புத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும் : த ஜெயபாலன்


Poster_to_Move_Crematoriumசெப்ரம்பர் 09 2017இல் 60வது நாளாக கலைமதிக் கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றக்கோரும் போராட்டம் தொடர்கின்றது. இப்போராட்டத்தை புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி முன்னெடுத்து வருகின்றது. இக்கிராமத்தில் வாழ்பவர்கள் பள்ளர் சமூகத்தவர்கள். சிறுப்பிட்டி கிந்துசிட்டியில் உள்ள 200 வருட பழைமையான இம்மயானம் பெரும்பாலும் அங்குள்ளவர்களால் கைவிடப்பட்ட ஒரு மயானம். மக்கள் குடியிருப்புக்கள் உருவான பின்னர் இந்த மயானம் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கவில்லை. 2017 மார்ச் 8 இல் ஒரு உடலைத் தகனம் செய்ய முற்பட்ட போது ஆரம்பித்த பிரச்சினை தற்போது மிகப் பூதாகரமாக உருவெடுத்து உள்ளது. இது கிந்துசிட்டி மயானத்தையும் தாண்டி, ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவும் உருவாக்கி உள்ளது. மேலும் யாழ் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானங்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியையும் இப்போராட்டங்கள் எழுப்பி உள்ளது.

இம்மயானத்தை அகற்றுவதில் அங்குள்ள உயர்சாதியினரான வெள்ளாளருக்கு உடன்பாடில்லை. மேலும் படிமுறைச் சாதிமுறை என்பதால் ஒடுக்குமுறைக்கு உள்ளகுபவர்களும் கீழுள்ள சாதியினரை ஒடுக்குவதற்கு தயங்குவதில்லை. இப்படிநிலைச் சாதிமுறைமை உயர்சாதியினரான வெள்ளாளருக்கு மிக வசதியாக அமைந்துவிடுகிறது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தாமல் மயானத்திற்கு தொலைவில் உள்ள மயானத்தால் எவ்வித பாதிப்பையும் அனுபவிக்காத ஜனசக்தி கிராமத்தில் வாழும் பள்ளர் சமூகத்தை து}ண்டிவிட்டு, பிரித்தாளும் தந்திரத்துடன் இப்பிரச்சினையைக் கையாள்கின்றனர்.

‘இது ஒரு சாதிய முரண்பாடு அல்ல’ என்றும் ‘ஒரே சமூகத்திற்குள் உள்ளவர்களின் பிரச்சினை’ என்றும் இதனைத் தூண்டிவிட்ட வெள்ளாள சமூகமும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடமாகாண சபையும் நிறுவ முயலுகின்றுது. வடமாகாண சபையின் நிலைப்பாட்டையே அம்மாகாண சபையில் உள்ள ஒரே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியான பரஞ்சோதியும் எடுத்துள்ளார். அவர் இந்நிலைப்பாடை எடுத்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அந்நிலைப்பாட்டை எடுத்திருக்காவிட்டால் ‘சாதிப் புத்தியை காட்டிவிட்டான்’ என்ற அவமதிப்புக்கு அவர் ஆளாகிவிடுவார். இந்நிலை ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து உயர்நிலைக்கு செல்கின்றவர்களுக்கு ஏற்படுவது சகஜம்.

Yo_Karnanஇந்த நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தி மயானத்தை அகற்றுகின்ற போராட்டத்தை மழுங்கடிக்கும் கொச்சைப்படுத்தும் வகையில், யாழில் இருந்து வெளிவருகின்ற தீபம் பத்திரிகையின் ஆசிரியர் யோ கர்ணன் தமிழ் பக்கம் (Page Tamil) என்ற முகநூல் பக்கத்தில் பல புனைவுகளை அடிப்படை ஆதாரங்கள் இன்றி எழுதி உள்ளார். மயானத்தை அகற்றும் போராட்டத்தை முன்னெடுக்கின்ற புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் வட பிரதேச அமைப்பாளரும் கலைமதி கிராமத் தலைவருமான கார்திகேசு கதிர்காமநாதன் (செல்வம்) தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்டுவதற்காக இக்காணிகளை மோசடி செய்து தற்போது குடியிருப்பவர்களுக்கு 2004இல் விற்றதாக, யோ கோகர்ணன் எழுதியுள்ளார். ஆனால் அவர் கட்டுரையில் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. இக்கட்டுரையின் அடிப்படையில் அருண் அம்பலவாணர் மயானத்தை அகற்றும் போராட்டத்தை கேள்விக்கு உட்படுத்தி வருகின்றார்.

இத்தகவல்களின் அடிப்படையில் சிறுப்பிட்டி பொது அமைப்புகளின் ஒன்றியம் என்ற ஒரு அமைப்பும் இலத்திரனியல் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக, மார்க்ஸிய முகமூடிக்குள் ஒழிந்துகொண்டிருந்த யாழ் தமிழ் குறும்தேசிய சாதிமான்கள்; புலித்தேசிய வாதிகளோடு கைகோர்த்து தங்களை அறியாமலேயே பொதுப்புத்தியின் வழியில் தங்கள் முகமூடிகளைக் கிழித்துக்கொண்டு வந்து, தங்கள் சொந்த சாதிய முகத்தை காட்டி உள்ளனர்.

‘நாங்கள் சாதிபார்ப்பதில்லை’; ‘இப்போது சாதிப் பிரிவினைகள் இல்லை’; ‘சாதியத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் தான் சாதியை நிறுவ முயல்கின்றனர்’ போன்ற கருத்துக்களை மேற்குறிப்பிட்ட சாதிமான்கள் எழுதிவருகின்றனர் அல்லது மற்றையவர்கள் எழுதியதை சிலர் தங்கள் முகநூல் மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் பரப்பி வருகின்றனர். இன்னும் சிலர் தனிப்பட்ட முரண்பாடுகளுக்காக இந்த சாதிமான்களின் பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

மயானப் போராட்டம் தொடர்பாக எம் சந்திரகுமார்:

Chandrakumar_at_Cemetry_Protestமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் சந்திரகுமாரிடம் மயானப் போராட்டம் தொடர்பாக வினவிய போது, தான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன் கலைமதிக் கிராமத்தையும் மயானத்தையும் பார்வையிட்டதாகத் தெரிவித்தார். ‘கிந்துசிட்டி மயானத்திற்குப் பக்கத்திலேயே மக்கள் வாழ்கிறார்கள். எந்த நாகரீக சமூகமும் இதனை ஏற்றுக்கொள்ளாது. மயானம் அகற்றப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. வடமாகாண சபை இவ்விடயத்தில் துரிதமாகச் செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கிந்துசிட்டி மயானம் தொடர்பான போராட்டம் மட்டுமல்ல> சனத்தொகை அடர்த்தி மிக்க யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மயானங்களைச் சூழ குடியிருப்புகள் உருவாகி உள்ளது. இம்மயானங்கள் தொடர்பாகவும் வடமாகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் எம் சந்திரகுமார் தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

மயானத்தை அகற்றுவதற்கான போராட்டமும் காணிகள் விற்கப்பட்ட விடயமும் முற்றிலும் வெவ்வேறான காலகட்டங்களில் இடம்பெற்ற, முற்றிலும் மாறுபட்ட தளங்களில் வைத்து நோக்கப்பட வேண்டிய விடயங்கள். மயானத்தை அகற்றும் போராட்டம், அங்கு காணிகளை வாங்கி வாழ்விடங்களை அமைத்து கடந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கின்ற; வரலாற்று காலம் முதல் ஒடுக்கப்பட்ட சமூகம்@ தங்கள் சொந்த மண்ணில் கெளரவத்துடன் சுகாதாரத்துடன் வாழ்வது தொடர்பானது.

ஆனால் காணி விற்கப்பட்ட விடயம் முற்றிலும் சட்டம் – விதிமுறைகள் – நீதி ஆளுகைக்கு உட்பட்டது. அதில் யாராவது சட்டத்துக்கு புறம்பாக விதிமுறைகளுக்குப் புறம்பாக செயற்பட்டு இருந்தால் அவரைக் கையாள்வதற்கு அரசும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கட்டமைப்பும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து மோசடியில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் போராடியிருக்கவும் முடியும்.

ஆனால் யோ கர்ணனின் எழுத்துக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் இருந்து எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. நீதிக் கண்ணைத் திறந்து எழுதுவதற்கு மாறாக சாதிக் கண்ணைத் திறந்து எழுதி உள்ளாரோ என்ற சந்தேகத்தையே அவருடைய எழுத்துக்கள் காட்டுகின்றது.

யோ கர்ணன் தமிழ் பேஜ்ஜில் எழுதியதை ‘நடுநிலையான உண்மைகாண் குழுவின் விசாரணை’ என்று முகநூலில் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்) சான்றிதழ் வேறு கொடுத்து கெளரவிக்கின்றார். யோ கர்ணன் யார்? அவர் ஏன் இதை எழுதியுள்ளார்? என்பதை ஆராய்வதற்கு முன் அவர் எழுதிய ‘உண்மை’ எவ்வளவு உண்மையானது என்பதனை தேசம்நெற் அறிய வரும்பி ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் ஆய்ந்தறிந்த விடயங்கள்:

கைவிடப்பட்ட மயானம்:

Crematorium_Sirupidyஇந்த மயானம் பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்ததாக அப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேசம்நெற் க்கு தெரிவித்தனர். இதனை யோ கர்ணன் வெளியிட்ட புள்ளிவிபரங்களும் எடுத்துக் காட்டுகின்றது. யூன் 24 2015இல் ஒருவரது உடல் தகனம் செய்யப்பட்டு உள்ளது. அதன் பின் ஓராண்டு காலம் அங்கு தகனம் நடைபெறவில்லை. ஓராண்டுக்குப் பின் 2016 யூலையில் மூவரது உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் மார்ச் 08 2017இல் ஜனசக்தி கிராமத் தலைவர் மாணிக்கத்தின் சகோதரியின் உடல் இம்மயானத்தில் தகனம் செய்ய முற்பட்ட போது அது தடுக்கப்பட்டது. இச்சுற்று வட்டாரத்தில் வேறு மயானங்களும் இருப்பதால் இம்மயானம் பெரும்பாலும் பயன்பாட்டிலில்லை.

இம்மயானத்தை தற்போது புதிதாகக் கட்டமைக்க திட்டமிடுவது அப்பகுதி மக்களின் நலன்களுக்கு முற்றிலும் முரணானது. கைவிடப்படும் நிலையில் இருக்கும் மயானத்தை அங்குள்ள குடிகளின் விரப்புக்கு மாறாக தொடர்ச்சியாக வைத்திருக்க எண்ணுவது ஆதிக்க மனோபாவமே.

பிரித்தாளும் தந்திரம்:

ஒரே சமூகத்தைச் சேர்ந்த கலைமதி கிராமத்தின் தலைவருக்கும் ஜனசக்தி கிராமத்தின் தலைவருக்கும்; உள்ள பிரச்சினையை வைத்து அப்பிரதேச உயர்சாதியினர் மயானப் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக்க முற்பட்டமையின் விளைவே மார்ச் 08 2017இல் மாணிக்கத்தின் சகோதரியின் உடல் தகனம் செய்ய அனுமதிக்கப்படாமையும் அதனையொட்டி எழுந்த பிரச்சினைகளும் எதிர்ப்பும். இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தி சாதிமான்கள் அனைவருமே, ‘இது ஒரு சாதிய பிரச்சினையில்லை’, ‘இது வெறும் குடும்பப் பிரச்சினை’; ‘ஒரே சாதியினருக்குள் உள்ள பிரச்சினை’; ‘இது மயானப் பிரச்சினையே இல்லை காணி மோசடி’ என்றெல்லாம் கதைகளைப் புனைகின்றனர். இதற்கு குறும் தமிழ்தேசியத்தில் குளிர்காயும் எமது முகநூல் மார்க்ஸிற்றுக்களும் முகநூல் தோழர்களும் கூட விதிவிலக்கல்ல.

2010 டிசம்பரில் ருனிசியாவில் ஒரு தள்ளுவண்டி பழ – மரக்கறி வியாபரியிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்ட போது அவர் லஞசம் கொடுக்க மறுக்க, ஒரு பெண் அதிகாரி அவ்வியாபாரி மீது துப்பி அவமதித்தார். அந்த வியாபாரியின் பொருட்களையும் நிறுவை அலகையும் அதிகாரிகள் கைப்பற்றிச் செல்ல@ அந்த வியாபாரி ஆளுனர் மாளிகைக்கு நீதி கேட்கச் சென்றார். ஆளுநர் அந்த ஏழை வியாபாரியை சந்திக்க வரவில்லை. 26 வயதான அந்த மொகமட் பெளச்சி என்ற பழ – மரக்கறி வியாபாரி பெற்றோலை ஊற்றி தீக்குளித்து இறந்தார். இதுவே ருனிசியாவின் எல்லையையும் தாண்டி அரபுலகப் புரட்சியானது. அப்புரட்சியின் தாக்கத்தால் ருனிசியா, எகிப்து, லிபியா, யேமனில் அதிகாரத்திலிருந்து சர்வதிகாரிகள் தூக்கி எறியப்பட்டனர்.

அப் பழ – மரக்கறி வியாபாரியின் தீக்குளிப்பை யாரும் தனிப்பட்ட சம்பவமாக கருதவில்லை. லஞ்சம் ஊழலுக்கு எதிரான பிரச்சினையாகக் கருதவில்லை. மாறாக அரபுலகில் மலிந்துபோன அரச ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவே அது மாறியது. அவ்வாறே இது பார்க்கப்பட்டது.

கிந்துசிட்டி மயான எதிர்ப்புப் போராட்டத்தை மாணிக்கத்திற்கும் கதிர்காமநாதனுக்கும் இடையிலான குடும்ப பகைமையாகக் காட்டுவது மிக அபத்தமான ஊடகவியல் தர்மம். இப்போராட்டமானது கிந்துசிட்டி மயான எதிர்ப்புப் போராட்டம் என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமாக மாறியுள்ளது. அதனாலேயே அறுபது நாட்களையும் தாண்டி போராட்டம் தொடர்கிறது.

போராட்டம் பற்றிய மொழிபெயர்ப்பு:

Page_Tamil_Cemetry_Issueபொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த ஜரோப்பிய நாடுகளிலேயே போராட்டம் என்று வந்தால் மட்டுப்படுத்தப்பட்ட வன்முறைகள் வெளிப்படுவது இயல்பே. இதற்கு ஒரு தொகை உதாரணங்கள் உள்ளது. அப்படி இருக்கையில் வரலாறறிந்த காலம் முதல் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகம் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது; அப்போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை மீறுவது, மட்டுப்படுத்தப்பட்ட வன்முறைகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. மாணவி வித்தியாவின் கொடூரமான முடிவைக் கண்டு கொந்தளித்த பலர் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்து நீதிமன்றத்தை சேதப்படுத்தினர். இது தொடர்பாக பல பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் யோ கர்ணன் உட்பட்ட இந்த சாதிமான்கள் மயானப் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய ஜனநாயகக் மார்க்ஸிச லெனினசக் கட்சியையும் அதன் முன்னணி உறுப்பினர்களான சி கா செந்திவேல்> கார்த்திகேசு கதிர்காமநாதன் ஆகியோரை வன்முறைக்கும்பல்> வாள்வெட்டுக் குழுவினர்> வன்முறையாளர்கள் என்று தங்கள் புனைவுக்கு ஏற்ப மொழிபெயர்த்துள்ளனர்.

இம்மயானப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில்  பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் தலித் முன்னணி உதவிகளை வழங்குவதுடன் இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது.

மனச்சாட்சியை தொட்டு கேளுங்கள்

யோ கர்ணன் 2009 இன் பின் மகிந்த ராஜபக்சவின் கோடியில் இருந்த அரச மரத்தின் கீழ் அமர்ந்து வன்முறையைத் துறக்கும் வரை; புதிய ஜனநாயக மார்க்ஸிய லெனினிசக் கட்சியின் தலைவர் சி கா செந்திவேல் போன்றவர்கள் யோ கர்ணன் போன்றவர்களால் (அவர் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளால்) கொல்லப்படலாம் என்ற நிலை இருந்தது. ஆனாலும் அவர்கள் அன்றும் ஒடுக்கப்பட்ட மக்களோடு நின்று போராடினார்கள். இன்றும் ஒடுக்கப்படும் மக்களோடு நின்று போராடுகிறார்கள். ஆனால் யோ கர்ணனும் அவரது இந்த சாதிய எழுத்துக்களைக் கொண்டாடுபவர்களும் ஒருபோதும் ஒடுக்கப்படும் மக்களோடு ஒருநாளாவது நேரத்தை செலவிட்டிருப்பார்களா? என்ற சந்தேகத்தை அவர்களுடைய எழுத்துக்களே எடுத்துக் காட்டுகிறது.

துப்பாக்கியும் கொலையும் வன்முறைக்குள் அடங்காது என்று யோ கர்ணன் கருதுகிறாரோ தெரியவில்லை. யோ கர்ணன் மற்றையவர்களை அதுவும் ஒடுக்கப்படும் சமூகத்தோடு நின்று போராடுபவர்களை வன்முறைக்கும்பல், வாள்வெட்டுக் குழுவினர், வன்முறையாளர்கள் என்று குற்றம்சாட்டும் போது தனது மனச்சாட்சியை தொட்டு அந்த தகுதி அவருக்கு இருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்புவது நன்று.

லிங்கநகரும் – கலைமதி கிராமமும் – குடியேற்றம்:

கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மக்கள் குடியேற்றப்பட்டுது பற்றி அருண் அம்பலவாணர் எனது முகநூலில் தொடுப்பிட்டதும் எனக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வந்தவிடயம் திருகோணமலை லிங்க நகரில் உள்ள குடியிருப்பு. திருகோணமலை நகருக்கு அண்மையாக இருந்த லிங்க நகர் குடியிருப்பு காணி முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமாக இருந்து அவரது குடும்பம் விபத்து ஒன்றில் இறந்துபோக எப்படியோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தலைவர் இரா சம்பந்தன் ஐயாவின் குடும்பச் சொத்தாகியது.

அக்காணியில் 1987இல் இந்திய சமாதானப் படையினர் வரும்வரை சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர். இந்திய சமாதானப் படையினரின் உதவியோடு ஈபிஆர்எல்எப் சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது முன்னாள் வட – கிழக்கு இணைந்த மாகாணசபையின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் சந்திரகுமார் லிங்க நகரில் இருந்த காணிகளை சிங்கள மக்களிடம் இருந்து தமிழ் மக்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தி, வாங்கவும் வைத்தார். இதன் மூலம் மீண்டும் சிங்களவர்கள் அப்பகுதியில் குடியேறவிடாமல் தடுத்தார். அக்காணியில் தற்போது 60 தமிழ் குடும்பங்கள், வீடுகளைக் கட்டி ஓரு தலைமுறையினர் வாழ்ந்துள்ளனர். 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தபின் அடி உறுதி தன்னிடம் இருப்பதாகவும்; பேர்ச்சுக்கு 25,000 ரூபாய் செலுத்துமாறும்; தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும்; அங்கிருந்த குடியிருப்பாளர்களை அவர் மிரட்டினார். (இது பற்றிய கட்டுரைகளின் இணைப்புகள் கருத்துக்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.)

யாழ் கலைமதி கிராமத்திலும் காணிகளற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் காணிகள் வந்த போது அதனை அந்த மக்கள் வாங்குவதை கார்த்திகேசு கதிர்காமநாதன் (செல்வம்) ஊக்குவித்து உள்ளார். அருகில் மயானம் இருந்த போதும் காலாகாலமாக காணிகளற்று கூலி அடிமைகளாக வாழ்ந்த மக்கள், தாங்களும் சொந்தக் காணியில் குடியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களது இயலுமைக்கு ஏற்ப, மயானத்திற்கு அருகில் வாழ ஆரம்பித்தனர். எதிர்காலத்தில் அக்காணிகளில் அவர்களுடைய அடுத்த தலைமுறையினர் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகின்றனர்.

Karunakaran_Sivarasa‘மயனங்களுக்கு பக்கத்தால் செல்வதையே தவிர்ப்பது தமிழ் சமூக வழக்கம். அப்படி இருக்கையில் மயானங்களுக்கு அருகில் தங்கள் குடியிருப்பை அம்மக்கள் விரும்பி அமைத்துக்கொள்ளவில்லை என்ற பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மக்கள் மயானத்திற்கு அண்மையில் வாழ சமூக நிர்ப்பந்தமே காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்று எழுத்தாளர் சிவராசா கருணாகரன் தேசம் நெற்க்குத் தெரிவித்தார்.

2004இல் 5000 ரூபாய்க்கு காணியை வாங்கி, 2008 இல் 25000 ரூபாய்க்கு விற்றதாக யோ கர்ணன் தமிழ் பேஜ் முகநூலில் குற்றம்சாட்டி இருந்தார். இதனை சிறுப்பிட்டி பொதுமக்களின் ஒன்றியம் என்ற பெயரில் மீள்பிரசுரம் செய்த போது ஆதாரமாக ஆவணப் பத்திரங்கள் சிலவும் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆவணங்கள் எதிலும் கார்த்திகேசு கதிர்காமநாதன் (செல்வம்) என்ற பெயர் இருக்கவில்லை. இந்த ஆதாரமற்ற தன்மையை மறைக்க செல்வம் குழுவினர், செல்வத்துக்கு நெருக்கமானவர், செல்வத்தின் மாமனாரின் நண்பர் போன்ற பதங்களைப் பாவித்து உள்ளனர்.

2003 இல் 5000 ரூபாய்க்கு வாங்கிய காணியயை ஐந்து ஆண்டுகளின் பின் 25000 ரூபாய்க்கு விற்றிருந்தால் கூட அதில் ஒன்றும் பாரிய தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. லாபம் ஈட்டுவது தவறு என்றால் இன்றைய உலகமே ஸ்தம்பித்துவிடும். காணி என்பது முக்கியமான ஒரு உற்பத்தி சாதனம். அதனை ஒடுக்கப்பட்ட கலைமதிக் கிராம மக்களும் கொண்டிருக்கின்றனர் என்பது வரவேற்கப்பட வேண்டியதே. அப்பகுதியில் இருந்து அந்த மயானத்தை அகற்றினால் அக்காணிகளின் விலை இன்னும் இரண்டு மடங்கு மூன்று மடங்காக உயரும். அந்த லாபத்தை அம்மக்கள் அனுபவிக்கட்டுமே. அதிலென்ன இந்த சாதிமான்களுக்கெல்லாம் அவ்வளவு பொறாமை?

சம்பந்தன் செய்தால் சாணக்கியம் பள்ளர் செய்தால் களவு மோசடி:

Sampanthan, leader of the political proxy of the Tamil Tigers, the Tamil National Alliance, addresses reporters during a media conference in Colomboதங்களுடைய சாதிய தளைகளை உடைத்து தாங்கள் முன்னுக்கு வர முயலுகின்ற போது@ அணி சேர்ந்து போராட முற்படுகின்ற போது; அத்தனை சாதிமான்களும், அவர்கள் கூட்டமைப்பு என்றால் என்ற கூட்டணி என்றால் என்ன முகநூல் தோழர்கள் என்றால் என்ன முகநூல் மார்க்ஸிட்டுகள் என்றால் என்ன எல்லோரும் கூட்டுச்சேர்ந்து விடுவார்கள். ஆனால் இவர்கள் இதுவரைை எத்தனை உயர்சாதி மோசடியாளர்களை அம்பலப்படுத்தி உள்ளனர். ஏன் இவர்களுக்கு கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் பணப்பெட்டி வாங்கியது தெரியவில்லை?; வட மாகாண அமைச்சர்கள் பகல் கொள்ளை அடிப்பது தெரியவில்லை?; முதலமைச்சர் யாழில் பல லட்சம் வீட்டு வாடகைக்கு செலுத்துவது தெரியவில்லை?; சம்பூரைப் பறிகொடுத்துவிட்டு டெல்லியில் இரா சம்பந்தன் ஐயா இலவச மருத்துவ சிகிச்சை பெற்றது தெரியவில்லை?; இரா சம்பந்தன் ஐயாவின் லிங்கநகர் காணி மோசடி தெரியவில்லை?; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குடும்பம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தது தெரியவில்லை?; கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சொத்து விபரமும் தெரியவில்லை?.

சரி அதெல்லாம் போகட்டும் யோ கர்ணன் ஆசிரியராக இருக்கும் தீபம் பத்திரிகை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் நிதியில் இயங்குவதாவது அவருக்கு தெரியுமா? பரப்பு 25000 ரூபாய்க்கு விற்கப்பட்டதற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் சாதிமான்கள் இரா சம்பந்தன் ஐயா பேர்ச்சுக்கு (பரப்பின் 10இல் ஒரு பகுதி) 25000 ரூபாய் கேட்கும் போது ஏன் மெளனமாக நிற்கிறார்கள். உண்மைகாண் கள ஆய்வு புலன்விசாரணை ஒன்றும் இதற்கு இல்லையா? ஏன் எம் ஏ சுமந்திரன் உங்கள் வேலைக்கு உலை வைத்துவிடுவார் என்று பயமா?

புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிசக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்று சொத்துக்களைக் கொண்ட கட்சியோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள் போல் உலகம் முழுக்க பறந்து சென்று பணம் சேர்க்கும் பலம் கொண்ட, கோடிகள் புரளுகின்ற கட்சியோ அல்ல. அவர்களிடம் அமைச்சர்களும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை. அவர்களோடு நிற்பது ஒடுக்கப்பட்ட மக்களே. ‘இளகிய இரும்பு என்றால் கொல்லன் ஓங்கி அடிப்பான்’ என்று ஒரு சாதியப் பழமொழி உண்டு உண்மையில் இந்த சாதிமான்கள் அதனைத் தான் இங்கு செய்துள்ளனர்.

இதுவரை கார்த்திகேசு கதிர்காமநாதன் (செல்வம்) தங்களை ஏமாற்றி காணிகளை விற்றுவிட்டார் என்று கலைமதி கிராமத்தவர்கள் யாரும் முறையிடவும் இல்லை. அவருக்கு எதிராகப் போராடவும் இல்லை. யோ கர்ணன் தன்னுடைய ‘உண்மைகாண்’ எழுத்தில் கார்த்திகேசு கதிர்காமநாதன் (செல்வம்) மோசடியில் ஈடுபட்டதற்கான எவ்வித ஆதாரத்தையும் வைக்கவும் இல்லை. ‘செல்வத்திற்கு தெரிந்தவர்’ ‘செல்வத்தின் மாமனாருக்கு தெரிந்தவர்’ என்று தான் இந்த யோ கர்ணனின் ‘உண்மைகாண் கள ஆய்வு’ கதையளக்கிறது. யோ கர்ணன் சென்றவருடம் தீபம் பத்திரிகையில், போராளிகளுக்கு தடுப்பு முகாமில் எய்ட்ஸ் நோய் கிருமி ஏற்றப்பட்டதாகவும் அதனால் மரணங்கள் சம்பவிப்பதாகவும் முற்பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலையங்கம் போட்டு பரபரப்பு காட்டிவிட்டு உள்ளே, இது பொய்யாக இருந்தால் அது அரசுக்கு சாதகமாகிவிடும் என்று சின்னதாக சடைந்திருந்தார். இவருடைய உண்மைகாண் கள ஆய்வு இப்படித்தான் இருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2009இல் முள்ளிவாய்காலில் தங்கள் ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த காணி விற்பனை இடம்பெற்று; மக்கள் குடியேறினர். அந்தக் காலகட்டத்திலேயே மயானத்தில் தான் அந்த சமூகத்துக்கு காணியை வாங்க இயலுமை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் 2009இல் ஆயுதங்களை மெளனித்த பின் புலம்பெயர்ந்த யாழ் மேட்டுக்குடியினர் எல்லோரும் யாழ்ப்பாணம் சென்று காணிகளை வாங்கி, அங்கு வாழும் மக்களுக்கு காணிகளை வாங்க இயலாவரையில் விலைகளை உயர்த்தி விட்டுள்ளனர். மேலும் தாங்கள் வாழும் நல்ல பண்பட்ட நிலமும் நல்ல தண்ணிக் கிணறும் உள்ள காணிகளை உயர்சாதியினர் ஒரு போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விற்கமாட்டார்கள். இதன் கூட்டு விளைவு ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மயானங்களை நோக்கியும் கழிவுகொட்டும் இடங்களை நோக்கியும் தள்ளப்பட்டுக் கொண்டுள்ளனர்.

யோ கர்ணன் இப்பதிவை எழுதியதன் பின்னணி:

இப்பதிவு திட்டமிட்ட முறையில் புதிய ஜனநாயகக் மார்க்ஸிச லெனினிசக் கட்சிக்கு எதிராக திருப்பப்படக் காரணம் நட்பும் உறவும் மட்டுமே. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினசக் கட்சியில் இருந்து வெளியேறிய என் ரவீந்திரனும் யோ கர்ணனும் குடும்ப நண்பர்கள். கட்சியின் தலைமை தனக்கு வரவில்லை என்ற அதிருப்தி அவருக்கு இருந்ததாக பொதுவெளியில் அபிப்பிராயம் உண்டு. யோ கர்ணனின் புனைவுகளுக்கு இப்பின்னணியும் இருந்துள்ளதாக ந ரவீந்திரனின் நண்பரும் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியில் இப்போதும் உறுப்பினராக உள்ள ஓருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

மயானப் போராட்டம் தொடர்பாக சி கா செந்திவேல்:

Senthiveel_Si_Kaகிந்துசிட்டி மயானக் காணிகளை மோசடியாக விற்றதில் கட்சியில் வட பிரதேச அமைப்பாளர் செல்வத்துக்கு சம்பந்தம் உள்ளதா என புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் தலைவர் சி கா செந்திவேல் யைத் தேசம்நெற் செப்ரம்பர் 09 2017 அன்று தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘அது முற்றிலும் ஆதாரமற்ற மோசமான பிரச்சாரம்’ என்று தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘செல்வம் போன்றவர்கள் அந்த மக்களோடு வாழ்பவர்கள். அந்தக் கிராமத்தின் தலைவராகவும் உள்ளார். அந்த மக்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைத்து வருபவர். அந்த மக்கள் காணிகளை வாங்குவதற்கு அவர்களுக்கு உதவி உள்ளார். ஆனால் அவர் நிதி கையாடினார். மோசடி செய்தார் என்பதில் எந்த உண்மையும் இல்லை’ எனத் தெரிவித்தார். ‘கட்சியோ செல்வமோ மோசடியில் ஈடுபட்டால் அறுபது நாளாக நடைபெறும் போராட்டத்தில் எப்படி மக்கள் தொடர்ந்தும் கலந்துகொள்கிறார்கள். மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைக்கிறார்களா?’ என்றும் சி கா செந்திவேல் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் கூட்டம் தங்களுக்கு நீதி கேட்டு போராடுகின்ற போது அம்மக்கள் மீதும் அப்போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீதும் மட்டும் தூய்மைவாதத்தை தூக்கி வைத்து அப்போராட்டத்தை மழுங்கடிப்பதும் கொச்சைப்படுத்துவதும் சாதிமான்களின் ஆதிக்க குணாம்சமே என்றால் அது மிகையல்ல.

._._._._._.

அடிமை விலங்கறுப்போம் – அதில்
ஆயுதங்கள் செய்திடுவோம்.
கொடுமை மிக மலர்ந்த இக்
குவியத்தை மாற்றிடுவோம்.

எம் சி சுப்பிரமணியம் (20 யூன் 1984, ஈழநாடு வாரமலர்)

உங்கள் கருத்து
 1. Arun Ambalavanar on September 14, 2017 10:19 am

  புத்தூர் கலைமதி மயானப்பிரச்சனை: அடிப்படை உண்மைகள்.

  இந்தப்போராட்டத்தை தொடங்கியவர்கள் இந்துசிட்டி மயானத்தை சூழவுள்ள காணிகள் விற்று இலாபமீட்டிய real estate காணிதரகரும் புதிய சனநாயகக்கட்சி யாழ் அமைப்பாளருமாகிய செல்வமும் அவரது கட்சியும்தான். புத்திசாதுரியமாக அவர்கள் சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு என்ற பினாமி அமைப்பை தொடங்கி சமூகவலைத்தளங்களில் பிரபலமானார்கள்.

  இப்பிரச்சனை பற்றி எந்தவொரு நடுநிலையான உண்மைகாண் குழுவும் கள ஆய்வு செய்யவில்லை. இப்பிரச்சனை பற்றி Page tamil பத்திரிகையாளர்கள் செய்த விசாரணைதான் இப்போராட்டத்திலுள்ள மோசடிகளை அநியாயங்களை முதலில் வெளிக்கொணர்ந்தது. இவ்விசாரணையை எதிர்ப்பவர்கள் தாங்கள் ஒரு நடுநிலையான உண்மைகாண் கள ஆய்வுக்குழுவை அமைத்து ஆய்வறிக்கையை கொணரவேணுமே தவிர Page Tamil அறிக்கையை ஆதிக்க சாதியினரானதாக ஆதரமற்று குற்றஞ்சாட்டுவதாலல்ல.

  தேசம்நெற் ஆசிரியர் page Tamil பத்திரிகையில் வந்த விசாரணையை புனைகதை என்று ஒற்றை வரியில் ஒதுக்கிச்செல்வது எந்தவித அடிப்படை பதாதிரிகை அறமுமற்ற மோசடித்தனமான பத்திரிகா தர்மம். ஜெயபாலன் புத்தூருக்குப்போய் சம்பந்தப்பட்ட பலதரப்பினரையும் சந்தித்து கள ஆய்வு செய்யவில்லை. இப்போராட்டத்தை சுயநலநோக்கோடு நடத்துகிறவர்களையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையுமே பேட்டிகண்டு ஒருதலைப்பட்சமாக அவர்களின் Agenda, Bias க்கு பலியாகி ஜெயபாலன் தன்பெயரைக்கெடுத்து எழுதிய கட்டுரையே இது. செல்வத்தினதும் அவர் வன்முறை நடவடிக்கைகளுக்குமாக வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது அவர்களை வாழ்வெட்டுக்குழுவினர் என்று Page Tamil எழுதியதில் தவறேதுமில்லை. செல்வம் குழுவினர் மதிலை உடைக்கவில்லை. வாழைத்தோட்டத்தை சீரளிக்கவில்லை. விதானையாரை மிரட்டவில்லை. மதில் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளியை இரத்தம் வர தாக்கவில்லை. என்பவற்றை ஜெயபாலன் நிரூபிக்க தயாரா? அதைச்செய்யமுடியாதபோது page tamil அறிக்கை புனைகதை என்று ஒதுக்குவது மோசடியான பத்திரிகை எழுத்து.

  ஜெயபாலனின் பிரச்சனை என்னவென்றால் அவரால் தகவலாளர்கள் தரும் “தகவல்களை” அவர் மதிப்பிட்டு உண்மை காணமூடியாமல் இருப்பதே. அவருக்கு நெருக்கமாக இருக்கும் யார் அவருக்கு முதலில் தகவல் கொடுக்கிறார்களோ அவர்களின் ‘தகவலுக்கு’ biased ஆகவே ஜெயபாலனின் கட்டுரைகள் இருக்கும். ரகூமான் ஜானுக்கு நெருக்கமானவர் ஜெயபாலன். அவரின் தேடகம் அமைப்பு குழப்படிகள் நிறைந்தது. புலிகளால் தேடகம் எரிக்கப்பட்ட பின்னும் தேடகத்தினர் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்தவர்கள். தேடக கோணேஸ் கொடுத்த முற்சார்பான தகவல்களின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

  அனந்தி சசிதரன் ஜெயபாலனின் குடும்ப நண்பி. சசிதரன் பிற்போக்கு அரசியல் செய்யும்போதும் ஜெயபாலன் அவருக்கு சார்பாகவே எழுதிவருகிறார். முன்னதாக உடுவில் கல்லூரி அதிபர் பிரச்சனையிலும் ஜெயபாலன் சுமந்திரனுக்கும் போதகர் தியாகராசாவுக்கும் ஆதரவான நிலைப்பாடே எடுத்தார். ஜெயபாலன் தேடகத்துக்கும் செந்தில்வேலுக்கும் அவர்களுக்கு புலிகளால் உயிரச்சம் இருந்தது என்று நற்சான்றிதழ் வழங்குகிறார். செந்திலும் செந்திலின் போசகர் சிவசேகரமும் புலிகளின்காலத்தில் புலிகளை நியாயப்படுத்தி பச்சோந்திகளாக இருந்தார்கள் என்பது ஜெயபாலனுக்கு தெரியாதா? இக்கட்டுரையை இப்போராட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவாளர் கோணேஸ் சொல்ல ஜெயபாலன் அதனை கிளிப்பிள்ளைபோல ஒப்புவித்திருகிறார் என்பதே உண்மை.

  பிரச்சனையை ஆழ அலசி விளங்கிக்கொள்ளவேண்டும். புத்தூர் மயானப்பிரச்சனையை ஆதிக்க சாதியினருக்கும் தலித்தினருக்குமிடையிலான எளிய கறுப்பு வெள்ளை பிரச்சனையல்ல.

  மயானத்தை சுற்றி மயானத்துக்கருகிலுள்ள காணிகள் மக்களுக்கு மகிந்த காலத்தில் இலவசமாக வழங்கப்பட தனது EPDP தொடர்புகளால் காரணமாக இருந்தவர் புதிய சனநாயக கட்சி யாழ் அமைப்பாளர் செல்வம்தான். இவ் இலவச காணிகளுக்கும் மக்களிடமிருந்து செல்வம் பணம்பெற்றார் என்று முகநூலில் Sivan Siruppidy சொல்கிறார். செல்வம்தான் மயானத்தின் மற்ற பக்கத்திலுள்ள தனியாரின் 72 பரப்பு காணிகளை விலைக்குவாங்கி அதில் 40 பரப்பு காணியை கொள்ளை இலாபம் வைத்து தனது சக தலித் சாதியினருக்கு மயானம் விரைவில் அகற்றப்படும் என்று போலி வாக்குறுதி வழங்கி விற்கிறார். இதைவிட கள்ள உறுதியில் மோசடியாக மயான அருகிலுள்ள காணியையும் விற்றுள்ளார். இப்போது இவரின் இலாபமீட்டும் real estate மோசடித்திட்டம் மிக கவனமாக ஆயப்பட்டு நன்கு அரங்கேற்றப்பட்டது புரிகிறதல்லவா? இவரின் காரணமாக மயானத்துக்கு மிக அருகிலுள்ள அதனால் வசிப்பதற்கு உவப்பற்ற நிலங்களை வாங்கியவர்கள்தான் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இலங்கையில் கிராமசபைகள் சரியாக தொழிற்பட்டிருந்தால் மயானத்துக்கு எவ்வளவு தூரத்தில் குடிமனைகள் இருக்கவேண்டும் என்ற அடிப்படையான சட்டம் பின்பற்றப்பட்டிருந்தால் அமுலிலிருந்திருந்தால் இந்த அவலம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு மயானத்தை அகற்றவேண்டும் என்று எதிர்ப்பவர்கள் செல்வத்தின் இந்த real estate ambitions க்கு பலிகடாக்களாக்கப்பட்ட சக தலித்தினரே. மயானம் இருக்கவேண்டும் இதில்தான் என் அம்மா எரிக்கப்படவேண்டும் என்று சர்ச்சை வந்து நீதிமன்றுவரை போனதும் செல்வத்தின் உறவினர் ஒருவர்தான். இச்சக குழுவை வன்முறையைப்பயன்படுத்தி தாக்கி வருபவரும் செல்வம்தான். இப்பிரச்சனையில் இதே மயானத்தில் எரிக்கும் ஆதிக்க சாதியினரை காரணமாக காட்டுவது அனைத்து உலகப்போர்களுக்கும் யூதர்களை காரணமாக காட்டும் நவ நாசி பிரச்சாரத்துக்கொப்பானது.

  அனைத்து குடிசனங்களுக்கருகிலுள்ள மயானங்களுக்கெதிரான போராட்டமாக இது செய்யப்படுவதாக பூச்சாண்டி காட்டப்பட்டாலும் யாழிலுள்ள பல சமூக நீதி அமைக்களோ இடதுசாரி இயக்கங்களோ தொழிற்சங்களோ மாணவர் அமைப்புகளோ பெண் அமைப்புக்களின் கூட்டமைப்பு அன்றி தனியே புதிய சனநாயகக்கட்சியினாலேயே முன்னெடுக்கப்படுகிறது. சமகால யாழில் இவ்வாறான ஒரு போராட்டத்திற்கு ஆதரவு அதிகம் இருக்கின்றபோதும் புதிய சனநாயகக்கட்சி இலகுவாக அமைக்கக்கூடிய ஒரு முற்போக்கான கூட்டணியை அமைக்காது போனதே இப்போராட்டமே ஒரு குறுகிய கட்சிசார் நலன்களையும் மோசடியையும் அடிப்படையாகவைத்து தொடங்கப்பட்டது என்பதாலேயே.

  இப்போராட்டத்தின் அடிப்படை அறம் மற்றும் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்துகிற என்னையும் Yo Karnan ஐயும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாலேயே இப்போராட்டத்தை நியாயப்படுத்தலாம் என்று Annam Sinthu Jeevamuraly Nirmala Rajasingam Theva Thasan போன்ற முகநூல் so called கலகக்காரர்கள் நினைக்கிறார்கள். புலிகள் மற்ற இயக்கங்களை இந்திய அரசினதும் உளவுத்துறையினரதும் பொம்மைகளாக சித்தரித்ததற்கு ஒப்பானது இது. இப்போராட்டம் பற்றிய புதிய சனநாயகக்கட்சியின் கதையை(Narrative) விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளுகிற அகிலன் கதிர்காமரை விமர்சித்ததும் அவரது உறவினரான Nirmala என்னையும் Page tamil அறிக்கையையும் மோசமாக எள்ளி நகையாடுகிறார். சமகாலத்தவர்களான Nirmala ஐயும் Marx Anthonisamy ஐயும் ஒப்பிட்டுப்பாருங்கள். Marx இலங்கையில் இன்று இருந்திருந்தால் ஒரு குழுவோடுபோய் இப்பிரச்சனை பற்றி பலதரப்பினரையும் சந்தித்து கள ஆய்வு செய்திருப்பார்.

  Nirmala இன்றுவரையும் ஒரு கள ஆய்வு செய்திருக்கிறாரா? சரி சொந்தமாக ஒரு புத்தகமாவது எழுதியிருக்கிறாரா? அநீதியை எதிர்த்துப்போராடுகிற வன்முறையற்ற வெகுசனப்போராட்டங்கள் நியாயமானவையாகவும் சரியான முறைகளை பின்பற்றுபவர்களாகவும் இருக்கவேண்டும். இப்போராட்டங்களில் மோசடிகளும் குறுகிய கட்சி வியாபார நலன்களும் இருந்தால் ஆதிக்க சாதி வெறியர்கள் இதனை காரணமாக காட்டியே இப்போராட்டங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர்களின் ஆதரவை இதற்கு எதிரானதாக ஆக்கலாம்.

  சமகால இலங்கைபோன்ற சனநாயக நாடுகளில் வன்முறையற்ற வெகுசனப்போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படையான நெறிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். சமூகவலைத்தளங்களில் ஊரைக்கூட்டி சீனை(scene)ப்போட்டு தோற்றபோராட்டத்திற்கு கஜேந்திரகுமார் அன் கோ 2015 தேர்தலில் “வென்றது” உதாரணம். நீதித்துறை, பத்திரிகைகள் மயானத்தின் தலித் மற்றும் தலித் அல்லா பங்காளிகள் என அனைவரும் சேர்ந்து கலந்து பங்குபற்றி விட்டுக்கொடுத்துத்தான் தீர்வு காணலாம். இடதுசாரிகள் என்று சொல்பவர்களுக்கு யாரும் நிபந்தனையற்ற விமர்சனமற்ற Automatic ஆதரவு வழங்கமுடியாது. ஸ்ராலினிய கொள்கைகளின் விளைவாக கொல்லப்பட்ட சோவியத் குடியரசுகால குடியானவர்கள் மற்றும் குலாக் மக்கள் நல்ல உதாரணம். தலித்தினரே தமக்குகீழுள்ளோரை ஒடுக்குவது யாழ் சமகால உதாரணம்.

  Annam Sinthu jeevamurali யாழின் இன்னொரு அகிலன் (கவிஞர்) மயானங்களை தொன்மமுக்கியத்துவமாக அறிவிக்கவேண்டுமென்பதை மலினமாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அழித்த பழைய புத்த சிலைகளைப்போல அதே றேன்ஞ்சுக்கு போய் தாக்குகிறார். Heritage listed மயானங்கள் எரிக்காது பயன்படுத்தப்படாது இருக்கலாம் என்பது பயன்படுத்தப்படாத பழைய தேவாலயங்களைப்போல இருக்கலாம் என்பது அவருக்கு தெரியாததல்ல. பிரச்சனை என்னவென்றால் இவர்கள் போன்றவர்கள் உண்மையான அர்ப்பணிப்போடு சமூகநீதிப்போராளிகளாக இருக்க தயாரில்லை. இவர்களுக்கு end result முக்கியமில்லை. ஒரு சூதாடிக்கு கிடைக்கும் சூதாடும் போதான kick தான் முக்கியம். உண்மையை கண்டு அதற்கு நீதி அறத்தோடு ஒரு tailored solution க்கு உழைக்க தயாரில்லை. அதற்கு பொறுமையில்லை. முகநூலில் மாரித்தவளைபோல கத்தி சீன் போடுவதே அவர்களுக்கு அறமாக இருக்கிறது.

  மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகிலுள்ள மயானங்கள் அகற்றப்படவேண்டுமென்பதுதான் எனது நிலைப்பாடும். ஆனால் புத்தூர் கிந்துசிட்டி மயானத்திலுள்ள இப்பிரச்சனையில் புதிய சனநாயக கட்சிக்கு இருக்கிற vested interests வியாபார நலன்களுக்கான அடிப்படைகளும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டிவை. இப்பிரச்சனையில் குரலற்றவர்களாக இருக்கிற Siruppiddy Sivan முதலிய சக பாதிக்கப்பட்ட தலித் சாதியினருக்கும் நியாயம் தேவை. மயானங்களை அகற்றும் போராட்டம் பலமுற்போக்கு சக்திகளைக்கொண்டு அமைக்கப்பட்ட ஒரு கூட்டணியாலேயே முன்னெடுக்கப்படவேண்டும். நிச்சயமாக அரசியல் வங்குரோத்தான புதிய சனநாயககட்சியாலோ அல்லது அதன் பினாமி அமைப்பான சமூக நீதிக்கான வெகுசன அமைப்பாலோ அல்ல. ஏறத்தாள இதுதான் Eprlf Pathmanaba Pathmanabha Eprlf கட்சியினதும் நிலைப்பாடாக இருக்கிறது.


 2. Mohamed SR Nisthar on September 14, 2017 3:51 pm

  ஜெயலபாலனுக்கு என்ன நடந்தது? தூய்மைவாதிகளான ( எந்த வாதஙகளாலும் பாதிக்கப்படாத) Kafir, Paarathy, BC போன்றோர் பின்னூட்டம் எழுதவிடாமல் தடுத்துவிட்டீர்களே?


 3. karuppan on September 14, 2017 7:50 pm

  ஜெயபாலனின் உண்மை சொரூபத்தை காட்டிய அருண் அம்பலவாணருக்கு எமது பாராட்டுக்கள். மக்களின் நலன் கருதி ஜெயபாலன் இந்த நீண்ட தொடர்பற்ற ஆதாரம் அற்ற புனைக்கதையை எழுதவில்லை. அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.


 4. BC on September 15, 2017 8:46 am

  August 30 முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவுக்கு நான் இரங்கல் தெரிவித்ததை ஏன்
  ஜெயலபாலன் வெளி வராமல் தடுத்தார் என்று ஒருக்கா அவரிடம் கேளுங்கோ நிஸ்தார் அண்ணை.
  http://thesamnet.co.uk/?p=87226


 5. Vijay Rasalingam on September 15, 2017 6:05 pm

  பின்னூட்டம் எழுதவிடாமல் ஜெயபாலன் தடுத்தார் என நிஸ்தாருக்கு எப்படித்தெரியும்?

  பாம்பின் கால் பாம்பறியும் என்பதா இல்லை கூட்டுக்களவாணியாய் இருந்தவர் என்பதா?

  ஜெயபாலனின் கருத்துக்களை அல்லது அவரின் கூட்ட்டாளிகளை கேள்வி கேட்டோரை எப்படி தேசம்நெற்றில் “தடை” போட்டார்கள் என்பது தேசம்நெற்றை தொடர்ந்து வாசிப்போருக்கு தெரியும்.
  இதில் நிஸ்தார் ஒன்றும் தெரியாத பாப்பா அல்ல!
  அவரும் தேசம்நெற்றின் எடிற்றர்களில்/அலுவலர்களில்/ஆசிரியர்களில் ஒருவர் அல்லது நெருக்கமாக இயங்கும் ஒருவர்!


 6. Mohamed SR. Nisthar on September 16, 2017 12:03 pm

  “August 30 முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவுக்கு நான் இரங்கல் தெரிவித்ததை ஏன்
  ஜெயலபாலன் வெளி வராமல் தடுத்தார் என்று ஒருக்கா அவரிடம் கேளுங்கோ நிஸ்தார் அண்ணை “,… BC யின் மேலுள்ள பின்னூட்டம் “மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடல்” என்ற கூற்றுக்காண சரியான உதாரணம். ஒரு வேளை தலைப்பு மாறி வந்துவிட்டாரோ தெரியவில்லை.


 7. BC on September 16, 2017 4:16 pm

  BC யின் மேலுள்ள பின்னூட்டம் “மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடல்” என்ற கூற்றுக்காண சரியான உதாரணம். ஒரு வேளை தலைப்பு மாறி வந்துவிட்டாரோ தெரியவில்லை.

  தலைப்பு மாறி வந்துவிட்ட எனது தவறை உணர்ந்து கொண்டேன். மன்னிக்கும் படி வேண்டி கொள்கிறேன்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு