கிழக்கில் ஆளுநரின் தலைமையில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டம்


imageproxyகிழக்கு மாகாணத்தில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்ற ஆளுநர், பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கூட்டத்தின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சரவைக் குழு செயற்பட்டதைப்போல, அதற்குப் பதிலாக செயலாளர் குழு செயற்படும் எனவும், ஒரு வாரத்துக்கொரு முறை சந்திப்பு இடம்பெற்று, அபிவிருத்திகள் குறித்து கவனிக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், நேற்று முதல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இத்திட்டம் செயற்படுத்தப்படள்ளதாகவும், இன ரீதியான பாகுபாடின்றி மக்களுக்குச் சேவை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அபிவிருத்தித் திட்டங்களை மக்களுடன் தொடர்புபடுத்துவதற்கு, அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளாரெனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை  கிழக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவோர் அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம்” என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும், இன்று (02) உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பிலேயே, அவர் இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.

குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ, டிசெம்பர் 31​ஆம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்க வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிமனையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம், ஜனவரி மாதம் வழமைபோல் நடைபெறுமென, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு