உயிரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு புலிகள் முயற்சி -கோஹன

Dr Kohonaவிடுதலைப் புலிகள் அண்மைக் காலங்களில் விமான எதிர்ப்பு மற்றும் உயிரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை சர்வதேசத்திடம் இருந்து கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: குறித்த ஆயுதங்கள் மிகவும் வெப்பமான வெடிபொருட்களைக் கொண்டிருக்கும். அத்துடன், அந்த ஆயுதங்கள் இரசாயனக் கலவை கொண்டதாகவும், அவை மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக் கூடியவையுமாகும். இதற்கான ஆதராங்கள் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்டதில் தெரியவந்துள்ளன. அத்துடன், பதிவுகள் எம்மிடம் உள்ளன. யுத்தம் முடிவடைந்ததும் இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.

சர்வதேச ஆயுத வர்த்தகர்களிடம் இருந்து ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதன் மூலம் படையினரை பலமிழக்கச் செய்வதற்கு புலிகள் முயற்சிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். புலிகளுக்கு போர்நிறுத்தம் என்பது தேவையில்லை. மாறாக, அவர்களின் ஆட்பலத்தை மறுசீரமைத்து சிறந்த பலத்துடன் மீண்டும் தாக்குதல் நடத்தவே அவர்களின் தேவையாகவுள்ளது. இதுவே கடந்த காலங்களில் இடம்பெற்றன.  புலிகள் விட்டுச்சென்ற 122 மில்லிமீற்றர் ஆட்டிலறியை அண்மையில் படையினர் கைப்பற்றினர். இது போர் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகமான ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய அவர்கள் முயற்சிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *