சிறிதரனின் பிரதேசவாதத்தை கண்டித்து சந்திரகுமார் அறிக்கை


தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பிரதேசவாத கருத்துக்களை கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

“விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காகவும் அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலைபெற்ற மகத்தான வாழ்க்கைக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மக்களிடையே சாதி, மத, பிரதேச வேறுபாடுகளைச் சில சக்திகள் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்றன.

இது எமது ஒற்றுமையைச் சிதைத்து, விடுதலை நோக்கிய பயணத்தை நிச்சயமாகப் பலவீனப்படுத்திப் பாதிப்பையே உண்டாக்கும் தீய செயலாகும். அத்துடன் இத்தகைய செயற்பாடுகளுக்கு எமது முழுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தி நிற்கிறோம்.

இத்தகைய வேறுபாடுகளைத் தங்கள் மனதிலும் செயற்பாட்டிலும் கொண்டிருக்கும் சக்திகளையும் தனி மனிதர்களையும் கூட நாம் எதிர்க்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மலையக மக்களைக் குறித்து அநாவசியமான முறையில் இழிவான சொற்பதத்தைப் பயன்படுத்திப்பேசியிருக்கும் ஒரு ஒலிப்பதிவு பகிரங்க வெளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒலிப்பதிவு வெளிப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களைக் கடந்து விட்ட நிலையிலும் கூட இதைக்குறித்த தன்னுடைய தவறை சிறிதரன் ஒப்புக்கொள்ளவோ அதற்காக மன்னிப்புக் கோரவோ அதைக் குறித்து விளக்கமளிக்கவோ இல்லை.

இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியானவர் இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம்தாழ்த்திப் பேசுவது எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடியதல்ல” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கத்தையான் என்ற வார்த்தையை குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் குறித்த தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
 1. Rajan on July 16, 2017 8:36 am

  சுமார் 10 நாட்கள் மெளனத்தின் பின்னர் இந்த விவகாரம் குறித்து சிறிதரன் திருவாய் மொழிந்திருக்கின்றார்.

  நேற்று 15ம் திகதி கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் அங்கு வாழும் மலையகத் தமிழர்கள் மத்தியில் அவர் மலையகத் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாகப் பேசவில்லை என்று கூறியிருக்கின்றார்.

  குறித்த தொலைபேசி உரையாடலில் ஏதோ மோசடி உள்ளதாகவும் தான் அவ்வாறு பேசியிருந்தால் குறித்த ஊடகவியலாளரை நேரில் அழைத்து நிரூபிக்குமாறும் அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் தனது எம்.பி பதவியைத் துறக்கத் தயார் என்றும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பொய் கூறியிருக்கின்றார்.

  வடக்கத்தையான் என்று வாய் தடுமாறி கூறி விட்டேன் என்று வருத்தம் தெரிவித்திருந்தால் கூட அவரை மன்னிக்கலாம் மகா பொய்யொன்றை அவர் கூறியிருப்பதுதான் ஆத்திரமூட்டும் விடயம்.


 2. vithuran on July 16, 2017 8:47 am

  சிறிதரன் அப்படி சொல்லிருக்க மாட்டார். அவர் பிரபாகரனின் வாரிசு. இதில் ஏதோ சதி நடந்திருக்கின்றது. தமிழ்நாட்டிலுள்ள பிரபல மிமிக்ரி கலைஞரைக் கொண்டு குறித்த வார்த்தையை அவரின் தொலைபேசி உரையாடலில் செருகியிருக்கின்றார்கள்.

  இந்த சதி வேலையில் சர்வதேச பின்னணியும் இருப்பதாக கூறப்படுகின்றது.

  (நான் யாரையும் சாதி, மதம், பிரசேத்தைக் குறித்து திட்டுவதில்லை. ஒருவரின் அங்கக் குறைபாட்டைக் குறித்தும் இழிவு படுத்துவதில்லை. ஆனால் கோபம் தலைக்கேறினால் வாயில் டக்கென்று துாசணம் வந்துவிடும். இப்போதும் அது வருகின்றது.நாகரிகம் கருதி இங்கு அதனைப் பதிவு செய்யவில்லை. வாயில் முணுமுணுத்துக் கொள்கின்றேன்)


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு