பிரித்தானியத் தேர்தல்: ஜெரிமி கோபினின் பிரித்தானியப் புரட்சி! : த ஜெயபாலன்.


Jeremy_Corbyn_Revolutionஇலங்கைாயானாலும் அமெரிக்காவானாலும் அரசியல் என்பது கொள்கையற்றது அல்லது ஆளும் குழுமத்தின் ஒரு சிறுபிரிவினருக்கே ஆனது என்ற நிலை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பிரித்தானிய அரசியல் களமும் தொழிற்கட்சியின் தலைமையை ஜெரிமி கோபின் கைப்பற்றும் வரை இப்பொது விதியின் கீழேயே செயற்பட்டு வந்தது. பிரித்தானியாவின் ஆளும் பழமைவாதக் கட்சி கொன்சவேட்டிவ் கட்சியும் ரொனி பிளேயரின் காலத்தில் புதிய தொழிற்கட்சி ஆக்கப்பட்ட தொழிற்கட்சியும் பெரும்பாலும் தங்கள் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

தொழிலாளர்களது உரிமைகளை, மக்களது அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டிய தொழிற்கட்சி இவ்விடயங்களில் சமரசம் செய்ய ஆரம்பித்து; செல்வந்தர்களை பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவக் கட்சியான கொன்சவேடிவ் கட்சியாகவே மாறியது. ரொனி பிளயர் தொழிற்கட்சியின் இடதுசாரி சமத்துவக் கொள்கைகளைக் கைவிட்டு வலதுசாரிகளின் பக்கம் நோக்கி கட்சியை முன்நகர்த்தினார். 1997 முதல் பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் வெற்றிபெற்று தொழிற்கட்சியை பெரும்பாலும் வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைத்தார். கொன்சவேடிவ் கட்சி அதிதீவிர வலதுசாரிக் கட்சியாக மாற பிரித்தானிய குறுகிய ஆளும் குழுமத்துள் தொழிற்கட்சியும் சேர்ந்துகொண்டது.

பரந்துபட்ட மக்கள் இரு பெரும் கட்சிகளினதும் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். வங்கிகள் உட்பட்ட பல்தேசிய நிறுவனங்களின் அதீத லாபமீட்டும் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே நிதி வழங்கி அந்நிறுவனங்களை பொருளாதார வீழ்ச்சியை வைத்தும், லாபமீட்ட வைத்தது. இவை எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்டது அப்பாவிகளான பரந்துபட்ட மக்களே. மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய அடிப்படைப் பொறுப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். அடிப்படை வாழ்வாதார உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டது, சுகாதார சேவைகளுக்கான நிதிப் பங்களிப்பை அரசு குறைத்தது, கல்விக்கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

‘பல்கலைக்கழகக் கல்விக்கட்டணத்தை உயர்த்த மாட்டோம்’ என்று பாராளுமன்றம் சென்ற நிக் கிளேக் தலைமையிலான லிபரல் டெமோகிரட் கட்சி தனது கொள்கைகளோடு ஓரளவுக்காவது ஒத்துப் போகும் தொழிற்கட்சியோடு அணிசேராமல், தனது கொள்கைக்கு முற்றிலும் எதிரான கொள்கையுடைய கொன்சவேடிவ் கட்சியோடு 2010இல் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தனர். பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தை 9000 பவுண்களாக உயர்த்துவதற்கு துணை போயினர்.

பிரித்தானியாவில் தற்போது பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி £30,000 பவுண்கள் முதல் £50,000 பவுண்கள் வரையான கடன்சுமையோடே வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார். அவ்வாறு வெளியேறும் பட்டதாரி வேலை எடுக்கின்ற பட்சத்தில் சராசரியாக £20,000 பவுண்கள் சம்பளத்துடனேயே வேலையை ஆரம்பிக்கின்றார். இப்பட்டதாரிகள் தம்மீது சுமத்தப்பட்ட கல்விக்கடன் சுமையோடு, ஒரு வீட்டை வாங்குவதற்கு, வங்கி அவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்க வாய்ப்பே பெரும்பாலும் இல்லை. அதனாலேயே நடுத்தர வயதைத் தாண்டிய போதும் தற்போது பிரித்தானியாவில் பெற்றோருடன் தங்கி வாழ்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

சுகாதார சேவைகளில் நெருக்கடி, பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக் குறைப்பு, போக்குவரத்துச் சேவைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. பிரித்தானியாவில் லீட்ஸ் என்ற நகரில் மாணவிகள் மாதவிலக்குக்கான சுகாதார அங்கிகள் வாங்க வசதி இல்லாமல் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றனர். இலவச உணவு வங்கிகளை நோக்கிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஒரு புறம் பரந்துபட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுச் செல்ல மறுபுறத்தில் மில்லியனெயர்களின் எண்ணிக்கை பிரித்தானியாவில் உயர்ந்து செல்கின்றது.

அரசு சமத்துவத்தை வழங்கி பரந்துபட்ட மக்களது வாழ்நிலையை மேம்படுத்துவதற்குப் பதிலாக சமூகத்தில் தெரிவு செய்யப்படும் ஒரு பிரிவினர்க்கு மட்டும் முன்னேறிச் செல்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அதனை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்று நம்ப வைக்கின்றது. தனியார் கல்விக்கூடங்கள், கிரம்மர் ஸ்கூல் – தெரிவுமுறைப் பள்ளிகள், சுகாதார மற்றும் காப்புறுதித் திட்டங்கள் என்று பல்தேசிய நிதி நிறுவனங்கள் கொள்ளை இலாபமீட்டுவதற்கு வழியமைத்துக்கொடுக்கின்றது. சம வாய்ப்பு சம சந்தர்ப்பம் என்பதெல்லாம் முற்றிலும் போலித்தனமானதாகவே அமைந்துள்ளது.

இந்தப் பின்னணியிலேயே தனது வாழ்க்கைக் காலம் முழுவதும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் ஒரு மக்கள் போராளியாகச் செயற்பட்ட ஜெரிமி கோபின் பலத்த எதிர்ப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் அடிமட்ட ஆதரவாளர்களின் அமோக ஆதரவுடன் தொழிற்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் அடிமட்டத்தைத் தவிர கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஊடகங்கள் அனைத்துமே ஜெரிமி கோபினை மிக மோசமாக மனித நேயமற்று நடத்தின.

எனது சொந்த அனுபவத்தில் சொல்வதானால், எனது மகன் இயல்பில் மென்மையானவன். யாரையும் நோகும்படி ஏதும் சொல்லமாட்டான். அவன் இரண்டாம் நிலைப்பள்ளியில் கற்கின்ற போது பல தடவை வன்மம் கொண்ட மாணவர் குழுவினால் பகிடிவதைக்கு உட்பட்டு மனம் உடைந்து வீட்டுக்கு வருவான். அப்போதெல்லாம் என் மனம் கொந்தளிக்கும். ஒரு அரசியல் பண்பு நிறைந்த, எப்போதும் நேர்மையுடன் செயற்படுகின்ற, தான் சொல்வதைச் செய்கின்ற, வாக்குத் தவறாத, மிக எளிமையான மனிதரான ஜெரிமி கோபினை பாராளுமன்ற விவாதங்களில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், தற்போதைய பிரதமர் திரேசா மே போன்ற அரசியல் வாதிகளும் ஊடகங்களும் எள்ளி நகையாடுவதும்; அவரை கவுண்டமனி ஸ்ரைலில் கேலி செய்வதும், தொலைக்காட்சியில் பார்க்கின்ற போது எனக்கு என் மகன் பகிடிவதைக்கு உட்பட்ட போது ஏற்படும் மனக்கொந்தளிப்பு ஏற்படும். ஒரு மக்கள் போராளி, பரந்துபட்ட மக்களை நேசிக்கின்ற, நேர்மையான, வாக்குத் தவறாத ஒரு மனிதன் ஒரு போதும் தோற்றுப் போவதற்கு அனுமதிக்கக் கூடாது.

ஜெரிமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சி இத்தேர்தலில் வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடையும், என்றே தேர்தல் அறிவிப்பு வெளியிட்டவுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ‘ஜெரிமி கோபின் பலவீனமான தலைவர்; குடிவரவு, பாதுகாப்பு, பொருளாதார விடயங்களில் தொழிற்கட்சியையோ ஜெரிமி கோபினையோ நம்ப முடியாது; பிரித்தானியாவின் அணு ஆயுதத் திட்டத்தை ஜெரிமி கோபின் ஆதரிக்கவில்லை; அணு ஆயுதத்தை தான் முதலில் பயன்படுத்தமாட்டேன் என்று ஜெரிமி கோபின் தெரிவித்து இருக்கிறார்; இது எதிரிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்றெல்லாம் கட்சிக்குள்ளும் ஆளும் கட்சியினரும் ஊடகங்களும் எள்ளி நகையாடின. ஜெரிமி கோபின் வீதியில் இறங்கி குரல் எழுப்பி போராடுவதற்கே லாயக்கு அவருக்கு நாட்டை ஆளமுடியாது என்றார் பிரதமர் திரேசா மே.

ஆனால் ஜெரிமி கோபின் எவர் மீதும் தனிப்பட்ட ரீதியான தாக்குதலை நடத்தாமல், தனது கொளகையில் உறுதியாக, போராடுவதற்கே பிறந்தவராகச் செயற்பட்டார். தொழிற்கட்சி மிகச் சக்தி வாய்ந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, கொள்கை அடிப்படையில் ஏனைய கட்சிகளுக்கு சவால்விட்டது. கட்சி உத்தியோகபூர்வமாக தனது விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு முன்னரேயே கட்சியில் ஜெரிமி கோபினுக்கு எதிரானவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஊடகங்களுக்கு கசிய விட்டு “ஜெரிமி கோபினின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக்கூட பாதுகாப்பதற்கு அவரிடம் யாரும் இல்லை. இவர் எப்படி நாட்டை ஆட்சி செய்வார்” என கிண்டலடித்தனர். ‘ஜெரிமி கோபினின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு மாயாஜாலம் அதில் உள்ளவை எல்லாம் நல்ல அம்சங்கள் தான் ஆனால் நடைமுறைச்சாத்தியமற்றது’ என்று நளினம் செய்தனர்.

ஜெரிமி கோபினின் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்களிடம் சென்றடைய ஆரம்பிக்க கருத்துக்கணிப்புகளின் போக்கு மாறியது. மக்கள் ஜெரிமி கோபினின் கொள்கைகளுடன் உடன்பட விளைந்தனர். தொழிற்கட்சிக்கும் கொன்சவேடிவ் கட்சிக்கும் இடையேயான வித்தியாசம் 15 முதல் 20 விதமாக இருந்து இப்போது 8 முதல் 5 வீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இக்கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருக்கையில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஜெரிமி கோபின் பிரித்தானியாவின் பிரதமார் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளது.

பிரித்தானிய மக்களை சிந்திக்க வைத்த ஜெரிமி கோபினின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்த முக்கிய விடயங்கள் என்னையும் கவர்ந்திழுத்தது.

1. எனது மூன்று பிள்ளைகள் அரசின் சாதாரண பாடசாலையில் கற்கின்றனர். எனது மூத்த மகன் அடுத்த வருடம் பல்கலைக்கழகம் செல்ல உள்ளார். ஜெரிமி கோபின் மாணவர்கள் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு செலுத்தும் கட்டணத்தை நீக்குவதாக உறுதி அளித்துள்ளார். எனது பிள்ளைகள் ஒவ்வொருவரும் £30,000 முதல் £50,000 பவுண் வரையான கடன் சுமையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

2. எனக்கு தற்போது 46 வயது. உயர் குருதி அழுத்தம் உடையவன். எனக்கு ஒரு சொந்த வீடும் உண்டு. நான் எனது வயோதிபத்தில் டயமென்சியா அல்லது மரடைப்பு போன்ற நோயினாலோ பாதிக்கப்பட்டால் என்னை வீட்டில் வைத்து பராமரிக்கும் செலவை எனது வீட்டின் பெறுமதியில் £100,000 பவுண்களை விட்டு மிகுதியை எடுப்பதாக கொன்சவேடிவ் கட்சி தெரிவித்து உள்ளது. ஆனால் தொழிற்கட்சி வயோதிபத்தில் உள்ளவர்களைப் பராமரிப்பது அரசின் கடமை என்றும் தாங்கள் பராமரிப்புச் செலவை எங்கள் வீடுகளின் பெறுமதியில் இருந்து எடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றார். நாங்கள் சிறுகச் சிறுக சேமித்ததை எங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைப்பதற்கு ஜெரிமி கோபின் வழியேற்படுத்தி உள்ளார்.

3. வீடு இல்லாதவர்களுக்கு அவர்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை கட்டுவதற்கும் கவுன்சில் வீடுகளைக் கட்டி வீடற்றவர்களுக்கு உதவுவதற்கும் தொழிற்கட்சி உறுதி அளித்துள்ளது.

4. பிரித்தானியாவில் ரெயில் கட்டணங்கள் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். மிக நெரிசலானவை. குறித்த நேரத்தில் இயங்குவதில்லை. அதனால் பிரித்தானியாவில் ரெயில்வே யை தேசியமயமாக்கப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெயில்வே இல் இருந்து வரு வருமானம் ரெயில்வே இன் மீள்புனரமைப்புக்கு பயன்படுத்தப்படுவதுடன் கட்டணங்களும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும். அரசும் இதனூடாக வருமானத்தை ஈட்டும்.

5. தற்போது மின் கட்டணங்களும் எரிவாயுக் கட்டணமும் உயரந்துகொண்டே செல்கின்றன. குறிப்பிட்ட 5 எரிசக்தி நிறுவனங்கள் கொள்ளை லாபமீட்டுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு எரிசக்தி நிறுவனமாவது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஜெரிமி கோபின் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக அரச எரிசக்தி நிறுவனம் குறைந்த விலையில் எரி சக்தியை வழங்க நிர்ப்பந்திக்கப்படும். மேலும் அரசும் அதனூடாக வருமானத்தை ஈட்டும்.

6. நானும் எனது குடும்பமும் ஏனைய பல மில்லியன குடும்பங்கள் போன்று தனியார் மருத்துவக் காப்புறுதி அற்றவர்கள். பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் தங்கி உள்ளவர்கள். பிரித்தானியாவில் இலவச தேசிய சுகாதார சேவையை அறிமுகப்படுத்தியவர்கள் தொழிற்கட்சியினர். பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகளுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

7. நாம் விரும்பியோ விரும்பாமலோ பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிச் சந்தை மற்றும் ஐரோப்பிய பொருளாதார பிரதேசத்துக்குள் பிரித்தானியா செயற்படும்! என ஜெரிமி கோபின் உறுதி அளித்துள்ளார். குறிப்பாக சர்வதேச மயப்பட்டுவரும் இளைய சமூதாயத்திற்கும், பொருளாதார விருத்திக்கும் இது மிக அத்தியவசியமானது.

8. ஜெரிமி கோபின் ஒரு தொழிற்சங்கவாதி. அவருக்கு தொழிற்சங்கத்தின் முழுமையான ஆதரவும் உண்டு. தொழிலாளர்களின் உரிமையை தொழிற்சங்கங்களின் உரிமையை உறுதிப்படுதவும் குறைந்தபட்ச சம்பளத்தை 2020 முதல் £10 பவுண்களாக உயர்த்தவும் உறுதி அளித்துள்ளார்.

9. நாங்கள் பிரித்தானியாவிலும் சிறுபான்மை இனம் என்ற வகையில் கொன்சவேடிவ் கட்சியினுடைய உண்மைக்குப் புறம்பான குடிவரவாளர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் இனக்குரோதத்தை வளர்த்துவிட்டுள்ளது. தொழிற்கட்சி குடிவரவாளர்கள் தொடர்பில் சிறந்த முகாமைத்துவத்தைக் கையாளும்! என்று உறுதி அளித்துள்ளது. திருமணம் செய்துவிட்டு மனைவியை கணவனை தம்மோடு அழைக்க முடியாமல் இருக்கும் தடைகளை நீக்குவதற்கும் தொழிற்கட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது.

10. தொழிற்கட்சியின் வெளிநாட்டுக்கொள்கை முரண்பாடுகளைத் தீர்ப்பதாகவே அமையும் என்றும், அதன் ஆட்சியில் இறுதியாக சமாதானத்தை கொண்டுவரும் என்று தெளிவாக உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு மட்டுமே பிரித்தானிய இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் உறுதிஅளிக்கப்பட்டு உள்ளது. ஜெரிமி கோபின் தனது பாராளுமன்ற வாழ்க்கைக்காலம் முழுவதிலும் இராணுவத் தலையீடுகளுக்கு எதிராக சமாதானத்துக்காகக் குரல் எழுப்பியவர். அமெரிக்க அரசுடன் இணைந்து அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு, அந்நாடுகள் பயங்கரவாதத்தின் விளைநிலங்களாக மாற்றப்பட்டு; தலையீடு செய்த நாடுகளுக்கு இப்பயங்கரவாதம் வெவ்வேறு வடிவங்களில் ஏற்றுமதி செய்யப்படுவதன் விளைவே பிரித்தானியாவில் தொடரும் பயங்கரவாதத் தாக்குதல்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் உள்ளன இவர்கள் உட்பட மூன்று மில்லியன் ஐரோப்பியர்கள் பிரித்தானியாவில் வாழ்கின்றனர். தொழிற்கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தாங்கள் அவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்துவோம் என தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

‘பலருக்காக சில பேருக்கு அல்ல’ என்ற கோசத்துக்கு அமைய தொழிற்கட்சித் தலைவர் ஜெரிமி கோபின் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உள்ளார். அரச ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய வேறுபாடு 20 மடங்கிற்கு அதிகமாக இருக்கக் கூடாது போன்ற இன்னும் பல திட்டங்களை ஜெரிமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சி அறிவித்து உள்ளது.
இத்திட்டங்களுக்கான செலவீனங்களை அதி உச்ச வருமானம் ஆண்டுக்கு £80,000 பவுண்களுக்கு மேல் ஈட்டுபவர்களிடம் இருந்தும்; அதி உச்ச லாபம் ஈட்டும் கோப்பிரேட் நிறுவனங்களிடம் இருந்தும் வரி மூலம் வசூலிக்க உள்ளதாகவும் தொழிற்கட்சி அறிவித்து உள்ளது.

ஜூன் 8 பிரித்தானியாவின் ஆட்சிப் பொறுப்பு யாரிடம் என்பதைத் தீர்மானிக்கும் நாள். ஜெரிமி கோபின் இன் தேர்தல் விஞ்ஞாபனம் எல்லாவற்றையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு தமிழர்களாக ஒரு கணம் சிந்திப்போம். அகதிகளாக அடைக்கலம் தேடி வந்த நாம், எங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அன்று வெறும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெரிமி கோபினின் உழைப்பை, ஆதரவை மறந்துவிடக் கூடாது. 11,800 பேருக்கு தனது கையொப்பம் இட்டு திருப்பி அனுப்பும் உத்தரவை தடுத்தவர் ஜெரிமி கோபின். அப்போது அவர் பிரதமர் கனவில் மிதந்தவர்அல்ல. பதவி கருதி சோரம் போன ஒரு அரசியல் வாதி அல்ல. கொள்கை பிடிப்போடு எம் மக்களுடன் கைகோர்த்து நடந்த ஒரு இலட்சிய வாதி.

கொன்சவேடிவ் அரசு அகதிகளைத் திருப்பி அனுப்ப எத்தனித்த போதெல்லாம், எதிர்த்து போராடிய ஒருவர். அவரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், ஏழைகளின் உணர்வு நிலையில் இருந்து முடிவெடுக்கும் ஒரு உன்னத சூழலைத் தோற்றுவிக்க முடியும்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெமோகிரட் கட்சி வேட்பாளராக கில்லாரி கிளின்டன் க்கு எதிராக போட்டியிட்ட பேர்னி சான்டர்ஸ் அமெரிக்காவில் ஒரு து}சணம் போல் பார்க்கப்பட்ட ‘சோசலிசம்’ என்ற சொல்லை பலரும் புரிந்துகொள்ளும் ஒன்றாக மாற்றியவர். அவர் Our Revolution: A Future to Believe In என்ற தனது நூலை வெயிளிடுவதற்காக யூன் முதல் வாரத்தில் பிரித்தானியா வருகின்றார். அப்போது அவர் ஜெரிமி கோபினை ஆதரித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஜெரிமி கோபின் க்கு உள்ளார்ந்த உந்துதலை வழங்கும்; என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: தேசம் சஞ்சிகையின் இதழ் 48 இல் வெளிவந்துள்ள அட்டைப்படக் கட்டுரை.

உங்கள் கருத்து
 1. Paarathy on June 5, 2017 12:27 pm

  தேசம்நெட் ஆசிரியர் சொல்ல மறுத்த உண்மைகள் சிலவற்றையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். ஜெர்மி கோர்பின் தமிழ் மக்களின் பல் வேறுபட போராட்ட்ங்களில் ஈடுபட, ஆதரித்த ஒரு சிறந்த பாராளுமன்ற பிரதிநிதி மட்டும் அல்ல தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவன்.


 2. vanni arrachi on June 5, 2017 4:56 pm

  எது எப்படியிருந்தாலும் இன்றையநிலையில் ஜெர்மிகோபனை வெற்றிபெற செய்வதே! தொழிலாளவர்க்கத்தின் கடமையாக இருக்கவேண்டும்.


 3. Thambirajah Jeyabalan on June 6, 2017 9:08 am

  பாரதியின் கண்டுபிடிப்புக்கு நன்றி. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்த சிறிதுங்க ஜெயசூரியவையும் சேர்த்து சொல்லி இருக்கலாம். ஆனால் என்ன அதற்காக எல்லாம் எங்கள் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்களா? மொஸ்கோவில் மழைபெய்தால் யாழ்ப்பாணத்தில் குடைபிடித்த காலம் எல்லாம் போய்விட்டது. யாழ்பாணத்தில் மழை என்பதற்காக கொழும்பில் சிறிதுங்க ஜெயசூரியாவும் லண்டனில் ஜெரிமி கோபினும் குடைபிடிக்கிறார்கள் என்று பறைஅடிப்பதில் யாருக்கும் எந்தப் பலனும் கிடையாது.


 4. British Tamil Forum on June 6, 2017 10:04 am

  எதிர்வரும் வியாழக்கிழமை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தம் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்!

  பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தம் வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி தம் அபிலாசைகளை பிரித்தானிய பாராளுமன்றில் வலுவாகக் குரல் கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கின்றது.

  1. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்

  2. சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பினை தடுத்து நிறுத்தல்

  3. ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் தீர்மானங்களை காலவரையறையுடனான திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்

  என்பனவற்றை முன்வைத்து செயல்படும் வேட்பாளருக்கு முன்னுரிமையளித்து ஆதரவளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

  எம் வாக்குகளை சாதுரியமாகப் பாவித்து பாராளுமன்றில் எம் குரல்களை வலுப்படுத்துவோம்.


 5. T Jeyabalan on June 6, 2017 10:08 am

  தொழிற்கட்சித் தலைவர் ஜெரிமி கோபின் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்த விடயம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தெரியவில்லை போல் தெரிகிறது. பாரதி முடிந்தால் பிரிஎப்க்கு விடயத்தை தெரியப்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஜெரிமி கோபின் அங்கீகரிப்பதால் ஜெரிமி கோபினுக்கு வாக்களிக்கும் படி அறிக்கை விடக் கூற முடியுமா?


 6. Paarathy on June 6, 2017 6:11 pm

  தேசம்நெட் ஆசிரியர் வேண்டும் என்றே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஜெர்மி கோர்பின் ஆதரித்தார் என்ற விடயத்தை சொல்லாமல் விட்டு உள்ளார் என்பது அவரின் விதண்டா வாதத்தில் இருந்து புரிகிறது.பிரித்தானிய தமிழர் பேரவை கூட அந்த உண்மையை புரிந்து கொண்டது. தோழர் சிறிதுங்கவும் ஏன் தோழர் சோதிலிங்கமும் கூட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பவர்கள். ஆனால் ஜெயபாலன் அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பவர் என்பது மட்டும் அல்ல சிலசமயங்களில் உண்மைகளை கூட மறுப்பவர் என்பது தான் பொருத்தமானது என எண்ண தோன்றுகிறது. இலங்கையின் செய்திகளை முதன்மையாக கொண்ட தேசம்நெட் இணையத்தில் பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் ஜெர்மி காபினுக்கு யாருடைய வாக்குகளை பெறுவதற்கு ஜெயபாலன் ஆதரவு வேண்டி நிற்கிறார். உங்கள் குடும்பத்தின் தேவைக்காகவா அதாவது உங்கள் மகனிற்கு நடந்த பகிடி வதைக்கு தீர்வு கணவா, அல்லது உங்கள் வீடடை பத்திரமாக உங்கள் பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காகவா ஜெர்மி இற்கு தமிழர்கள் ஜெரேமிற்கு வாக்கு போடவேண்டும் என்கிறீர்கள்.


 7. T Jeyabalan on June 7, 2017 1:34 pm

  பாரதி விரைவில் தவழ்ந்து நடந்து சமூகத்தை புரிந்துகொள்ள வாழ்த்துகிறேன்.


 8. Paarathy on June 7, 2017 5:31 pm

  ஜெயபாலன் உங்கள் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்று பாரதி சொன்னதன் அர்த்தம் இப்போது புரிகிறது. இந்த பாப்பா தவழ்ந்து சென்றாலும் சமூகத்தை புரிந்துவிடும். ஆனால் விரைந்து சென்றாலும் உங்களால் சமூகத்தையும் புரிந்துவிட முடியாது சந்தர்பவாதத்தையும் விட்டு விட முடியாது.


 9. vanni arrachi on June 8, 2017 7:18 am

  பாரதியார் பாடலைவைத்து இளநீரும் அறுக்கலாம் சங்கையும் அறுக்கலாம்.

  தமிழனைவிட தமிழ்மொழியிலே பக்தி கூடா (வேஷம்)தமிழன்என்றால் அதில் தொழிலாளி அடங்குவதில்லை என்பதே இவர்கள் கணிப்பு.

  இதற்கு நல்ல உதாரணம்: சமூகம் சந்தர்ப்பவாதம் போன்ற விளக்கங்கள்.இதற்கு முதல் வந்தபோன சுயநிர்ணயஉரிமையை விட்டுவிடுங்கள்.

  உலகத்தில் சுயநிர்ணயஉரிமை பெற்று ஆட்சிசெய்கிற ஒரு இனத்தைக்கூடா சுட்டிக்காட்ட முடியாத கம்யூனிஸ்டுகள் இருக்கும் போது பாரதியால் என்ன செய்ய முடியும்.

  அவர் அப்பாவி.


 10. T Jeyabalan on June 8, 2017 8:40 am

  பாரதியின் பாப்பா பாடலின் அர்த்தம் புரியவே இவ்வளவு காலம் எடுத்து இருக்கு. அப்ப கட்டுரையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் நீங்கள் தவறாகப் புரிந்ததில் ஆச்சரியம் இல்லை. புலிகள் ரயாகரன் நாவலன் வரிசையில் உங்களுக்கும் ஒரு இடம்இருக்கும். அதுக்கு சந்தர்ப்பவாதம் மட்டும் காணாது. இன்னும் கொஞ்சம் அடைமொழிகள் எல்லாம் சேர்த்து எழுத வேண்டும். பொறுக்கி அரசியல் துரோகத்தனம் அரசின் உளவாளி காட்டிக் கொடுத்தவன் அந்த நக்கி இந்த நக்கி இப்படி எல்லாம் எழுதினால் தான் நீங்கள் சமூகத்தை சரியாகப் புரிந்துகொண்டதாக சான்றிதழ் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்.


 11. T Jeyabalan on June 8, 2017 9:20 am

  வன்னி ஆராய்ச்சி

  1. இந்தக் கட்டுரையின் எந்த இடத்திலும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினை பேசப்படவில்லை.

  2. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை 2009 தேர்தலில் தமிழகமே கணக்கில் எடுக்கவில்லை. அதற்கு தமிழ் மக்கள் கொடுத்த விலை பல்லாயிரம் உயிர்கள்.

  3. பிரித்தானிய பிரதமரின் தெரிவில் இலங்கை தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கா இல்லையா என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லையா ? என்பது ஒரு உரையாடலுக்கான அம்சமாகவே இல்லை.

  4. நான் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அற்றவர்கள் என்று நான் எழுதத் தொடங்கிய 1997 காலங்களில் இருந்து இன்றுவரை எங்கும் குறிப்பிட்டதில்லை.

  5. நான் எப்போதும் இலங்கை பல்தேசங்களைக் கொண்ட நாடு என்றும் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை உடைய மக்கள் என்றே எழுதி வருகின்றேன். வன்னித் தமிழர்களும் கிழக்குத் தமிழர்களும் தங்களுக்கு சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்று கருதினால் அதனையும் நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களை சுயநிர்ணய உரிமை உடையவர்களாகக் கருதினால் அதனையும் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த சமூகத்துக்கும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் எந்த அதிகாரமும் எனக்கு இல்லை.

  6. பாரதியின் புதிய கண்டு பிடிப்புகளும் விதண்டாவாதங்களும் எவ்வித உள்ளடக்கமும் அற்றது.

  7. ஒரு இடதுசாரியின் புரிதலின் அபத்தம் //உங்கள் குடும்பத்தின் தேவைக்காகவா அதாவது உங்கள் மகனிற்கு நடந்த பகிடி வதைக்கு தீர்வு கணவாஇ அல்லது உங்கள் வீடடை பத்திரமாக உங்கள் பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காகவா ஜெர்மி இற்கு தமிழர்கள் ஜெரேமிற்கு வாக்கு போடவேண்டும் என்கிறீர்கள்.// இவ்வாறாக சமூகத்தை உங்கள் குறுகிய பார்வையில் பார்ப்பதனால் தான் சோசலிசக் கட்சிகளால் விரல்விட்டு எண்ணக் கூடிய வாக்குகளைக் கூட பெற முடிவதில்லை.

  9. ஜெரிமி கோபின் தனது குறுகிய வட்டத்தை கடந்து தன்னுடைய கொள்கைகளில் விட்டுக்கொடுப்புகளைச் செய்து – பாரதியின் அகராதியில் இதற்கும் பெயர் சந்தர்ப்பவாதம் – தான் பரந்துபட்ட மக்களைப் புரிந்து இந்த நிலைக்கு வந்துள்ளார். அவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு சந்தர்ப்பவாதியாகவே பல இடங்களில் செயற்பட வேண்டும். அமெரிக்க அதிபர்களிலும் பார்க்க பிடல் கஸ்ரோவுக்கு எதிராக சோசலிஸ்டுக்கள் போராட பின்னிற்கவில்லை.

  10. நாளை எனது குடும்பத்துக்காக மட்டுமல்ல என்னைப் போன்ற பல மில்லியன் பரந்துபட்ட சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்பும் மக்களுக்காக ஜெரிமி கோபின் வெற்றி பெற வேண்டும்.


 12. Paarathy on June 8, 2017 1:12 pm

  ஜெயபாலன் தப்பு கணக்கு போடடால் யார் தான் என்ன செய்யமுடியும். ஜூன் 8ம் திகதி நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஜூன் 5ஆம் திகதி கட்டுரை வரைந்தது மட்டும் அல்லாமல் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாத்திற்கு விளக்கமும் கூற முற்படடாதே ஆச்சரியத்திற்கு உள்ளது அல்லவா? பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் படிப்பு அறிவு அற்றவர்கள் என்று அவர் நினைத்து தான் பரந்த அறிவாளி என்பதுபோல் காடட முயற்சித்து உள்ளார் என்பது தெரிகிறது. அவர் தான் வழமையாக பாவிக்கும் வன்முறை கலந்த சொற்பிரயோகங்களை இந்த பாரதியும் பாவிப்பார் என்று அவர் எதிர்பார்த்து இருந்தார் என்பது மிகவும் தெளிவாகிறது. பாரதி உண்மையான இடதுசாரியத்தை நோக்கி பயணிப்பவன். அதனால் தான் ஜெர்மி கோர்பினை ஆதரிக்கிறேன். உண்மையான இடதுசாரி தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு