பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயம் மூடப்பட்டது!


Paris_Templeஐரோப்பாவில் தமிழ் மக்களின் கோட்டையாக விளங்கும் லாச்சப்பலில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயம் இன்று செப்ரம்பர் 29 2017 நீதிமன்ற கட்டளைக்கு அமைய மூடப்பட்டது. நவராத்திரி கொண்டாட்டங்கள் நடக்கின்ற வேளையில் இவ்வாலயம் மூடப்பட்டது அம்மன் அடியார்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் ஸ்தாபனங்களை தம்வசப்படுத்த முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிஸில் உள்ள பிள்ளையார் கோயிலை தம்வசப்படுத்த முயன்று தோல்வியடைந்த நிலையில் தங்களுக்கென உருவாக்கிய ஆலயம் இந்த அம்மன் ஆலயம் என சமூக ஆர்வலர் பாரிஸ் சுகன் தனது முகநூலில் குறிப்பிட்டு உள்ளார். 2009 மே க்குப் பின் இவ்வாலயம் வேறொருவரின் பெயருக்கு மாற்றப்பட்டு இருந்ததாகவும் பாரிஸ் குகன் தெரிவிக்கின்றார்.

இவ்வாலயத்தின் கட்டிடக் குத்தகைக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருப்பதாகவும் தொடர்ந்தும் ஆலயத்தை அவ்விடத்தில் நடத்துவதற்காக தாங்கள் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக போராடி வந்ததாகவும் ஆலய நிர்வாகஸ்தர் ஒருவர் தேசம்நெற் க்கு இன்று தெரிவித்தார். கட்டிட உரிமையாளர்கள் தாங்கள் கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடத்தை மீளக்கட்டியெழுப்பி வேறு தேவைகளுக்கு பயன்படுத்த உள்ளதால் ஆலயத்தை தொடர்ந்தும் நடத்துவதற்கான தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்ட்டதாகவும் அந்நிர்வாகஸ்தர் தெரிவித்தார். குத்தகைக்காலம் டிசம்பர் வரை இருந்த போதும் இப்போது திடிரென அவர்கள் ஆலயத்தை மூடிய அதிர்ச்சியில் ஆலய நிர்வாகம் உள்ளதாகவும் அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

ஆலயம் மூடப்பட்ட போதும் ஒரு சில அடியார்களுடன் ஆலயத்தில் பூஜைகள் நடைபெறுவதாகவும் கட்டிட உரிமையாளர்களுடன் தொடர்ந்தும் ஆலயத்தை திறந்து நடத்துவது தொடர்பாக தாங்கள் பேசிக்கொண்டு இருப்பதாகவும் அந்நிர்வாகஸ்தர் தெரிவித்தார்.

ஆலயம் உள்ள கட்டிடக் குத்தகை டிசம்பர் மாதத்துடன் முற்றுப்பெறுவதால் நீங்கள் ஆலயத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லவா? என்று கேட்ட போது அதற்கான இடத்தை இனிமேல் தான் தேட வேண்டும் என அந்த நிர்வாகஸ்தர் தெரிவித்தார்.

Seevaratnam_N_Sivayogamலண்டனில் உள்ள ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கும் இதே நிலை 2012இல் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளரான நாகேந்திரம் சீவரட்ணம் ஆலய கட்டிட உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்த போதும் கட்டிட உரிமையாளர்கள் கட்டிடத்தை உடைத்து மீள் கட்டுமாணம் செய்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆலயத்தை சீல் வைத்தனர்.

லண்டன் லூசியம் சிவன் கோவிலின் குத்தகைக்காலம் முடிவுக்கு வருகின்றது. ஆனால் ஆலயம் ஒரு மில்லியன் செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு உள்ளது. கட்டிட உரிமையாளர்கள் கட்டிடத்தை மீளப் பெற முயற்சிக்கலாம் அல்லது ஆலய நிர்வாகத்தின் நிர்க்கதி நிலையைப் பயன்படுத்தி வாடகையை உச்சத்துக்கு கொண்டு செல்லலாம்.

ஆலய நிர்வாகங்கள் ஆலயத்திற்கு வரும் மக்கள் வழங்கும் நிதியை வறுமைப்பட்ட தாயக வாழ் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் தேவையற்ற வழக்குகள் தேவையற்ற நிரந்தரமற்ற காணிகளில் புனரமைப்பு என்பனவற்றைச் செய்து நிதியை விரயமாக்குகின்றனர்.

ஆலய கட்டிட குத்தகை முடிவுக்கு வருவது குத்தகை எடுக்கின்றபோதே தெரிகின்ற விடயம். குத்தகை முடிவுக் காலத்திற்கு முன் வேறு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தினருக்கு உண்டு. அதைவிடுத்து நிதியை தகாத முறையில் வீண்விரயம் செய்வது அந்நிதி சென்றடைய வேண்டிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கின்ற அநீதி.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு