கிளிநொச்சியில் யுத்தத்திற்கு பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் : மு தமிழ்ச்செல்வன்


 

tஎன்ன செய்வது பிள்ளைகளின் வயிற்றுப் பசியை தீர்க்க நான் சிலரின் உடல் பசியை தீர்க்கின்றேன்’; என்றார் யுத்தத்தில் தனது கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஒரு இளம் பெண். கிளிநொச்சியை சேர்ந்த இவர் அவ்வவ் போது கிடைக்கின்ற கூலி தொழிலை செய்கின்றதோடு, தனது உடலையும் விற்கின்றார்.

இது ஒரு மோசமான நிலைமை. யுத்தத்தின் பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பாரதூரமானதாக காணப்படுகிறது. இதனை சீர்ப்படுத்துவதற்கான பொறிமுறைகளை அரச இயந்திரமோ, சமூக கட்டமைப்புகளோ சரிவர மேற்கொள்ளவில்லை. அதன் விளைவே தொலைக்காட்சி தொடர்கள் போன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கிறது.

யுத்தம் இடம்பெறுகின்ற இடம்பெற்ற பிரதேசங்களில் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் சிறுவர்களும்தான். இவர்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகம் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக பெண்கள் தொடர்பில் பிற்போக்குத்தனமான மனப்பாங்கும், சமூக கட்டடைமப்பையும் கொண்ட நாடுகளில் யுத்தத்திற்கு பின்னர் பெண்களின் நிலைமை பரிதாபமே. அவர்கள் தங்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மீள கட்டியெழுப்பிக்கொள்வதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. இதில் பலர் தோற்று சிதைந்து விடுகின்றார்கள்.

இலங்கையை பொறுத்தவரை கடந்த முப்பதாண்டு யுத்தம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து சமூகத்து பெண்களையும் பாதித்திருக்கிறது. இதில் தமிழ் பெண்கள் ஏனையவர்களோடு ஒப்பிடுகையில் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். அதிலும் வன்னியில் உள்ள பெண்களின் நிலைமை தற்போது மிகவும் மோசமானதாக காணப்படுகிறது. ஏற்கெனவே பொருளாதார ரீதியில் நலிவுற்ற நிலையில் இருந்த அவர்களை யுத்தப் பாதிப்பும் மேலும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

இதில் கிளிநொச்சியில் 42,318 குடும்பங்களையும் ஒரு இலட்சத்து 39,489 மக்கள் தொகையையும் கொண்ட மாவட்டத்தில் 8,194 பெண் தலைமைதுவ குடும்பங்கள் காணப்படுவது ஆரோக்கியமான நிலைமையல்ல. இதில் விதவைகள் 6424 பேர், அதிலும் யுத்தம் காரணமாக விதவைகளாக்கப்பட்டவர்கள் 2250 பேர். இதில் முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகள் 533 பேரும், மூன்றுக்கு மேற்பட்ட தங்கி வாழ்வோரை கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் 2169 பேரும் காணப்படுகின்றனர். இவர்களில் பலர் பெண் தலைமைத்துவ குடும்பம் என்ற பாதிப்போடு, கை ,கால், கண் போன்ற உடல் உறுப்புக்களை இழந்தும் காணப்படுகின்றமை துயரிலும் துயராக விளங்குகிறது.

மழைவிட்டும் துவானம் விடவில்லை போன்று யுத்தம் முடிவுற்று ஏழு வருடங்களை கடந்த நிலையிலும் அதன் பாதிப்புக்களிலிருந்து பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இன்றும் மீட்சி பெறவில்லை. பிள்ளைகள் காரணமாகவே தற்கொலை செய்யாமல் இருக்கிறேன் இல்லையென்றால் கணவன் போய் சில வருடங்களில் நானும் அவரிடம் சென்றிருப்பேன் என விரக்த்தியின் விளிம்பில் நின்றுகொண்டு மற்றொரு பெண் சொன்னார். இந்த வரிகள் போதுமானது இங்கே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்கின்ற வலிகள் நிறைந்து பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கு.பெண்களுக்கான விசேட அமைச்சு, நிறுவனங்கள், கட்டமைப்புக்கள், மற்றும் விசேட திட்டங்கள் என இருந்தும் யுத்தத்தின் பின்னராக பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிரச்சினைகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஓரளவேனும் வெற்றிக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொன்னார், வாழாவெட்டியாக இருக்கின்ற எங்களிடம் வாக்கு கேட்டு மட்டுமே வாறாங்கள் எங்கட வாழக்கையை திரும்பியும் பார்கின்றார்கள் இல்லை. எனவே வாக்களிகிறதையும் விடப்போறம் என்றார்.

இப்படிதான் இன்று சமூகத்தில் உள்ள தொன்னூறு வீதமான பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் உணர்வுகள் காணப்படுகின்றன. யுத்தத்தால் கணவனை இழந்த, அல்லது கணவன் காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கணவன் விவாகரத்து பெற்ற, அல்லது முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட கணவனை கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படை தேவைகள் கூட ஒரு முறையாக நிவர்த்தி செய்ய கூடிய பொறிமுறை உருவாக்கப்படவில்லை.

இதனால்தான் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அனைத்து வகையான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் முகம்கொடுக்கின்றனர். ஆதாவது உடல் , உள ரீதியான, எல்லா வகை பாதிப்புக்களுக்கும் பெண்கள் நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி இலங்கை பெண்கள் சமவாயம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் நோக்கம் பெண்களுக்கு எதிரான எல்லா வகையான வேறுபாடுகள் மற்றும் வன்முறைகளை இல்லாதொழித்லாகும். ஆனால் இது வெற்றிப்பெறவில்லை என்ற கள யதார்த்தமே யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் காணப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் அறியாமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்று வருகிறது. உதவி செய்கின்ற போர்வையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அணுகி படிப்படியாக அவர்களுடன் நெருக்கமான நட்பாகி பின்னர் அந்த பெண்களை தங்களின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு செல்கின்ற சம்பவங்களும் நிறைவே உண்டு. இதன் பின்னர் சமூகத்தில் இந்த பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாதவராக நோக்கப்பட்டு புறக்கணிக்கின்ற போது குறித்த பெண் உள உடல ரீதியாக பாதிக்கப்பட்டவளாக மாற்றப்படுகின்றார். இதில் மிகவும் வேதனையான விடயம் இவ்வாறான பெண்களை இது போன்ற நிலைமைகளுக்கு உள்ளாக்கியவர்களே அவர்களை சமூகத்தில் தூற்றித்திரிவது.

மேலும் முக்கியமாக வீட்டுத்திட்டத்தை பெற்ற பெண் தலைமைதுவ குடும்பங்கள் அதிகளவான சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்ற செய்தி மிக முக்கியமானது. சில கிராமங்களில் வீட்டுத்திட்டத்திற்கு பயனாளி தெரிவு செய்வதற்கு கூட பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனைவிட வீட்டுத்திட்டத்தை முழுமையாக அமைத்து முடிப்பதற்கு இந்த பெண்கள் மேசன் தொழிலாளி, அல்லது ஒப்பந்தகாரர் ஒருவரில் தங்கியிருக்க வேண்டியிருப்பதனால் பெரும்பாலான இடங்களில் இவர்கள் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதோடு, பணிகளில் மோசடிகளை மேற்கொள்ளல், தரமான கட்டுமான பணியை மேற்கொள்ளாமை, பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி செல்லுதல், அச்சுறுத்தி அடக்கி வைத்திருத்தல் போன்ற சம்பவங்களும் வன்னியில் இடம்பெற்றே வருகிறது.

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் வீட்டுத்திட்ட பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்களிடம் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உத்தியோகத்தர் நீங்கள் ஆண்களின் உதவியின்றி இருப்பதனால் உங்களால் வீட்டைக் கட்டமுடியாது திட்டப் பணத்தை முழுமையாக என்னிடம் தாருங்கள் நான் அமைத்து தருகிறேன். எனக் கூறி வீட்டுத்திட்டத்தை பொறுப்பேற்றவர் வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் சென்றுவிட்ட நிலையில் குறித்த பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவமும் உண்டு.

இதன் பின்னர் குறித்த பெண்கள் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திடம் சென்று தொழிநுட்ப உத்தியோகத்தரை பற்றி விசாரித்த போது அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது பணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதன்போது தாங்கள் ஏமாற்றப்பட்ட விடயத்தை குறித்த பெண்கள் எடுத்துக்கூறிய போது அதற்கு தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் அது தொழிநுட்ப உத்தியோகத்தரின் எமது நிறுவனத்திற்கு புறம்பான செயல் எனவும் கூறி கைவிரித்துவிட்டனர். இப்பொழுது இந்தப் பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களாக நிவாரணமோ தீர்வோ இன்றி காணப்படுகின்றனர்.

இதனை தவிர மேலும் ஒரு வருந்ததக்க சம்பவம் ஒன்று ஒரு முள்ளம் தண்டு வடம் (இடுப்புக்கு கீழ் இயங்காத முன்னாள் போராளி) பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியின் இளம் மனைவி ஒருவர் தனது நெருங்கிய தோழியிடம் கூறியதாவது ஆதாவது 2009 க்கு முன்னர் எங்களை வீதிகளில் கண்டால் மரியாதையாக நடந்துகொள்கின்றவர்கள் தற்போது மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்கின்றார்கள் என்றும் உனது கணவனுக்கு இடுப்புக்கு கீழ் இயங்காது நீயும் எவ்வளவு காலத்திற்குதான் வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்கப் போகிறாய் வாழ்க்கையில் கொஞ்சமாவது அஜஸ்மென்ட் இருக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள் எனக் கூறி அழுதுகிறார். இப்படி பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சமூகத்தில் நாளாந்தம் சின்னச்சின்ன விடயங்களில் எல்லாம் பாதிக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில்தான் வாழ்க்கையில் விரக்தியுற்றவர்களாக எஞ்சிய தமது வாழ்க்கையை தமக்காக அன்றி பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற நிலையிலேயே வாழ்கின்றனர். இவர்களின் வாக்குகளால் அதிகாரங்களுக்குச் சென்ற பிரதிநிதிகள் கூட ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தாங்கள் சார்ந்த அமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மேடைகளிலும் வழங்குகின்ற வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகள் என்பவற்றை தேர்தல் வெற்றியின் பின்னர் நினைத்துப் பார்ப்பதில்லை என்ற அனுபம் இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களிடம்; காணப்படுகிறது.

குறைந்தப்பட்சம் தங்களின் அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாத அரசும் அதன் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் காணப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்தல்களிலும் இந்த தடவை செய்வார்கள், இந்த தடவை செய்வார்கள் என 2009 இக்கு பின்னர் பல தேர்தல்களில் வாக்களித்து விட்டோம். ஆனால் எங்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, என்ற மனநிலையில் தங்களின் உயர்ந்த பட்ச உரிமையான வாக்குரிமையை கூட பயன்படுத்த விரும்பாதவர்களாக மாறியிருக்கின்றனர்.

எனவேதான் பெண் தலைமைத்துவ குடும்பங்களை பொருத்தவரை அவர்களுக்கான வாழ்க்கைத்தர மேம்பாடு தொடர்பில் விசேட திட்டங்கள் அவசியமாகின்றன. அதுவும் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் கண்டிப்பாக நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வேண்டும், இன்றைய சூழ்நிலையில் பெண் தலைமைதுவ குடும்பங்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான வன்முறைகள் துஸ்பிரயோகங்கள் எல்லாம் அவர்கள் எதிர்கொள்ளும் வறுமைக்கூடாகவே நடக்கின்றன.

எனவே  பெண்த் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு சிறப்பான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

உங்கள் கருத்து
  1. Jeyabalan T on July 28, 2017 6:43 am

    பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல்வேறு கோணங்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சினையை தமிழ்ச்செல்வன் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். இவ்வாறான ஆதாரங்களுடன் புளிளி விபரங்களுடன் கூடிய பதிவுகள் மிக முக்கியமானது. நன்றி தமிழ்ச்செல்வன்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு