கூட்டமைப்பு அரசியல் காரணங்களால் மட்டும் அரசுடன் இணையவில்லை! அதற்கு ஒரு பொருளாதாரப் பரிமாணமும் உள்ளது! : வி சிவலிங்கம்


Duty_Free_Vechile_for_MPsசமீப காலமாக அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் அமைப்பு பேரவையால் உருவாக்கப்பட்ட கமிட்டிகள் தமது அறிக்கையை கையளித்த பின்னர் இடைக்கால அறிக்கை ஒன்றினை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை அரசியல் அமைப்பு சபை விவாதித்து உரிய திருத்தங்களுடன் அரசியல் அமைப்பை வரையத் தொடங்க வேண்டும். ஆனால் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், அதே ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல், தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய இனப் பிரச்சனையைத் தீர்த்தல் என்பன முக்கிய குறிக்கோள்களாக முன் வைக்கப்பட்டன. ஆனால் இவை தொடர்பாக அரச தரப்பால் இதுவரை பொதுவான இணக்கத்திற்கு வர முடியவில்லை.

அரசின் போக்கில் காணப்பட்ட இழுபறிகள் இரண்டு பிரச்சனைகளை அடையாளப்படுத்தியது. அதாவது ஜெனீவா தீர்மானங்களின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணைகளை உந்தித் தள்ளி> சர்வதேச உதவியுடன் தீர்வை நோக்கிச் செல்வதா? அல்லது அரசியல் அமைப்பு மாற்றங்கள் மூலம் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதா? என்ற நிலமை உருவாகியது.

2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றியைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மத்தியிலே புதிய நம்பிக்கை பிறந்தது. குறிப்பாக அரசாங்கத்தில் பங்குபற்றும் ஆவல் கூட்டமைப்பின் ஒரு சாரார் மத்தியிலே ஏற்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைக் கட்டி எழுப்ப அவ்வாறான இணைவு அவசியம் தேவை எனவும் கருதப்பட்டது. அத்துடன் போரின் காலத்திலும், அதன் பின்னரும் காணப்பட்ட நவ தாராளவாத பொருளாதார நடவடிக்கைகள் அரசியல்வாதிகள் பலரை ஊழலுக்குள் தள்ளியிருந்தது. இதனால் அரச அதிகாரத்தை அனுபவித்தவர்கள் பணக்காரர்களானார்கள். நவ தாராளவாத பொருளாதார நடைமுறை அரசியல் அதிகாரத்தினை ஓர் குறிப்பிட்ட பொருளாதார பிரிவினரிடையே ஒப்படைப்பதாகவே அமைந்தது. இது சர்வதேச அளவிலும் காணப்பட்டது. நடைமுறையிலிருந்த பொருளாதாரம் அதிகார வர்க்கம், வர்த்தக சமுகம்> சமூக உயர் மட்டம் போன்றவற்றை நோக்கியதாக சென்றது. நாட்டில் காணப்பட்ட தேர்தல் முறை பணத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது.

இவை அரசியல் கட்சிகளின் போக்கில் மாற்றங்களை எற்படுத்தின. உட் கட்சிகளின் அதிகாரங்கள் படிப்படியாக உயர் மட்டங்களின் கட்டுப்பாட்டிற்குள் அல்லது செல்வாக்கிற்குள் சென்றது. குறிப்பாக தற்போது தமிழ்க் கட்சிகளின் உயர் மட்டங்களில் பலர் செல்வந்தர்களாக உள்ளனர். இவர்களின் அரசியல் ஆரம்பம் அவ்வாறு இருக்கவில்லை. அவ்வாறெனில் அவர்கள் செல்வந்தர்களாக மாற்றம் பெற உதவிய காரணிகள் வேறு எவையாக இருக்க முடியும்? இம் மாற்றங்களே ஏற்கெனவே குறிப்பிட்டது போல அரசில் அங்கமாக மாறுவதற்கான வாதங்களை நகர்த்தியது. நவ தாராளவாத பொருளாதார கொள்கைகளை மகிந்த அரசு நடைமுறைப்படுத்திய போதிலும், பூகோள அரசியல் நலன்களில் உடன்பட்டுச் செல்லாமையால் 2015 இல் தோல்வி அடைய நேரிட்டது.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளும் கூட்டாக அமைந்த அரசு என்பதால் கூட்டமைப்பினரிடையே அரசில் இணைவதற்கான ஆர்வம் காணப்பட்டது. மத்திய அரசின் பொறுப்புகளில் பங்கேற்றுக் கொள்வதன் மூலம் அரசியல் மாற்றத்தை உறுதி செய்ய முடியும் எனவும் கருதப்பட்டது. இருப்பினும் கடந்த கால அனுபவங்களும், அரசு ஏமாற்றினால் பாராளுமன்ற ஆசனங்கள் பறி போய்விடும் என்ற அச்சமும் அவர்களை எதிர்க் கட்சியில் கொண்டு சேர்த்தன. உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி என்ற வகையிலும், நிழல் அரசு என்ற வகையிலும் முன்பிருந்த நிலமைகளை விட கெளரவமான இடத்தில் அமர்ந்தனர். இம் மாற்றங்கள் புதிய அரசியல் நிலமைகளைத் தோற்றுவித்தன. ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் மிக நெருக்கமாக செயற்பட்டனர்.

எனவே நவ தாராளவாத அரசியல் பொருளாதாரம் சமூகத்தில் காணப்பட்ட உயர் மட்டத்தினரிடையே இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது. இதற்கு சில வரலாற்றுக் காரணிகளும் உள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னர் காணப்பட்ட அரசியல் போக்ககள் சில முக்கியமான அனுபவங்களை அரசியல்வாதிகளுக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக சமீபகால வரலாற்றை நோக்கினால், 2002ம் ஆண்டு புலிகளுக்கும், அரசிற்குமிடையோன போர் நிறுத்த ஒப்பந்த தோல்விகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளால் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு நிலமைகளைத் தள்ளி போருக்கான வழிகளை உக்கிரப்படுத்தியது. போர்க் காலத்திலும் அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ வெற்றி என்பன நவ தாராளவாத பொருளாதார திட்டங்களை உள் நாட்டில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற உதவின. இதுவே ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றை நெருக்கமாக இணைத்தன.

இப்போரின் காரணமாக இதே போன்று தழிழ் அரசியலும் கணிசமான பாடங்களைக் கற்றது. இன்று தேசிய இனப் பிரச்சனைக்கு அடிப்படைத் தீர்வாக முன் வைக்கப்படும் அதிகார பரவலாக்க யோசனைகள் 1987ம் ம் ஆண்டின் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களாகும். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக உருவாகிய 13வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஏற்கத் தவறியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சந்திரிகாவினால் வைக்கப்பட்ட தீர்வுப் பொதியையும் கூட்டமைப்பு ஏற்கத் தவறியது. 2009ம் ஆண்டின் புலிகளின் தோல்வியும்> அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச நகர்வுகளும் கூட்டமைப்பின் தலைமைக்குள் பல பண்பு மாற்றங்களை ஏற்படுத்தியது. இம் மாற்றங்களுக்கான பிரதான காரணியாக இருந்தது எதுவெனில் கூட்டமைப்பின் தலைமைகளுக்குள் காணப்பட்ட நவ தாராளவாத போக்குகளாகும்.

மகிந்த காலத்தில் நடைமுறைப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆதிக்கத்தில் இருந்தது. இவற்றின் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. பதிலாக அக் குழுவின் உறவினர்களிடையே பகிரப்பட்டது. ஒரு புறத்தில் சிங்கள பெளத்த தேசியவாதத்தினை உச்சாடனம் செய்துகொண்டு மறு புறத்தில் தேசிய பொருளாதாரத்தை ஒரு சிறு பிரிவினர் கட்டுப்படுத்தியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குடும்ப ஆட்சியை மாற்றியதே தவிர நவ தாராளவாத பொருளாதாரம் ஏற்படுத்தி வரும் தாக்கங்களை அகற்றவில்லை. பதிலாக அதனை மேலும் பலப்படுத்தினார்கள்.

நவ தாராளவாத அரசியல் பொரளாதாரம் அரசியல் கட்டுமானத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் செயற்பாடுகளை இலகுவாக்குகிறது. பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் உள் பிரதேங்களில் உள்ள உயர் மட்டங்களையம் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட வைக்கிறது. எனவே அதிகார பரவலாக்கம் முன் வைக்கப்படுகிறது. இவற்றின் அதிகாரங்களையும் இந்த உயர் மட்டத்தினர் காலப் போக்கில் கைப்பற்றுகின்றனர். தற்போதைய இலங்கை அரசு மாகாண சபைகளை பிரதேச அபிவிருத்திக்கான செயற்பாட்டு மையங்களாக மாற்ற எண்ணுகிறது.

மேற்குறிப்பிட்ட அரசியல் பொருளாதார அடிப்படைகளிலிருந்தே இன்றைய தமிழ் அரசியலின் போக்கை அடையாளம் காண வேண்டும். தற்போதைய தேசிய ஐக்கிய அரசில் கூட்டமைப்பு வெறுமனே அரசியல் காரணங்களால் இணைந்திருப்பதாக கருதுவது தவறு. அதற்கு ஒரு பொருளாதாரப் பரிமாணமும் உள்ளது என்பதை தற்போது காண முடிகிறது. அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று வரவு செலவுத் திட்டங்களையும் எதிர்க் கட்சியில் இருந்தவாறே கூட்டமைப்பு ஆதரித்துள்ளது இதற்கு நல்ல உதாரணமாகும்.

அரசியல் அமைப்புத் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் புதிதானவை அல்ல. பாராளுமன்றத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் பிளவுகள் அதனைத் தொடர்ந்து உணர்த்தி வந்தன. புதிய அரசியல் அமைப்பின் வடிவம் தொடர்பாக அதாவது அரசின் கட்டுமானம் ஒற்றை ஆட்சியா? அல்லது சமஷ்டியா? அரசின் உயர் மட்டம் ஜனாதிபதியா? பாராளுமன்றமா? பெளத்தத்திற்கு வழங்கப்படும் இடம், உத்தியோக மொழி, அதிகார பரவலாக்கத்தின் விஸ்தீரணம், தேர்தல் முறை போன்ற அம்சங்கள் இன்னமும் முடிவில்லை. அத்துடன் புதிய அரசியல் யாப்பை மக்கள் வாக்கெடுப்பிற்கு விடுவதா? இல்லையா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

அரசில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு இவை குறித்து எதனையும் மக்களுக்குத் தெரிவிக்கத் தயாராக இல்லை. எது கிடைக்கும்? எது கிடையாது? என்பது குறித்து கூட்டமைப்பின் ஓரு சிறு குழுவினர்களே அறிவார்கள் என்ற நிலை காணப்படுகிறது. அக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவுமே தெரியாத நிலையில் உள்ளனர். அந்த அளவிற்கு உள் கட்சி ஜனநாயகம் இல்லை. அரசிற்கும், கூட்டமைப்பிற்கும் இடையேயுள்ள உடன்பாடு இரகசியமானது. வெளியிடப்பட்டால் இனவாத சக்திகள் குழப்பிவிடுவார்கள் எனக் கூறி வெளியிட மறுக்கின்றனர். ஆனால் தினம் தினம் வெளிவரும் செய்திகள் மட்டுமல்ல அரச அமைச்சரான மனோ கணேசன் அவர்களும் அரசியல் அமைப்பில் எதிர் பார்ப்பது எதுவும் இல்லை என்கிறார். அவ்வாறானால் என்ன உடன்பாடு உள்ளது? ஏன் அரசை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல நவ தாராளவாத அரசியல் பொருளாதாரத்தை கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதால் அதன் நலன்களைப் பாதுகாக்க அங்கு தொடர்ந்தும் இணைந்திருப்பது தேவையாக மாறியுள்ளது. தற்போதைய அரசு ஏற்பட்டுள்ள கடன் சுமைகளைக் குறைக்கவும், சில அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் கடன்களைப் பெறுவதற்கும்@ நாட்டின் வளமுள்ள நிலங்களை> கடல் பகுதிகளை நீண்ட கால குத்தகைக்கு வழங்க தயாராகியுள்ளது. இந்த நிலங்களும், வளங்களும் வடக்கு> கிழக்கு பகுதிகளிலும் வெளி நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டு நிறுவனங்களுடன் பங்குதாரர்களாகவுள்ள சிங்கள தனியார் நிறுவனங்கள் இந்த நிலங்களைக் கட்டுப்படுத்துகின்றன. தமிழ்ப் பிரதேசங்களின் நிலங்களைப் பாதுகாப்பதாகக் கூறும் கூட்டமைப்பினர் இந்த நிலங்கள் தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கு விற்கப்படுவது குறித்து மெளனமாக இருப்பது நவ தாராளவாத அரசியல் பொருளாதாரத்தோடு உடன்பட்டுச் செல்லும் போக்கின் விளைவுகளாகும்.

இந்நிலை தொடருமாயின் இப்பிரதேசங்களின் அபிவிருத்தியை வேறு யாரோ தீர்மானிப்பார்கள். அங்குள்ள வேலை வாய்ப்புகளை யாரோ பெறுவார்கள். மொத்தத்தில் அம் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுவிடும். மக்கள் வாழும் பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டத்தினை அம்மக்கள் தீர்மானிக்க முடியாவிடில் அவர்கள் மீண்டும் இரண்டாம் தர பிரஜைகளே.

சுதந்திர காலம் முதல் இற்றை வரை எதுவித பொருளாதார அடிப்படைகளையும் கொண்டிராத தமிழ் அரசியல் தனது இக்கட்டான நிலமையை மக்கள் முன் வைக்க முடியாத நிலையில் உள்ளது. வெறும் தமிழ்க் குறும் தேசியவாத அரசியலின் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டி மக்களின் வாக்குகளைக் கொள்ளையிட்ட காலம் அஸ்தமிக்கத் தொடங்கியுள்ளது. இதுவே கேப்பாபுலவு, மே 18ம் திகதிய நிகழ்வுகளில் மக்கள் அரசியல்வாதிகளை அவமானப்படுத்தும் போக்குகளாகும். இந்தக் கலாச்சாரத்தை வளர்த்தவர்களே அதனை அறுவடை செய்கிறார்கள். இவை ஆரோக்கியமான அரசியலை நகர்த்த உதவப்போவதில்லை.

எதிர் வரும் காலம் மீண்டும் கசப்பான அனுபவங்களை நோக்கிச் செல்லப் போகிறது. இதனைத் தடுக்க வேண்டுமெனில் கூட்டமைப்பு மக்களிடம் நிலமைகளை விளக்க வேண்டும். இந்த ஆற்றல் இருப்பதாக தெரியவில்லை. இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி மீண்டும் உணர்ச்சி அரசியல் போரில் பாதிக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள். போர் முடிவடைந்து 8 ஆண்டுகளாகியும் இந்த மக்கள் தமது உடன் பிறப்புகளை எண்ணி தினமும் கண்ணீர் வடிப்பதை எந்த நாகரிகம் படைத்த சமூகமும் அனுமதிக்காது. அதனைப் பயன்படுத்தி அரசியல் நடத்துவது மிகவும் கொடுமையானது. தமிழ் மக்களின் அரசியல் தலைமையை வைத்திருக்கும் கூட்டமைப்பு மக்களோடு பேச வேண்டும்.

உங்கள் கருத்து
  1. paarathy on July 17, 2017 2:01 pm

    இலங்கை கம்யூனிச கட்சியின் தமிழர் பிரதிநிதியாக இருந்த வ பொன்னம்பலம் அவர்களின் முன்னாள் ஒரு பிரச்சார பீரங்கியாகவும் தொண்டனாகவும் விளங்கியவரும் தற்போது லண்டன் மாநகரில் தமிழர்கள் மத்தியில் அரசியல் ஆய்வாளர் என்ற பெயருடன் தேசம்நெட் தளத்தில் கட்டுரைகளை எழுதி வரும் திருவாளர் சிவலிங்கம் தோழரின் கட்டுரைகளை வாசித்து வரும் ஒரு சிலரில் நானும் ஒருவன். இந்த கட்டுரைகள் எல்லாம் ஒரு பொழுதுபோக்குக்காக எழுதப்படுகின்றனவோ என்ற எண்ண தோன்றுகிறது. இலங்கையின் அரசியலில் இடதுசாரியம் என்பது இப்போது முற்றாகவே ஒரு இனவாத அரசியலாக மாறிவிட்ட்து என்பது எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லாமல் உண்மையாகிவிடத்தை நாம் தெளிவாக காண்கிறோம். இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் இடதுசாரிகள் வழமைபோல் தமிழ் அரசியல் தலைமைகளை விமர்சனம் செய்வதை மட்டும் பொழுது போக்காக செய்வதை விட வேறு எதையும் செய்வதில்லை என்பது கண்கூடு. இதற்காக அவர்கள் தொடர்ந்தும் இக் காலத்திற்கு பொருத்தமற்ற முதலாளித்துவ வாதம், தொழிலாளித்துவம், நவ தாராளவாத பொருளாதார அரசியல், குறுந்தேசியவாதம், பெரும் தேசியவாதம் என்ற சொற்பதங்களை பாவிப்பதில் இருந்து இவர்கள் நடைமுறை சாத்தியமான மக்களால் விளங்கக்கூடிய வகையில் கருத்துக்களை கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது சிங்கள தேசிய கூட்டமைப்போ அல்லது இடதுசாரிய கூட்ட்டமைப்போ எல்லோரும் உணர்ச்சிகளை ஊட்டும் அரசியலையே இலங்கையில் செய்தார்கள், செய்துவருகிறார்கள் என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை. தேவைப்படும் போதெல்லாம் இனவாதம், மதவாதம், தொழிலாளரவாதம் என்று கக்கிக்கொண்டு தான் இலங்கை அரசியல் செல்கிறது. இந்த வடத்திற்குள் இருந்து மீள எந்த சக்தியாலும் முடியாது என்பது தெளிவானது. உயர்மடடம் தாள்மடடம் என்று எழுதுவதற்கு மட்டும் நன்றாக இருக்கும். உற்று நோக்கினால் இதனை தூண்டுவார்கள் எந்த மடடத்தில் இருக்கிறார்கள் என்று புரியும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு