எல்லாப் பிரச்சினையையும் இராணுவ ரீதியில் மட்டும் தான் தீர்க்கலாம் என்று எண்ணியவர் பிரபாகரன்! அதுவே அவர்களுடைய அழிவுக்குக் காரணம்!! – தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மணி

எந்தவொரு பிரச்சினையையும் இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது! ஆனால் எல்லாப் பிரச்சினையையும் இராணுவ ரீதியில் மட்டும் தான் தீர்க்கலாம் என்று எண்ணியவர் பிரபாகரன்! அதுவே அவர்களுடைய அழிவுக்குக் காரணம் என தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மணி சவுக்கு என்ற காணொலிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 76 நிமிடங்கள் நீண்ட இந்த நேர்காணலில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இராணுவ ரீதியான தீர்வே சாத்தியம் என்ற அசாதாரண நம்பிக்கையே விடுதலைப் புலிகளினதும் பிரபாகரனினதும் முடிவுக்கு ஒரே காரணம் என உறுதிபடக் குறிப்பிடுகின்றார்.

மேலும் தற்போதைய பிஜேபி அரசு பாபர் மசூ போன்ற ஒரு பிரச்சினையை காசி விஸ்வநாதர் – கயன்வாபி மசூதி விவகாரத்தை வைத்து தூண்டிவிட்டு 2024 தேர்தலை சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்விவகாரத்தில் 15,000 பேர்வரை கொல்லப்படலாம் என்றும் அதற்று பிஜேபி தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் பத்திரிகையாளர் மணி சவுக்கு காணொலி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2006 இல் மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடிய போது தங்களுடைய முடிவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து விட்டதாக கிஞ்சித்தும் எண்ணி இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அதனை மிக நன்கு உணர்ந்திருந்தார். அன்ரன் பாலசிங்கம் 2005இல் வன்னிக்குச் சென்றிருந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவ்விடயத்தை எடுத்துச் சொல்ல முயன்ற போது, பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை உணர்ந்து கொண்டார். “அண்ணை சேரனின் ‘ஆடொகிராப்’ நல்ல படம் பார்ப்போம்” என்று சொல்லி அதனைப் பார்த்தனர். படம் முடிந்ததும் கதைப்போம் என்று ஆவலில் அன்ரன் பாலசிங்கம் பேச்சை ஆரம்பிக்க “நல்ல படம் அண்ணை, இன்னொருக்கா பார்ப்பம்” என்று பிரபாகரன் சொல்ல ‘ஆட்டோகிராப்’ படம் வன்ஸ்மோர் ஓடியது. அன்ரன் பாலசிங்கமும் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட வேண்டும் என்று இரண்டாம் காட்சி முடிந்ததும் ஆரம்பிக்க, “அண்ணை, இன்னொருக்கா படத்தை பார்ப்பம்” என்றார் பிரபாகரன். அன்ரன் பாலசிங்கம் புரிந்து கொண்டார்.

2009 ஜனவரி 02இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிக்கப்படாத தலைநகராகத் திகழந்த கிளிநொச்சி இரணுவத்தின் வசம் வீழ்த்த போதும் “பனை மரத்திலா வெளவாள! தலைவருக்கே சவாலா!!” என்ற புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் உசுப்பி விட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் சில குஞ்சுகள் இப்பவும் தான் விசிலடிக்கிறார்கள். பழக்கதோசத்தில்.

2008 – 2009 காலகட்டங்கள் நான் ஒரு முழுநேர ஊடகவியலாளனாகவே ஆகிவிட்டேன். அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் 2016 இல் வெளியான ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற என்னுடைய நூல். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் எவ்வாறு நகர்த்தப்படும், எந்தெந்த காலப்பகுதிகளில் எந்தெந்த பிரதேசகங்கள் கைப்பற்றப்படும் என்பது முதல் முள்ளிவாய்க்காலில் 2009 ஏப்ரல் 16 இந்திய தேர்தலுக்கு முன்பாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருந்துது. இத்திட்டத்திற்கு ‘புரஜகற் பீக்கன்’ என்றும் பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால் இத்திட்டம் பற்றி எனது நூல் தவிர வேறு எங்கும் பதிவுகள் இல்லை.

2009 காலகட்டத்தில் தேசம்நெற் இணையத்தின் பிரதான செய்தியாளராக இருந்தவர் காலம்சென்ற கண்டியைச் சேர்ந்த பி எம் புன்னியாமீன். அன்றைய நாட்களில் நானும் அவருமே பெரும்பாலும் செய்திகளைப் பதிவேற்றிக் கொண்டிருப்போம். வன்னிக் கள நிலவரங்களை அவர் தன்னுடைய தொடர்புகள் மூலம் பெற்றுக்கொண்டிருந்தார். யுத்தகளத்தில் இருந்த புலனாய்வாளர்கள் சிலரதும் தொடர்புகளும் அவருக்கு இருந்தது. அதனால் தேசம்நெற் வதந்திகளை தவிர்த்து களநிலவரங்களை வெளியிடக் கூடியதாக இருந்தது.

2009 மே 18இல் அவர் என்னை தொடர்புகொண்டு “பிரதர் பிரபாகரனை பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்” என்றார். இருந்தாலும் அந்தச் செய்தியை வெளியிடுவதில்லை என்று இருவருமே தீர்மானித்தோம். அவருக்கும் அச்செய்தி ஒரு புலனாய்வு அதிகாரியால் பரிமாறப்பட்டு இருந்தது. அன்று முழவதும் தொலைபேசி உரையாடலிலும் செய்திகளை உறுதிப்படுத்துவதிலுமே பொழுது கழிந்தது. வன்னி மண்ணில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கந்தகத்தூள் மணமும் இரத்தவாடையும் என்னை ஆட்கொண்டிருந்தது. மரண வீட்டின் சுழல் என் வீட்டிலும் தெரிந்தது. மறுநாள் காலை 2009 மே 19 “பிரதர், பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்” என்று பதட்டத்தோடு குறிப்பிட்டார். புலிகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் அவர்கள் இவ்வாறான ஒரு முவைச் சந்திப்பார்கள் என யாரும் எண்ணி இருக்க வாய்ப்பில்லை. “செய்தியை வெளியிடலாமா?” என்றேன். “தகவல் நம்பகமானது, பிரதர்” என்றார். புன்னியாமீன் தகவலை மிக உறுதியாகவே தெரிவித்தார். தேசம்நெற் அச்செய்தியை வெளியிட்டது. வேறு இலங்கைத் தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

அதன் பிற்பாடு மே 24இல் அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சளராக இருந்த கேபி என்றறியப்பட்ட குமரன் பத்மநாதன் பிரபாகரனது மரணத்தை அறிவித்தர். அதற்கு அடேல் பாலசிங்கத்தினது தூண்டுதலும் முக்கிய காரணம் என குமரன் பத்மநாதனோடு உரையாடியதில் நான் அறிந்துகொண்டேன். இவ்வளவு காலமும் தமிழருக்காகப் போராடிய பிரபாகரனது மரணம் நினைவு கூரப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் லண்டனிலும் சர்வதேவத்திலும் இயங்கிய புலிகளுக்கோ தங்கள் வசம் இருந்த 5 பில்லியன் டொலர் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களிலேயே கவனம் இருந்தது. இந்த ஊழலில் அவர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியையும் திருடி வைத்திருந்தது பின்னர் அம்பலமானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எனக்கு மிகக் கடுமையான விமர்சனம் இருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணம் என்னையே அறியாத சோகத்தை ஏற்படுத்தியது. தமிழீழத்தை அடையாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை எட்டக்கூடிய அளவுக்கு பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கை ஓங்கி இருந்தது. என் போன்றோரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் ஒரு சர்வதிகாரமான ஆட்சியை வைத்து அதன் உச்சத்தில் இருந்தவர்கள். ஆனால் இன்று முகவரியற்ற வெற்றுடல்களாக அவற்றை உரிமை கோரவும் யாரும் இன்றி வீழ்ந்து கிடந்தனர். பிரபாகரன் மட்டுமல்ல அவருடைய மனைவி குழந்தைகள் அனைவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. பிரபாகரன் பிடிபட்டார் என்பதோ சரணடைந்தார் என்பதோ புலிகளுக்கும் தமிழர்களுக்கும் அவமானம் என்பதால் புலிகள் தரப்பு வெளிப்படையாக இருக்கவில்லை. அது இலங்கை அரசு தனது யுத்தக் குற்றங்களை மூடி மறைக்க மிக வசதியாகிவிட்டது.

2002இல் பிரபாகரன் இறுதியாக வழங்கிய மிகப்பெரிய ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்கப்பட்ட போது அதனை ஒரு ‘துன்பியல் நிகழ்வு’ என்று தெரிவித்து இருந்தார். இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் அல்பிரட் துரையப்பா முதல் பல அரசியல் தலைவர்கள் உட்பட பல நூறு பேருக்கு நிகழ்ந்தது.

“உங்களை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா, இலங்கை அரசைக் கேட்டது” தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த பிரபாகரன் “அண்ணை நடக்கக் கூடியதைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள்” என்று அசிரத்தையாகக் குறிப்பிட்டார். ஆனால் அவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்வு இறுதியில் பிரபாகரனுக்கும் நிகழ்ந்தது.

முத்த பத்திரிகையாளர் மணி அண்மைய பதிவில் ராஜீவ்காந்தியுடைய படுகொலையே விடுதலைப் புலிகளின் முடிவுக்கு மூலகாரணம் என்றும் இந்தியா இதற்காக 18 ஆண்டுகள் காத்திருந்தது என்றும் குறிப்பிட்டார். பத்திரிகையாளர் மணி மேலும் குறிப்பிடுகையில் இராணுவ அணுகுமுறை எந்தப் பிரச்சினையையும் தீர்காது என்பதை பிரபாகரன் உணர்ந்துகொள்ளவில்லை என்றும் செப்ரம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னும் அதை பிரபாகரன் உணரத் தவறிவிட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். பத்திரிகையாளர் மணியின் இந்த நேர்காணலில் விடுதலைப் புலிகள் பற்றிய மிகக் காத்திரமான விமர்சனத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். சில தகவல் பிழைகள் இருந்த போதும் அவருடைய மதிப்பீடு தரமாக அமைந்தது.

அத்தோடு இந்தியாவின் ஆர்எஸ்எஸ், பிஜேபி செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் ஊடுருவியிருப்பதையும் அதன் ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இலங்கையில் பௌத்த சிங்களவர்கள் தமிழர்களுக்கு கொடுமை இழைத்தது போல் இந்தியாவில் இந்துக்கள் தொடர்ந்தும் இஸ்லாமியர்களுக்கு கொடுமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் 2024 தேர்தலையொட்டி காசி விஸ்வநாதர் ஆலயம் – கயன்வாபி மசூத சர்ச்சை இப்போதே தூண்டிவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த ராமஜென்மபூமிக் காரர்கள் – பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட்டு பாபர் மசூதி சர்ச்சை போன்று ஒன்றை உருவாக்கி 15,000 உயிர்களை அழித்து தேர்தலை வெற்றிகொள்வோம் என்ற உறுதியில் பிஜேபி தலைவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் பத்திரிகையாளர் மணி இலங்கை அரசுக்கும் பிஜேபி க்கும் உள்ள கூட்டை காணத் தவறிவிட்டாரோ என்ற ஐயப்பாட்டை அவருடைய நேர்காணலின் பிற்பகுதி ஏற்படுத்துகின்றது. பௌத்தத்தை பிஜேபி இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே பார்க்கின்றது. புத்தரை கிருஸ்ணணின் அவதாரமாகவும் எண்ணுகின்றனர். அதனால் பிஜேபியின் உறவு இலங்கை அரசோடு சற்று ஆழமானதாகவே உள்ளது.

மேலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அழிவுதான் இலங்கையை இந்நிலைக்கு கொண்டு வந்தது என அவர் குறிப்பிடுவதிலும் எவ்வித உண்மையும் கிடையாது. தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களை குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த ஆட்சியாளர்களை எப்போதுமே எதிர்த்தே வந்துள்ளனர். ராஜபக்சக்கள் யுத்தக் குற்றங்கள் இழைத்ததற்கும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது.

ஒரு வகையில் பத்திரிகையாளர் மணி தன் தேசப்பற்றோடு இந்தியா இலங்கையை பல தடவைகள் காப்பாற்றி உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்தியா ஆரம்பம் முதலே இலங்கையை பகடைக்காயாக பாவித்து வருவதை காணத் தவறியுள்ளார்.

வுpமர்சனங்கள் இருந்த போதும் பத்திரிகையாளர் மணியின் நேர்காணல் ஒரு குறிப்பிடத்தக்க பதிவு தான்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *