மக்களின் வாழ்க்கைத் தேவைகளும் அரசியல் உரிமையும் சமவலுவுடையவை – மு. சந்திரகுமார்


 IMG_1666மக்களின் வாழ்க்கைத் தேவைகளும் அரசியல் உரிமையும் சமவலுவுடையவை. அவற்றுக்கான தீர்வும் இணைந்தே காணப்பட வேணும். பாதிக்கப்பட்டவர்களாகவும் சமூக நிலையில் பலவீனமானவர்களாவும் இருந்து கொண்டு உரிமைக்காகப் போராட முடியாது. ஆனால், தமிழ் மக்களுடைய இன்றைய அரசியல் தலைமைகள் மக்களுக்கு மாறாகவே செயற்படுகின்றன. இதை நீங்கள் நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கிறீர்கள் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர் கிராம அலுவலா் பிரிவில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
சமகால அரசியல் விடயங்களை மக்களாகிய நீங்கள் நேரடியாக அவதானித்து வரும் அதேநேரம் ஊடகங்கள் வாயிலாகவும் அவற்றை அறிந்துவருகின்றீர்கள். ஏனைய இனங்களைவிட கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின்போது அனைத்தையும் இழந்த நிலையில் பல தேவைகள் உள்ள சமூகமாகவும், பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றவர்களாகவும் உள்ளோம். மீள்குடியேற்றத்தின்போது எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பூச்சிய நிலையில் இருந்தே மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆனால், தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் மிகக் குறைவு. அவ்வாறு இருந்தும் அவர்கள் மக்களை நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதில்லை.
நாம் எமது இனத்தின் இருப்பை பாதுகாத்திருக்கின்றோம். மக்கள் தமது கிராமத்தில் அனைத்து வசதிகளுடனும் தமது கலை, கலாசார விழுமியங்களுடன் உறவுகளுடன் கூடி வாழக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கின்றோம். ஆனால், இன்று அதெல்லாம் சிதையும் நிலையில் காணப்படுகின்றது. இன்னும் மக்களுக்கு தேவைகள் காணப்படுகின்றன. வீட்டுத் திட்டம், வடிகாலமைப்பு, வீதிப் புனரமைப்பு,  மற்றும் தொழில்வாய்ப்பு உட்பட்ட ஏராளம் பிரச்சினைகள் உள்ளன. தொழில்வாய்ப்பை பொறுத்தவரை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சொந்த ஊர், உறவுகளை பிரிந்து கொழும்பில் கட்டடத் தொழிலாளிகளாக தொழில்புரிகின்றார்கள். அங்கே அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். இப்போது கொழும்பு போன்ற பகுதிகளில் டெங்கு நோயின் அபாயத் தாக்கம் உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில், வசதிகள் குறைந்த இடத்தில் வேலை செய்கின்ற எமது தொழிலாளிகள் இதனால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது. இது மட்டுமல்ல, கொழும்புச் சூழலில் அடிமட்டத் தொழிலில் ஈடுபடுகின்ற இளைஞர்களை இலக்கு வைத்து கலாச்சாரச் சிதைவுக்கான வேலைகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உண்டு. இந்த நிலை எமது கலாசாரத்தில் பாரிய மாற்றங்களையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். இனத் தனித்துவத்தையும் எமது மண்ணின் சிறப்பையும் பற்றிப்பேசுவோர், இந்த இளைஞர்களை இந்த மண்ணை விட்டு அலையவிடுவது சரியானதா? இப்படி எமது இளைய தலைமுறையைச் சிதைய விடுவது முறையானதா?
தமிழர்களின் அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து சமூகம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்குவது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். இதை செய்பவர்கள்தான் உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்கள். தற்போது அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்தான் தற்போது கொழும்பில் வேலை செய்யும் இளைஞர்களை தமது சொந்த இடத்தில் வேலை செய்வதற்கான வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து, இவ்வாறானவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக மக்கள் இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்கவில்லை. நாம் அதிகாரத்தில் இருந்தபோது இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வகையில் கிளிநொச்சியில் வானவில், விடிவெள்ளி என்கின்ற மிகப் பெரிய ஆடைத் தொழிற்சாலைகளை எமது மாவட்டத்தில் நிறுவியதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளைப் பெற்றனர். இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையைக்  கொண்டுசெல்ல முடிகிறது. ஏறக்குறைய 4000 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிற்சாலையின் மூலம் பட்டினியில்லாமல் வாழ முடிகிறது.  நாம் குறித்த நிறுவனங்களை கொண்டுவரும்போது பலர் பலவிதமாகப் பேசி இதனை கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டுவரக்கூடாது என்று போர்க்கொடி தூக்கினார்கள். இதற்கு அஞ்சி நாம் செயற்பட்டிருந்தால் தற்போது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை என்னவாக அமைந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கினால் இன்னும் எங்களுடைய இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் வாழ்வாதாரம் உயரம். தனியே ஒரு ஆடைத் தொழிற்சாலை செயற்பட்டால் போட்டித் தன்மை கிடையாது. ஊழியர்களின் சம்பள உயர்வு, அவர்களுக்குரிய ஏனைய படிகள் என்பனவற்றையெல்லாம் குறித்த நிறுவனம் வழங்காது. எனவே, இன்னும் அதிகமான தொழிற்சாலைகள் எமது மாவட்டத்திற்கு வரவேண்டும். அப்போதுதான் போட்டிகள் உருவாகும். போட்டிகள் உருவாகும்போது தொழிலாளர்களுக்குரிய மதிப்புக் கூடும். அந்த மதிப்பே அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர் ஒருவர் நேர்காணல் ஒன்றை மேற்கொள்ளும்போது ஒரு கேள்வியினைத் தொடுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் நிலையில் ஏன் இந்த மக்களுக்கான தொழில்வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியாதுள்ளது’ என. அதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர், ‘நாம் தற்போது அரசியல் தீர்வைப் பற்றித்தான் அரசாங்கத்தோடு பேசிக்கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சின்னச் சின்ன பிரச்சினைகளைப் பேசி அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் உள்ள உறவை சிதைக்க விரும்பவில்லை’ எனப் பதிலளித்துள்ளார். மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசுவதனால் எப்படி உறவு சிதையும். இதையெல்லாம் அரசாங்கத்துடன் பேசாமல் வேறு யாருடன் பேசி இதற்கெல்லாம் தீர்வு காணமுடியும்? இனப்பிரச்சினை தீரும் மட்டும் இதைப்பற்றியெல்லாம் பேச மாட்டோம் என்றால், அரசாங்கத்தைப் பொறுப்பிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் காப்பாற்றுவதுமாகவே அமையும். அப்படியென்றால், அதைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செய்கிறதா? அதாவது தமக்கு வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்து கொண்டு அரசாங்கத்தைக் காப்பாற்ற முற்படுகிறதா?
விடுதலைப்புலிகள் கூட ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும் மக்களுடைய இயல்பு வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதையே முதலில் செய்தனர். இயல்பு வாழ்க்கை சீர்ப்படுத்தப்பட்ட பின்பே அரசியல் பேச்சுகளில் ஈடுபட முடியும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், புலிகளைத் தமது அரசியலுக்காகப் பேசிக் கொண்டிருக்கும் இவர்கள் புலிகள் செய்த முக்கியமான மக்கள் நலன் சார்ந்த விடயங்களைக்கூடச் செய்வதில்லை. இதனால்தான் இவர்களை நாம் போலித் தேசியவாதிகள் என்கிறோம்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரானவர்களாக நாம் செயற்படவோ சிந்திக்கவே இல்லை. அதற்காகவே நாம் பல தியாகங்களை செய்தோம். பல உயிர்களை இழந்தோம். ஆனால், ஒவ்வொரு வருடமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுபவர்கள், அந்த விடயம் தொடர்பில் சிறு முன்னேற்றத்தைக்கூட இதுவரை காட்டவில்லை. எனவே, இவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்கிறேன்.
ஒவ்வொரு தேர்தல் காலப்பகுதிகளிலும் மக்கள் தமது ஒற்றுமையைக் காட்டவேண்டும் என மக்களிடம் கூறும் அரசியல்வாதிகள் தற்போது தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள். குறிப்பாக, வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் மக்கள் தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாகாண சபைக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர் உட்பட்ட உறுப்பினர்கள் ஊழல்களில் ஈடுபட்டும் பதவிகளுக்காக தங்களுக்குள் தாங்களே அடிபட்டும் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள்தான் பிரிந்து நிற்கின்றனர். வடமாகாண சபை ஊடாக அதிகளவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படக்கூடியதாக இருந்தும் அவர்கள் அவற்றில் அக்கறை கொள்ளாது தங்களது பிரச்சினைகளுக்காக முட்டிமோதுகின்றனர்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல் இருப்பது தவறானது. தேர்தல்களில் அரசியல்வாதிகள் வெற்றிபெறுவது முக்கியமானதல்ல. மக்களே பெற்றிபெற வேண்டும். மக்கள் வெல்வதாக இருந்தால் மக்களுக்காக உழைக்கக்கூடிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ் மக்கள் விட்ட தவறுகளால் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களுமே வெற்றிகளைப் பெற்றனர். மக்கள் தீராப்பிரச்சினைகளால் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். உண்மையாகவே மக்களை நேசித்து, மக்களுக்காகவே செயற்படுகின்ற அரசியல் செயற்பாட்டாளர்களை இந்த அரசியல் தலைமைகள் எதிர்கொள்ள முடிவதில்லை. அதற்காகத் தவறான முறையில் மக்களுக்கான அரசியற் செயற்பாட்டாளர்களைப் பற்றித் தவறான முறையில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலைமைக்கு இன்று மக்கள் முற்றுப் புள்ளி வைக்கும் கட்டத்தில் வந்திருக்கிறார்கள். மக்களுக்கு இன்று உண்மையானவர்கள் யார்? தங்களை ஏமாற்றுகின்றவர்கள் யார் என்று தெரிகிறது. அதனால் தங்களுடைய பிரச்சினைகளுக்காக இன்று அவர்களே முன்வந்து போராடத்தொடங்கியிருக்கிறார்கள்.
சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு. சமத்துவம் என்பது நாங்கள் தமிழினம். ஏனைய இனங்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரத்தைப் போல, உரிமையைப்போல அனைவருக்குமான சமத்துவ உரிமையை வென்றெடுப்பது என்று பொருளாகும். அதேபோல் சமூக நீதி என்பது எங்கள் சொந்த மக்களிடம் உள்ள பிரச்சினைகள், அதாவது பெண்களுக்கு சம உரிமை இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் இல்லை. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நீதி இல்லை. இதனால், எல்லோருக்குமிடையில் சமமான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அதனுடைய அர்த்தமாகும். ஒரு இனத்திற்குள் நிறைய பிரச்சினைகள் உள்ளன. பிரதேசவாதம், மதம், சாதியம் என. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேச வாதம் பற்றி மிகமோசமாகப் பேசியிருந்தார். அதை நாங்கள் கண்டித்தும் இருந்தோம்.
மீள்குடியேற்றம் செய்யும்போது கடந்தகாலங்களில் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் சமூக நீதி அற்ற தன்மையைப் பார்த்தோம். கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்தது. சில பகுதிகளுக்கு, சில மக்களுக்கு பாடசாலைகள் கூட அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அவர்கள் கல்விக்காக பல கிலோமீற்றர் சென்று கல்வியைக் கற்க வேண்டிய சூழல் காணப்பட்டது. அதனாலேயே நான் மூன்று பாடசாலைகளை பின்தங்கிய பிரதேசங்களில் புதிதாக ஸ்தாபித்தேன். அம்பாள்குளத்தில் விவேகானந்தா, மலையாளபுரத்தில் திருவள்ளுவர், கிருஸ்ணபுரத்தில் அன்னை சாரதா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைத் தொடங்கினோம். அதுவரையில் அந்த மக்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. விவேகானந்தா வித்தியாலயம் தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்மைப் பாடசாலைகளில் ஒன்றாக விளங்கிவருகின்றது. இதுதான் சமூக நீதியற்ற நிலைமையாக இருந்தது. இது கிளிநொச்சியில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும் இந்த நிலைமை காணப்படுகிறது. இவற்றையெல்லாம் களைந்து ஒரு நீதியான சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாம் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பை உருவாக்கினோம். அவற்றில் நாம் கணிசமான வெற்றியையும் கண்டிருக்கின்றோம். இந்த அமைப்பு பல மக்கள் சார்ந்த போராட்டங்களை நடாத்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மே தின நிகழ்வில் வடமாகாணத்திலேயே அதிகூடிய மக்கள் பங்கேற்ற ஒரு எழுச்சியான மேதின நிகழ்வை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு நடாத்தியிருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது என்றார்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு