பொன் சிவசுப்பிரமணியம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உயிர் கொடுப்பாரா? : த ஜெயபாலன்


Sivasubramanium_Pon_TNAதற்போதைய தலைமுறை, இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் வரலாற்றை தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தவிர்து எழுத முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் விளைச்சலே இத்தலைமுறை. அரசியல் கருத்தியல் என்பது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதனை அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் புரியாமலேயே; சொந்த அரசியல் கட்சி நலன்களுக்காக; எழுந்தமானமாக விதைத்துவிட்ட தமிழீழக் கனவும், வளர்த்துவிட்ட வன்முறை அரசியலும்; அவர்கள் எதிர்பாராத அளவிற்கு தமிழ் மக்களை மீள முடியாத அழிவுப் பாதைக்குள்; தள்ளிவிட்டது. அதன் விளைவுகளைப் புரிந்து கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கிய போது வளர்த்த (கடாக்கள்) புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) அவர்கள் மார்பிலேயே பாய்ந்து அவர்களை அழித்தனர். இன்று அ அமிர்தலிங்கம் உருவாக்கிக் கொடுத்த மாகாணசபையில் புலிகளும் அவர்களின் ஏவலாளர்களாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொங்கிக்கொண்டு அரசியல் செய்கின்றனர். இது வரலாறு.

தமக்கு எதிர்காலத்தில் சவாலாக வரக் கூடியவர்களை ஆரம்பத்திலேயே இனம்கண்டு அழிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எப்போதும் கைதேர்ந்தவர். அந்தக் கொலைக் கலையை அவர் ஸ்தாபனமயப்படுத்தியும் இருந்தார். அதன் விளைவு இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சீரிய தலைமைத்துவம் உருவாகாமல் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அமைப்பினை அழிக்கின்ற போது அந்த அமைப்பில் முன்நிலைக்கு வரக் கூடியவர்களை தலைமைத்துவ ஆற்றல் உள்ளவர்களை இனம்கண்டு அவர்களையும் அழித்தனர். அந்த வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணயில் அ அமிர்தலிங்கம், பொன் சிவபாலன் இருவரும் முக்கியமானவர்கள். அ அமிர்தலிங்கத்திற்குப் பின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு சரியான தலைவர் அமையவில்லை. பொன் சிவபாலன் அவ்வாறான தலைவராவதற்கான ஆளுமை உடையவராக இருந்ததால் அவரும் மேயராக இருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

உயிர் போய்விடாமல் தக்க வைக்கும் கருவியில் பொருத்தப்பட்டு இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளியான பொன் சிவகுமாரனின் சகோதரரும், ஆரம்பகாலம் முதல் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளராகவும் இருக்கும் பொன் சிவசுப்பிரமணியம் இன்று (ஓகஸ்ட் 3 2017) லண்டனில் இருந்து இலங்கை சென்றடைந்துள்ளார்.

அண்மையில் நடைபெறவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில், கட்சியின் புதிய தலைவராக பொன் சிவசுப்பிரமணியம் நியமிக்கப்படலாம். அவ்வாறு செய்யாமல் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் பொன் சிவசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டால் ஜனநாயகமற்ற கட்சிக்கு ஜனநாயகப் பண்புகளை அறிமுகப்படுத்துகின்ற ஒரு செயன்முறையாக அது அமையும். மேலும் லண்டனில் இருந்து தலைமை ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற எண்ணத்தையும் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதற்கு உயிர்கொடுககும் பாரிய பொறுப்பு தற்போது பொன் சிவசுப்பிரமணியத்திடம் ஓப்படைக்கப்பட்டு உள்ளது. வி ஆனந்தசங்கரி உடனும் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன் உடனும் நெருக்கமானவரான பொன் சிவசுப்பிரமணியம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக நாளை (ஓகஸ்ட் 4) தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தேசம்நெற் க்கு தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்காலத் தலைமை தொடர்பாகவும் அவர் வி ஆனந்தசங்கரி உடன் உரையாடுவார்.

ஜனநாயகத் தலைமைத்துவம் என்பது பல்வேறு பண்புகளையும் கொண்டது. துரதிஸ்டவசமாக தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தலைமைத்துவ பண்புகள் பலவற்றைக் கொண்டிருந்த போதும் ஜனநாயகத் தலைமைத்துவ பண்பு உடையவர் அல்ல. அவராலும் அவரைச் சுற்றி உள்ளவர்களாலும் கட்சியை ஓரடி தன்னும் முன்நகர்த்த முடியவில்லை.

TULF Leader V Anandasangareeவி ஆனந்தசங்கரி நல்ல மனிதர்; பணத்துக்கும் அரசியலுக்கும் விலைபோகாதவர்; தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து உயிராபத்தை எதிர்கொண்டிருந்த போதும் தனது அரசியில் நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியையே தங்கள் பினாமியாகச் செயற்பட வைக்க முயன்றனர். வி ஆனந்தசங்கரி அதற்கு அனுமதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இனறுள்ள அரசியல் தலைவர்கள் மத்தியில் வி ஆனந்தசங்கரி ஒரு சிரேஸ்ட்ட அரசியல்வாதி. ஒரு நியாயமான மனிதரும் கூட.

ஆனாலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கட்சியை வழிநடத்திச் செல்வதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கவில்லை. அவருடைய 75வது பிறந்த தினத்துக்கு எழுதிய கட்டுரையிலும் நான் இதனைக் குறிப்பிட்டு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெய வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களோடு ஒன்றி அவர்களுக்கு நேர்மையாக முன்ணுதாரணமாக இருக்க வேண்டும்: அரசியல் தளத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாலும் பல்வேறு தரப்பினருடனும் தொடர்புபட்டு மக்களது மேலான தேவைக்காக சிறந்த முறையில் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்; தனது சொந்த விருப்பு வெறுப்புகளை ஓரம்கட்டிச் செயற்படுபவராக இருக்க வேண்டும்; உறுதியான பண்பு உடையவராகவும் ஆளுமை உடையவராகவும் இருக்க வேண்டும்@ பொதுமக்களை மற்றையவர்களைச் செவிமடுத்து அவர்களுக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்; மக்கள் விரும்புவதைச் சொல்லாமல் உண்மையில் எதற்காக உறுதியுடன் நிற்க வேண்டுமோ அதற்காக உறுதியுடன் நிற்க வேண்டும்; பொதுநன்மைகருதி மக்களால் விரும்பப்படாத முடிவுகளையும் எடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக தஙகளுடைய அரசியல் முடிவுகளுக்கு பொறுப்பேற்கும் தைரியம் உடையவராக இருக்க வேண்டும்.

மேலுள்ள தலைமைத்துவ பண்புகளில் பெரும்பாலானவற்றைக் கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள் யாராவது இருக்கின்றனரா என்றால் துரதிஸ்டமாக இல்லையென்றே பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு தலைவரிடமும் ஒரு சில தலைமைத்துவப் பண்புகளே காணப்படுகின்றது. வி ஆனந்தசங்கரியைப் பொறுத்தவரை அவர் மற்றையவர்களுடன் இணைந்து பணியாறறக் கூடிய ஒருவரல்ல என்பது அவருடைய மிகப்பெரிய பலவீனம். தனது சொந்த விருப்பு வெறுப்பு கோபதாபங்களுடனேயே அவர் அரசியலை மேற்கொள்கின்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிக்கு உள்ளேயே ஒரு ஜனநாயம் கிடையாது. வி ஆனந்தசஙகரியும் அவரைச் சுற்றி உள்ளவர்களும் கடந்த 30 ஆண்டுகளாக இப்படி ஒரு கட்சி இலங்கையில் உள்ளது என்பதனை மக்கள் மறந்துவிடாமல்; இடையிடையே ஞாபகப்படுத்தி வந்துள்ளனர்.

அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பெயரளவிலான கட்சியாகவே செயற்பட்டு வருகின்றது. இக்கட்சிக்கு உயிரூட்ட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. வி ஆனந்தசங்கரியின் தலைமைத்துவம் பலவீனமானதாக இருந்தாலும் அவரைப் பிரதியீடு செய்வதற்கு கட்சியில் தகுதியானவர்கள் இல்லை என்பதே உண்மை.

வி ஆனந்தசங்கரி தனது முழுப்பொறுப்பையும் கையளித்து கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அ அமிர்தலிங்கம் புதல்வர்களை தலைமைத்துவத்திற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் வி ஆனந்தசங்கரி கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டை வழங்கத் தயாரில்லாதவரை முழுமையான பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பில்லை என்றே கருதப்படுகின்றது. ‘தின்ணை எப்போது காலியாகும்’ என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் காத்திருக்கின்றனர்.

கட்சிக்கு வெளியேயும் ஆள்பிடிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரை கொள்கை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. யாழ் மையவாத வெள்ளாள ஆண் ஆதிக்க குணாம்சமே கட்சியுடன் நெருக்கமானவர்களின் நிலைப்பாடு. மற்றும்படி யாரையும் உள்வாங்கி கட்சிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரையாவது அனுப்பி தங்கள் இருப்பைத் தக்க வைப்பதே கட்சியின் தற்போதைய நிலை.

Ananthy_Sasitharanஅதற்காக அவர்கள் தன்னை அணுகியதாக மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். லண்டன் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் தன்னை தொலைபேசியில் அழைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கட்சியை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு மற்றையவர்கள் ஒதுங்கிக் கொண்டால் தான் கட்சியை செயற்படுத்த தயாராக இருப்பதாகத் அவர்களிடம் கூறியதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்த உரையாடல் அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்த போதே நடைபெற்றது.

Anadhashangaree_V_met_Wigneswaran_C_V_CM_NPCஅதேபோல் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்க்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முனைந்த போது, தமிழர் விடுதலைக் கூட்டணியை தலைமதாங்க வருமாறு வி ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்ததுடன்; தமிழர் விடுதலைக் கூட்டணியை தலைமை தாங்கும் தகுதி சி வி விக்கினேஸ்வரனுக்கு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். யூன் 30 2017இல் விக்கினேஸ்வரனைச் சந்தித்து இதனைத் தெரிவித்தும் இருந்தார். இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. வி ஆனந்தசங்கரி முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரனிடம் என்ன தகுதியைக் கண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.

தற்போது தமிழ் தேசியவாதியான பொன் சிவசுப்பிரமணியம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உயிர் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியில் இறங்கி உள்ளார். இவரின் முயற்சியின் வெற்றியிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்காலம் தங்கி உள்ளது. கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக வி ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியை தனிக்காட்டு ராஜாவாக ஒரு லிமிட்டட் கொம்பனி போன்றே நடாத்தி வந்தார். அவர் இருக்கும் போதே இன்னொருவருக்கு முற்றாகப் பொறுப்புகளைக் கையளித்து கட்சிக்கு கட்டுப்பட்டு அல்லது கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் நடப்பதென்பது அவருக்கு மிகக் கடினமான விடயம். அந்த வகையில் பொன் சிவசுப்பிரமணியத்தின் முயற்சிக்கு நிறையத் தடைகற்கள் உள்ளன.

பொன சிவசுப்பிரமணியம் ஒரு நல்ல தேசியவாதி. முற்போக்குச் சாய்வுடையவர். யதார்த்தத்தை புரிந்துகொண்டவர். கட்சிக்கு வெளியேயும் மற்றைய அரசியல் சக்திகளுடன் உரையாடும் உறவாடும் ஆற்றலுடையவர். சரியான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர். ஆனால் பிற்போக்குத் தேசியவாதிகளாலும் சுயநலமிக்க, வினைத்திறனற்ற, யதார்த்தத்தை புரிந்துகொளள முடியாதவர்களால் நிறைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுவையும் குழுவாத அரசியலையும் தாண்டிச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியே.

இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கான தேவை இல்லாமல் போய் சில தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆயினும் இந்த யதார்த்தத்தை இன்றுவரை உணராமல் படுமோசமான பிற்போக்குத்தனமான யாழ் மையவாத வெள்ளாள ஆண் ஆதிக்க கருத்தியலுடன் தங்கள் அரசியலை முன்னெடுக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இன்னமும் நம்புகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள குறைந்தபட்ச முற்போக்கு அம்சங்கள் கூட தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இல்லை. இந்த பிற்போக்கு அம்சங்கள் களையப்படாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒட்டிக்கொள்வதாலோ தலைமையை மாற்றுவதாலோ மட்டும் கட்சியை உயிர்ப்பித்து விட முடியாது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு