ஒரு சிலரின் செயற்பாடுகள் மலையக, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களை பிளவுப்படுத்துகிறது – இராதாகிருஸ்ணன்


ஒரு சிலர்  திட்டமிட்ட அடிப்படையில் மலையக தமிழர்களினதும் வடக்கு, கிழக்கு தமிழர்களினதும் உறவுப்பாலத்தை பிளவுபடுத்துவதற்கு சில திட்டமிட்ட வேலைகளை செய்து வருகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 வது தேசிய மாநாடு இன்று (05)  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில்  ஆரம்பமானது இதன் போதே  கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாா்.

மாநாட்டின் சிறப்புத் தலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றும் போது சபையில்  பாராளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட 17 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த 168 பேராளர்களும் காணப்பட்டனர்.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே எமது உரிமைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இதனை எமது இரண்டு தரப்புகளும் உணர்ந்திருக்கின்றது. ஆனால் ஒரு சிலரின்  செயற்பாடுகள் மலையக மக்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களையும் சிங்களவர்களையும் இணைக்க முடியாது என்று கூறிய நிலைமையில் இன்று நாம் எல்லோரையும் ஒன்று சேர்த்து அனைவரும் சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம்.

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடு காரணமாக இன்று சர்வதேச ரீதியாக எமக்கு நற்பெயர் எற்பட்டுள்ளது. தமிழர்களின் மனிதாபிமானம் என்ன என்பதை அவர் உலக நாடுகளுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்.

எனவே மனக்கசப்பான செயற்பாடுகள் இனிமேல் யாழ்ப்பாணத்தில் நடைபெறக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு