வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார்.


 

03வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்குமென ஜனாதிபதி  மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா்.

பாடசாலை மாணவர்களிடம் வாசிப்புக்கான விருப்பத்தினை விருத்தி செய்யும் நோக்குடன் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘உத்தம நண்பன் புத்தகமே’ செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(06) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போதைய பிள்ளைகள் மற்றும் மக்களிடம் வாசிப்பு ஆர்வம் குறைந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நவீன தொழில்நுட்பத்துடன் சமூகத்தை பீடித்துள்ள சமூக ஊடகங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் மீளவும் புத்தகங்களை வாசிப்பதில் மாணவர்களை ஈடுபடுத்தி இலக்கிய இரசனையுடைய, அறிவுமிக்க சமூகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் கொண்டாடப்படும் வாசிப்பு மாதத்தோடு இணைந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் அபிவிருத்தி மற்றும் விசேட கருத்திட்ட பிரிவு கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதன் மூலம் நிறைவான ஆளுமையுடைய பிள்ளைகளை உருவாக்குவதற்காக அறிவை ஊட்டுதலுடன், இலக்கிய இரசனைக்கு மாணவர்களை பழக்கப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் முதற்கட்டம் நாடு தழுவிய ரீதியில் உயர்தர வகுப்புக்களையுடைய 2820 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படுகிறது. அந்த பாடசாலைகளுக்கான மும்மொழி புத்தக பொதிகள் இரண்டு என்ற வீதம் வழங்கப்படுகின்றன. பாடசாலைகளுக்கான புத்தக வழங்கல் செயற்பாடுகள் இத்துடன் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடு தழுவிய ரீதியில் போட்டிகளை நடத்தி புத்தகங்களை வாசித்தல் தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்கும் செயற்திட்டமும் அமுல்படுத்தப்படுகிறது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண கல்வி அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மற்றும் அரச அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு