எல்லா முன்னாள் போராளிகள் மீதும் அவதூறு பரப்பும் அரசின் கருத்துக்கள் கண்டிக்கதக்கது – தவராசா


எல்லா முன்னாள்  போராளிகள் மீதும் அவதூறு பரப்பும் வகையில் அரச தரப்பில் இருந்து வெளிவரும் கருத்துக்கள் கண்டிக்கதக்கது.மூன்று சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஒருவர் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார், இன்னொருவர் விளக்கமறியலிலிருந்து பிணையில் நிற்கின்றார், மற்றையவர் விளக்கமறியலில் உள்ளார். இவர்களின் செயற்பாட்டிற்காக முழு பொலிஸ் திணைக்களத்திற்கே அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட முடியுமா? என  வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா  தெரிவித்துள்ளாா்

அவர் ஊடகங்களுக்காக வௌியிட்ட தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த அறிக்கையில் அவா்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் வாழும் யாழ் மாவட்டத்தில் ஒரு சில நபரின் வன்முறைச் செயற்பாட்டை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்கள் எனத் தெற்கில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதே போல் புனர்வாழ்வு பெற்ற ஏறத்தாழ பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரின் செயற்பாட்டை வைத்துக் கொண்டு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அவ்வாறான வன்முறைச் செயற்பாடுகள் இளைஞர்களின் விரக்தி நிலையின் விளைவேயொழிய, அவர்களில் ஒரு சிலர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பதற்காக எல்லா முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதையோ, அவர்களைப் புண்படுத்தும் முகமாகக் கருத்துகளை வெளியிடுவதையோ அரசு தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், இது சும்மா இருப்பவர்களையும் தூண்டும் செயலாகவும் அமைந்து விடும்.

மூன்று சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஒருவர் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார், இன்னொருவர் விளக்கமறியலிலிருந்து பிணையில் நிற்கின்றார், மற்றையவர் விளக்கமறியலில் உள்ளார். இவர்களின் செயற்பாட்டிற்காக முழு பொலிஸ் திணைக்களத்திற்கே அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட முடியுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இன்று மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றது. இந்த நாற்பத்தைந்து மாத காலத்திற்குள் வடக்கில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய முதலீடுகளை வரவழைக்கக் கூடிய எந்தவித வேலைத்திட்டங்களையும் வட மாகாண சபை செய்யவில்லை.

மாறாக வரவிருந்த முதலீட்டு வாய்புகளைக் கூடத் தடுத்த அல்லது அசமந்தப் போக்கால் கைநழுவ விட்ட செயற்பாடுகளே நடந்தேறியுள்ளது. அந்த வகையில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக வட மாகாண இளைஞர்களின் விரக்திக்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என்று வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு