அமெரிக்காவின் தொடக்க பள்ளியில் துப்பாக்கி சூடு – 19 சிறுவர்கள் பலி !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

அதேபோல் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசார் பள்ளியை சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானார்.

வாலிபர் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த மாணவர்கள் பலரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அப்பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் மற்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. பலியான மாணவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *