ஊழல் மோசடி பொன் ஐங்கரநேசனுடன் ஐக்கியமான முதல்வர் விசாரணைக்குழு அறிக்கையை திரித்து கயிறுவிடுகிறார்! : பா உ சுமந்திரனின் சுடான அறிககை


wigneswaranAayngaranesan_Pon_NPC_Memberதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் விசாரணைக்குழு

அறிக்கையை மறைக்க முயன்றார்!
அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட பொன் ஐங்கரநேசனை காப்பாற்ற முயன்றார்!!
அறிக்கையில் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்களை குற்றவாளி ஆக்கினார்!!!

என தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எம் ஏ சுமந்திரன் வெளியிட்ட அறிக்கை:

“இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல் பணமோசடி மற்றும் லஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ
“முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர்எதிரானதாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்துவந்தனர்.
தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டபோது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாணசபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் ‘அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக் கெல்லாம் அஞ்சமாட்டார்’ என்று சொன்னதை எவரும் மறந்திருக்கமுடியாது.

எமது வற்புறுத்தலின் காரணமாகத்தான் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.
அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பணமோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார்.
அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார்.
மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19 ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார்.

2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின்தான் மாகாணசபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.
இதன்பொழுதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இந்த முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம்.

முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ் வேளையில் வேறுவிதமாக முன்னெடுத்தார்.

குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன்வைத்தார்.

குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப் பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும்.

தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர்தான் காலம்தாழ்த்தி சேனாதிராஜாவுடனும் பேசினார்.

ஊழலுக்கு எதிராக அவர் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார்.

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும்அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது.

இதே நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறுநாள் மாகாணசபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின்பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்தநாள் மாகாணசபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.
நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்று வித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது.

அதனால்தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம்.

ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்த தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும்.” என சுமந்திரனின் விசேட அறிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு