தமிழ் தேசியமும், எதிர்காலமும் : ரகுமான் ஜான்


Tamil_Eelamதமிழினி எழுதியுள்ள ‘கூர்வாளின் நிழலில்’ என்ற நுhலிற்கு குறிப்பான சில முக்கியத்துவங்கள் இருப்பதாக நான் கருதுகின்றேன். யுத்தம் முடிந்து ஏழு வருடங்களாகியுள்ள நிலையில் இதுவரை வந்த வெளியீடுகளில், போராளிகள் புனைவுகளாக சிலவற்றை எழுதியுள்ளார்கள். இவற்றை திட்டவட்டமான வரலாற்று பதிவுகளாக, புலிகள் அமைப்பினுள் நிலவிய கருத்தியல் ரீதியான நிலைப்பாடுகளாக ஏற்றுக்கொள்ளவதில் பலவிதமாக சிக்கல்கள் இருக்கின்றன. இந்த வகையில் தமிழினி, ஒரு முன்னாள் போராளி என்ற வகையில், வெளிப்படையாக இந்த விசயத்தை முன்வைப்பதானது, யுத்தத்தின் இறுதிக்காலம் தொடர்பாகவும், அதற்கு முன்பாக அமைப்பினுள் நடந்தவை தொடர்பாகவும் திட்டவட்டமான மதிப்பீடுகளை மேற்கொள்ள முனைபவர்களுக்கு ஒரு கவனிப்பிற்கு உரிய, முக்கியமான பிரதியாக இருக்கிறது. ஏனென்றால், இது அமைப்பிற்கு வெளியில் இருந்தவர்களால் முன்வைக்கப்படும், பக்க சார்பான விமர்சனமல்ல, அமைப்பிற்குள்ளிருந்து, தனது வாழ்வின் பெரும்பகுதியை அதனூடாக பயனித்த ஒருவரால் முன்வைக்கப்படும் பதிவாக இது அமைகிறது.

அடுத்ததாக, இந்த நுhலின் நோக்கம் பற்றி தமிழினி கூறுகையில், எதிர்கால சந்ததியானது, எமது போராட்டம் தொடர்பாக படிப்பினைகளை பெறவேண்டும்; என்பதற்காக தான் இந்த நுhலை எழுதுவதாக குறிப்பிடுகிறார். இது முக்கியமானதாகும். ஒரு தலைமுறை என்ன நடந்தது என்பதற்காக பதிவுகள் எதுவும் இன்றி இருட்டில் விடப்படும் நிலைமையானது, சமூக அக்கறையுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். இவற்றைவிட தமிழினி கைதான பிறகு உலாவிய வதந்திகள். குறிப்பாக அவரது நடத்தைகள், அவர் மேற்கொண்டதாக சொல்லப்படும் காட்டிக் கொடுப்புகள், அவர்மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் வல்லுறவுகள் பற்றிய வதந்திகள், அவர் வெளிவரும்போது வெளியான அவர் அரச தரப்பில் தேர்தலில் கலந்துகொள்வதான சேதிகள் போன்றவை ஒரு போராளி என்றவகையில் எவரையும் பாரதூரமாக பாதிக்கக்கூடியவைதாம். ஆதலால், இப்படிப்பட்ட, புலிகள் அமைப்பினுள் குறிப்பிடத்தக்க உயர் அதிகாரபீடத்தில் இருந்ததாக சித்தரிக்கப்பட்ட ஒருவர், தனது தன்னிலை விளக்கத்தை முன்வைக்க நேர்வது என்பது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே அமைந்தும்விடுகிறது. ஆகவே மேலே கூறிய எல்லா காரணங்களினாலும், இப்படிப்பட்ட ஒரு நுhலின் வரவானது தவிர்க்க முடியாததும். வரவேற்கத் தக்கதும் என்றே நான் கருதுகிறேன்.

இந்த நுhலானது எதிர்பார்த்தது போலவே, மிகவும் வித்தியாசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போலவே புலியெதிர்ப்பாளர்கள், புலிகள் மீதான தமது தாக்குதல்களுக்கு இந்த நுhலை ஒரு கருவியாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். இதில் ஆச்சரியப்பட எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த நுhலின் சிங்கள் மொழிபெயர்ப்பானது, சிறீலங்கா இராணுவத்தினால் விரிவாக வினியோகிக்கப்படுவதாக தெரிய வருகிறது. இதுவும் எதிர்பார்க்கத் தக்கதேயாகும். புலிகளின் தீவிரமான ஆதரவாளர்கள் இந்த நுhலை தீவிரமாக எதிர்ப்பதையும் காண முடிகிறது. இந்த பிரதி பற்றி பேசப்படவே கூடாது என்பதில் இவர்களது அக்கறைகள் இருப்பதாக தெரிகிறது. இதுவும் புரிந்துகொள்ளத் தக்கதே. கடந்த காலத்தில் ஈழப் போராட்டத்தை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருந்தவர்கள், அதற்கான பதில் சொல்லும் பொறுப்பு தமக்கு இருப்பதையே புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் இருந்து இப்படியான எதிர்வினை வருவது புரிந்து கொள்ளத்தக்கதேயாகும்.

ஆனால் இதன் உச்ச கட்டமாக அகரமுதல்வன் தனது ‘சாகாள்’ என்ற சிறுகதை மூலமாக செய்ய முனைவது அப்பட்டமான ‘பாலியல் வன்முறையாக’ அமைகிறது. எதிரிகள் எமது பெண்களை பாலியல்ரீதியாக தாக்கினார்கள் என்றால், நாம் எம்முடன் கருத்தியல்ரீதியாக முரண்படுபவர்களை புனைவுகள் மூலமாக அதே ‘பாலியல் வன்முறைக்கு’ உள்ளாக்குகிறோம். இது எந்த வகையிலும் அனுமதிக்கப்பட முடியாத விடயமாகும். எம்முடன் கருத்துரீதியாக முரண்படுபவர்களை, அவர்கள் பெண்கள் என்பதற்காக, பாலியல்ரீதியாக நாம் இழிவு செய்ய முனையும்போது, நாம் மிகவும் அடிப்படையான மனித அறங்களுக்கு அப்பால் செல்வதாகவே அர்த்தப்படும். இது ஒருபோதும் அனுமதிக்கப்பட முடியாததாகும். இந்த உலகில் எந்தவொரு பெண்ணும், பெண் என்பதற்காக தாக்கப்படும் நிலைமை நிலவும்வரையில், மனிதர்கள் எவருமே விடுதலை பெற்றவர்களாக ஆக முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வர்க்கம், தேசம், சாதி, பாலினம் போன்ற எந்த அடிப்படையிலானாலும், நாம் மனிதகுலத்தின் மான்புகளை மீறிவிட முடியாது. இப்படியாக பெறப்படும் “விடுதலைகள்” உண்மையில் விடுதலையாக அமையமாட்டாது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த வகையில் அகரமுதல்வனது ‘சாகாள்’ சிறுகதைக்கு எனது கண்டனத்தை இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்கிறேன்.

இன்னொரு பகுதியினர் இந்த நுhலை வரவேற்கிறார்கள். எமது போராட்டம் தொடர்பாகவும், அதில் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்தும் ஒரு விரிவான கலந்துரையாடலுக்கு இந்த நுhல் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் என அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கும் என்பது இவர்களது எதிர்பார்ப்பாகும். எனக்கும் இந்த நோக்கத்துடன் முழுமையான உடன்பாடு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே நான் இந்த நுhல் மதிப்பீட்டில் கலந்துகொள்கிறேன்.

எனது உரையில் ஆரம்பத்திலேயே நான் இந்த நுhல் தொடர்பாக எழும் ஒரு குறிப்பான பிரச்சனை குறித்து எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். எந்தவொரு போராட்டத்திலும் எழும் பிரச்சனைகள் தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபடும் ஒரு தரப்பினர் வெளிப்படையாக மதிப்பீடுகளை, விமர்சனங்களை முன்வைப்பதானது, அவற்றை எதிரிகள் எமக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும் ஆபத்து இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. ஆனால் இங்குள்ள பிரச்சனை என்பது, எதிரிகளால் எமக்கு தற்காலிகமாக ஏற்படுத்தப்படும் அசெளகரியங்கள் என்பதைக் கடந்து, எமது விமர்சனங்களின் நீண்டகால விளைவுகள் குறித்ததாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். இது தொடர்பாக சற்று விரிவாக பேசுவது அவசியமானதாகிறது.

இந்த இடத்தில் நாம் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியில் லெனின் முகம்கொடுத்த இதுபோன்றதொரு பிரச்சனையை பார்த்துக்கொள்வது எமக்கு படிப்பிணையாக அமையும் என்று நினைக்கிறேன். 1903ம் ஆண்டில், ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியின் இரண்டாவது கொங்கிரஸ் கூடுகிறது. இந்த கொங்கிரசில், எப்படிப்பட்டதொரு கட்சியை புரட்சியாளர்கள் கட்ட வேண்டும் என்பது குறித்து பாரிய முரண்பாடுகள் எழுந்தன. இறுதியில் இது ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியை போல்சேவிக்குகள் – மென்சேவிக்குகள் என்று, இரண்டாக பிளவுபடுத்தும் அளவிற்கு இட்டுச் சென்றது. இந்த கொங்கிரசின் பின்னர், லெனின் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதத்தில் ‘ஓரடி முன்னால், ஈரடி பின்னால்’ என்ற நுhலை எழுதுகிறார். அப்போதும் இதே மாதிரியான விமர்சனமானது இந்த நுhலுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. கட்சிக்குள் நடைபெறும் விவாதங்கள் பற்றி பகிரங்கமாக பேசுவதானது, எதிரிகள் கட்சியை இழிவுசெய்வதற்கு காரணமாக அமைந்துவிடும் என்ற இதே காரணமே அங்கும் முன்வைக்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த லெனின், எதிரிகள் இப்படிப்பட்ட பிரசுரங்களை புரட்சியாளர்களை இழிவுபடுத்துவதற்கு பயன்படுத்தக்கூடும் என்பதை மறுக்கவில்லை. மாறாக, குறுகிய காலத்தில் இப்படியாக எதிரிகளால் ஏற்படக்கூடிய சிரமங்களை விட நீண்டகால நோக்கில் கட்சிக்குள் தமது கருத்தானது நிலைநாட்டப்படுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பரிசீலிப்பதே சரியானதாக இருக்கும் என்று வாதிடுகிறார்.

ரஷ்யா போன்றதொரு பெரிய நாட்டில், கட்சி அங்கத்தவர்கள் பலரும் தலைமறைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புலம் பெயர்ந்தும் வாழும் நிலையில், ஒரு வெளிப்படையான பிரசுரத்தின் மூலமாக அன்றி, அங்கத்தவர்கள் அனைவரையும் சென்றடையும் விதத்தில் ஒரு விவாதத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று வாதிடுகிறார். வரலாறானது லெனினுடைய நிலைப்பாடே சரியானது என்று தீர்ப்பளித்தது. எமது விடயத்திலுங்கூட, நாம் எதிரியை காரணமாக காட்டி, எமக்குள் நடந்தாக வேண்டிய மிகவும் முக்கியமான கருத்துப் பரிமாறல்களை, விவாதங்களை, பதில் சொல்லும் பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிட முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும். ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் எதிரிகள் இது போன்ற எந்தவொரு வெளியீட்டையும் பயன்படுத்தும் சாத்தியம் இருக்கிறது என்பதை யாருமே மறுத்துவிட முடியாது. ஆனால் இந்த இடையூறுகளைவிட, மக்களுக்கு பதில்சொல்லும் பொறுப்பும், போராட்டத்தை மதிப்பீடு செய்யும், சுயவிமர்சனம் செய்யும் கடமையும் மிகவும் முதன்மை பெறுகின்றன என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது இப்போது, முன்னெப்போதையும் விட, முக்கியமான விடயமாக ஆகிறது என்பதை மனதில் பதித்துக்கொள்வோம்.

இன்றைக்கும் நாங்கள் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் மெளனம் சாதித்துக் கொண்டு, அல்லது ஊகங்களை வெளியிட்டுக்கொண்டிருப்பவர்கள், இது போன்ற நுhல்கள் என்று வரும்போது எழுப்பும் ஆட்சேபனைகள் அபத்தமானவை என்பது எனது கருத்தாகும். எமது கடந்தகால தோல்விகளை, இழப்புகளைப் பற்றி நாம் சரியான மதிப்பீடுகளை, விமர்சனங்களை செய்தாக வேண்டுமானால், நாம் பல விடயங்களை வெளிப்படையாக பேசித்தான் ஆக வேண்டும். இவ்வாறு பேசுவதானது எமக்கு தற்காலிகமாக சில சங்கடங்கள், நெருக்கடிகள், காயங்கள் என்பவற்றை ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதைப் பேசாமல் பொத்தி எங்கு கொண்டுப் போகப் போகிறோம் என்பது தான் பிரச்சினை. எனவே நுhலானது மிகவும் அத்தியாவசியமான ஒரு வரவாகும். இந்த நுhலில் குறிப்படப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் கூட, இந்த நுhலின் வரவின் தேவையை மறுக்க முடியாது. இந்த நுhலில் கூறப்பட்டுள்ள பல்வேறு சம்பவங்கள் மற்றும் ஆசிரியரது கருத்துக்கள் பலவற்றுடன் நாம் முரண்பட முடியும். ஆனால் எந்தவிதமான விமர்சனங்களும், இந்த பிரதியின் அவசியத்தை மறுத்துவிட முடியாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த கூட்டத்தில் நான்குபேர் உரையாற்றுகிறோம். மற்றய மூவரும் நுhலுடைய உள்ளடக்கம், அதில் கூறப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக தமது மதிப்பீடுகளை முன்வைத்திருக்கும் நிலையில், நான் இவற்றை கடந்து, புலிகள் அமைப்பு மேற்கொண்ட கோட்பாட்டு அரசியல், அமைப்புத்துறை சார்ந்த நிலைப்பாடுகள் எவ்வாறு இந்த நுhலில் குறிப்பிடப்படும் நிலைமைகளுக்கு அந்த அமைப்பை தவிர்க்க முடியாதவாறு இட்டுச் சென்றன என்ற அக்கறையுடன் இந்த உரையை தொடர விரும்புகிறேன். இப்படிப்படதொரு அணுகுமுறையானது, இந்த நுhல் குறிப்பிடப்படும் ஒவ்வொரு நிகழ்வுகள், மற்றும் ஆசிரியரது நிலைபாடுகள் தொடர்பாக குறிப்பாக பேசுவதாக அமையாமல் விடலாம். ஆனால் ஏன் இப்படிப்பட்ட நிலைமைகளுக்கு புலிகள் அமைப்பும், எமது போராட்டமும் இட்டுச் செல்லப்பட்டன என்பது குறித்த ஒரு படத்தை எனது உரை உருவாக்கும் என்று நம்புவதனால், இந்த “வழி விலகளை” தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொண்டு, எனது உரையை தொடர்கிறேன்.

எந்தவொரு போராட்டத்திலும் தனிப்பட்ட போராளிகளும், அமைப்புகளும் பிரக்ஞைபூர்வமாகவோ அல்லது பிரக்ஞைபூர்வமற்றோ சில கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இந்த நிலைப்பாடுகள் அவர்களது போராட்டம் முழுவதையும் வழிநடத்தி, அந்த போராட்டங்களில் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. ஆகவே எம்மைப் போல ஒரு போராட்டத்தின் தோல்வியில் இருந்து உண்மையிலேயே படிப்பிணை பெற விரும்பும் எவரும், எமது போராட்டத்தை வழிநடத்திய கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த நிலைப்பாடுகளை முதலில் கண்டறிய வேண்டும். பின்னர் இந்த நிலைப்பாடுகள் எவ்வாறு அதன் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்த வெற்றி – தோல்விகளுக்கு இட்டுச் சென்றன என்பதை சரிவர பின்தொடரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நடந்து முடிந்த தோல்விகளில் இருந்த சரியான படிப்பிணைகளை பெறுவதாக அர்த்தப்படும்.

கடந்த காலத்தில் புலிகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் எல்லாமே தேசத்துரோகம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. துரோகிகள், ஒட்டுக் குழுக்கள் என்பவைதான் இதனை செய்கின்றார்கள் என்று கூறப்பட்டது. அவர்களும் செய்தார்கள் என்பதும் உண்மை. ஆனால், தமிழ் மக்களது தேசியம் என்பது புலிகளது பாதையை மாத்திரம்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும் என்பது சரியான வாதமாகாது.

அவ்வாறே, புலிகளை விமர்சிப்பதாக கூறுபவர்கள் சிலரும், தமிழ் தேசியத்தை புலிகளிடம் இருந்து பிரிக்க முடியாததாகவே காண்கிறார்கள். தமிழ் தேசியவாதமானது எப்போதும் பிற்போக்கானதாகவே இருக்க முடியும் என்கிறார்கள். இதனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரையுமே புலிகளின் தரப்பில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த இரண்டு தரப்பினரும், பொதுவில் தேசியம், குறிப்பாக தமிழ் தேசியம் எப்போதும் ஒரு குறிப்பான பாதையையே மாத்திரமே எடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே பிரச்சனையை அணுகுகிறார்கள். புலிகள் தமது ஏக பிரதிநிதித்துவத்தை முன்னிலைப் படுத்தியதற்கும், இந்த விமர்சகர்களது பார்வைக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது.

ஒரு நகரத்திற்கு போவதற்கு பல்வேறு வழிகள் இருப்பது போல, ஒவ்வொரு சமூகத்தின் போராட்டமும் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்படலாம். ஒவ்வொரு சமூகமும் தனது புரட்சியை எவ்வாறு பார்க்கிறது என்பதை அந்த சமூகத்திலிருக்கின்ற வர்க்கப் பிரிவுகள், பல்வேறு சாதியினர், பாலினத்தவர் மற்றும் பல்வேறு பிரதேசப் பிரிவுகள், அவர்கள் சார்ந்த கருத்தியல் சார்ந்து வெவ்வேறு நிலைப்பாட்டை எடுக்கலாம். இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு போராட்டத்திற்கு ஒரேயொரு வழிதான் சாத்தியமானதும், சரியானதும் என்பதை எவ்வாறு நிறுவப்போகிறோம்? என்ற பிரச்சனை எழுகிறது அல்லவா?
குறிப்பிட்ட ஒரு மக்களின் விடுதலைக்கு சாத்தியமான வழிகளில் ஒன்றைத் தவிர, ஏனையவை எல்லாவற்றையும் மூடிவிட்டோம் என்றால், அந்த குறிப்பிட்ட பாதையில் ஏதாவது ஒரு நெருக்கடி அல்லது முட்டுக்கட்டை ஏற்படும்போது என்ன நடக்கிறது? முழுப்போராட்டமும் ஸ்தம்பித்துப் போகும் அபாயம் இங்குதான் ஏற்படுகிறது. எம்மில் பலரும் விரும்புவது போல போராட்டம் என்பது நாங்கள் நினைக்கிறது போல அவ்வளவு எளிதானதாக இல்லை. அண்மையில் வெளிவந்த ஒரு நாவலில் “ஒரு இயக்கமிருந்தால் எல்லாம் சுலபம் என்றதால்தான் மிச்சத்தை எல்லாம் தடை செய்து விட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக வரலாறு என்பது அவ்வளவு அத்தனை எளிமையானதாக இருப்பதில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

உலகத்தில் எந்தப் போராட்டத்தை எடுத்துப் பார்த்தாலும், அதன் ஆரம்ப காலங்களில், வெவ்வேறு சிறுசிறு குழுவினர், தமது தொழில், கல்வி நிலையம் சார்ந்தும், உள்ளூர் அளவிலுமே தோற்றம் பெறுகின்றன. காலப்போக்கில், இந்த குழுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு, கருத்துரீதியிலும், அமைப்புரீதியிலும் ஒன்றாக இணைய, அல்லது கூட்டாக செயற்பட தொடங்குகின்றன. அப்போதுங்கூட எல்லா அமைப்புகளும் ஒன்றாக இணைந்துவிடுவதும் முடிவதில்லை. ஏனென்றால் தொழிலாளருக்காக போராடும் ஒரு இயக்கமானது, விவசாயிகளை ஒன்றிணைப்பதில் பெரிய கஸ்டங்கள் இருக்கின்றது.

இதனை விட நடுத்தர வர்க்கம் இருக்கிறது. பிரதேச ரீதியான குழுக்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட முரண்பாடுகள் ஊடாகத்தான் வரலாறானது தனது பக்கங்களை விரித்துச் செல்கிறது. இப்படிப்பட்ட முரண்பாடுகளை கடந்து, போராட்ட சக்திகள் எவ்வாறு தமது ஆற்றல்களை ஒன்று திரட்டுவதில் வெற்றி பெறுவது என்பதுதான் பிரதான அக்கறையாக இருக்க வேண்டும். இதனை செய்வதற்கு மிகவும் விஸ்தாரமான தரிசனம் (vision) ஒன்று தலைமை சக்திகளிடம் இருக்க வேண்டும். அப்படியான ஒரு நிலையில் விரிவான கருத்துக்களின், விவாதங்களின் அடிப்படையில், பல்வேறு சக்கதிகளதும் நலன்களை உள்ளடக்கும் விதத்தில் ஒரு அரசியல் திட்டத்தை முன்வைப்பதும், அதன் அடிப்படையில் விரிவான அளவில் பலதரப்பட்ட சக்திகள் இணைந்து செயற்படுவது சாத்தியப்படுவது சாத்தியப்படும்.

ஆனால் இந்த பணியானது ஈழப்போராட்டத்தில் எவ்வாறு கையாளப்பட்டது என்று பார்ப்போம். சக அமைப்புகள் அனைத்தையும் தடைசெய்வதன் மூலமாக ஏகபோக தலைமையை, ஏக பிரதிநிதித்துவத்தை அடைய முற்படுவது என்பது, வரலாற்றுரீதியான ஒரு விரிவான பணியை செய்ய முடியாமல், குறுக்கு வழிகளினால் வரலாற்றுக் கடமைகளை ஒரே தாண்டில் தாண்ட முயல்வதாகவே அர்த்தப்படும் அல்லவா? இப்படியாக எல்லவாவற்றையும் மிகவும் எளிதாக முடிந்துவிடும் என்று விரும்புபவர்களாயிருந்தால் நாங்கள் போராட்டத்திகே வந்திருக்கத் தேவையில்லை அல்லவா?

ஒரு போராட்டம் என்று வரும்போது, போராளிகள் பல சிக்கலான, கடினமான விடயங்களை செய்வதற்கு தயாரனவர்களாக இருக்கிறார்கள். மோசமான பல எதிரிகளை எதிர்த்து நாம் அரசியல், பொருளாதாரம், யுத்தம் போன்ற பல்வேறு தளங்களிலும் போராடியாக வேண்டியுள்ளது. இது போன்றே அமைப்புத்துறையும் என்பதும் நாம் போராட்டத்தில் தவிர்க்க முடியாதபடி முகம்கொடுத்தாக வேண்டிய ஒரு துறைதான். இப்படிப்பட்ட விளக்கத்துடன் நாம் அமைப்பினுள்ளும், ஏனைய அமைப்புகளுடனும் தொடர்புடைய விடயங்களை எடுத்துக்கொண்டு> அவற்றை எமது போராட்டத்தின் உயர்ந்தபட்ச நன்மைகளைக் கருத்திற்கொண்டு அணுகத் தயாரானவர்களாக இருக்க வேண்டும். அமைப்புத்துறை தொடர்பான பிரச்சனைகளையும் ஆக்கபூர்வமாக முகம் கொடுத்தாகவே ஒழிய, இதற்கு வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது.
எனது அபிப்பிராயம் என்னவென்றால், தேசியத்திற்கு இன்னும் அதிகம் மாற்று வழிகள் உள்ளன. தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இன்னும் பல வழிகள் இருக்கின்றன. அதில் முற்போக்கான தேசியமும் எப்போதும் ஒரு சாத்தியமான வழிதான். எங்களுக்கு சமுதாயத்தில் ‘முற்போக்குத் தேசியம்’ என்பதே ஏதோ அபத்தம் (oximoron) போல பார்த்து நகைக்கும் ஒரு வழக்கம் இருப்பதை நான் நன்கு அறிவேன். ஏதோ ஒட்டாத இரண்டு அம்சங்களை வலிந்து பிடித்து ஒட்டி வைத்தது மாதிரி புரிந்து கொள்ளப்படுகிறது. தேசியம் எப்படி முற்போக்கானதாக இருக்கும்? என்று இவர்கள் எம்மைப் பார்த்து கேட்கிறார்கள்.

பலஸ்தீன, குர்திஸ், காஷ்மீர் விடுதலைப் போராட்டங்களுக்கு எல்லாம் ஆதரவு தெரிவிப்பதில் எமக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. ஆனால் ஈழப்பிரச்சினை வந்தால் மட்டும் இடருகின்றோம் ஏனென்று விளங்கவில்லை. தேசியம் என்பதை பொத்தம் பொதுவாக எடுத்துப் பார்த்தால், அதில் வியட்நாமின் விடுதலைப் போராட்டம் என்பதை அதன் இடது கோடியில் இருந்தால், சியோனிஸம் பாசிஸம் என்பவை அதன் வலது கோடியில் அமையும் ஒரு நீண்ட நிறமாலையை (spectrum ஒன்றை)எம்மால் வரலாற்றில் காண முடியும். யதார்த்தத்தில் தேசியவாதம் என்பது பெரிய வேறுபாடுகளைக் காட்டக் கூடியது. வரலாற்றில் பல முற்போக்கான தேசியவாத இயக்கங்கள் தோன்றியிருப்பது போலவே, பிற்போக்கான தேசியவாத இயக்கங்களும் தோன்றியுள்ளன. இதற்குள் நாங்கள் எந்த கருத்துநிலை எடுக்கிறம் எந்த மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டிருக்கிறம் என்பதைப் பொருத்துத்தான் தேசியத்தின் முற்போக்கு – பிற்போக்கு தன்மை என்பது தீர்மானிக்கப்படுகிறதே அன்றி, தேசியவாதத்திற்கு என்று தனியான பண்புகள் எனக் கிடையாது. மதம், தேசியவாதம் போன்ற வெகுசன சித்தாந்தங்கள் (popular ideologies) சார்பளவில் நடுநிலையானவை: அவை எந்த சமூக நலன்களோடு இணைக்கப்படுகிறதோ, அதுவே அதன் முற்போக்கு – பிற்போக்குத் தன்மையை தீர்மானிக்கின்றது, என்று பிரபல பின் – மார்க்சியவாதியான எனர்ஸ்ரோ லக்லோ (Ernesto Laclau) என்பவர் குறிப்பிடுகிறார்.

நாங்கள் கிறிஸ்துவத்தை போப்பாண்டவரோடு இணைத்துப் பார்ப்போம் என்றால் பழைய போப் வேறு மாதிரி இருந்தார். தற்போதைய போப் வெறு மாதரி இருக்கின்றார். அதே நேரம், விடுதலை இறையியலதின் பெயரால் தென்னமெரிக்க நாடுகளில் நடைபெறும் கெரில்லா யுத்தங்களில் பாதிரிகள் சாகிறார்கள். நிக்கரகுவாவில் புரட்சிகர அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார் ஒரு பாதிரி. இதே மாதிரி வெவ்வேறு சமயங்களிலும் இப்படிப்பட்ட முற்போக்கு – பிற்போக்கு பிரிவுகள் இருப்பது வரலாற்றுபூர்வமாகவே நிரூபனமான விடயங்கள்தாம்.

அப்படியானால் முற்போக்கான தேசியவாதத்தின் பண்புகள் எப்படிப்பட்டனவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா? என்னைப் பொருத்தவரையில், நமது காலகட்டத்தில் ஒரு தேசியவாத இயக்கமானது முற்போக்கானதா அல்லது பிற்போக்கானதா என்பதை நாம் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க முடியும் என்று கருதுகிறேன்.
1) ஏகாதிபத்திய காலகட்டத்தில் எந்தவொரு தேசியவாத இயக்கமும் ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்டிராதவரையில் அது தேசியவாத இயக்கமாக முரணன்றி செயற்பட முடியாது.
2) தனது பிராந்தியத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு எதிரானதாக இந்த இயக்கம் இருக்க வேண்டும். எமது போராட்டத்தில் இது இந்திய, சீன மேலாதிக்கத்திற்கு எதிராக விட்டுக்கொடாமல் போராடியாக வேண்டும்.
3) எல்லா சமூகங்களிலும் ஆதிக்க உறவுகள் நிலவுகின்றன. இந்த முரண்பட்ட உறவுகளில் முற்போக்கான தேசியவாதமானது, ஒடுக்கப்பட்ட சமூக சக்திகளுடன் தன்னை இனம் காண வேண்டும். எமது சமூகத்தில் நிலவும் வர்க்க, பிரதேச, சாதிய, பால்வாத உறவுகள் தொடர்பாக தேசியவாத இயக்கம் மேற்கொள்ளும் நிலைப்பாடானது இங்கு தீர்க்கமான அம்சமாக அமைகிறது.
4) குறிப்பிட்ட தேசத்தின் விடுதலை என்பது ஜனநாயகத்தின் உயரந்த பட்ச கோரிக்கையாகும். சக தேசங்களுக்கு சமமாக, இணையாக தானும் இருக்க வேண்டும் என்பதைத்தான் அது வெளிப்படுத்துகின்றது. இங்கு நாங்கள் ஏனைய தேசங்களிற்கு எதிராக எந்தவிதமான தப்பெண்ணங்கள் (prejudice) வெறுப்புணர்வையும் ((xenophobia) காட்ட முடியாது. சக தேசங்களோடு சமமாக இருக்க யோசிக்கின்றோமே அல்லாது இன்னொரு தேசத்தை ஒடுக்க இடமளிக்க முடியாது. இனச்சுத்திகரிப்பு இனப்படுகொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என்பவை மிகவும் பிற்போக்கான தேசியவாதத்தின் அறிகுறிகளாகும்.

5) புரட்சியாளர்கள் என்பவர்கள் புதிய சமுதாயத்தை படைக்க முனைபவர்கள் என்ற வகையில் உயர் மனித விழுமியங்களை கட்டமைப்பவர்களாக இருக்கிறோம். இதனால் முற்போக்கான தேசியவாதமானது ஜனநாயம், மனித உரிமைகள், கூட்டம் கூடுவதற்கும், தமது உரிமைக்காக போராடுவதற்குமான மக்களின் உரிமைகளை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். அடக்குமுறை, சிறை, சித்திரவதைகள் என்பவற்றை இது கொண்டிருக்க முடியாது.

பொதுவில் இவ்வாறாக கூறுவது பலருக்கும் பிரச்சனையாக இருப்பதில்லை. ஆனால் இந்த முற்போக்கான அம்சங்களை எப்போது வெளிப்படுத்துவது என்பதில் பலருக்கு “தந்திரோபாயம்” பற்றிய குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதாவது, நாம் சமூகத்தின் அகமுரண்பாடுகள் பற்றி பேசுவதானது, எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு சமூக பிரிவுகளிடையே பிளவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், அவற்றை போராட்டம் வெற்றி பெரும்வரையில் ஒத்திப்போடும் “தந்திரோபாயத்தை” நாம் கையாள வேண்டும் என்பதாக இவர்கள் வாதிட முனைகிறார்கள்.
இவர்களது வாதத்தில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன.
1) எமது சமுதாயம் ஏற்கனவே ஒற்றுமையாக இருப்பதாகவும், அக ஒடுக்குமுறைகளை களைவதற்கான கோரிக்கைகள்தாம் எமது சமுதாயத்தை பிளவுபடுத்திவிடும் என்பது போலவும் வாதிடுவதானது அப்பட்டமான அசட்டுத்தனமாகும். வர்க்க சாதிய, பிரதேச, பால்ரீதியான பாகுபாடுகள் நிலவும் எந்தவொரு சமுதாயமும் ஒற்றுமையான சமுதாயமல்ல. மாறாக, அக முரண்டாடுகளால் பிரிந்துகிடக்கும் சமுதாயமே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்படியாக பிளவுபட்டுள்ள சமுதாயத்தில், இந்த அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூலமாக நாம் இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளை, ஒரு முதலாளித்துவ ஜனநாயக காலகட்டத்தினுள் களையக்கூடிய அளவுக்கு அகற்றுவதனால் மாத்திரமே ஒரு தேசத்தின் ஒற்றுமையை கட்டமைக்க, உண்மையான வீரிவத்தை வெளிக்கொணர முடியும்.

2) நாம் கூறும் முற்போக்கான அம்சங்கள் என்பவை போராட்டத்தின் ஊடாக, போராட்ட காலகட்டத்திலேயே படிப்படியாக கட்டமைக்கப்பட வேண்டுமே ஒழிய, போராட்டம் முடிந்த பின்னர் அவர்களது உரிமைகளை தரமுடியும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை போராடுமாறு அணிதிரட்ட முடியாது. நாம் போராட்டத்தின் ஊடாக கடைப்பிடிக்கும் முற்போக்கான அம்சங்களின் ஊடாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய போராட்டத்தில் நம்பிக்கை வைக்கவும், அதை நோக்கி திரட்டப்படவும் சாத்தியமாகுமே ஒழிய வெறும் வாக்குறுதிகளினால் அல்ல. ஒரு போராட்டமானது எப்படிப்பட்ட நடைமுறைகளில் ஊடாக கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே, அந்த அமைப்பில் இணைந்து கொள்பவர்களும், அதன் தலைமையும் தீர்மானிக்கப்படுகின்றன. முற்போக்கான நடைமுறைகளை கைவிடும் ஒரு அமைப்பின் அங்கத்துவமும், முக்கியமாக அதன் தலைமையும் பிற்போக்கான, ஒடுக்கப்படும் சக்திகளின் கரஙங்களுக்கு சென்ற பின்னர் போராட்டத்தின் வெற்றியை அடுத்து சமூக ஒடுக்குமுறைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கான தேவைகள் எவ்வாறு உருவாகின்றன? என்பது யோசிக்க வேண்டிய விடயமல்லவா? இப்படியாக நம்புவதற்கான வரலாற்றுபூர்வமான சான்றுகள் இல்லை என்பதே உண்மையாகும். சீனப் புரட்சிக்கும், இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் இடையிலான வேறுபாடே இதனை தெளிவாக காட்டும்.

எமது போராட்டமானது கடந்த காலத்தில் பிற்போக்கானதாக அமைந்திருந்தது என்றால் அதற்கான காரணங்கள் என்ன என்ற கேள்வியை எழுப்புவது இங்கு முக்கியமானது அல்லவா? தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்த தமிழ் கொங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பவை தமிழ் தரகு முதலாளிய வர்க்கங்களது பிரதிநிதிகளாக இருந்தார்கள் என்பதும், அவர்கள் வெறும் தேர்தல் அரசியலை முன்வைத்து தமிழ் மக்களது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு> தமிழ் தேசியத்தில் குளிர் காய்ந்தார்கள் என்பதும் உண்மைதான். பிற்காலத்தில் தோன்றிய இயக்கங்களும் இந்த தரகு அரசியலில் இருந்து தம்மை முறித்துக்கொள்ளவில்லை என்பதும் பாதி உண்மை மாத்திரமேயாகும். மறுபுறத்தில், எமது சமூகததில் செயற்பட்ட முற்போக்கு சக்திகள் என்று கருதப்பட்ட இடதுசாரி அமைப்புகள், தமிழ் மக்களது தேசியவாத இயக்கத்தில் என்னவிதமான தாக்கத்தை, பாத்திரத்தை ஆற்றினார்கள் என்பதும் கேள்விக்குரியதாகிறது அல்லவா?

1983ம் ஆண்டில் கூட, “தமிழ் மக்கள் ஒரு தேசம் இல்லை” என்றும் தமிழ் தேசியம் என்பது “தமிழ் தொழிலாளியை சுரண்ட தமிழீழம் கேட்கிறார்; தமிழ் முதலாளி” என்றும் பேசிக்கொண்டு இருந்த தமிழ் இடதுசாரி கட்சிகளின் பாத்திரத்தை எவ்வாறு மதிப்பிடுவது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது அல்லவா? தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் தமிழ் மக்களின் தரப்பில், அந்த போராட்டங்களில் கலந்துகொண்டு,, போராடும் மக்கள் மீது தமது கருத்தியல்ரீதியான தலைமையை நிறுவுவதற்குப் பதிலாக, கண்களை மூடிக்கொண்டிருந்தால், அல்லது அந்த போரட்டத்தை வெறுமனே விமர்சித்துக்கொண்டு மாத்திரம் இருந்தால் என்ன நடக்குமோ அதுவே நடந்து முடிந்தது.

இயற்கை மாத்திரமல்ல, சமூகமும் கூட வெற்றிடத்தை அனுமதிப்பதில்லை. மக்கள் திரளின் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவற்றிற்கு கருத்தியல்ரீதியாகவும். அமைப்புரீதியாகவும் தலைமையை கொடுக்க முற்போக்கு சக்திகள் தவறும்பட்சத்தில், அந்த வெற்றிடத்தில் பிற்போக்கு தலைமையானது தம்வசப்படுத்திக்கொண்டது. வசீகரமாக பேச்சுக்களும், வார்த்தை ஜாலங்களும் கோட்பாட்டு, அரசியல், அமைப்புரீதியாக வெற்றிடத்தை ஆட்கொண்டதன் விளைவே இந்த தோல்விகளின் முக்கிய காரணியாக புரிந்துகொளளப்படுவது அவசியமானதாகிறது. இவர்கள் ஆண்ட பரம்பரைகள் பற்றிய வீண் பெருமைகளினாலும், சக தேசத்தவர் மீதான வெறுப்பினாலும் தமிழ் தேசியத்தை நிரப்பினார்கள். அதன் விளைவுகளைதான் நாங்கள் அறுவடை செய்தாக வேண்டியிருந்தது. இன்றுவரையில் தேசியவாதம் பற்றிய புரிதலில் பலவிதமான பற்றாக்குறைகளை கொண்டிருக்கும் இடதுசாரி அமைப்புகள், இனிவரும் காலத்தில்கூட நடக்கப்போகும் தவறுகளுக்காக பொறுப்புகளையும் ஏற்றாக வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது அசியமானதாகிறது.

(கனடாவில் இடம்பெற்ற தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ என்ற நுhல் வெளியீட்டில் ரகுமான் ஜான் ஆற்றிய உரையின் திருத்தப்பட்ட எழுத்து வடிவம் (revised and edited version) இது. பகுதி 2 அடுத்த இதழில் தொடரும்)

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து
  1. T Jeyabalan on June 15, 2017 9:44 am

    தமிழ் தேசியமும் எதிர்காலமும் பகுதி 1:http://thesamnet.co.uk/?p=82240
    தமிழ் தேசியமும் எதிர்காலமும் பகுதி 2:http://thesamnet.co.uk/?p=84695


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு