நல்லாட்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணையா விட்டாலும் இணைந்தே செயற்படுகின்றனா் – ராஜித


fcb1767a-32d5-4ffb-8863-71bcb4676b051இந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எம்மோடு இணையா விட்டாலும், சகல சந்தர்ப்பங்களிலும் இணைந்தே செயற்படுகின்றார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நிந்தவூரில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

முந்தைய ஆட்சிக் காலத்தில் எந்த நேரத்தில் வெள்ளை வான் வரும், யார் யார் கடத்தப்படுவார்கள் என்ற அச்ச சூழ்நிலையில் அந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இந்த நிலை மாறி தற்போது வடக்கில் மக்கள் நிம்மதியாக உறங்குகின்றார்கள்.

கடந்த ஆட்சியில் இருந்த கடத்தல், கொள்ளை போன்றவைகள் இந்த ஆட்சியில் இல்லை. இருந்த போதும் நாட்டைக் குழப்பி மக்களிடத்தில் தப்பான எண்ணங்களை வளர்க்க சில குழுக்கள் செயற்படுகின்றன.

இலங்கையில் வாழும் மூவின மக்களிடத்தில் சமூக ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதியும், பிரதமரும் செயற்படுகின்றார்கள்.

ஒரு இனத்தின் மதச் சுதந்திரத்தில் கை வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தற்போது முஸ்லிம் பள்ளிகளில் சுதந்திரமாக தொழுகை நடாத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹராம், ஹலாலை தீர்மானிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.

ஒரு வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு நிலவுமானால் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளோம்.

நான் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றதை ஜே.வி.பி யினர் திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் தப்பான எண்ணத்தினை உருவாக்க எத்தனிக்கின்றனர். முறையாக அனுமதிபெற்றே நான் சிகிச்சைக்காக சென்றேன்.

மேலும் எதிர்காலத்தில் சத்திர சிகிச்சைக்கான செலவுகள் குறைக்கப்படவுள்ளது. உலக வரலாற்றில் மருந்துக் குறைப்புக்கள் செய்த ஒரே ஒரு நாடு இலங்கையாகும். இதில் முதல் கட்டமாகவே 44 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைத்துள்ளோம்.

இதுதவிர எட்டாயிரம் மில்லியன் ரூபாய் மருந்துக் கொள்வனவிற்கென்று செலவாகின்றது. இந்த நிலையினை மாற்றி இலங்கையிலே மருந்துகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளது என ராஜித தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு