணம் கிடைக்கப் பெற்றதும் ஏனைய உரிமைகளை பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற எமது மக்களில் பெரும்பாலானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றதை, காணக் கூடியதாக இருந்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ணவுக்கே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், அவர் வீடு சென்று தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான், வாக்களிப்பதற்கு அனுமதி கிடைத்தது.

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் அந்தளவில் இருக்கும்போது, அந்த ஆவணத்தை எம்மவர்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற நிலையும் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இது விடயத்தில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *