இலங்கைத் தேசிய நூலகத்தின் தமிழ்சார்ந்த வெளியீடுகள் – தேசிய எழுத்தாளர் பட்டியல் : என்.செல்வராஜா, நூலகவியலாளர்


National_Directory_of_Writersகடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய அமெரிக்க மிசனரிகளால் எமக்காக மேற்கொள்ளப்பட்ட அகராதிக்கலை இன்று புதிய பரிமாணம் ஒன்றைப் பெற்று ஈழத்தமிழர்களினால் முன்னெடுத்துச் செல்லப்படுவதை தமிழகத்தில் மட்டுமல்ல, ஐரோப்பா,கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா எனத் தமிழர் புலம்பெயர்ந்த அனைத்து நாடுகளிலும் கண்டுவிட்டோம்.

இலக்கியம் தவிர்ந்த உசாத்துணை நூல்கள் பல இன்று தமிழர் செறிந்து வாழ்ந்து வர்த்தகம் செய்யும் புகலிட நாடுகளிலெல்லாம் வெளியிடப்படுகின்றன. இங்கிலாந்தில் 1994இல் தொடங்கி 23 ஆண்டுகளாக வெளிவரும் தமிழ் ஓலைகள் என்ற ஆண்டிதழ் – ஈழத்தமிழர்களுக்கானதொரு வர்த்தக வழிகாட்டி. இங்கிருந்து மற்றொரு வணிக வழிகாட்டியாக முரசம், 2002இல் தொடங்கி 2009 வரை ஆண்டுதோறும் தொடர்ந்து வெளிவந்து நின்றுபோயிற்று. கனடாவில் இருந்தும் உலகத்தமிழர் வணிகம் 1997இல் இருந்து வெளிவருகின்றது. இத்தகைய வர்த்தக வழிகாட்டிகள், பஞ்சாங்கங்கள், உலகெங்கும் செழித்து வாழும் ஈழத்தமிழரின் வணிகத் தொடர்புகளுக்கு மட்டுமல்லாது தமிழரின் அன்றாட சமூக கலாச்சாரத் தொடர்புகளுக்கும் உதவும் வகையில் வெளிவருகின்றது.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வரதரின் பலகுறிப்பு 1964-1965 காலகட்டத்திற்கான தகவல்களை ஓரிதழில் வழங்கிவிட்டு முடங்கிப் போயிற்று. இலங்கையின் பிரம்மாண்டமான உசாத்துணைப் படைப்பான பேர்குசன் டிரெக்டரி, லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தினால் 175 வருடங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பதிவு செய்யும் முயற்சியாக 2002இல் தொடங்கப்பட்ட நூல்தேட்டம் என்ற நூல்விபரப்பட்டியல் வெளியீட்டு முயற்சி 2017வரை 11 தொகுதிகளைக் கண்டு, 11000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பற்றிய வரலாற்றுத்தகவல்களைத் தன்னகத்தே கொண்டுநிற்கின்றது. அதன் 12ம் 13ஆம் தொகுதிகளுக்கான நூல்கள் பதிவுக்குள்ளாக்கப்பட்டு அச்சீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இதன்மூலம் ஈழத்தமிழர்களின் 13000 நூல்கள் குறிப்புரையுடன் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உசாத்துணை வழிகாட்டிகளின் வரிசையில் ; ‘Who’s Who’ என்ற வகையானதொரு வழிகாட்டி உள்ளது. இவ்வழிகாட்டி மக்களைப் பற்றிய குறிப்புக்களைத் தருவதாகும். இதைத் தமிழில் ‘யார் எவர்?’ என்று அழைக்கின்றோம்.

நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974இல் நடைபெற்றபோது அந்த மாநாட்டின் பேராளர்கள் பற்றிய விபரத்தை அவர்களின் புகைப்படம், அவரது சமூக, வாழ்க்கைக் குறிப்புகள், கல்வித் தகைமை, அவரது துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு, வகித்த பதவி, எழுதிய நூல்கள் என்று இன்னோரன்ன பல தகவல்களை அந்த யார் எவர் நூல் கொண்டிருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த ஆவணம் தவிர காலத்துக்குக் காலம் மேலும் சில யார் எவர் நூல்களை அவ்வப்போது பலரும் தொகுத்து வெளியிட்டிருந்தார்கள்.

இன்று உலகப் பிரசித்தி பெற்ற பிரித்தானிய கலைக்களஞ்சியம் 15வது பதிப்பு 30 தொகுதிகளில் வெளியாகிறது. ஆண்டு தோறும் முன்னைய ஆண்டின் நிகழ்வுகளைத் தனித்தனி ஆண்டு நூல்களாகத் தருகின்றது. காலத்திற்குக்காலம் முன்னைய ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை உள்வாங்கிப் புதிய திருத்திய பதிப்பாகின்றது. இன்று பூதாகாரமாக வளர்ந்து நிற்கும் இந்தக் கலைக்களஞ்சியம் 1768-இல் தன் முதற் பதிப்பைத் தந்த போது இரண்டு பாகங்களையே வெளியிட்டிருந்தன. இதை ஏன் சொல்ல வருகின்றேன் என்றால் எந்த ஒரு உசாத்துணை சாதனமும் முதல் எடுப்பிலேயே முழுமை பெறுவதில்லை. காலத்தக்குக்காலம் பட்டைதீட்டப்பெறுகின்றன. முதல்பதிப்பில் விடுபட்டுப் போனவை மறுபதிப்பில் சேர்கின்றன. முதல் பதிப்பில் தவறானவை அடுத்த பதிப்பில் நிவர்த்தி செய்யப்படுகின்றன. இது ஒரு ஆரோக்கியமான உசாத்துணை வெளியீட்டின் யதார்த்தநிலை யாகும்.

யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘வரதரின் தினக்குறிப்பு” அன்று ஒரு தொகுதியுடன் மாத்திரம் நின்று விட்டதால் அது ஒரு வரலாற்று ஆவணமாகவே இன்றளவில் இருக்கின்றது. ‘மானியம்பதியார் சந்ததி முறை” என்று மானிப்பாய் மக்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் வம்சாவளி ஆய்வு நூலொன்று 100 வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் பகுதியில் வாழ்ந்த மக்களின் தலைமுறைகளைத் தொகுத்துத் தந்த அரிய நூல் அது. ஒரு தொகுதியுடன் நின்று போன அந்த நூலும் இன்று வரலாறாகி விட்டது.

பொதுவாக, எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பற்றிய ஒரு அகராதியோ, யார் எவர் பிரசுரமோ வெளியாகும் போது, தனி நூலைப்போன்று அது ஒரு பதிப்புடன் நின்று விட முடியாது. இதற்கான வலிமையான காரணம் ஒன்றுண்டு. இத்தகைய தொகுப்புகள் அன்றாடம் வளரும் இயல்புடையன. தகவல்கள் மாறும் தன்மை கொண்டன. புதுப்புது எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் முகிழ்ந்த வண்ணம் இருக்கின்றார்கள். காலத்துக்குக் காலம் அவர்களை அறிமுகப்படுத்தும் பணி இத்தகைய ஆவணத் தொகுப்புகளுக்கு அவசியமானது. அதே வேளையில் ஒரு படைப்பாளி பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களையே ஆய்வாளரும் விரும்புவார்.

இலங்கையில் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களைப் பற்றிய தகவல் பதிவுகள் பெரும்பாலும் கட்டுரை வடிவில்,l பல்வேறு ஆசிரியர்களால் எழுதியும் தொகுத்தும் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவேயொழிய, பொதுமைப்பாடடைந்த தகவல்களுடனான யார் எவர் தொகுப்புக்களாக வெளிவரவில்லை. 1916இல் வெளிவந்த அ.குமாரசாமிப் புலவரின் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்” தொடக்கம் 2016இல் வெளிவந்த த.கலாமணியின் ‘எம்மவர்கள்: மறக்கப்பட முடியாத ஆளுமைகள்” வரையில் அறுநூறுக்கும் அதிகமான நூல்களை நூல்தேட்டம் இவ்வகையில் அடையாளப்படுத்துகின்றது.

1886இல் வட்டுக்கோட்டை அ.சதாசிவம்பிள்ளையவர்கள் தந்த ‘பாவலர் சரித்திர தீபகம்”, பின்னாளில் வெளிவந்த ந.சி. கந்தையாபிள்ளையின் ‘தமிழ்ப் புலவர் அகராதி” போன்று அகராதிகளுள் ஈழத்து எழுத்தாளர்களுக்கான பதிவுகள் விரல்விட்டெண்ணக்கூடியதாகவே இருந்துள்ளன. அந்நாளில் ஈழத்தவர்- தமிழகத்தவர் என்ற வேறுபாட்டை எம்மவர் விரும்பியிராமையும், எம்மவரும் தம்மை தமிழகத்தின் தாய்மையுடன் இணைத்துக்கொள்ள விரும்பியமையும் இதற்குக் காரணமாயிருக்கலாம்.

பின்னாளில் ஒக்டோபர் 1994 எழுந்த மொழிவாணனின் ‘முக்கியஸ்தர்களின் முகவரிகள்” என்ற நூல் கொழும்பு நவரசம் வீடியோ வெளியீடாக வெளிவந்தபோது, புதியதொரு ‘வழிகாட்டி” நூலுக்கான தேவை உணரப்பட்டது. இலங்கையில் பிரபல்யமானவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், ஆகியவற்றுடன் அவர்கள் சார்ந்துள்ள துறைகள், மற்றும் பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகளும் மொழிவாணனின் நூலில் இடம்பெற்றிருந்தன. இந்நூலின் திருத்திய பதிப்பாக 268 பக்கங்களுடன் ‘முக்கியஸ்தர் முகவரி” என்ற நூலை மொழிவாணன் ஒக்டோபர் 2003 இல் மீண்டும் வெளியிட்டிருந்தார்.

மொழிவாணனின் நூல் வெளிவந்த காலகட்டத்தில் மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா மலையக எழுத்தாளர்களின் சுயவிபரப் பட்டியல் ஒன்றினை ‘முகமும் முகவரியும்”என்ற தலைப்பில் கண்டி, மத்திய மாகாண செயலகத்தின் இந்து கலாச்சார அமைச்சின் மூலம், 68 பக்கங்களில் டிசம்பர் 1997இல் வெளியிட்டிருந்தார். இச்சிறு நூலில் 68 மலையக எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கியிருந்தன. புகைப்படங்களுடன் கூடிய இத்தொகுப்பில், எழுத்தாளர்களின் பெயர்கள், புனைபெயர்கள், தொழில், பிறந்த திகதி, பிறந்த மாவட்டம், எழுதி வெளிவந்த நூல்கள், முக்கிய படைப்பு, சிறு குறிப்பு, முகவரி ஆகிய அம்சங்கள் உள்ளடங்கின. 1997இன் பின்னர் இந்நூல் இற்றைப்படுத்தப்படாததால் இதுவும் வரதரின் பலகுறிப்பின் நிலைக்கே தள்ளப்பட்டுவிட்டது.

2016இல் அமரத்துவமடைந்த கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் மலையகத்தில் கட்டுகஸ்தொட்ட பகுதியில் உள்ள உடத்தலவின்ன என்ற கிராமத்திலிருந்து ‘இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு”என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளில் இலங்கையிலுள்ள முஸ்லீம் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பொன்றினை 2004-2005 காலகட்டத்தில் வெளியிட்டிருந்தார். இவற்றில் மொத்தம் 112 முஸ்லிம் எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் விரிவான கட்டுரைகளாக இடம்பெற்றிருந்தன.

பின்னாளில் இதனை விரிவாக்கி தமிழ் படைப்பாளிகளையும் உள்ளடக்கி, ‘இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு” என்ற தலைப்புடன், 4முதல் 10வது தொகுதிவரையில் 2006-2008 காலகட்டத்தில் ஏழு தொகுதிகளை வழங்கினார். பின்னர் தலைப்பின் பெயரை ‘இவர்கள் நம்மவர்கள்” என்று மாற்றி மேலும் ஐந்து தொகுதிகளை 2008-2009 காலகட்டத்தில் வெளியிட்டிருந்தார்.

இதேபோன்ற எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்புப் பதிவொன்றினை லண்டனிலிருந்து முல்லை அமுதனும் மேற்கொண்டு அவற்றை ‘இலக்கியப் பூக்கள்” என்ற தலைப்பில் இதுவரை இரண்டு பாரிய தொகுதிகளில் வெளியிட்டுள்ளார். முறையே 2008, 2015ஆம் ஆண்டுகளில் இவை வெளிவந்தன.

எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களைத் தொகுக்கும் பணியில் கொழும்புத் தமிழ்ச்சங்கமும் 2003களில் சிலகாலம் ஈடுபட்டிருந்தது. இது நூலுருவில் வெளியிடப்படும் சாத்தியம் பற்றி இன்றுவரை அறியமுடியவில்லை.

இலண்டனிலிருந்தும் எழுத்தாளர் விபரத்தொகுப்புகள் மேற்கொள்ளும் ஆர்வம் தமிழ் தகவல் நிலையத்தைச் சார்ந்த சிலரிடம் 1990களில் தோன்றியிருந்தது. இவை எதுவும் இன்றுவரை செயலுருப்பெறவில்லை.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் அண்மையில் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை ‘தேசிய எழுத்தாளர் பட்டியல்” என்ற நூலை 157 பக்கங்களில் 2015இல் வெளியிட்டுள்ளது. இது 2017இலேயே எமது பார்வைக்குக் கிட்டியது. ‘இலங்கை எழுத்தாளர் யார் எவர்?” என்ற வகையில் அல்லாது, ஒரு இலங்கை எழுத்தாளர் முகவரிப் பட்டியலாகவே இது வெளிவந்திருக்கின்றது.

இலங்கையர்களான எழுத்தாளர்களின் பெயர், நிரந்தர முகவரி, அலுவலக முகவரி, தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை அகரவரிசையில் இந்நூலில் தந்துள்ளார்கள். இந்நூலுக்கு மும்மொழிகளிலும் தலைப்பிடப்பட்டிருப்பினும் தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளர்களின் தனிப்பட்ட முகவரிகள், அலுவலக முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஆங்கில மொழியிலும், ஆங்கில அகரவரிசைப் பட்டியல் ஒழுங்கிலும் காணப்பட்டுள்ளமை தேடலுக்கு இலகுவாக உள்ளது.

692 மொத்தப் பதிவுகளில் தமிழ் எழுத்தாளர்களில் 94 பெயர்களும், முஸ்லிம் எழுத்தாளர்களில் 46 பெயர்களும் மாத்திரமே தேசிய மட்டத்தில், தேசிய நூலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பெயர்களில் ஒரு சில தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களே பரிச்சயமான எழுத்தாளர்களாக எம்மால் இனங்காண முடிகின்றது.

தேசியமட்டத்தில் எழுந்துள்ள இந்த நூல் ஒரு சாதாரண ‘முகவரிப் பதிவேடாகவோ (Address Book),  தொலைபேசி இலக்கப் பதிவேடாகவோ (Telephone Directory) தான் எமக்குப் பயன்படப் போகின்றது என்பது கவலைக்குரியதாகும்.

தமக்கான தகவல் வளமாக கடந்த இரண்டாண்டுகளுக்கான சர்வதேச தராதர நூல் எண் கோவையை தேசிய நூலகத்தின் ஊழியர்களான தொகுப்பாளர்கள் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகின்றது. தமது நூல்களுக்காக ISBN இலக்கத்தினைப் பெறுவதற்கு இரண்டாண்டுகளுக்கு இடையில் விண்ணப்பித்திராத தமிழ்/ சிங்கள எழுத்தாளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ISBN இலக்கத்தினைப் பெறுவதில் அக்கறைகாட்டாத ஈழத்துத் தமிழ்ப்படைப்பாளிகள் இப்பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறத்தவறிவிட்டார்கள்.

மேலும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், உள்ளுர் முகவரிகளைத் தமக்கான சர்வதேசதராதர நூல் எண் பெறுவதற்குப் பயன்படுத்தியிருப்பதனால், அவர்களது முகவரி, தொலைபேசி எண் என்பன பாவனைக்கு உதவாதவையாகவே உள்ளன. (உதாரணம்- இரா. உதயணன். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

புனைபெயரிலேயே அதிகம் அறியப்பெற்றுள்ள எழுத்தாளர்களின் இயற்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வாசகருக்கு விபரம் அறிவதில் சிக்கல் ஏற்படலாம். புனைபெயரைக் குறிப்பிட்டு ‘பார்க்க” என்ற வழிகாட்டிக் குறிப்பினை பயன்படுத்தியிருக்கலாம். (உதாரணம்: மேமன்கவி. இவரது விபரம் Razak , A.K.A என்ற பெயரின்கீழ் காணப்படுகின்றது).

தகவல் வளமாக சர்வதேச தராதர நூல் எண் கோவையை பயன்படுத்துவதைத் தவிர்த்து, இலங்கையின் எழுத்தாளர் சங்கங்களை அணுகியிருந்தால் கணிசமான எழுத்தாளர் முகவரிகளைப் பெற்றிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது. ஒரு சிறிய கேள்விக்கொத்தை வழங்கித் தகவல் பெறப்பட்டிருக்கலாம்.

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, தேசிய எழுத்தாளர் பட்டியலை ஒரு இதழோடு நிறுத்திவிட்டால் அதனை வரலாற்று ஆவணமாகக்கூட எதிர்காலத்தில் பயன்படுத்தமுடியாமல் போய்விடும் ஆபத்தும் இங்கு உள்ளது. எழத்தாளர்கள் பற்றி அதில் உள்ள மூன்றே மூன்று தகவல்களான தபால் முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவை எப்போதும் நிரந்தரமானவை அல்ல.

தேசிய நூலகத்தைப் பொறுத்தவரையில், ஒரு இலங்கை எழுத்தாளர் யார் எவர் என்ற தொகுப்பை வருடாந்தம் வெளியிடுவதற்கான முழுத் தகுதியும் கொண்டுள்ளது. முதலாவதாக, அது இலங்கையின் சட்டவரைவுள்ள அதிகாரபூர்வமான தலைமை நிறுவனம். இரண்டாவது, அதன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய ஆளணி, நிதி வசதி அனைத்தும் தன்னகத்தே கொண்டது. அந்த நிறுவனத்தின் வெளியீடுகள் சர்வதேச நுலக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அறிவுசார் நிறுவனங்களின் நம்பகமான முதல்நிலை மூலாதாரங்களாகக்; கொள்ளத்தக்கன. எதிர்காலத்தில் ‘தேசிய எழுத்தாளர் பட்டியலை” விரிவாக்கி ‘இலங்கைத் தேசிய எழுத்தாளர் யார் எவர்” என்ற பெயரில் தரமானதொரு தொடர் வெளியீடாக வெளியிடத் தேசிய நூலகம் துணியவேண்டும். இவை இலங்கையில் அல்லது புகலிடத்தில் வாழும் அல்லது மறைந்த படைப்பாளர்களின் விபரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அப்படி வெளியிடும் பட்சத்தில் அதன் ஒவ்வொரு பதிவும் ஆகக்குறைந்தது கீழ்க்கண்ட தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

1. எழுத்தாளர் பெயர் (புனைபெயர்கள் அடைப்புக்குறிக்குள்), 2. பிறந்த திகதி – இறந்த திகதி, 3. நிரந்தர முகவரி, 4. தொலைபேசி இலக்கம், 5. மின்னஞ்சல் முகவரி, 6. தொழில், 7. தாய்மொழி, 8. வெளியிட்ட நூல்களின் பட்டியல் (நூலின் தலைப்பு, முதற்பதிப்பு வெளியிட்ட ஆண்டு), 9. பெற்ற விருதுகள்/பட்டங்கள்.

ஊழியர்களின் பணியை எளிமைப்படுத்தும் நோக்கமிருப்பின் தமது தேசிய எழுத்தாளர் பட்டியலைப் பின்பற்றி ஆங்கில மொழியில் மாத்திரம் பதிவுகளை மேற்கொள்ளலாம். நூல்களின் பெயர்களை ஆங்கில உச்சரிப்பிலேயே (வுசயளெடவைநசயவந) வழங்கலாம்.

பட்டியலின் அகர வரிசை ஒழுங்கின் அடிப்படையில் புனைபெயர்களுக்கும் ஒரு பதிவை வழங்கி ‘பார்க்க” வழிகாட்டுதலை மூலப்பெயருக்கு வழங்கலாம்.

Who_is_Who_2014_Coverதேசிய எழுத்தாளர் பட்டியல்களோ (Directory), யார் எவர் (Who’s Who) தொகுப்புகளோ என்றுமே முழுமையான பதிவுகளைக் கொண்டிராது என்பதை எவரும் அறிவர். ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி வருடாந்தம் புதிய பதிப்பினை வெளியிடும்போது, முன்னைய தகவல்களையும் இற்றைப்படுத்திக்கொண்டு, புதிய தகவல்களையும் இணைத்து ‘இலங்கைத் தேசிய எழுத்தாளர் யார் எவர்” என்ற ஆவணத்தை சர்வதேச தரத்தை நோக்கி நகர்த்திச் செல்லலாம். வெறும் பட்டியல்களுடன் தேசிய நூலகத்தின் புனிதப்பணி நின்றுவிடக்கூடாது. இப்பணியை வரலாற்றுக் கடமையாகக்கொண்டு தேசிய நூலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவர்களுக்குரிய தார்மீகக் கடமையாகும்.

26.07.2017

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு