ஏ-9 வீதி இன்று திறப்பு

uthaya_nanayakara_.jpgயாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 வீதி இன்று (02) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்துக்காகவும், விநியோக நடவடிக்கைகளுக்காகவும் இப்பாதை இன்று திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப்பிடுகையில், 1985ம் ஆண்டுக்குப் பின்னர் ஏ-9 வீதியை பாதுகாப்பு படையினர் மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.

பாதுகாப்பு படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் ஏ-9 வீதியிலுள்ள பிரதான நகரங்களான பரந்தன், கிளி நொச்சி, ஆனையிறவு என் பன புலிகளின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டன.

இதன் பயனாக ஏ-9 தரைவழியைத் திறந்து விடக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு படையினரின் தரைவழி போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இப்பாதை முதலில் திறக்கப்படுகின்ற போதிலும் இப்பாதைக்கு அருகிலுள்ள சில பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகள் பூர்த்தியானதும் பொது மக்கள் போக்குவரத்துக்காகவும் இப்பாதை திறந்துவிடப்படும்.

2002ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் ஏ-9 வீதி பொது மக்கள் போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திறக்கப்பட்டது. பொது மக்கள் புலிகளுக்கு வரி என்ற போர்வையில் கப்பம் செலுத்தி மிகுந்த சிரமங்களுடனேயே இப்பாதை வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டனர். இச்சமயம் பாதுகாப்பு படையினர் இப்பாதையைப் பயன்படுத்தவில்லை.

பாதுகாப்பு படையினர் ஆகாய மற்றும் கடல் வழியாகவே யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பெரிதும் நன்மை பெறுவது போல யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டு மக்களும் நன்மை அடைவர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பொருளாதாரத்துறை பெரிதும் மேம்பாடு அடையும்.

இப்பாதையை உத்தியோகபூர்வமாகத் திறக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஒரு இராணுவ குழுவினரும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மற்றொரு இராணுவகுழுவும் இன்று பயணத்தை முதலில் ஆரம்பிக்கும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *