ரோஹிஞ்சா முஸ்லீம்கள், சோனக முஸ்லீம்கள், சர்வதேச சமூகம், ஐ.நா.சபை! : முஹம்மத் எஸ்.ஆர் நிஸ்த்தார்.


Rohingya_Latest_Plight

1990ல் தமிழ் புலிகளால் சோனக முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக துரத்தியடிக்கப்பட்ட போது, 2004ல் கிளம்பிய சுனாமி பல்லாயிரக் கணக்கான உயிர்களை விழுங்கிக் கொண்டபோது, 2009ல் தமிழ் பொது மக்கள் ஸ்ரீ லங்கா ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்ட போது, 2016ல் சிரிய நாட்டு அகதிக் குழந்தை ஐலன் குர்டியின் சிற்றுடல் கரை ஒதுங்கியபோது என்ன உணர்வு எம்மை வாட்டியதோ அதே அளவான உணர்வுதான் ரோஹிஞ்சா முஸ்லீம்களின் நிலையை காணும் சராசரி மனிதனுக்கு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மனித அவலங்களை “சமய கண்ணாடி” ஊடாக பார்க்கவேண்டியதில்லை, அப்படி பார்ப்பதும் மனிதாபிமானத்தை பறைசாற்றாத விடயமுமாகும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த அவலங்கள் அரசிலாக்கப்பட்டதால், அந்த கவலைகளை மனத்தில் சுமந்து கொண்டுதான் நாம் சதாகாலமும் வாழவேண்டும் என்று நிர்பந்திக்கப்படும் போது நாம் மனரீதியாக ஊனமுறுவதும், செய்வதறியாது நாமே குழம்பிக் கொள்வதும் தவிர்க்க முடியாதவை.

அத்தகைய குழப்பத்தின் அறிகுறி இந்த ரோஹிஞ்சா முஸ்லீம்கள் தொடர்பாக சோனக முஸ்லீம்களின் முகநூல் தகவல் பரிமாற்றங்கள், சூழுரைப்புக்கள், சபிப்புக்கள், குற்றச்சாட்டுக்கள், எதிர்பார்ப்புக்கள் என்று எல்லை இல்லாமல் விரிந்து செல்ல, எரிகின்ற வீட்டில் பிடிங்கியது இலாபம் என்ற ரீதியில் சந்தர்ப்பம் பார்த்து நிற்போர் ” அன்று எமக்கு ஏற்பட்ட போது,… என்று தொடங்கி ஆகவே நீலிக் கண்ணிர் வடிக்காதீர்; என்று முடிக்கும் போது மானசீகமான கவலைக்கும் தடை விதிக்கும் இறுகிய மனங்கொண்டோரும் நமக்கிடையே இருப்பதை, இருக்கப்போவதை நாம் மறுப்பதுக்கில்லை.

ரோகிஞ்சா முஸ்லீம்களின் வரலாற்றை மீள் வாசிப்பதால், அவர்களுக்கு மியாமரில் இருக்க வேண்டிய உரிமைகள் என்று பலதை நாம் விரும்புவதால் மாத்திரம் நடந்தேறும் அவலங்களை சரி செய்ய முடியாது என்பது போலவே அரச தலைவர் துருக்கர் முஸ்லீம் எதுர்கான் போர்விமானம் அனுப்புவார், அறபு முஸ்லீம் இளவரசர் ஸல்மான் கடல் படை அனுப்புவார், பிரதமர் வங்காளி முஸ்லீம் ஹஸீனா தன்நாட்டு எல்லையை முற்றாகத் திறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புகளும் பலனளிக்காத விடயங்களே. ஆக உயிர்வாழும் உரிமை மறுக்கப்படும் ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு இருக்கும் கடைசி வழி அடக்கு முறைக்கும், உரிமை மறுப்புக்கும், இன அழிப்புக்கும் எதிராக திரண்டெழுவதாகும். ஆனாலும் எம்முன்னே எழுந்து வரும் மிகப்பெரிய கேள்வி என்ன விலைகொடுத்து இதை இவர்கள் சாதிக்கப் போகின்றார்கள் என்பதே.

சோனக முஸ்லீம்களின் கற்பனைக்கும், மிகைப்படுத்தலுக்கும் அப்பால் நம்பத்தகுந்த வெளிநாட்டு சுதந்திர செய்தியாளர்களின் படி ரோஹிஞ்சா முஸ்லீகளின் விடுதலை இயக்கமான ARSA (Arakan Rohingya Salvation Army) கூரிய கத்திகளையும், பொல்லு, தடிகளையுமே பொதுவாக போராட்ட ஆயுதங்களாகக் கொண்டுள்ளனர். ஆனால் நம்மவர்களின் முகநூல் தகவல்களில் நேர்த்தியான சீருடையும், தானியங்கி துப்பாக்கிகளும், போர்க்கள தகவல் சாதங்களும் கொண்டுள்ள ஆயிரகணக்கான இளைஞர்களை காணக்கூடியதாக இருகின்றது. அதையும் விஞ்சும் முகமாக இப்படியான சோடிப்புகளுடன் காணப்படும் பல்லாயிரக் கணக்கான போராளிகள் தங்கள் விடுதலை போராட்ட நியாயங்களையும், தாம் மியான்மர் ராணுவத்திடம் இருந்து தம் மக்களையும், தாய்பூமியையும் காப்போம் என்ற பகிரங்க அறிக்கை ஒன்றை “அறபு” மொழியில் வாசிப்பதை காட்சி படுத்திய போது இது ஏதோ வானத்தில் இருந்து வந்திறங்கிய அறிவிப்பு போல் நம்பி “இறைவனின் நாட்டம் நிறைவேறிவிட்டது” என்று அறபு மொழியிலேயே பின்னூட்டம் விட்டு சந்தோசப்படுவதை பார்த்து கவலைக்குள்ளும் சிரிப்பு வருவதை நிறுத்த முடியவில்லை.

ஒரு பேச்சுக்காக கட்டமைப்புடன் கூடிய ஒரு விடுதலை அணி உருவாகிவிட்டது, ஏதோ காரணதுக்காக அறபு மொழியில் அறிக்கை விடுகின்றனர் என்றாலும், தமிழ் புலிகளின் முப்படை அனுபவமும், இனத்துக்கான புலி போராளிகளின் அர்பணிப்பும், தமிழ் மக்களின் நிபந்தனையற்ற ஆதரவும் கூட ஒரு புள்ளிக்கப்பால் நகர முடியாதபடி முடக்கி, முக்கல் முனங்கல் இல்லாமலே அவர்களை அழிக்க ஸ்ரீ லங்கா அரசுக்கு சர்வதேச சமூகம் உதவியது என்பதை நாம் ஏன் இவ்வளவு சீக்கிரம் மறந்து போனோம்? ஆகவே ஆயுதம் வழங்கி பயிற்சியும் கொடுக்கும் அமைப்பு அல்லது நாடு அதே துப்பாக்கி கொண்டே இந்த சின்னஞ் சிறிய படையணியை அழித்து தம் அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும், அதுவரை இந்த இயக்கத்தின் ஊதி பெருக்கப்பட்ட வீர தீர செயல்கள் சும்மா இருக்கும் சாதரண மக்களுக்கு வெறும் தற்காலிக குளுகுளு செய்தி என்பதை மறக்காமல் இருப்போம். பலஸ்தீன விடுதலை போராட்டம் இதற்கு மிகப் பொருத்தமான சாட்சி. இந்த இயக்கத்தின் உண்மை நிலை என்னவாக இருப்பினும் எந்த சந்தர்ப்பத்தில் இவர்களின் ஆயுதம் மெளனிக்கப்படவேண்டும் என்பதில் இந்த இயக்கம் கவனமாக இருத்தல் மிக அவசியமாகும்.

சர்வதேச சமூகத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஒப்பிட்டளவில் மிகக் குறைவு. ஆனால் நாமோ அமெரிக்கா முதல் ஐரோப்ப்பா ஊடாக சீனாவரையும் நாமாக பிரச்சினைகளை தேடிவைத்துள்ளோம் அல்லது பிரச்சினைகளை நம் மீது திணித்து நம்மை பகடைகாய்களாக்கும் திட்டம் சரிவர நடந்து கொண்டிருக்கும் போது ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்காக முழு உலகமும் குரல் கொடுக்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

பிராந்திய வல்லரசான இந்தியா ஸ்ரீ லங்காவின் ஆகாய ஆதிக்க எல்லையையும் மீறி தமிழர் பகுதிகளில் உணவு பொட்டலங்களை இறக்கியபோது தமிழர் தங்களுக்கான பாதுகாப்புக்கான அறிகுறியே அது என்ற பிழையான அர்த்தப்படுத்தலில் மிக இலகுவாக இந்திய அரசியல் வலையில் விழுந்தனர். அவர்களின் விருப்பத்துகெல்லாம் ஓடி, ஆடி, பாடி முடியாது என்ற கட்டத்தில் அவர்களுக்கெதிராக எழ, ஸ்ரீ லங்கா அரசை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தம் திட்டம் தமிழ் புலிகலினால் உடைந்து சிதறுவதை சகிக்க முடியாமலும், ஸ்ரீ லங்காவில் ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை கையாள்வது கடினம் என்ற நிலையிலும் இந்தியா ஸ்ரீ லங்கா அரச ஆதரவு நிலை எடுத்து தமிழ் புலிகளை அழிக்க முனைப்புடன் செயற்பட்டு வெற்றிகண்டது நமக்கான படிப்பினை. அதே இந்தியா மியாமருடன் கைகுலுக்கி இன அழிப்பு சம்பவங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே பொருளாதார, அபிவிருத்தி ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது எல்லாம் நமக்கான மேலதிக படிப்பினைகள். ஆக மீதமிருப்பது உலக பொது சபையின் நிலைப்பாட்டை அறிவதே.

ஐ.நா. சபை பிரயோசனமற்ற(useless) ஒரு அமைப்பு, இப்படி கூறியவர் ஒஸாமா பின் லாடன். ஐ.நா சபை வெறுமனே விவாதத்தில் ஈடுபடும் ஒரு குழு(arguing society) இப்படி கூறியவர் முனை நாள் அமெரிக்க அதிபர் புஸ் இளையவர். இருவரின் கூற்றுக்களுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒரு தேவைக்காக அமைக்கப்பட இவ்வமைப்பு 21ம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக இல்லை என்ற வேகமாக பரவி வரும் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம்.

முதலாம் உலக முடிவுக்குப்பின்னால் ஆரம்பிக்கப்பட்ட உலக அமைப்பான ” நாடுகளின் கூட்டு” ( League of Nations) இரண்டாம் உலக மகா யுத்தத்துடன் தன் முடிவை எட்ட, அதன் இடத்தில் அமர்த்தப்பட்டதுதான் இன்றைய ஐ.நா.சபை. இந்த சபையின் ஆரம்பபமே நல்ல சகுனமாக அமையவில்லை. காரணம் அதன் உள்கட்டமைப்பின் பிரகாரம் பாதுகாபு சபையில் ஐந்து (அணு ஆயுத) வல்லரசுகள் நிரந்தர கதிரைகளைக் கொண்டிருக்க ஏனைய பத்து கதிரைகள் சுழற்சி முறையால் வருடம் ஒரு முறை நிரப்பப்படுகின்றன. அதாவது இந்த ஐந்து ஜம்பவான்களும் தமது நாட்டின் அல்லது தமது நம்பிக்கைக்குறிய நாட்டின் நலனுக்கேற்ப கூட்டு சேர்வதும், பிரிந்து நின்று எதிர்ப்பதுமாக நிலை எடுக்கும் அதே நேரத்தில் மிஞ்சியோருக்கு ஆசைகாட்டி தம் நிலைப்பாட்டுக்கு ஆதரவை சேர்த்துவிடுவர்.

ஐ. நா பொதுச் சபையில் உள்ள சுமார் 200 நாடுகளும் தம் கொள்கை சார் நிலைப்பாடு என்று காட்டிக் கொண்டாலும் தேர்தல் காலங்களில் கையூட்டல் பெற்று வாக்களிக்கும் ஆசிய நாடுகளின் வாக்காளர்கள் போல் நாட்டுக்கான ஆயுத உதவி, அபிவிருத்தி உதவி, நீண்டகால கடனுதவி என்ற உற்சாகப்படுத்தலுக்காக அல்லது மறைமுக பயங்காட்டலுக்காக வாக்களிப்பதும் அல்லது வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து காணமல் போவதுமாக இன்றை ஐ. நா சபை 1945ல் இருந்து தம் காலததை கழித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு நல்ல உதாரணமாக அமைவது பாலஸ்தீன பிரச்சினை. ஐ.நா சபையின் உறுப்பு நாடக இஸ்ரவேல் 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது இரண்டாம் சகுனப் பிழையோ என்று கேட்கும் அளவிற்கு “பாலஸ்தீன” பிரச்சினை இன்னும் முடிவு ஒன்று இல்லாமல் இழுபறி நிலையில் இருப்பது இந்த சபை உலக பிரச்சினைகள் தொடர்பாக எடுக்கும் அல்லது எடுக்காத தீர்வுகள் ஐக்கியப் பட்ட நாடுகளின் நிலைப்பாடக இல்லாமல், ஆயுத பலம் உள்ள சில நாடுகள் ஏனைய நாடுகளின் மீது திணிக்கும் தீர்வுகளாகவே இருக்கின்றன.

ஆகவேதான் பாரக் ஒபாமா தன் முதல் பதவி காலத்தின் முதன் முதல் உத்தியோக ரீதியான தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன அதிகார சபையின் முதல்வர் மஹ்மூத் அப்பாஸுடன் ஏற்படுத்தினார். வெள்ளை மாளிகையில் குடிபுக முன்னரே உலக சமாதானத்துக்கான “நோபல் பரிசு” பெற்ற ஒமாபா ஏதோ செய்யப் போகின்றார் என்று காத்திருக்க, அவரின் இரண்டாம் நாலாண்டு ஆட்சியில் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட “பலஸ்தீன தனி நாட்டுக்கான” அங்கீகார பிரேரணைக்கு வாகளிக்கும் சந்தர்பத்தில் ” அவசரப்பட்டு எடுக்கும் முடிவு நிலைத்து நிற்காது, எதிர்பார்க்கும் தீர்வை கொடுக்காது ” என்ற காரணத்துடன் வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டது அமெரிக்கா. இந்த ஒரு உதாரணத்தின் மூலம் ஐ.நா சபை உறுப்பு நாடுகளின் சராசரி நடத்தைகளை ஊகித்துக் கொள்ளலாம்.

ஆகவே உலக நாடுகளில் நாளாந்தம் நடந்தேறும் விடயங்களை அந்த நாட்டின், நாடு அமைந்துள்ள பிரதேசத்தின், அந் நாட்டு மக்களின் இன, மொழி, சமயம், பொருளாதர நலன் சார் நிலைப்பாடு, அந் நாடு எந்தெந்த நாட்டின் செல்வாக்கில் இருக்கின்றது என்ற பல விடயங்களால் நிர்ணயிக்கப்படுவது கண்கூடு. இந்த வகையிலேயே கடந்த சுமார் ஐந்து வருடங்களா மியான்மரில் நடந்தேறும் திட்டமிட்ட சிறுபான்மை இனவழிப்பு சம்பவங்களும் நோக்கப்படவேண்டும்.

ஐ. நா வின் பட்டயத்தின்(UN Charter) பிரிவு ஒன்று “ஒரு நாட்டின் உள் விடயங்களில் தலையிட இந்த சபைக்கு அதிகாரம் இல்லை” என்ற ஒரு தடையை விதித்துள்ளது, அதே நேரத்தில் சர்வதேச நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல்களும், நடத்தைகளும் மிகவேகமாக மாறி வருவதாலும், நாடுகள் எற்றுமில்லாத வகையில் ஒன்றொன்று பின்னிப்பிணைந்துள்ளதாலும், ஒரு நாட்டில் நடக்கும் விடயம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஏனைய நாடுகளில் தாக்கம் செலுத்துவதை தவிர்ப்பதற்குமாக ஐ.நா சபையின் ஏற்பாட்டில் 2005ல் நடந்த சர்வதேச மாநாட்டில் அனைத்து நாடுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஒரு விடயம் தான் R2P (Responsibility to Protect) ” “பாதுகாப்பதற்கான பொறுப்பு” என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச சட்ட(International Law) ஏற்பாடாகும். அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு நாடு தொடர்பாக ஏனைய நாடுகளுக்கும் இருக்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்புதான் அது.

இதன் மூலம் சர்வதேச சமூகத்தால் எதிர்பாக்கப்படுவது ஒரு நாடு தன் நாட்டு பிரஜைகளை இனவழிப்பு(genoside), போர் குற்றங்கள் (war crimes), இன சுத்திகரிப்பு(ethnic cleansing), மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள்(crimes against humanity) என்ற அழிவுகளில் இருந்து பாதுகாக்கும், காப்பாற்றும் பொறுப்பில் உள்ளது என்ற விடயம் . ஆனால் இந்த விடயம் கூட இத்தகைய உலக அமைப்புக்களின் வியாக்கியானங்களுக்கும், விபரிப்புக்களுக்கும், அவை தொடர்பான வாத பிரதிவாதங்களுக்கும் மனித இனத்தின் அழிவுக்கு வழங்கப்படும் மறைமுகமான கால அவகாசமாகவே கருத வேண்டியுள்ளது.

இந்த வகையிலேயே “மனிதாபிமான தலையீடு” (Humanitarian Intervention) என்ற அம்சம் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டவிடயமாக கருதப்படுவதோடு மனித வீரோதம் வீரியமாக தலையெடுக்கும் சந்தர்ப்பங்களில் மனிதம் எங்கோ ஒரு மூலையில் கவனத்தை ஈக்கின்றது என்ற நம்பிக்கையை தருகின்றது. இந்த அடிப்படையில்தான் ஸ்ரீ லங்கா வான் பரப்பு அதிகாரத்தை மீறி இந்திய வான்படை வடக்கில் உணவு பொட்டலங்கள் வீசிய விடயம், பல் நாட்டு எல்லை விதிகளை மீறி சிரிய நாட்டு அகதிகளை தன் நாட்டுக்குள் வர அனுமதித்த ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கலின் முடிவு என்பவைகளாகும்.

இதே அடிப்படை நியாயத்தில்தான் மியான்மருக்கு பக்கத்தில் உள்ள பிராந்திய வல்லரசு இந்தியா, எல்லை நாடு தாய்லந்து என்ற நாடுகள் ஏதாவது உதவியை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஏதோ காரணங்களுக்காக அன்நாடுகள் முகத்தை அடுத்தப்பக்கம் திருப்பிக் கொள்ள, இஸ்லாமிய துருக்கி, இஸ்லாமிய செளதி, இஸ்லாமிய பக்கிஸ்தான், இஸ்லாமிய வங்காளதேசம், இஸ்லாமிய இந்தோனேசியா என்ற நாடுகள் இந்த மனிதாபிமான தலையீடுகளுக்காக எதிர்பார்க்கப்படுகின்றார்கள். ஆனால் அவர்களாலும் முடியாது. காரணம் பல, அதில் ஒன்று பயத்துடன் கூடிய கவனம்.

இதை இரண்டாம் வளைகுடா யுத்த முஸ்தீபு காலத்தில் அன்றைய அமெரிக்க உதவி ஜனாதிபதி டிட் சென்னியின்(Dick Cheney) கூற்றை வரிகளுக்கிடையே (between lines) வாசிப்பதின் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம், அதாவது ” உலக சமாதானத்துக்கான பாதை வரைபடம்(road map)பாலஸ்தீனில் இருந்து ஆரம்பிக்கபட வேண்டும்” என்பதே அந்த கூற்று. இதில் நான் விளங்கிக் கொள்வது; பாலஸ்தீனில் சமாதானத்தை ஏற்படுத்த அவர் சிபாரிசு செய்கின்றார் என்பதல்ல. மாறாக, ஈராக் யுத்த முடிவில் டிக் சென்னிக்கு சொந்தமான முதல் பன்நாட்டு எண்ணெய் கம்பனி, , “ஹலிபேர்டன்”(Halliburton) எண்ணெய் வியாபாரத்தை ஆரம்பித்து தனது குடும்ப பொருளாதார நலனை அடைந்து கொண்டார் என்பது போக, பாலஸ்தீனில் இருந்து இந்தோனேசியா வரையிலான “பெரும்பான்மை முஸ்லீம்” என்று அழைக்கப்படும் நாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அவர்கள் (ஆதிக்கவாதிகள்) விரும்பும் சமாதானம் கிடைத்துவிடும் என்பதே. ஆகவே இதை யார் செய்கின்றார்கள் என்பதல்ல அவர்களின் பிரச்சினை. யாரேனும் சரியாக அதை செய்கின்றார்களா என்பதே.

நாம் நடை முறை உலகத்தை ஓரளவேனும் புரிந்துகொள்ளாத வரை, உரிமை என்பது ஒரு இனத்துடன், மொழியுடன், சமயத்துடன், அரசியல் நிலைப்பாட்டுடன் சுருங்கி கொள்ளாத விடயம் என்பதை நாம் புரிய முயற்சிக்காத வரை, சர்வதேச சமூகம் தன்நாட்டு நலன் என்று வரையறுத்து செயல்படும் முறையை மாற்றாதவரை, ஐக்கிய நாடுகள் சபையில் போதியளவு மாற்றங்கள் கொண்டுவராதவரை இத்தகைய துன்பியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து
 1. T Jeyabalan on September 16, 2017 10:39 am

  ரொஹின்ஜா மக்களின் தற்போதைய இனச்சுத்திகரிப்பு தொடர்பாக நான் தமிழில் வாசித்த நல்லதொரு கட்டுரை. இம்மக்கள் மீது மியான்மர் இராணுவ அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையும் அதனை சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற அங் சங் சூசி பொய்ச் செய்திகள் என்று தட்டிக்கழித்ததும் அவர் மீது எனக்கு இருந்த மரியாதையை திதறடித்துவிட்டது. நன்றி நிஸ்தார் உங்கள் ஆக்கங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.


 2. karuppan on September 19, 2017 8:55 am

  “1990ல் தமிழ் புலிகளால் சோனக முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக துரத்தியடிக்கப்பட்ட போது”"

  சமய கண்ணாடி ஊடாக பார்க்காத அன்பர் நிஸ்தார் உள்ளே சமய கண்ணாடி எவ்வளவு தூரம் மறைந்து இருக்கிறது என்பதற்கு வேறு எந்த அளவுகோலும் இல்லை. இலங்கையில் மக்கள் பலாத்காரமாக துரத்தி அடிக்கப்பட்ட்து 1990 இல் ஆரம்பித்தது என்றுதான் அவரின் ஆய்வு தெரிவிக்கிறது போலும். தமிழ் மக்கள் விரட்டி சிங்கள அரச வேணுமுறையால் விரட்டி அடிக்கப்படட போதெல்லாம் அவர்களோடு உடன்பிறப்புகளாய் சோனக சமூகமுமும் கைகொடுத்து நின்றது என்பதற்கு ஏராளாமான ஆதாரங்கள் உண்டு.


 3. Mohamed SR Nisthar on September 20, 2017 9:44 am

  “1990ல் தமிழ் புலிகளால் சோனக முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக துரத்தியடிக்கப்பட்ட போது”” கருப்பன்,

  முதல் கேள்வி: 1990ல் தமிழ் புலிகளால் சோனக முஸ்லீம்கள் துரத்தப்படர்களா இல்லை?

  இரண்டாம் கேள்வி: அந்தநேரம் சாராசரி மனிதரான உங்களுக்கு மனம் வலித்ததா அல்லது ஆகக் குறைந்தது சங்கப்படப்பட்டதா?

  யார் யாருடன் இருந்தார்கள், எத்தனை பேர் இருந்தார்கள் என்பதெல்லாம் என் கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விடயம். அது சம்பந்தமாக நீங்கள் கட்டுரை ஒன்று தந்தால் அது பற்றி கேள்வி கேட்க, உண்மை கண்டறிய சந்தர்ப்பம் உண்டல்லவா?


 4. BC on September 20, 2017 1:50 pm

  இலங்கை தமிழர்கள் சிங்களவா மாதிரி இலங்கையின் பூர்விக குடிமக்கள்.
  ஆனால் ரொஹின்ஜா மக்கள் பங்களாதேசத்தில் இருந்து சமீப காலங்களில் வந்து மியான்மர்ரில் குடி ஏறியவர்கள் கனடா யூரோப்பில் குடியேறிய தமிழர்கள் போலவே
  சில தமிழர்கள் உண்மை தெரியாமல் தமிழர்கள் மாதிரியே ரொஹின்ஜா மக்களும் என்பது மிக தவறு.
  நோபல் பரிசு பெற்ற அங் சங் சூசி பொய்ச் செய்திகள் என்று தட்டிக்கழித்ததும் அவர் மீது எனக்கு இருந்த மரியாதையை திதறடித்துவிட்டது என்று கட்டுரை எழுதியவரை நம்பி மிகவும் அவசரபட்டு ஜெயபாலன் சொன்னது மிகவும் தூரதிஷ்டமானது.ஜெயபாலனின் வாசகன் என்ற முறையில் வருந்துகிறேன்
  பங்களாதேசம் என்ற முஸ்லிம் மத நாடே மிகவும் கவலை கொண்டு உள்ளது ரொஹின்ஜா மக்களின் பலர் ஐஎஸ், அல்கொயதா மதபயங்கரவாதிகளுடன் அதிகமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பது.
  அரபு முஸ்லிம் அரசால் ஈராக்கில் பல இலட்சம் முஸ்லிம் குருதி இனத்தவர்கள் கொன்று அழிக்கபட்டனர். கட்டுரையாளர் அது பற்றி இங்கு எதுவும் சொல்லவே இல்லை.
  பல இலட்சம் முஸ்லிம் குருதி இனத்தவர்கள் கொன்று குவிக்கபட்டபோது இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இப்போ மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது மாதிரி அப்போது முஸ்லிம்கள் ஈராக் முஸ்லிம் அரசுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த இல்லை? மியான்மர்ரில் கொல்லபட்டது எல்லோருமாக 400 பேர்.


 5. T Jeyabalan on September 21, 2017 6:01 am

  பிசி அடிப்படையில் உங்கள் நிலைப்பாடு தவறானது. ரொஹின்ஞா முஸ்லீம்கள் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களைப் போல் என்றால் அத்தமிழர்களை படுகொலை செய்வதும் நாட்டைவிட்டு துரத்துவதும் பொருத்தமானதா? இனச்சுத்திகரிப்பை நியாயப்படுத்த வரலாற்றில் எவ்வளவுதூரம் நீங்கள் பின்னுக்கு செல்வீர்கள்? வரலாற்றைப் பின்னோக்கிப் போனால் முதலில் மலையகத்தமிழர்கள் அடுத்து சிங்களவர்கள் தமிழர்கள் ஒருவரும் இலங்கையில் இருக்க முடியாது.


 6. Mohamed SR Nisthar on September 21, 2017 4:32 pm

  “அரபு முஸ்லிம் அரசால் ஈராக்கில் பல இலட்சம் முஸ்லிம் குருதி இனத்தவர்கள் கொன்று அழிக்கபட்டனர். கட்டுரையாளர் அது பற்றி இங்கு எதுவும் சொல்லவே இல்லை,…” பீ.சி.

  இன சுத்திகரிப்பு ஒன்று மியான்மரில் நடை பெறுகின்றது என்பதை சொல்ல மேலுள்ள விடயம்தான் ஆரம்பப் புள்ளியாக் அமைய வேண்டுமா? ஏன் அதற்கு முந்திய “சப்ரினிஸ்கா”(பொஸ்னியா) ஆரம்பமாக இருக்கக் கூடாது, அல்லது அதற்கு முந்திய ருவண்டாவாக இருக்கக் கூடாது? பீ.ஸி சொல்லும் இடத்தில் இருந்து தொடங்கவில்லை என்பதற்காக இன சுத்திகரிப்பு மியாமரில் நடை பெறவிலை என்ற இவரின் கவலை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

  ” மியான்மர்ரில் கொல்லபட்டது எல்லோருமாக 400 பேர்.” என்ற இவரின் மேலதிக கண்டுவிடிப்பு இனவாதிகளுக்கு ஆர்வமூட்டும் விடயமே.

  டெஸ்மன்ட் டூ டூ, தலைலாமா, இன்று காலை ஆர்ச் பிஸப் ஒப் கண்டபெரி என்ற மதத் தலைவர்கள் இந்த மியாமர் விடயத்தை “இன சுத்திகரிப்பு” என்று பகிரங்கமாகக் கூறும் போது பி.ஸியின் 400 கணக்கினால் “மனிதம்” மீதான அவரின் கரிசனை பீறிட்டெழுந்து வழிந்தோடுவது தெரிகிறது.


 7. karuppan on September 21, 2017 7:37 pm

  முதல் கேள்வி: 1990ல் தமிழ் புலிகளால் சோனக முஸ்லீம்கள் துரத்தப்படர்களா இல்லை?

  இலங்கையில் முதல் முதல் மக்கள் துரத்தப்பட்ட்து 1990 இல் அல்ல. எனது கேள்வி கட்டுரையின் ஆரம்பமே எதற்காக சோனக முஸ்லிம்களை முதன்மை படுத்தியது? சோனக முஸ்லிம்களால் தமிழ் மக்கள் விரடடபடட, கொல்லப்படட பல சம்பவங்கள் நடந்தது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? 1958, 1977, 1983 கலீல் இலங்கையில் நடந்தது என்ன? இது துரத்துதல் இல்லையா? இவை உங்களுக்கு மனம் வலிக்க செய்ததா, சங்கடப்பட செய்ததா? நீங்கள் வரிசைப்படுத்திய வரிசையில் எந்த வித உயிர் இழப்பும் இல்லாமல் மக்கள் இடம் பெயர்ந்தது 1990 இல் சோனக மக்கள் இடம்பெயர செய்யப்பட்ட்து மட்டுமே.


 8. Mohamed SR Nisthar on September 22, 2017 4:39 pm

  கறுப்பன்!

  எந்த புள்ளியில் இருந்து கட்டுரை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டுரையாளரரின் காரணங்களோடு சம்பந்தப்பட்டது. 1990 தான் முதன் முதலில் நடந்த சம்பவம் என்று நான் குறிப்பிடவே இலையே.
  1958, 1977, 1983 பற்றி எனக்கு தெரிந்திருப்பதும் அல்லது தெரியாதிருப்பதும், எனக்கு மனம் வலித்ததா இல்லை என்பதெல்லாம் இங்கு சம்பந்தமில்லாத கேள்விகள்.

  பி.ஸி.க்கு போலவே உங்களுக்கும் “இன சுத்திகரிப்பு” என்பதற்கு விளக்கம் தெரியாமல் இருப்பதற்கு மனம் வருந்துகின்றேன்.

  சரி இன்றாவது என் மூலமாவது இதை தெரிந்து கொள்ளுங்கள். இன சுத்திகரிப்பு ஒன்றுக்கு யாரும் சாக வேண்டியதில்லை என்பதோடு, “ஒரு தொகை மக்கள் கூட்டத்தை அவர்களின் விருப்புக்கு மாறாக அவர்கள் இருந்த இடத்தைவிட்டு வெளியேற்றி, அவர்கள் அங்கு வாழ்ந்தற்கான் பெளதீக, கலாச்சார தடயங்களை அழித்தல்” மேலுள்ள விடயம் நடந்தால் அது சர்வதேச சட்ட விளக்கத்தின் அடிப்படையில் “இன சுத்திகரிப்பு”
  ஆகவே பி.ஸி யின் விளக்கப்படி 400+ அல்லது உங்கள் விளக்கப்படி ஒரு உயிறிழப்பேனும் நடந்திருக்க வேண்டும் என்ற நியாயங்கள் சராசரி மனிதரால் ஏற்றுக் கொள்ள முடியாதவை, மன்னிக்கவும்.


 9. BC on September 23, 2017 2:23 pm

  //பி.ஸியின் 400 கணக்கினால் “மனிதம்” மீதான அவரின் கரிசனை பீறிட்டெழுந்து வழிந்தோடுவது தெரிகிறது.//

  அரபு முஸ்லிம் ஈராக் அரசால் ஈராக்கில் பல இலட்சம் முஸ்லிம் குருதி இனத்தவர்கள் கொன்று அழிக்கபட்ட போது எதற்காக கட்டுரையாளரதும் ,இலங்கை முஸ்லிம்களின் “மனிதம்” மீதான கரிசனை அப்போது ரோகிஞ்சா கரிசனை போன்று ஏன் எதற்காக பீறிட்டெழுந்து வழிந்தோடவில்லை?


 10. Mohamed SR Nisthar on September 25, 2017 4:44 pm

  பி.ஸி.
  ஒரு வேளை நீங்கள் தூக்கத்தில் இருந்தீர்களோ? எது எப்படி இருப்பினும் மியான்மரில் இன சுத்திகரிப்பு நிகழ்கின்றது என்று உலகம் சொல்ல அது அப்படி ஒன்றும் இல்லை ரோகிஞ்யாக்கள் தாங்களாகவே வீடு வாசல்களுக்கு தீயிட்டு, தங்கள் கை கால் களை வெட்டிக் கொண்டு, தங்களையே சுட்டு கொலை செய்துவிட்டு மீதமுள்ளோர் வங்கால தேசத்தில் பசி பட்டினி,நோய் நொம்பல் பட்டு சாக தங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே செல்கின்றனர் என்ற ஆங் சாங் சூ சீயின் பாணியிலே பதில் சொல்வதில் இருந்து எழும் உங்கள் மனிதத்திற்கு முன் மற்றவரின் “மனிதம்” நிச்சயம் தோல்விதான்.


 11. Ravi Raj on September 26, 2017 10:29 am

  இந்த பிச்சனையின் அத்திவாரங்கள்
  1.இவர்கள் மீயானமர் பிரைைகள் இல்லை ஆகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

  மற்றய சிறுபான்மை இனங்கள் அந்த நாட்டில் வாழ்கின்றார்கள்

  2. மதம் உலகில் பாரிய மத வெறியையும் வன்முறை மூலமாகவும் தமது மதத்தை நிறுவ பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கி இயங்கும் நடவடிக்கைகள்

  எப்போதும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுவது மத வாதிகள் சவுதியில் சந்தோசமாக.

  மதத்தை வாழ்விலிருந்து வேறுபடுத்தாதவரையில் முசுலீம்களீன் வாழ்வு இது போன்றே இருக்கும்.


 12. karuppan on September 26, 2017 11:35 am

  நிஸ்தார் அவர்களே இப்போது தெளிவாகிவிட்ட்து கட்டுரையாளரின் காரணம் என்ன என்பது. அது பொதுவான தனது இனத்தின் மீதான பாசம் என்பதுதான். உங்களுக்கு எப்படி சம்பந்தம் இல்லையோ அதுபோல் எனக்கும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட்து பற்றி வலித்ததா என்பது சம்பந்தம் இல்லாத விடயம் தானே? எனது கருது பதிவில் நான் இனச்சுத்திகரிப்பு என்ற விடயத்தையே தொடவில்லை என்பதை சுட்டிகாடட விரும்புகிறேன். எனது கருது பதிவின் நோக்கம் உங்கள் பார்வையில் இலங்கையில் இன சுத்திகரிப்பு பற்றிய விடயம். தனது இனத்திற்கு சார்பான கருத்துக்களை சொல்வதும் தனது இனத்திற்கு பாதகமான கருத்துக்களை சொல்வதும் ஒரு பொதுவான இயல்பு. அதற்கு மாறுபடடவர் அல்ல நீங்கள் என்பதை புரிந்துகொண்டோம். இதை தான் அன்பர் பீஸீ அவர்களும் சொல்ல வருகிறார். அவர் பார்வையில் இஸ்லாமிய பயங்கரவாதம் முக்கியத்துவம் பெறுகிறது. தேசம்நெட் ஆசிரியர் குழு புலிகளின் பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் இலங்கை பௌத்த சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை கட்டுரைகளை எழுதுவது இல்லை. இது தான் அரசியல்.


 13. Mohamed SR Nisthar on September 28, 2017 2:09 pm

  ரவிராஜின் கண்டுபிடிப்புகள் :
  1.இவர்கள் மீயானமர் பிரைைகள் இல்லை ஆகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும். “தமிழர்கள் இலங்கை பிரஜைகள் இல்லை அவர்கள் தங்கள் தாய் நாடான இந்தியாவுக்கு திரும்பலாம்”, என்றுதான் சிங்கள பெளத்த கடும் போக்காளர் சொல்கிறார்கள். இப்போது ரவிராஜ் வரலாற்றின் மூலை முடக்கு எல்லாம் தாண்டி வரலாற்றின் எல்லை வரையும் சென்று தமிழர்கள் இலங்கையின் ஆதிவாசிகள் என்பதை நிரூபிப்பார், அது அவரின் உரிமையின் பால்பட்டது. அதே போலவே ரோஹின்யாக்கள் நிலத்துக்கான தொடர்பை உறுதிசெய்கிறார்கள். அது அவர்களின் உரிமையும் கூட. இந்நிலையில் ரவிராஜ் தன் கண்டுபிடிப்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை காணத்தவருவது ஏனோ?

  2. மதம் உலகில் பாரிய மத வெறியையும் வன்முறை மூலமாகவும் தமது மதத்தை நிறுவ பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கி இயங்கும் நடவடிக்கைகள். ரவிராஜின் புரிதலை கண்டு புல்லரிக்கின்றது. உலகத்தில் உள்ள அனைது மதங்களும் அவற்றை சிரத்தியோடு பின்பற்றும் மக்களும் தானுண்டு தஙகள் பாடுண்டு என்று தானும் வாழ்ந்து மற்றோறின் வாழ்கையில் தலையிடாமல் வாழுவதும் போக பயங்கரவாதிகள், மூளை குழம்பியோர் மததை தம் சுய லாபத்துக்காக பயன்படுத்துவதை புரிந்து கொள்ள மிடியாதளவு ரவிராஜுக்கு என்ன நடந்துள்ளது என்பது தெரியவில்லை.

  3. எப்போதும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுவது மத வாதிகள் சவுதியில் சந்தோசமாக. இவர் (இஸ்லாம்) மதத்தை ம்மொத்தமாக மொத்தமாக சவூதிக்கு ஏன் குத்ககைக்கு கொடுத்தார் என்று தரியவில்லை.
  4. மதத்தை வாழ்விலிருந்து வேறுபடுத்தாதவரையில் முசுலீம்களீன் வாழ்வு இது போன்றே இருக்கும். அப்படியானால் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாதே?


 14. Mohamed SR Nisthar on September 30, 2017 10:29 am

  கறுப்பன்!
  “நிஸ்தார் அவர்களே இப்போது தெளிவாகிவிட்ட்து கட்டுரையாளரின் காரணம் என்ன என்பது. அது பொதுவான தனது இனத்தின் மீதான பாசம் என்பதுதான்.” கறுப்பன், கறுப்பன், என்னத்தை சொல்ல அப்பன், உமக்கு 1958ல் இருந்து கட்டுரை ஆரம்பித்திருக்க வேண்டும், உவர் “தூய்மைவாதி” பீ.ஸி. இருக்கிறாரல்லோ அவருக்கு குர்திஸ் மக்களின் அவலத்தில் இருந்து கட்டுரை வேண்டும், இனி எங்கிருந்தென்டாலும் இந்னொருத்தர் வரக்கூடும், ஏன் 1948ல் இருந்து உந்த கட்டுரை நாசிகளின் யூதருக்கெதிரான இன அழிப்பில் இருந்து தொடங்கல்ல எண்டு. இப்பிடி போனா எங்கே அப்பு போய் சேர? ஏன் இப்படி 1990ல் இருந்து ஆரம்பிச்சியள் என்டு நேரடியா என்னிட்ட கேக்கிறத விட்டிட்டு ஏன் அங்கே உங்கே எண்டு அலஞ்சி திரியிறியள்.

  “நீங்கள் வரிசைப்படுத்திய வரிசையில் எந்த வித உயிர் இழப்பும் இல்லாமல் மக்கள் இடம் பெயர்ந்தது 1990 இல் சோனக மக்கள் இடம்பெயர செய்யப்பட்ட்து மட்டுமே.” இதால என்னத்தை சொல்ல வெளிக்கிடுறீர் அப்பன்?

  தம்பி ராசா, நான் கட்டுரை எழுதியது “ரோஹிங்யா” இனத்தைப் பற்றி. நான் அவயிண்ட இனம் இல்ல. உமக்கு “இனம்” சம்பந்தமான விளக்கம் இல்ல என்டு நினைக்கிற நான், தேவை எண்டால் சொல்லும் விளக்கப்படுத்திறன்.

  நான் திரும்ப திரும்ப சொல்றன் கேளும். 1983 அல்லது அதற்கு முன்னான விடயங்கள் இந்த கடுரையில சம்பந்தமில்லாதவை. நீர் 1957ல் இருந்து ஏன் கட்டுரை அமையவில்லை என்டால் 1915ல் எமக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில்ல உம்மிண்ட ஆள் “ஸேர்” பட்டம் பெற்றவர் இங்கிலாந்து வரைக்கும் போய் ஏதோ புடிங்கினவர் தானே. அங்கிருந்தும் நான் ஆரம்பிக்கயில்ல கண்டீரே?

  எண்டாலும் அப்பாவி தமிழர் விரட்டி அடிக்கப்பட்டப் போ, அவயின்ற அநியாய சாவில மனித நேயத்தில் என்ன செஞ்ச நாங்கள் எண்டெதெல்லாம் படியல் போட்டு தர இந்த கடுரை அமைக்கப் படல்விலை அப்பனே.

  சமாதானத “நோபல் பரிசு”, இன்னும் பல பரிசெண்டு பெற்றவரிண்ட நாட்டில் ஒரு இனசுத்திகரிப்பு நடக்கிறது எண்டு உலக நாடுகள், உலகத்தில் மதிக்க தக்க நாலு பெரிய மனிதர்கள் எல்லாம் உத கண்டித்தவயள் என்ற அடிப்படையில் அதற்கு உலகலாவிய மக்கள் ஆதரவு கொடுத்தவ என்ட அடிப்படையில் இலங்கை முஸ்லீம்களும் ஆதரவு கொடுத்திச்சினம் என்ற விடயத்தை காபீர் என்ட ஒருத்தரும், தூய்மைவாதி பி.சீயும் மதவாதமாக கொச்சை படுத்திச்சினம் அதற்கு எதிரா என் பக்க நியாயத்தை எழுதினன் அப்பனே. உதுக்கு எங்கெங்கெல்லாம் சுற்றிவாரியள் ராசா. எங்கெண்ட ஊரில ஒண்டு சொல்லுவினம் ” கந்தனுக்கு எப்பவும் எங்கேயோதான் கண்ணென்டு” நல்ல வடிவா அத மெய்பிச்சிட்டீர்.


 15. karuppan on October 2, 2017 7:58 pm

  இலங்கை வாழ் சோனகர் என்ன இனம், என்ன மதம் என்று யாருக்குமே புரியாது. ஏன் அல்லாஹ்வுக்கே புரியுமோ தெரியாது. லாட்டரி சீட்டு போடு எடுத்ததில் 1990 இல் புலிகள் விரட்டியடித்த சோனகரின் தான் வந்தது என்ற வாதம் சிறப்பாக இருக்கிறது.


 16. Mohamed SR Nisthar on October 3, 2017 9:50 am

  கறுப்பன்,

  ” யாருக்குமே புரியாது ” என்றதில் உங்களையும் உள்ளடக்கி இருக்கின்றீர்கள் என்பதை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி. ஆனால் தெரியாதவர் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பதுதான் ஆக பரிதாபம். கைவசம் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டப் பிறகு “அல்லா”, “குல்லா”, “கல்லா” என்று மீண்டும் தலை காட்டுவது பரிதாபத்தின் சாட்சியம்.


 17. தாயுமானவர் on October 3, 2017 1:40 pm

  புலிகள் இயக்கத்தினால் எந்த விதமான உயிர் இழப்பும் இல்லாமல் 1990 இல் சோனக மக்கள் இடம்பெயரபட்டது.ஆனால் இந்த இயக்கம் ரோஹிஞ்சா முஸ்லீகளின் ஜிகாத் இராணுவ படையணியல்ல, ஆகவே அது ஒரு இனசுத்திகரிப்பானது.குர்திஸ் மக்களை கொன்று குவித்தவர் முஸ்லீம் மத விருப்பத்திற்குரிய சுன்னி பிரிவை சேர்ந்த ஈராக் தலைவர் சதாம் குசேன். ஆகவே இலங்கை சோனக இனம் அமைதியை கடைபிடித்தது.


 18. BC on October 3, 2017 8:05 pm

  அன்பர்கள் கறுப்பன், ரவிராஜின் கருத்துக்கள் நடுநிலையுடன் சிறப்பாக இருந்தன.


 19. BC on October 3, 2017 8:10 pm

  நானும் நினைத்தனான் தமிழ் பேசும் இவர்களுக்கு ரோஹிஞ்சா மொழி பேசுபவர்களிடம் அப்படி என்ன பாசம் வழிந்து ஓடுகிறது? எல்லாம் முஸ்லிம் மதம் செய்யும் வேலை.


 20. Mohamed SR Nisthar on October 5, 2017 2:06 pm

  தாயுமனவ்ர், பீ.ஸி!

  “,…குர்திஸ் மக்களை கொன்று குவித்தவர் முஸ்லீம் மத விருப்பத்திற்குரிய சுன்னி பிரிவை சேர்ந்த ஈராக் தலைவர் சதாம் குசேன். ஆகவே இலங்கை சோனக இனம் அமைதியை கடைபிடித்தது.” இ து தாயுமானவர். “நானும் நினைத்தனான் தமிழ் பேசும் இவர்களுக்கு ரோஹிஞ்சா மொழி பேசுபவர்களிடம் அப்படி என்ன பாசம் வழிந்து ஓடுகிறது?,…” இது பீ.ஸி.

  நானும் தலையை பிய்த்துக் கொள்கிறேன், தமிழ் பேசும் புலிவாதி தாயுமானவருக்கும், தூய்மையாவாதி பீஸிக்கும் தமிழுடன் சம்பந்தமே இல்லாத குர்தீஸ் மக்கள் மீது வழிந்தோடும் பாசத்தின் காரணம் எது என்று?


 21. karuppan on October 8, 2017 7:40 am

  ” யாருக்குமே புரியாது ” என்றதில் உங்களையும் உள்ளடக்கி இருக்கின்றீர்கள் என்பதை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி. ஆனால் தெரியாதவர் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பதுதான் ஆக பரிதாபம். கைவசம் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டப் பிறகு “அல்லா”, “குல்லா”, “கல்லா” என்று மீண்டும் தலை காட்டுவது பரிதாபத்தின் சாட்சியம்.

  தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்ததனால் தான் தெரியாதவர்களை ஏமாற்றி சந்தர்ப்பவாத நாடகம் போடுபவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவது. அல்லாஹ்வையே குல்லாவாக்கும் உங்கள் முயற்சி பாராடடதக்கது.


 22. Mohamed SR Nisthar on October 9, 2017 9:54 am

  கறுப்பன்,

  “அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவது”, இவர் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவர் என்ற self certification புலி உலகின் மற்றயை அறிவாளிகளின் தரத்தை படம் பிடித்து காட்ட போதுமானது.


 23. vanni arrachi on October 14, 2017 8:04 am

 24. karuppan on October 14, 2017 3:08 pm

  “இவர் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவர் என்ற self certification புலி உலகின் மற்றயை அறிவாளிகளின் தரத்தை படம் பிடித்து காட்ட போதுமானது”
  இஸ்லாமிய பயங்கரவாத உலகின் அறிவாளிகளின் தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் ………………….


 25. Mohamed SR Nisthar on October 16, 2017 10:00 am

  என் ஊரில் ஒன்று சொல்வார்கள், அதாவது ” கலியாணவீடென்றால் அங்கு இவர்தான் மாப்பிள்ளை, அதே போல் சாவு வீடு என்றால் அங்கும் இவர்தான் சவம்” இப்படி பயஙரவாதத்திலும் கறுப்பன்(புலி)க்கு நிகர் கறுப்ப(புலி)னே/யே


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு