உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வடமாகாண சபையில் தீர்மானம்


68dbb6f574e242b2efdd826937d384dd_XLஅநுராதபுர சிறைச்சாலையில் தொடர்ந்து 11 ஆவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வடமாகாண சபையில் விஷேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்றைய தினம் வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள மாகாணசபையில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபை அமர்வின் போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விஷேட கவனயீர்ப்பு பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் சபையில் முன்வைத்தார்.

இதன் போது உரையாற்றிய அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்,

“வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வரும் தமது வழக்குகளை சிங்கள பிரதேசத்திற்கு மாற்றுவதை கண்டித்தும், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தம்மை தடுத்துவைப்பதை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேரும் கடந்த பத்து நாட்களாக அநுராதபுர சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூவரினதும் உடல் நிலை தற்போது மோசமடைந்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரேரணையை முன் மொழிந்தார்.

குறித்த பிரேரணையானது எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட அனைத்து சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த நிறைவேற்றத்தை உடனடியாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு