தமிழ் தேசியமும், எதிர்காலமும் : ரகுமான் ஜான்


Pirabakaran_V_at_Youngபகுதி 2 (சென்ற தேசம் சஞ்சிகை இதழ் தொடர்ச்சி).

ஐயர் எழுதிய ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்று நுhல் புலிகளது போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தை குறிக்கிறது என்றால், தமிழினி எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நுhல் புலிகளது இறுதிக்காலகட்டங்களை காட்டுகிறது. ஆதலால் இந்த சமயந்தில் நாம் இந்த இரண்டு நுhல்களையும் இணைத்துப் பார்ப்பதும் அவசியமானதாக இருக்கிறது. ஐயர் தனது நுhலில் குறிப்பிட்டவாறு, புலிகள் அமைப்பினுள் ஆரம்ப காலத்தில் முட்டி மோதிய முரண்பாடுகள், அவற்றின் தர்க்கரீதியான வளர்ச்சியின் ஊடாக முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்திருப்பதை நாம் இங்கு பார்கக்க் கூடியதாக இருக்கிறது. புலிகள் இயக்கம் தொடங்கிய காலத்தில், தன்னியல்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் என்ற வகையில் எல்லா விடயங்களுமே மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விதத்திலேயே புரிந்துகொள்ளப்பட்டிருந்தன என்பது கண்கூடான விடயமாகும். தமிழீழம் இறுதி முடிவு: ஆயதப் போராட்டத்தினால் அதனை அடையவது: தமிழீழம் கிடைத்த பிறகு தமது அமைப்பை கலைத்து விடுவது: போதைப்பெருள் தடை: காதல், திருமணம் கிடையாது: இயக்கத்தை விட்டு விலகிப் போனால் பிறகு அரசியல் செய்ய முடியாது.

வெறும் உணர்ச்சிமயப்பட்ட, அரசியல்ரீதியில் அறவே முதிர்ச்சியற்ற, பதின்ம வயதில் இருக்கும் இளைஞர்களது மனோரதியமான (romanticized) நிலைப்பாடுகள்தாம் இவை எப்பதை புரிந்துகொள்வதில் இப்போது எமக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. வரலாறானது இந்த அப்பாவித்தனங்களை ஈவிரக்கம் இல்லாமல் கலைந்து எறிகிறது. புலிகளது ஆரம்ப நிலைப்பாடுகள் ஓவ்வொன்றுமே அடுத்தடுத்து கேள்விக்குள்ளாகின்றன. போராளிகள் முன்னே போராட்டானது முன்வைக்கும் கேள்விகள்: அவற்றிற்கான விடைகளை தேடுவதற்காக போராளிகள் எடுக்கும் எத்தனிப்புகள்: இந்த தேடுதலில் நடைபெறும் வாசிப்புகள், உரையாடல்கள், விவாதங்கள் போன்றவை ஆரம்ப நிலையிலான அப்பாவித்தனங்களை அலஙகோலமாக கிழித்தெறிகின்றது. அதற்கு பின்னால் போராட்டத்தில் நிலைத்திருந்த அனைவருமே, புலிகள் ஆரம்ப காலத்தில் முன்வைத்திருந்த நிலைப்பாடுகளை மீறியே தமது வாழ்க்கையை, போராட்டத்தை, அமைப்பை முன்னெடுத்தார்கள். அதே நிலைப்பாடுகளை முரணில்லாமல் இன்றுவரையில் முன்னெடுத்திருந்தால், புலிகள் அமைப்பின் தலைமை உட்பட, அந்த அமைப்பில் இருந்த வந்த அனைவருமே “துரோகிகளாக” வரலாற்றின் குப்பைகூலத்தில் எறியப்பட்டிருப்பார்கள்.

புலிகள் அமைப்பில் மாத்திரம்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருநதன என்றோ, தனிப்பட அந்த அமைப்பின் தலைமை மாத்திரமே இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்றோ விமர்சிப்பது அரசியல்ரீதியில் அயோக்கியத்தனமானது என்றே படுகிறது. புலிகள் அமைப்பு மாத்திரமன்றி, எமது போராட்டத்தில் தோன்றிய பல்வேறு அமைப்புகளிலும் நிலைமைகள் கிட்டத்தட்ட இப்படியேதான் இருந்தன. காரணம் இந்த அமைப்புகள் யாவுமே எமது சமுதாயத்தின் படைப்புகள் என்றவகையில் ஒன்றுக்கொன்று ஒத்தவையாகத்தான் இருந்தன. எங்கெல்லாம் புரட்சிகரமான கோட்பாட்டின் ஊடாக நாம் சமுதாயத்தின் குறுகிய வரையறைகளை தாண்டிவர தவறுகிறோமா, எங்கெல்லாம் தன்னியல்பாக போராட்டமானது முன்னெடுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் எமது சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சித்தாந்ததங்கள் மீண்டும் மீண்டும்; தம்மை நிலைநிறுத்திக்கொள்வதை நாம் காண முடிகிறது.
எமது சமுதாயம் எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்போம். எமது கல்வியின் நோக்கமே, தனிமனிதர்கள் அதன் மூலமாக எவ்வாறு அதிகம் பொருளீட்டக்கூடிய விதத்தில் முன்னேறலாம் என்பதாகவே இருக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளை நோக்கி நாம் படையெடுக்கிறோம். இப்படிப்பட்ட போட்டியில் வெற்றிபெறாதவரை எமது சமூகத்தில் நாம் தோற்றுப்போனவர்களாக காண்கிறோம். எட்டாம் வகுப்பிலேயே “புத்திசாலிகள்” என்று நாம் கருதும் அனைவரையும் கணிதம், விஞ்ஞான துறைகளுக்கு அனுப்பப்பட்டுவிடுகிறார்கள். இதில் தேறாதவர்கள் வர்த்தக துறைக்கும், இவை எதுக்குமே தேர்வாகாதவர்களை “கலைப்பிரிவு” என்ற பெயரில் சமூக விஞ்ஞான துறைக்கு கழித்துவிடுகிறோம். ஒரு சமுதாயம் தனது வளங்களை எங்கு செலுத்துகிறதோ, அதனையே அறுவடை செய்கிறது. இப்படியாக சமுதாய அளவில் நாம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் வளங்களை ஒதுக்கிவிட்டு, அரசியல் இயக்கங்களில் பெரிய அளவில் எதிர்பார்ப்பது தவறான செயற்பாடு அல்லவா?

இவ்வாறு கூறுவதனால், விடுதலை போராட்ட இயக்கங்களின் பொறுப்பை நாம் குறைத்து கூற முடியாது. நாங்கள் போராளிகள் என்று வரும் போது எங்களுக்கு பொறுப்பிருக்கின்றது. எம்மிடம் ஒரு தெளிவான பார்வை – தரிசனம் (vision) இருக்க வேண்டும். அதிலிருந்து பிறந்த ஒரு திட்டவட்டமான ‘அரசியல் திட்டம்’, ‘மூலோபாயம் – தந்திரோபாயம்’ என்பவை வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இவை எனது போராட்டத்திற்கு திட்டவட்டமான வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் விடயங்கள் இப்படியான கண்ணோட்டத்துடன், ஆழமான பார்வையுடன் அணுகப்படவில்லை. விடயங்கள் வெறுமனே ‘அனுபவவாத’ மட்டத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. இப்படியான அனுபவவாத மட்டத்திலான புரிதலில் எல்லாமே இலகுவானவையாக இருக்கின்றன. கண்ணுக்கு முன்னேயுள்ள எதிரிகள் இலகுவாக இனங்காணப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறார்கள். சிறீலங்கா அரசுடன் ஒத்துழைப்பவர்களை துரோகிகள் என்று, தமிழ் அரசியல் தலைமை கை காட்ட, அவர்களை அழித்தொழிப்பதே போராட்டமாக கருதப்படுகிறது. அடுத்துவரும் பொலிஸ் உள்வாளிகள், காட்டிக் கொடுப்பவர்கள் என்று இந்த இலக்கு விரிகிறது. பொலிஸ் தேடி, தலைமறைவு வாழ்க்கை வாழநேரும்போது, அதற்காகவும், ஆயுதங்களை வாங்குவதற்காகவும் வங்கிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இப்படியாக போராட்டம் தன்னியல்பாகவே விரிந்து செல்கிறது. விடயங்கள் இவ்வளவு இலகுவாகவும், நேரடியாகவும் இருக்கும் என்றால் பின்னர் எதற்காம் கோட்பாடும் மண்ணாங்கட்டியும் என்று கேட்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் நாம் மார்க்ஸ் குறிப்பிட்ட “உண்மைகள் வெளிப்படையாகவே தெரியவருமானால் பின்னர் சமூக விஞ்ஞானிகள் எதற்கு?” என்ற வாசகத்தை கவனிக்க தவறக் கூடாது. அவ்வாறே, “புரட்சிகர கோட்பாடு இன்றி, ஒரு புரட்சிகர கட்சி இல்லை” என்று குறிப்பிட்டதையும் மறக்கக் கூடாது.

எமது போராட்டத்தில் தோன்றிய எந்தவொரு இயக்கத்திடமும் முறையான கோட்பாடோ, அல்லது கோட்பாட்டின் தேவை பற்றிய புரிதலோ இருக்கவில்லை. ஈரோஸ், ஈபிஆர்எல்எப் போன்றவையும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. வேண்டுமானால் என்எல்எப்டி அமைப்பை மாத்திரம் சற்று புறநடையாக கொள்ளலாம். அனைவரிடமும் இருந்ததெல்லாம் தமிழ் தரகு முதலாளிய வர்க்கத்தின் கைகளில் இருந்து தமிழ் தேசியவாதம் உருவாக்கியிருந்த “சிங்களக் காடையர் – எதிர் – அப்பாவித் தமிழர்” எனற மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, உணர்ச்சிமயமான சுலோகங்கள் மட்டும்தான். இவற்றுடன் அந்த காலத்தில் நிலவிய குறிப்பான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஆயுத போராட்டம், தலைமறைவு இயக்கம் என்பவற்றையும் சேர்த்துக் கொண்டார்கள். சிங்களவர்கள் அடிக்கிறார்கள், கொல்கிறார்கள், பாலியல் வல்லுறவு செய்கிறார்கள் என்ற பாணியில் உணர்ச்சிமயமான முன்னெடுக்கப்படுகிறது. இந்த உணர்ச்சிமயமான போராட்டமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயனளிப்பதாக தோன்றலாம். இந்த உணர்ச்சி மயமான அணுகுமுறையானது ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதன் வலுவை இழந்துவிடுகிறது. அத்தோடு, இந்த உணர்ச்சிநிலை ஆனது போராட்டம் குறித்த அறிவார்ந்த மதிப்பீடுகளை, விமர்சனம் – சுயவிமர்சனம் என்பவற்றிற்கு எல்லாம் இடங்களை வழங்காதமையினால், போராட்டத்தின் உண்மையான வளர்ச்சிக்கு தடைக்கல்லாகி விடுகின்றன.

இதற்கு மாறாக, பிரக்ஞைபூர்மவான செயற்பாடு என்பது, முதலிலேயே எமது சமூக சூழலை பகுப்பாய்வு செய்து எமது நாம் யார்? எமது எதிரி யார்? என்ற கேள்விகளுக்கான விடைகளை கண்டடைவதுடன் தொடங்குகிறது. எமது நண்பர்கள் யார்? எதிரியின் நண்பர்கள் யார்? எம்முடன் தற்காலிகமாகவாவது வரக்கூடிய சக்திகள் எவை? எதிரியுடன் தற்காலிகமாகவாவது சேர்ந்து செயற்படக்கூடிய சக்திகள் யார்? என்றெல்லாம், போராட்டத்தின் திட்டமிடுதல் கட்டத்திலேயே வரையறுத்துக் கொள்கிறது.

இதனால் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதலாக நாம் எவ்வாறு எமது தரப்பை பலப்படுத்துவது? எதிரியின் தரப்பை எவ்வாறு பலவீனப்படுத்துவது என்பதில் கவனம் குவிக்கப்படுகிறது. இந்த அக்கறையில் ஒரு ஊசலாட்டமுள்ள சக்தியைக்கூட எவ்வாறு வென்றெடுப்பது என்பதும், எதிரிக்கு சாதகமான சக்திகளிடையே எவ்வாற முரண்பாடுகளை தீவிரப்படுத்துவது என்பது குறித்தம் எமது அக்கறைகள் இருந்தாக வேண்டியிருக்கிறது. எமது தரப்பை, எமக்கு சாதகமாக எல்லா சக்திகளுடனும் – நண்பர்கள், தற்காலிக சக பயணிகள், ஊசலாடும் சக்திகள் – பலமாக ஐக்கியப்படுத்துவது என்பதிலும், எதிரிகளை எவ்வாறு அவனுக்கு சாதகமாக உருவாகக்கூடிய அணிதிரளலில் இருந்து தனிமைப்படுத்துவது என்பது முதன்மையான அக்கறையாக இருந்தாக வேண்டும்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு கேந்திரமான பார்வை இல்லாததனால், நாம் எமது முகாமிற்குள் இருந்த பகைமையற்ற முரண்பாடுகளை பகைமையாக்கிணோம். அவர்கள் மீது அழித்தொழிப்பில் தொடங்கிய தாக்குதல்கள், அந்த சக்திகளை எதிரியின் அணிக்கு சேர்த்துவைக்கும் பணியை ஆற்றியது. இறுதியில் இந்த கேந்திரமற்ற பார்வையானது புலிகள் அமைப்பை எல்லா தரப்பினரிடம் இருந்து அந்நியப்படுத்தவும், சிறீலங்கா அரசு எல்லா சக்திகளையும் தனக்கு சார்பாக அணிதிரட்டவுமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் நாங்கள் கடைசியில் தனித்துப் போய் நிக்கிறம். ஒருவரும் உதவி செய்யவில்லை என்றால், அது ஏன்? எவ்வாறு நடந்துமுடிந்தது என்ற கேள்விக்கும் நாம் விடைகண்டாக வேண்டும் அலலவா?

அடுத்ததாக, எமக்கு வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் குறித்து தெளிவான பார்வை கிடையாது. முதலாளித்துவத்திற்கு முந்திய காலத்தில் தனிநபர்களே, மாவீரர்கள், மன்னர்கள், மேதைகள் தமது தனித்திறமையினால் வரலாற்றை படைப்பதான ஒரு கருத்து நிலவி வந்தது. ஆனால் முதலாளித்துவ புரட்சியுடன் மக்கள் திரள் அமைப்புகள் பல்வேறு சமூக மாற்றங்களிலும் ஆற்றும் தீர்க்கமான பாத்திரம் குறித்த கருத்தானது மிகவும் பரவலாகியுள்ளது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக கருத்தியல் சூழலைக் கூட எமது தமிழ் சமுதாயம் அடையாமல் இருக்கிறது எனபதுதான் இன்றைவரையில் உள்ள நிலைமை. வீட்டில் பெற்றோர் எமது கல்வி, வேலைத் தெரிவு, திருமணம் வரையில் தீர்மானிக்கிறார்கள். “உனக்கு என்ன நல்லது என்று எனக்குத் தெரியும்” என்பது எமது குடும்ப நடைமுறையில் நாம் அன்றாடம் கேட்கும் ஒரு வாசகமாகும். இதே நடைமுறைகள் அமைப்பினுள்ளும் வருகிறது. இங்கே அம்மா, அப்பாவின் இடத்தில் ஒரு தலைவர் அமர்ந்துவிடுவது எமக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையே தருவதில்லை. லெனின் சொல்வதுபோல, “ஒருவர் பின் ஒருவராக தலைமை தாங்கும் தொடர்ச்சியான ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும்” என்ற அக்கறைக்குப் பதிலாக தனிமனித தலைமைகளை உருவாக்கி, அவற்றை நோக்கி விம்பங்களை கட்டமைப்பது தொடர்கிறது. கொள்கை, அமைப்பு என்பவற்றிற்கு மேலாக தனிநபராக உள்ள தலைவர் மீது நிபந்தனையற்ற விசுவாசத்தை கொண்டிருப்பதே முதன்மைப்படுத்தப்படுகிறது.

மனிதர் தாம் விரும்பும் அம்சங்களை எல்லையில்லா அளவிற்கு விரித்துவிட்டு அவற்றை கடவுள் என்று அழைக்கின்றனர். எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த, சர்வ வல்லமை படைத்த இந்த கடவுள்களே, இன்னொரு கட்டத்தில் எமது எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாதவர்களாக எமக்கு தோன்றத் தொடங்குகிறார்கள். தவறு செய்து தண்டிக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் எமது புராணங்களில் காணப்படுகிறார்கள். “நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே” என்று அதே கடவுளர்களையே கேள்வி கேட்கும் நிலைமையும் அதே புராணங்களில் காணப்படுகின்றன. நாமே உருவாக்கிய, நாம் விரும்பும் நற்பண்புகளுக்கு எல்லாம் முடிவிலா அளவிற்கு நீட்டி உருவாக்கிய கடவுளரது நிலைமையே இதுவானால், மனிதர்களது நிலைமை பற்றி நாம் பேசவே வேண்டியதில்லை. மனிதரது புலன் சாதனங்களும், அவரது மூளையுமே குறிப்பிட்டஅளவிலேயே புற உலகு பற்றிய தகவல்களை பெற்று, பரிசீலனை செய்து, அதன் இயக்கப் போக்கை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவையாகும். இதனால் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் மனிதர் பெரும் அறிவானது எப்போதும் பற்றாக்குறை உடையதாக இருப்பதும், இதனால் அடிக்கடி அவர்கள் தவறு செய்வதும், அவற்றிலிருந்து படிப்பிணைகள் பெற்று மீண்டு வருவதும் மனித குலத்திற்கே உரிய பண்பாகும். இங்கு தவறே செய்யாத மனிதரோ, அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நபர்களோ அல்லது அமைப்புகளோ இருக்க முடியாது என்பதுதான் வரலாற்றுபூர்வமான உண்மையாகும்.

புலிகளை விமர்சிப்பவர்கள், புலிகளின் தலைவர் “படு முட்டாள்” எனவும், அவரது முட்டாள் தனத்தாலேயே அனைத்து தவறுகளும் நேர்ந்ததாகவும் விமர்சிக்கின்றனர். இது ஒரு அப்பட்டமான தவறான விமர்சனம் என்பதை தொடக்கத்திலேயே நாம் நிராகரித்து ஆகவேண்டும். எமது சமுதாயத்தின் சாராசரிக்கும் அதிகமான அறிவுமட்டம் இல்லாத ஒருவரால் முப்பத்து ஐந்து வருடம் மாத்திரமல்ல, முப்பத்து ஐந்து நாட்கள் கூட இந்த போராட்டத்தில் தலைமை சக்தியாக இருந்திருக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆனால் இங்கு எங்கு பிரச்சனை எழுகிறது என்றால், புலிகள் அமைப்பின் தலைவர் மீது கட்டப்படும் விம்பம் தொடர்பாகவே எமது விமர்சனங்கள். இந்த விம்ப அரசியலானது, ஒரு போராட்ட அமைப்பினுள் பரஸ்பரம் காணப்பட வேண்டிய விமர்சனம், மதிப்பீடுகள், சுயவிமர்சனம் போன்ற, போராட்ட அமைப்பின் முறையான செயற்பாட்டிற்கு அவசியமான செயற்பாடுகளை முடக்கிவிடுகிறது. இதற்கு மேல் அந்த அமைப்பானது அதன் ஆன்மாவை இழந்துவிடுகிறது.

தனிநபர்கள் குறித்து எப்படிப்பட்ட பிரமிக்கத்தக்க விம்பங்கள் வெளியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவருடன் தொடர்ச்சியாக செயற்படும் தோழர்களுக்கு அவருடைய பலவீனங்களும், குறைபாடுகளும் தொரிந்தே இருக்கின்றன. இந்த நிலையில் சரி – தவறு என்பதற்கு அப்பாற்பட்டு குறிப்பிட்ட தலைவருக்கு முற்று முழுதான விசுவாசம் என்பது ஒருவகையில் அமைப்பினுள் உள்ள முன்னணி உறுப்பினர்களிடையிலான உறவுகளையே களங்கம் கொள்ள அல்லது ஊழல் படியச் செய்வதாகவே (corrupt பண்ணச் செய்வதாகவே) அர்த்தப்படும். இது தவிர்க்க முடியாதபடியாக, அடுத்த மட்ட தலைவர்கள், தத்தமது பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் போல செயற்படுவதும். அவருக்கு நெருக்கமானவர்கள், அமைப்பு விதிகளை மீறி செயற்படுவதும் என ஒரு தொடர்கதையாகவே இந்த ஊழல் தொடர்கிறது. பல்வேறு நபர்களும் இதனை தனிப்பட்ட ஒரு குறிப்பிட்ட தலைவரது தவறாகவே வெளியில் விமர்சிக்கிறார்கள். ஆனால் இதன் ஊற்று மூலம் இந்த தனிநபர் விசுவாசமேயாகும். கொள்கைரீதியான சரி தவறுகளைப் பற்றி கவலைப் படாமல் கண்மூடித்தனமான விசுவாசத்தை கோரும்போது அதற்காக கொடுக்கும் விலைதான் இந்த ஊழலாகும். கிட்டு, மாத்தையா, கருணா, சொர்ணம் … என்று இந்த பட்டியல் மிகவும் நீண்டது. இதற்கு விதிவிலக்கான நபர்களும் இருந்தார்கள் என்பதை இரு மறுப்பதாகாது.

தலைமைக்கு முழு விசுவாசமாக இருப்பது முன்னிபந்தனை என்றான பின்னர், அமைப்பில், போராட்டத்தில், மக்களுடனான உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை, அவற்றில் அமைப்பின் தவறுகளை விமர்சிப்பது, கேள்வி கேட்பது என்பவை தலைமை மீதான விசுவாசமின்மையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக தலைமை அங்கத்தவர்கள், முதன் மட்டத்தில் சிலரும், அடுத்தடுத்த மட்டங்களில் பலரும் தொடர்ச்சியாக களையெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்களை மக்களோ, வெளியில் இருக்கும் அவதானிகளோ நம்புவதில்லை என்பதுதான் இதுவரைக்குமான வரலாறு.

அமைப்பின் மீதான அக்கறையுடன் கூடிய விமர்சனங்கள், கருத்துக்கள், கேள்விகள் கேட்பது தடுக்கப்படும் பொழுது, இதன் எதிர்வினையாக வஞ்சகப் புகழ்ச்சிகள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ளத் தொடங்குகின்றன. கசப்பான உண்மைகளை சகித்துக்கொள்ளாதபோது, இனிப்பான பொய்கள் மடைவெள்ளமென திறந்துவிடப்படும். எல்லாவற்றையும் போலவே இந்த பொய்களின் வெள்ளமும் ஏற்படுத்தும் போதை தலைமை உட்பட எல்லோரது கண்களையும் மறைத்துவிடக் கூடியவையாகும். பிற்காலத்தில் அமைப்பின் தோல்விகளில் இதுபோன்ற சம்பவங்களும் பாரிய பங்கை ஆற்றியுள்ளன.

அடுத்தது அரசியல் பிரச்சனைகளை பார்ப்பம். “மக்கள்தான் வரலாற்றை படைக்கின்றார்கள். ஆனால் அதை விருப்பதிற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை. தாங்கள் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு ஏற்றபடியா இல்லாமல், கடந்த கால வரலாறு அந்த மக்களுக்கு எவற்றை கைமாற்றிக் கொடுக்கிறதோ, அந்த சூழ்நிலைக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகின்றனர்” என்கிறார் மார்க்ஸ். இதில் இரண்டு விசயம் முக்கியப்படுது. மக்கள், தாம் வாழ்கிற சூழ்நிலையை, அதிலுள்ள பிரச்சினைகள், நுணுக்கங்களை புரிந்துகொள்ள முடியும். அதாவது இது மக்களது ‘தன்னிலை’ (subjectivity) பற்றி வலியுறுத்துகிறது. இரண்டாவது, வரலாற்றை படைக்கப் போறது மக்களது சக்திதான். இது மக்களது செயலாண்மை (agency) பற்றி பேசுகிறது. ஆகவே எந்தவொரு புரட்சிகர போராட்டமும் மக்களது இந்த தன்னிலை, செயலாண்மை என்பவற்றை முதன்மையாக கவனத்தில் கொண்டே தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்படியானால் சாதாரண நிலைமையில் மக்கள் செயற்பாடற்றவர்களாகவம், அரசியல் விழிப்புணர்வு குறைந்தவர்களாகவும் இருப்பதை எவ்வாறு புரிந்துகொள்ளவது என்பதுதான் அந்த பிரச்சனையாகும்.

மேலே கூறப்பட்டது போல மக்கள் அறவே போராடதவர்களாக இல்லை. மாறாக, அங்கொண்றும், இங்கொண்றுமாக போராடவே செய்கிறார்கள். ஆனால் மிகவம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களால் அந்த போராட்டங்களில் வெற்றி பெற முடிவதில்லை. அதற்கு காரணம் அவர்கள் “வெறுங் கைகளுடன்” போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். முன்னணி போராளிகள் என்ற வகையில் எமக்கு கிடைத்த பல வரப்பிரசாதங்கள் (privileges) அவர்களுக்கு மறுக்கப்பட்டனவாக இருக்கின்றன. எமக்கு கிடைத்த கல்வி வாய்ப்புகள், எமக்கு கிடைத்த போராட்ட அனுபவங்கள், இவற்றின் மூலமாக நாம் உருவாக்கிக்கொண்ட தொடர்புகள்… போன்ற பற்பல சாதனங்கள் இந்த சாதாரண மக்களுக்கு மறுக்கப்பட்டனவாக இருக்கின்றன. இந்த சாதனங்கள் அந்த மக்களுக்கு கிடைக்குமானால், அவர்களால் சமூக சிக்கலை திறமையாக புரிந்து கொள்ளவும், புதிய புதிய போராட்ட வடிவங்களைக் கூட அவர்களால் அறிமுகப்படுத்தவும் முடியும்.

இந்த நிலையில் புரட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், மக்களிடம் அந்த சாதனங்களை கொண்டு செல்வது. எமது சமூக பின்னணியானது எமக்கு இயல்பாக தந்துள்ள அந்த சாதனங்களை – கோட்பாட்டு விளக்கத்தை, அமைப்புத்துறையை, தேவைப்பட்டால் பெளதிக கருவிகளையம் – கொண்டு சேர்த்தால், அந்த மக்கள் சுயமாகவே போராடும் வல்லமையை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலமாக போராடும் அந்த மக்கள் திரளின் உண்மையான தலைமையாக – இங்கு தலைமை என்பதை கிராம்சி கூறுவதுபோல வழிநடத்தல் (direction) என்ற அர்த்தத்திலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும் – நாம் இருப்பதை காணலாம். இதற்கு மாறாக, சுயாதீனமாக செயற்படும் மக்களது அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்திவிட்டு, எமது தலைமையில் மாத்திரமே, நாம் சொல்லும் விதத்தில் மட்டுமே – அதாவது எமது அணியில் ஆளணியை நிரப்புபவராக மாத்திரமே மக்கள் போரடலாம் என்பது பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதை போன்றது.

முன்னொரு காலத்தில் அரசனை கடவுளின் வடிவமாக காண்பதும், அவனுக்கு அடிபணிவதே கடவுளுக்கு செய்யும் சேவையாக பார்ப்பதுமான கருத்துநிலையொன்று இருந்து வந்தது. இது முதலாளித்து ஜனநாயக அரசியல் சகாப்பத்திற்கு முந்திய, இன்று வழக்கொழிந்துபோன ஒரு கருத்தாகும். இதனை மீள எழுப்ப முனைவதும், மக்களை வெறும் மந்தைகளாக ஓட்ட நினைப்பதுதம் மிகவும் தவறான அரசியலின் வெளிப்பாடாகும். உண்மையில் மன்னாரில் இருந்து கிளிநொச்சி ஊடாக, முள்ளிவாய்க்காலுக்கு மக்களை சாய்ச்சுக்கொண்டு சென்றபோது இதுவேதான் நடந்து முடிந்தது.
அடுத்தது எமது போராட்ட வழிமுறைகள் பற்றிய பிரச்சனையாகும். எங்களது கைகளில் பத்து விரல்கள் இருக்கின்றன. அதில் ஒன்று அல்லது சில விரல்கள் சிறப்பாக செயற்படுவதாக நாம் கருதலாம். அதற்காக கையிலுள்ள ஏனைய விரல்கள் அனைத்தையும் மடித்து வைத்திருப்பது எத்தனை மடமையானதோ, அவ்வாறுதான் ஒரு போராட்டத்திலும் சாத்தியமான போராட்ட வழிமுறைகளில் அதிகாரப் படிநிலையை (hierarchy) கற்பிப்பதும், அவற்றில் சிலவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து ஏனையவற்றை முழுமையாக நிராகரிப்பதுமாகும். போராட்டத்திற்கு பல வழிமுறைகள் இருக்கின்றது. ஆயுதம் தாங்கிய வன்முறை போராட்டம், வன்முறையற்ற போராட்டம். பகிரங்கமானது, இரகசியமானது. மேடையில் பேசுகின்றோம் இரகசியமாக கூட்டத்தில் பேசுகின்றோம். எதிரியுடனும் நேரடியாக பேச வேண்டியிருக்கும். இதையெல்லாமே நாங்கள் கற்றுத்தேற வேண்டும். இருக்கின்ற அத்தனை சாதனங்களையும் நாங்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் மிகவும் தீர்க்கமானதாக தோன்றும் ஒரு போராட்ட வடிவமானது, மாறிவிட்ட இன்னொரு சூழலில் அறவே பயனற்றதாகிவிடுகிறது. இப்படிப்பட்ட நிலைமையில், அந்த நிலையையில் சிறப்பாக செயற்படக்கூடிய போராட்ட வழிமுறைகளை நாம் தேர்ந்தெடுத்து, அவற்றை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினால் மாத்திரமே, இப்படியாக மாறிவரும் போராட்ட சூழலில் அமைப்பின் பலமும். கட்டுப்பாடும் சிதறாமல், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடியும்.

சமாதான காலகட்டம் என்பது புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் ஒரு சோதனையான கட்டமாக இருந்துள்ளது. எதிரியின் ஒரு பலமான தாக்குதலை முகம்கொடுக்க முடியாத நிலையிலேயே, கடைசி மோதலுக்கான முதல் தாக்குதலை புலிகளே தொடங்குகிறார்கள். கடைசி யுத்தத்தில் அணி திரட்டல் பற்றிய விடயம் பாரிய பிரச்சினையாகிறது. மக்கள்தான் போராளிகள் என்றால் நாங்கள் ஏன் அவர்களை பிடித்துக்கொண்டு வரவேண்டியிருக்pன்றது? அந்த மக்களுடைய போராட்டத்திற்கு நாங்கள் ஏன் அவர்களைப் பிடித்து கட்டாயப்படுத்த வேண்டும்? கடைசிக் கட்டத்தில் வன்னியில் ஒரு மூன்று லட்சம் பேரை வைத்துக் கொண்டுதான் போராட்டத்தை நடத்தப் பார்க்கிறம். எங்கள் தேசத்திலுள்ளவற்றில் ஒரு இருபது வீதத்தையாவது கடைசி நேரத்தில் பயன்படுத்த முடிந்ததா?

ஐ.எஸ் அமைப்பிற்கு இந்த உலக நாடுகளில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் சுயவிருப்பத்துடன் போயச் சேர்கிறார்கள். நாம் சொந்த மண்ணில் சிறுவர்களை கடந்திச் சென்று மூன்றே நாட்கள் பயிற்சி கொடுத்து, எதிரியின் பீரங்கிக்கு தீனியாய் அனுப்புகிறோம். ஒரு வாதத்திற்காக சொல்வதானாலும், தமிழகத்தில் இருந்து, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து அமைப்புடன் இணைந்துகொள்ள சுயவிருப்புடன் வருவதற்கு இளைஞர்களை தயார்படுத்தாமல் விட்டது எப்படிப்பட்ட தவறு? அதிகாரவர்க்க நடைமுறைகளை முற்றாக கைவிட்டு, இந்த போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக நடத்தியிருந்தால், நிலைமை வேறு விதமாக அமைந்திருக்கலாமா? என்றும் யோசிகத்தாக வேண்டியுள்ளது அல்லவா?

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் முன்னைய புலிகளின் ஆதரவாளர்கள், தலைமையின் மறைவை பகிரங்கப்படுத்தி, அதற்கான அஞ்சலியை செய்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தை நகர்த்த முடியாமல்> தமக்குள் பல குழுக்களாக பிரந்து முட்டி மோதிக்கொண்டு இருப்பது ஏன்? இப்படிப்பட்ட வியாபாரிகள் எல்லாம் கடந்த காலத்தில் அமைப்பினுள் எவ்வாறு வந்து சேர்ந்தார்கள்? கொள்கையுடன் இணைந்து செயற்பட்டவர்களுடன் முறையான உறவுகளை பேண முடியாதபோது, அவர்களின் இடங்களை பல வியாபாரிகளும், வஞ்சகப் புகழ்ச்சியாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். இதற்கு யார் காரணம்?

யாழ்ப்பாணத்திலிருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றும் போது, யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லவிடாமல் பலவந்தமாக கொண்டு சென்றபோதும், சம்பந்தப்பட்ட மக்களது உரிமை, அவர்கள் தமது எதிர்கால பாதுகாப்பு குறித்து முடிவு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. இதன் மூலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடனேயெ இருப்பதான ஒரு தோற்றம் சர்வதேச சமூகத்திற்கு காட்டப்பட்டதாக இந்த நுhலில் கூறப்படுகிறது. இந்த செயற்பாடுகள் ஒருவித நிகழ்த்திக் காட்டுதல்களைத்தான் (performance) சுட்டுகிறது. உண்மையான மக்கள் போராட்டத்திற்கு எதற்கு இத்தனை நிகழ்த்திக்காட்டல்கள்?

இறுதியாக, இந்த நுhல் முழுவதுமே எமது போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த தவறான நிலைப்பாடுகள் எவ்வாறெல்லாம் போராட்டத்தை மிகவும் கடுமையாக நெருடிகளுக்குள் சிக்கவிட்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலில் முடிவுகட்டியது என்பதற்கு நிறையவே சான்றுகளை காண முடிகிறது. இந்த கட்டத்திலாவது, தமிழ் மக்களது விடிவில் உண்மையான அக்கறை உள்ளவர்கள், பல நாடுகள் சேர்ந்து எமது போராட்டத்தை தோற்கடித்தது: மக்களுக்கு சரியான அரசியல் உணர்வு இருக்கவில்லை: புலிகள் அந்த காலத்தில் மரம் வளர்த்தார்கள், ஆடு வளர்த்தார்கள்… என்ற பாணியிலான கதை சொல்லல்களை முடிவுகட்டி: நடந்து முடிந்த போராட்டத்தின் தோல்வி குறித்த வெளிப்படையாக பேசுவதும், எதிர்காலத்தில் மக்களது போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் நேர்மையுடன் பேசுவது அவசியமானது இதில் பலரது சுயவிமர்சனங்களும் இப்போது அவசியமானவை ஆகின்றன. இதற்கு மேலும் கண் மூடித்தனமான விசுவாசம், உண்மைகளை காண மறுப்பது என்பவை தொடர்ந்தும் சில பிழைப்புவாத கூட்டங்களது நலன்களுக்காக பல இலட்சம் மக்களது உயிர்களை காவுகொடுக்கம் நிலைமை தொடரவே வழிவகுக்கும்.

புனிதம், தூய்மை, பரிசுத்தம், பூரணத்துவம் போன்ற மதம் சார்ந்த இலட்சியவாத சொல்லாடல்களை முற்றாக தவிர்த்து, ஒரு காரிய சாத்தியமான செயல்திட்டமொன்றை நோக்கி நகர்வதே மேற்கொண்டு தமிழ் மக்களது நலன்களை உத்தரவாதப்படுத்த உதவும்.

கனடாவில் இடம்பெற்ற தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ என்ற நுhல் வெளியீட்டில் ரகுமான் ஜான் ஆற்றிய உரையின் திருத்தப்பட்ட எழுத்து வடிவம் (revised and edited version) இது. (தேசம் இதழ் 47 இல் வெளியான கட்டுரை)

முற்றும்.

உங்கள் கருத்து
 1. vanni arrachi on June 14, 2017 9:25 am

  சிங்களவன் எதிரியென சகோதர சகோதரிகளைச் சுட்டோம்.

  ஆண்டுகள் பலபத்து சென்றது.

  உண்மை புரிந்தது.

  சிங்களம் சிங்களதேசம் எமது தாய்நாடு. அவர்கள் எமது நெருங்கிய உறவினர்கள்.

  அன்றும் இன்றும் எதிரி நமக்குள்ளே.


 2. T Jeyabalan on June 15, 2017 9:42 am

  தமிழ் தேசியமும் எதிர்காலமும் பகுதி 1:http://thesamnet.co.uk/?p=82240
  தமிழ் தேசியமும் எதிர்காலமும் பகுதி 2:http://thesamnet.co.uk/?p=84695


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு