முதல்வர் விக்கினேஸ்ரனுக்கு சோதணை: நம்பிக்கையில்லா தீர்மானாம்! புதிய முதல்வராக சிவஞானம் நியமிக்கப்படலாம்!!


Wigneswaran_C_V_CM_Medical_Testவடமாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழரசுக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் மீது இன்று கூடிய தமிழரசுக் கட்சி நம்பிக்கையிலாப் பிரேரணையை நிறைவேற்றி உள்ளது. வடமாகாண சபையின் 36 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஆதரவாக உள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் இந்த நம்பிக்கையிலாப் பிரேரணை முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் மாகாணசபை உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். தமிழரசுக் கட்சி 13 மாகாண சபை உறுப்பினர்களையே கொண்டுள்ளது. அதில் சிலர் இன்னமும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் நம்பிக்கையிலா பிரேரணைக்கு 20 மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவளித்து உள்ளனர்.

முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு எதிரான சாட்சியங்கள் தனக்கும் முதலமைச்சருக்கும் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பதாகவும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தேசம்நெற் க்குத் தெரிவித்தார். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மக்களோடு நிற்கின்றார். அதனால் அவர் குற்றவாளிகளை பதவியில் இருந்து நீக்கினார். அதற்காக தமிழரசுக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பா உ சுமந்திரன் ஆகியோரே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்து இருப்பதாகவும் யாழ் மார்டின் வீதியில் உள்ள தமிழசுக் கட்சி அலுவலகத்தில் அடிக்கடி இதற்கான சந்திப்புகள் இடம்பெற்று வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை  ஆளுநர் ரெஜினோல்ட் குரே இடம் கையளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரியவருகிறது. புதிய முதல்வராக சி வி கெ சிவஞானம் அல்லது ப சத்தியலிங்கம் அவர்களை நியமிக்க உள்ளதாகவும் யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணசபையின் அமைச்சர்களின் ஊழல் மோசடி தொடர்பாக முதலமைச்சர் உருவாக்கிய விசாரணைக்குழு பொன் ஐங்கரநேரன் த குருகுலராஜா ஆகியோறை குற்றவாளிகளாக இனம் கண்டதைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களைப் பதவி விலக உத்திரவிட்டு இருந்தார். அத்துடன் விசாரணைகளில் இருந்த மற்றைய இரு அமைச்சர்களான பா டெனீஸ்வரன் ப சத்தியலிங்கம் ஆகியோரை விடுமுறையிலும் அனுப்பி இருந்தார். ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்களில் பா டெனீஸ்வரன் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவைச் சார்ந்தவர். மற்றைய மூவரும் தமிழரசுக் கட்சியினர்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு இருந்தது. ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் பதவிலக வேண்டிய அவசியமில்லை விசாரணைக்குழுவே தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்களுக்காக குரல் எழுப்பி இருந்தார். தற்போது முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணைக்கும் பா உ எஸ் சிறிதரனின் ஊடகங்கள் முன்நிற்கின்றன.

இது பற்றி தேசம்நெற் க்குத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரனின் கருத்தையே பிரதிபலித்தார். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் துரோகத்தனம் என்று குறிப்பிட்டார். இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம் ஏ சுமந்திரன் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தன்னுடைய ஆதரவு எப்போதும் முதலமைச்சருக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவைச் சேர்ந்த எம் கெ சிவாஜிலிங்கத்திடம் ரெலோ உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு உள்ளனரா எனக் கேட்ட போது இருவர் கையெழுத்திட்டு இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனால் தன்னால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

புதிய முதல்வராக சி வி கெ சிவஞானம் பதவி ஏற்றால் மோசடிக்குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இயங்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடக்கு முதல்வருக்கு எதிராக கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம்!

வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி நேற்று (14) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, தமிழரசு கட்சியின் வடமராட்சி தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களான சுகிர்தன், சிவயோகன், தர்மலிங்கம் ஆகியோரும் தென்மராட்சி தொகுதியிலிருந்து சயந்தனும் கையெழுத்திட்டுள்ளனர்.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலிருந்து ஆர்னல்ட், பரஞ்சோதி, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அரியரத்தினம், பசுபதிபிள்ளை, கல்வியமைச்சர் குருகுலராசா ஆகியோரும், மன்னார் மாவட்டத்திலிருந்து சிறாய்வா, வவுனியா மாவட்டத்திலிருந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கமலேஸ்வரன் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, ரெலோ கட்சியை சேர்ந்த மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த றிஃப்கான், ஜவாகிர், ஜயதிலக ஆகியோரும், சுதந்திர கட்சியிலிருந்து அகிலதாஸ் மற்றும் போனஸ் ஆசனம் மூலம் தெரிவான அஸ்வின் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை, உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் பதவி மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு அவைத் தலைவர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு