நிறைவேற்று அதிகார முறை இருந்ததாலேயே பயங்கரவாதத்தை இந்தளவு ஒழிக்க முடிந்தது – அமைச்சர் ஜீ.எல்.

glperisss.jpgநிறை வேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை இருந்ததாலேயே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு இலகுவாக ஒழிக்க முடிந்தது என வெளிநாட்டு வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார முறைமை இல்லாதிருந்திருப்பின் பயங்கரவாத ஒழிப்பு வெறும் கனவாகவே இருந்திருக்கும். நடந்து முடிந்த மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி இதனை வலியுறுத்தியும் உள்ளனர். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை மக்கள் அங்கீகரித்துள்ளமையையே கடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

வடமேல், மத்திய மாகாணங்களில் 5 மாவட்டங்களிலும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளை அரசாங்கம் வெற்றியீட்டியது. இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியாகும். விகிதாசார முறையிலான தேர்தல் ஒன்றின் மூலம் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. 1978ம் ஆண்டுக்கு முன்பு உள்ளதைப் போன்று தொகுதிவாரியான தேர்தல் முறை இப்போது இருந்திருக்குமானால் ஜே.ஆர். ஜயவர்தனா பெற்ற ஆறில் 5 பெரும்பான்மையை விஞ்சிவிடும் அளவுக்கு அமோக வெற்றியை அடைந்திருக்கலாம். எதிர்வரும் மேல் மாகாணம் மட்டுமல்ல பொதுத்தேர்தல் ஒன்றிலும் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே வெற்றிபெறும்.

இன்றுள்ள விகிதாசார முறையிலான தேர்தல் முறையை எவரும் விரும்பவில்லை. எனினும் இந்த தேர்தல் முறையை மாற்றுவதற்காக அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தெரிவுக்குழு நியமிக்கப்பட்டாலும் இதற்கு மாற்டான ஒரு முறைமை தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் முடியாதுள்ளது.

எனவே, எமக்கு கிடைக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு தேர்தல் முறைமையை மாற்ற முடியும் என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கு முதலாவதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாரிய அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டது.

இதேபோன்றே வடக்கிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், பாரிய அபிவிருத்தி, மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்படும். இவற்றுக்கு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை அவசியமாகின்றது என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *