போரில் இழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் நினைவுத்தூபி – ருவான் விஜயவர்த்தன


ruwan-wijewardenaபோரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் பொதுவான நினைவுத்தூபி அமைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற போரில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது உறவுகளை இழந்தனர். அவர்களை கட்டாயம் நினைவுகூரவேண்டும். அதற்கு பொதுவான இடமாக அனுராதபுரமே உள்ளது.

போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு தூபி ஒன்றை அமைக்கவேண்டுமெனக் கோரி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியல்வாதிகளாலேயே இந்த நாட்டில் போர் ஏற்பட்டது. அரசியல்வாதிகளால் ஏற்பட்ட போருக்கு அரசியல்வாதிகளாலேயே தீர்வு காணப்படவேண்டும். பண்டா -செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றில் ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றியிருந்தால் இன்று அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கமாட்டா.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் மக்களின் உரிமையைப் பறிப்பது அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்தார்.

இதற்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, போரின்போது தமிழ், சிங்கள,முஸ்லிம் மக்கள் உயிரிழந்தனர். அவர்கள் கட்டாயம் நினைவுகூரப்படவேண்டும்.

இது அடிப்படை மனித விழுமியமும்கூட. நினைவுத்தூபியை அனைவருக்கும் பொதுவான இடத்தில் அமைக்கவேண்டும். அவ்வாறான ஒரு இடமாக அனுராதபுரமே உள்ளது.

அதற்குரிய நாள், அதனை எவ்வாறு செய்வது, எந்த அமைச்சின் கீழ் செய்வது என்பது தொடர்பாக பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும்எனத் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு