காணாமல்போனோர் செயலகத்தை இலங்கை உடனடியாக செயற்படுத்தவேண்டும் – மனித உரிமை ஆணையாளர்


geneva-human-rights-council-commissionerகாணாமல்போனோர் அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகச் செயற்படுத்தவேண்டுமென ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

“காணாமல்போனோர் பணியகத்தை இலங்கை உடனடியாக செயற்படுத்த வேண்டும். அத்துடன், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்நீண்டகாலமாக இழுபறிப்படும் வழக்குகளுக்கு தீர்வுகாணல் உள்ளிட்ட , ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அனைத்துலக மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்கள், மெதுவாக நடக்கும் சீர்திருத்தங்கள் அவர்களின்  ஏமாற்றத்தை அதிகரிக்கச் செய்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன.

30/1 தீர்மானத்தின் போது அளித்த வாக்குறுதிக்கு அமைய,  நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்காக செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்.

அத்துடன்,  இதனையும் ஏனைய வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்த தெளிவான காலஎல்லை ஒன்றை வகுக்க வேண்டும். இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை, பேரவையைச் சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் கருதக் கூடாது. அதன் எல்லா மக்களுக்கும் உரிமைகளை வழங்குவதற்கான ஒரு அவசியமான கடமை இதுவாகும்.

அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, உலகளாவிய சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு