11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் – பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற நாடாகும் இலங்கை..?

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (31) உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 11 வயதான சிறுமி ஒருவர் சம்பவதினமான கடந்த 23 ம் திகதி தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றுள்ள நிலையில் இடைநடுவே குறித்த சிறுமியின் மூத்த சகோதரி வீடு செல்ல நேரிட்டமையினால், ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான சிறுமியை சகோதரியின் பாதுகாப்பிற்காக வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

தனது சகோதரியை வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டு 11 வயதான சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு இரவு 10.30 மணிக்கு தனியாக திரும்பிக் கொண்டிருந்த போது வீதியின் இடைநடுவில் சிறுமியை இடைமறித்த இரு சிறுவர்களும் அவரின் வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள வீட்டிற்கு தூக்கி சென்று அங்கு ஒருவர் வெளியில் காவல் இருக்க மற்றையவர் அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் ஒருவர் உள்வரும் சத்தம் கேட்டு அந்த சிறுமியை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என தெரிவித்து சிறுமியை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் 16 வயதுடைய இரு சிறுவர்களையும் கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (31) ஆஜர்படுத்திய நிலையில் இருவரையும் எதிர்வரும் 15 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

……………………………………………………………………………………………………………………………………………………..

அண்மையில் 9வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்தே மீள முடியாதுள்ளது. இதற்குள் அடுத்தடுத்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சில தகவல்களை காணக்கிடைத்ததது. இந்த செய்திகளை கண்ட ஒரு வயதான தாய் கூறிய போது என்னுடைய பிள்ளைகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்க கூடாது என கூறியிருந்தார்.

உண்மையிலேயே நாம் வாழக்கூடிய இந்த சமூகம் அத்தனை பாதுகாப்பில்லாத பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் உறவினர்களால் நடைபெற்றதாகவே அறிய முடிகிறது.பிள்ளைகளின் பாதுகாப்பை பெற்றோரை் உறுதி செய்வது அவசியமாகிறது.

பாடசாலைகளில் மட்டுமல்ல உங்கள் வீடுகளிலும் நல்ல தொடுகை – கெட்ட தொடுகைகள் பற்றி சிறுவர்களுக்கு விளக்கமளியுங்கள். கூடாத தொடுகைகளை உடனடியாக அடையாளப்படுத்தக்கூடிய வகையில் உங்கள் பிள்ளைகளுடன் நெருக்கமாக பழகுங்கள். மேலும் பிள்ளைகளை முடியுமானவரை தனியாக எந்த விடயங்களுக்கும் அனுப்ப முற்படாதீர்கள். இந்த சமூகம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்பதே உண்மை.  உங்கள் பிள்ளைகளை நீங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதே நேரம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி ஒருவர் போதைப்பொருள் பாவனையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்ற மூடத்தனமான கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்காதீர்கள். அவர்களும் ஒரு வகையில் குற்றவாளிகளே. போதைப்பொருள் பாவனையில் தன்னுடைய சகோதரியையோ – தனது தாயையோ யாரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெரிதும் கேள்விப்பட்தில்லை. போதைவெறியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 3 பிள்ளைகளின் தந்தை என்ற செய்தியை அண்மையில் கேள்விப்பட்டிருப்போம். போதையில் கூட தெளிவாக தங்களுடைய பிள்ளைகளை விட்டுவிட்டு யாரோ ஒருவருடைய பிள்ளைகளை அடையாளம் கண்டு துஷ்பிரயோகம் செய்யுமளவிற்கு அவர்கள் தெளிவாக தான் உள்ளார்கள். ஆகவே போதைப்பொருள் பாவனையை காரணம் சொல்லாதீர்கள். அது ஒரு காரணமே தவிர. குறித்த குற்றவாளியை உருவாக்கியது தொடர்பில் பெற்றோரும் – குற்றவாளியின் ஆசிரியர்களுமே பதில் சொல்ல வேண்டியவர்கள்.

உண்மையிலேயே தண்டனைகள் கடுமையாக்கப்படல் வேண்டும். இதற்கான சட்ட வரைபுகள் உருவாக்கப்பட்டு இறுக்கமாக கண்காணிக்கப்படல் வேண்டும். இது தவிர வீடுகளில் பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு,  பெண்களை மதிக்கவோ – தெய்வங்களாக கும்பிடுங்கள் என்றோ எல்லாம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஆகக்குறைந்த மனிதாபிமானத்தையாவது பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.  பிள்ளைகள் செய்கின்ற பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பின்னால் குற்றவாளிகளான – துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிள்ளைகளை முறையாக வளரக்க தவறிய பெற்றோரை பிரதான குற்றவாளிகள்.

 

பாடசாலைகளும் முறையான வகையில் சுகாதார கல்வியையும் – பாலியல் கல்வியையும் முறையாக கற்பிக்க முன்வர வேண்டும். ஆண் – பெ் சமத்துவம் வீடுகளிலும் – பாடசாலைகளிலும் இயல்பான ஒரு விடயமாக மாற்றப்பட வேண்டும் . இந்த மாற்றங்கள் ஒவ்வொரு வீடுகிளிலிருந்தும் ஆரம்பிக்கப்பட வுண்டும் .அப்போது மட்டுமே பெண் பிள்ளைகளின் பாதுகாப்பும் சரி – சமூக பாதுகாப்பும் சரி உறுதிப்படுத்தப்படும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *