தெற்கில் வெள்ளமும்! வடக்கில் வறட்சியும்! : தேசம் ஆசிரியர் தலையங்கம்


SL_Flood_May_2017இலங்கையை ஏனைய சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இயற்கை அனர்த்தங்களும் அதன் மூலம் ஏற்படும் இழப்புகளும் குறைவானதே. 2004 இல் இடம்பெற்ற சுனாமியைத் தவிர பேரழிவுகள் என்ற வரையறையில் இழப்புகள் ஒப்பீட்டளவில் குறைவே. ஆனால் ஒரு உயிரின் இழப்பே பல உயிரிழப்புகளுக்குச் சமனானது.

மே மாத பிற்பகுதியில் தென்பகுதியில் பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்பட்டும் வெள்ளத்தினாலும் 150 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இயற்கை அனர்த்தங்கள் மனிதனின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அப்பாற்பட்டது. ஆனாலும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் இழப்புகளை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

மழை, சுறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் இலங்கையில் காலத்துக்கு காலம் நிகழ்ந்தே வருகின்றது. கடந்த கால அனர்த்தங்களில் இருந்து அரசு இதுவரை எதனையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்படும் போது அவை வெறும் புள்ளி விபரங்களாக பதிவு செய்யப்படுகின்றனவே அல்லாமல் அனர்த்தங்களின் தாக்கத்தை குறைப்பதற்கான முகாமைத்துவம் செயல்வடிவம் பெறவில்லை.
இவ்வாறான கடுமையான மழைவீழ்ச்சி உடைய பிரதேசங்களின் பூவியியல் ஸ்திரணத்தை அளக்கின்ற அளவு முறைகள் பயன்பாட்டில் உள்ளது. மண் சரிவு அபாயமுடைய பகுதிகளை அடையாளம் கண்டு அவ்வாறான பிரதேசங்கள் வதிவிடத்திற்கு தகுதியற்றனவாக அடையாளப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களுக்கு அவர்களோடு கலந்தாலோசித்து மாற்று வாழ்விட ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

நீண்ட காலத்தில் மண்சரிவை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு தாங்கிகள் அரண்கள் அமைக்கப்பட வேண்டும். மண்சரிவை தடுக்கும் இயற்கை அரண்கள் அமைக்கப்பட வேண்டும்.

இலங்கையின் தென்பகுதி ஆறுகளும் குளங்களும் நிறைந்த நீர் விநியோக வசதியுள்ள பிரதேசம். இந்த ஆறுகளையும் குளங்களையும் ஆழப்படுத்தியும் ஆறுகளில் நீர் பாய்வதை தடுக்கும் தடைகளை நீக்கி தங்கு தடையின்றி வேகமாக நீரைப் பாய வைப்பதன் மூலமும் குளங்களில் நீரை சேகரிப்பதன் மூலமும் வெள்ள அனர்த்தத்தை மட்டுப்படுத்த முடியும்.
இலங்கையில் தென்பகுதியில் கடும் மழை காரணமாக அழிவு ஏற்பட வடபகுதியில் கடும் வறட்சியினால் மரக்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. கடும் வறட்சி காரணமாக மரக்கறிகளை பயிரிடுவதும் அவற்றுக்கு நீர் பாய்ச்சுவதும் கடினமாக உள்ள நிலையில் மரக்கறி வகைகளின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாலேயே விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது.

நீண்ட காலத்தில் தென்பகுதியில் இருக்கும் அதீத நீர் வளத்தை வடக்கு நோக்கிக் கொண்டுவருவது விவசாய உற்பத்தியில் தங்கி இருக்கும் வடக்குக்கு அவசியமானது. இதன் மூலமாகவும் தெற்கில் வெள்ளப் பாதிப்பால் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த முடியும். துறைசார் வல்லுனர்கள் இவ்விடயங்களை ஆராய்வதும் அரசு அவ்வாலோசனைகளுக்கு அமைய செயற்படுவதும் நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மையளிக்கும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு