திரேசா மே பெரும்பான்மையை இழந்தார்! ஜெரிமி கோபின் அமோக வெற்றி!! : த ஜெயபாலன்


Theresa_May_09June17திரேசா மே பதவி விலக நிர்ப்பந்திக்கப்படலாம் என்ற நிலை கொன்சவேடிவ் கட்சிக்குள் ஏற்பட்டு உள்ளது. பிரித்தானிய தேர்தலில் ஜெரிமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சியே தன்நிலையை மேலோங்க வைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவர ஜெரிமி கோபின் தொழிற் கட்சியின் தலைமையில் இருந்து துரத்தப்படுவார் என்ற நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறி திரேசா மே பதவி விலக வேண்டும் என்று கட்சிக்கு உள்ளும் வெளியேயும் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளது. ஜெரிமி கோபின் திரேசா மே யை பதவி விலகுமாறு கேட்டுள்ளார்.

அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு முயற்சித்த கொன்சவேடிவ் கட்சியை குறைந்தபட்ச பெரும்பான்மையைக் கூட பெற்றுக்கொள்ள விடாமல் தடுத்ததனூடாக பிரித்தானியா மற்றுமொரு கூட்டாட்சிக்கு தயாராகின்றது. நேற்று யூன் 8 பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கான 326 ஆசனங்களைப் பெறப்பொவதில்லை என்பது கணிக்கப்பட்டு உள்ளது. கொன்சவேடிவ் கட்சி பெரும்பான்மையைப் பெறுவதற்கு நெருங்கிய அளவு ஆசனங்களைப் பெற்ற போதும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. பெரும்பாலும் டெமொகிரட்டிக் யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்தே ஆட்சியை அமைக்க முடியும் நிலையுள்ளது.

650 ஆசனங்களில் கட்சிகளின் நிலவரம்:

318 ஆசனங்கள் – கொன்சவேடிவ் கட்சி
262 ஆசனங்கள் – தொழிற் கட்சி
35 ஆசனங்கள் – ஸ்கொடிஸ் நஷனல் பார்ட்டி
12 ஆசனங்கள் – லிபிரல் டெமொகிரட் பார்ட்டி
10 ஆசனங்கள் – டெமொகிரட்டிக் யூனியனிஸ்ற் பார்ட்டி
7 ஆசனங்கள் – ஸின் பெய்ன்
4 ஆசனங்கள் – பிளைட் கிம்று
1 ஆசனம் கிறீன் பார்ட்டி
1 ஆசனம் – ஏனையவர்கள்

இத்தேர்தலில் ஜெரிமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சி எதிர்பார்ப்புகளைக் கடந்து ஆசனங்களைப் பெற்றதுடன் எதிர்பார்ப்புக்கு அதிகமாக வாக்கு வீதத்தையும் பெற்றுள்ளது. கொன்சவேடிவ் கட்சி 43 வீதம் வாக்குகளையும் தொழிற் கட்சி 40 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இத்தேர்தலில் தொழிற் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெறத் தவறினாலும், தொழிற் கட்சி ஆட்சி அமைப்பது பற்றி கனவுகூட கண்டிருக்காத நிலையில் ஜெரிமி கோபின் ஆசனங்களைத் தக்க வைத்தது மட்டுமல்ல கொன்சவேடிவ் கட்சியிடம் இருந்து கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றியும் உள்ளார்.

ஸ்கொட்லண்ட்டில் 59 ஆசனங்களில் ஸ்கொடிஸ் நஷனல் பார்ட்டி 56 ஆசனங்களையும் தொழிற் கட்சி> கொன்சவேடிவ் கட்சி லிபிரல் டெமொகிரட் கட்சி ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றிருந்தன. ஆனால் நேற்றைய வாக்களிப்பின் இத்தேர்தலில் பிரித்தானிய கொன்சவேடிவ் கட்சியின் தோலிவ்வியை மட்டுப்படுத்தியது ஸ்கொட்லண்ட் கொன்சவேடிவ் கட்சியின் முற்றிலும் எதிர்பாராத வெற்றி.

ஸ்கொட்லன்டில் கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களிலும் பார்க்க வெள்ளைக் கரடிகள் (பன்டா) அதிகம் என்று பகிடியாக கூறும் நிலை இருந்தது (அங்குள்ள மிருகக்காட்சியகத்தில் இரு வெள்ளைக் கரடிகள் வாழ்கின்றன.) இத்தேர்தலில் இந்நிலை மாற்றப்பட்டு ஸ்கொட்லண்ட் கொன்சவேடிவ் கட்சி பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

இத்தேர்தலில் ஸ்கொட்டிஸ் நஷனல் பார்ட்டி இருபதுக்கும் மேற்பட்ட ஆசனங்களை இழந்துள்ளது. முன்னாள் ஸ்கொட்லன்ட் முதலமைச்சர் அலெக்ஸ் ஹமன்ட் தனது ஆசனத்தை ஸ்கொடிஸ் கொன்சவேடிவ் கட்சியிடம் இழந்துள்ளார்.

2015இல் டேவிட் கமரூன் தலைமையில் ஆட்சிக்கு வந்த கொன்சவேடிவ் கட்சி, அத்தேர்தலில் யுகே இன்டிபென்டன்ட் பார்ட்டி பெற்றுக்கொண்ட வாக்குகளின் அழுத்தம் காரணமாக ஐரோப்பாவில் பிரித்தானியா வெளியேறுவதற்கான கருத்துக் கணிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. பிரித்தானிய மக்கள் ஐரோப்பாவில் இணைந்து இருப்பதற்கு சார்பாக வாக்களிப்பார்கள் என்று முழுமையாக நம்பிய டேவிட் கமரூன் 2020 வரை ஆட்சியில் இருக்க வேண்டியவர், கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து யூன் 24, 2016இல் இல் பதவி விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கொன்சவேடிவ் கட்சியின் தலைவராக; டெவிட் கமரூன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த, பிரித்தானியா ஐரோப்பாவுடன் இணைந்து இருக்க வேண்டும் என்ற அணியில் நின்ற, திரேசா மே கொன்சவேடிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானிய பிரதமாராகவும் ஆனார்.

ஆரம்பம் முதல் இப்பாராளுமன்றம் முழுமையான காலத்துக்கும் – 2020 வரைக்கும் இயங்கும் என்றே தெரிவித்து வந்தார். ஆனால் தொழிற்கட்சிக்குள் இருந்த பிளவும், தொழிற் கட்சி தலைவர் ஜெரிமி கோபினுக்கு எதிராக தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட சவால்கள் காரணமாக,திரேசா மே தான் மிக எளிதாக அடுத்த தேர்தலை வெற்றி கொள்ள முடியும் என்று கணக்குப் போட்டு 2017இல் திடீரெனத் தேர்தலை அறிவித்தார். திரேசா மே தேர்தலை திடீரென அறிவித்த போது கொசவேடிவ் கட்சி, தொழிற் கட்சியைக் காட்டிலும் 20 புள்ளிகள் முன்னணியில் நின்றது. கொன்சவேடிவ் கட்சி தொழிற் கட்சியைக் காட்டிலும் 130 ஆசனங்கள் வரை அதிகப்படியாகப் பெற்று ஆட்சி அமைக்கும் என்ற மனக்கோட்டையுடனேயே தேர்தலில் குதித்தனர்.

தொழிற் கட்சி, ஜெரிமி கோபின் தலைமையில் வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலையிலேயே தேர்தல் களத்திற்கு, கொன்சவேடிவ் கட்சியால் தள்ளிவிடப்பட்டது. தொழிற் கட்சியின் தலைமையை கீழ் நிலை ஆதரவாளர்களுடன் கைப்பற்றிய ஜெரிமி கோபினை, தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரம்கட்டியதுடன் அவரைத் தலைமையில் இருந்து கவிழ்க்கவும் முயற்சித்தனர். கட்சித் தலைமையின் இரண்டாவது தேர்தலையும் சந்தித்த ஜெரிமி கோபின் கீழ்நிலை ஆதரவாளர்களின் அமோக ஆதரவுடன், முன்னையைவிட கூடுதல் வாக்கு வீதத்துடன் வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் தொழிற் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் என தொழிற் கட்சியினரே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர். தேர்தல் முடிந்தவுடன் ஜெரிமி கோபினை தொழிற் கட்சியின் தலைமையில் இருந்து துரத்துவதற்கே பெரும்பாலான தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கங்கணம் கட்டி நின்றனர். ஜெரிமி கோபினால் ஒரு நிழல் அமைச்சரவையை அமைப்பதற்குக்கூட ஆதரவு இருக்கவில்லை.

1997 முதல் ஆட்சிக்கு வந்த ரொனி பிளேயரின் தலைமையிலான தொழிற் கட்சி குறைந்த அளவு சம்பளத்தை அறிமுகப்படுத்திய போதும், மெல்ல மெல்ல முதலாளித்துவக் கொள்கைகளை நோக்கி கட்சியை நகர்த்தினார். பொதுவாக அமெரிக்காhவில் கொளகையளவில் டெமோகிரட் கட்சிக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய பிரித்தானிய தொழிற் கட்சி, மாறாக அமெரிக்காவின் யுத்தப் பிரியமுள்ள புஸ் குடும்ப றிப்பப்ளிக்கன் கட்சியோடு ஈராக்கில் யுத்தத்தில் குதித்தார். புஸ் சீனியர் 1991இல் வளைகுடா யுத்தத்தை நடத்தியவர். புஸ் யூனியர் – ரொனி பிளேயர் கூட்டின் யுத்த தாண்டவம் ஈராக்கில் இருந்து பின் அப்கானிஸ்தான், லிபியா, சிரியா என்று விரிந்தது. இப்போது கட்டார் நோக்கி யுத்தத்தை நகர்த்த டொனால்ட் ட்ரம் முற்பட்டு உள்ளார். அவருக்கு உள்நாட்டில் உள்ள நெருக்கடியை கையாள்வதற்கு இன்னொரு யுத்தம் தேவைப்படுகிறது.

இந்த சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் சூழலின் பின்னணியில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளை இளம்வாக்காளர்களே தீர்மானித்து உள்ளனர். முதற்தடவையாக தேர்தலில் வாக்களிக்க வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற இந்த இளவட்டங்கள் பிரித்தானிய அரசியலை நேற்றைய தேர்தலில் மாற்றி அமைத்துள்ளனர். பெரும் எண்ணிக்கையில் வாக்களித்த இந்த இளவட்டங்கள் தனது எழுபதுக்களை அண்மித்துக் கொண்டிருக்கும் ஜெரிமி கோபினின் கொள்கைகளுக்குப்பின் அணிவகுத்து வாக்களித்தனர்.

கொன்சவேடிவ் கட்சியோடு சேர்ந்து ஆட்சியமைத்த அப்போதைய லிபிரல் டெ மொகிரட் கட்சியின் தலைவர் நிக்கிளேக் அன்று பல்கலைக்கழகக் கட்டணத்தை உயர்த்த துணைபோனார். நேற்றைய தேர்தலில் 12 ஆண்டுகள் பிரதிநிதித்துவம் செய்த தனது தொகுதியை தொழிற்கட்சியிடம் இழந்தார். தற்போதைய லிபரல் டெமொகிரட் தலைவர் ரிம் பரன் க்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார். இதில் வாக்குகள் மீள எண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு சில நூறு வாக்கு வித்தியாசத்தில் ரிம் பரன் வெற்றி பெற்றார்.

கொன்சவேடிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதியவர்களில்; ஒருவரான பென் ஹம்மர் தொழிற்கட்சியிடம் தோல்விகண்டார். கொன்சவேடிவ் கட்சியின் அமைச்சர்கள் சிலரும் இத்தேர்தலில் தோல்வி கண்டுள்ளனர். கொன்சவேட்டிவ் கட்சியின் உள்துறை அமைச்சர் அம் ரொட் தொலைக்காட்சியில் கட்சித் தலைவர்களுக்கான விவாதத்தில் திரேசா மே க்கு பதிலாக இவரே கலந்துகொண்டார். இத்தேர்தலில் இவர் சில நூறு வாக்குகளால் மட்டுமே தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டார்.

இத்தேர்தலில் கொன்சவேடிவ் கட்சிக்கு அடுத்த படியாக பாதிக்கப்பட்டது யுகே இன்டிபென்டன் பார்ட்டி இக்கட்சி தன்னிடம் இருந்த ஒரு ஆசனத்தையும் இழந்ததுடன் அதனை தலைவர் போல் நற்றல் தோல்வி அடைந்தார். இத்தேர்தலில் இக்கட்சி முன்னைய தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்தையும் இழந்தது. இத்தேர்தல் இக்கட்சியின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. இதன் முன்னைய தலைவர் நைஜல் பராஜ் பிரிக்ஸிற் விவாகரத்து மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளதாகவும் தான் மீண்டும் முன்னரங்குக்கு வந்து கட்சியை முன்நகர்த்தப் போவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இத்தேர்தல் முடிவுகள் தொழிற் கட்சிக்கும் ஜெரிமி கோபினின் தலைமைக்கும் உயிரூட்டி உள்ளதுடன் கொன்சவேடிவ் கட்சி தனது மோசமான தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்துவதில் கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உங்கள் கருத்து
  1. BC on June 9, 2017 2:39 pm

    பிரித்தானிய தேர்தலும் முடிந்து விட்டது அங்கே புதுசா போன இலங்கையர் என்ன சொல்கிறார்கள் வேலை செய்ய 3 பவுண் 4பவுண் தருகிறார்கள் கஷ்டமாக இருக்கிறது என்று பிரித்தானிய உண்மையில் ஜரோப்பா கண்டத்தில் தான் தான் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ள வேண்டிய நிலைமை. ஆட்சிக்கு வருபவர்கள் இந்த கொள்ளை அடிக்கும் நிலைமையை இல்லாமல் ஆக்க வேண்டும். அதை விட்டுட்டு அற்லாண்டிக் ஓசியனில் வசிப்பவருக்கு சுயமாக கனவு காணும் உரிமைக்கு அங்கீகாரம் ஒன்ராரியோவில் வசிப்பவர்களுக்கு சுயமாக கனவு காணும் உரிமை அங்கீகாரம் என்பது எல்லாம் தமிழ் உண்டியல்காரர்களுக்கு கொள்ளை அடிப்பதற்கு உதவுமே தவிர மக்ககள் எவருக்குமே உதவ போவதில்லை.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு