தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்


இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் ஸ்ரீலங்காவின் இனப் பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி ஊடாக இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் என த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுயாட்சியுடன் கூடிய கணிசமான அளவான அதிகார பகிர்வு நாடு தமக்கு சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்தும் என எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பான இந்தியாவின் நலன்கள் என்பது பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனவும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதிலும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என தாம் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மேலும் கருத்து வெளியிட்ட சம்பந்தன்

ஸ்ரீலங்காவில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் பறங்கியர்கள் என பல்வேறு இன மக்கள் வாழ்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும்  தனித்துவமான இன, கலாசார மொழி அடையாளங்கள் உள்ளன.வடக்கு கிழக்கு வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களை கொண்டது.

அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இரண்டு மாகாணங்களையும் இணைத்து, அதிகாரங்கள் பகிரப்படும் பிரிவாக அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் சுயாட்சிக் கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைத்துவருகின்றனர். இந்திய – ஸ்ரீலங்கா சமாதான உடன்படிக்கையில் சர்வஜென வாக்கெடுப்பை நடத்தும் வகையிலான சரத்திற்கு நாம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தோம்.

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் இந்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருக்கும்.சர்வஜென வாக்கெடுப்பை நடத்தாமலேயே இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்க கூடும்.எனினும் துரதிஷ்டவசமாக சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த திருத்தம் கூட திருப்தி அளிக்க கூடிய வகையில் இல்லை. இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தலில் கூட நாம் போட்டியிடவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இந்திய படைகளுக்கு இடையிலான யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து இந்திய – இலங்கை உடன்படிக்கை மற்றும் அரசியலமைப்பின் 13 திருத்தம் ஆகியன அமுல்படுத்தப்படாமை அதிருப்தி அளிக்கும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு