நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிப்பது ஆபத்தானது என்கிறார் அமைச்சர் நஸீர் அஹமட் !

“நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது.” என  முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,

நிறைவேற்றதிகாரம் மக்களுக்கான உச்ச பாதுகாப்பளிக்கிறது. கடந்தகாலங்களில் அனுபவிக்க நேர்ந்தவைகள் சிலவற்றால், இப்பதவியை ஒழிக்க வேண்டுமென்ற கோஷங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதை, ஒழிக்க கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் தெளிவான நிலைப்பாடும் இதுவே.

மக்களால், நேரடியாகத் தெரிவு செய்யப்படும்போதுதான் எல்லோருக்குமான எங்கள் ஜனாதிபதி என்ற உரிமையிருக்கும். இலங்கையில் உள்ள அத்தனை பிரஜைகளும் வாக்களிப்பதால் ஜனாதிபதிக்கும் ஒரு கடப்பாடு ஏற்படுகின்றது. மாறாக பாராளுமன்றம் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதால் அவர், ஒரு மாவட்டத்துக்கு அல்லது பிரதேசத்துக்கு உரியவராகவே அர்த்தப்படும்.

அதுமட்டுமல்ல, தேர்தலூடான தெரிவு வரும்போதுதான், சமூகங்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இவருக்கு ஏற்படும். குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் கடமைப்பட்டவராகிறார்.

ஏதாவதொரு அவசர தேவைகளை அடைந்து கொள்ள ஜனாதிபதியுடனுள்ள உறவுகள் அல்லது புரிந்துணர்வுகள் வழிவகுக்கும். இவ்வாறு, பல விடயங்கள் கடந்தகாலங்களில் பெறப்பட்டுள்ளன. தனியொருவரின், மனநிலைகளுக்காக, இந்த அதிகாரத்தையே முற்றாக ஒழிக்குமாறு கோருவது அர்த்தமுள்ள சிந்தனையாகாது என தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருரான ஹாபிஸ் நஸீர் பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை பின்பற்றியிருந்தார். எனினும் 20ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவளித்ததன் ஊடாக எதிர்க்கட்சியினரின் வசைபாடல்களுக்கு ஆளானதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப்ஹக்கீமுடனும் தொடர்ச்சியான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே ஹாபிஸ் நஸீர் அஹமட் அண்மையில் கோத்தாபாய ராஜபக்சவின் அரசில் புதிய அமைச்சு பதவியையும் ஏற்றிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *