ஐ.நா கூட்டத்தொடர் – இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணை – முக்கிய நாடுகள் ஆதரவு என்கிறார் சுமந்திரன் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் தொடர்பில் புதிய பிரேரணையொன்று நிறைவேற்றப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரேரணைக்கான ஆதரவுப்பட்டியலில் முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இம்முறை பிரேரணையை நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய பிரேரணை நிறைவேற்றம் தொடர்பில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்களின்போது மேற்படிவியடம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்நிலையில் நான் அமெரிக்காவின் தூதுவர் ஜுலி சாங், நேர்வே உயர்ஸ்தானிகர் ட்ரினி ஜோரானில் எஸ்கெடல், சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.

இதன்போது, இலங்கை தொடர்பில் ஐ.நா.வில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை பற்றி விசேட அவதானம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கான ஆதரவு நாடுகளின் பட்டியல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. கடந்தகால தரவுகளின் அடிப்படையில் குறித்த ஆராய்வு நடைபெற்றிருந்தது.

அத்துடன், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் பிரேரணையில் புதிதாக உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கரிசனை வெளியிட்டிருந்தேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *