சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை சுமந்திரன் நோகடித்துவிட்டார்


thumb_large_mano_ganesanமாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும், அதை கொண்டுவர தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டிப்பதன் மூலம் சமசமாஜ கட்சியை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்தினவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் இந்த நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் இணையத்தின் வாராந்திர கலந்துரையாடடில் இதுபற்றி கருத்து கூறிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

இந்த இருவரில் ஜயம்பதி விக்ரமரத்தின எம்பி, என். எம். பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா, பெர்னாட் சொய்சா ஆகிய புகழ் பெற்ற இடதுசாரி தலைவர்களை கொண்டிருந்த கட்சியை அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே ஒரு உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் எம்பி, இந்நாட்டு வரலாற்றில் சொல்லொணா துன்பங்களை சந்தித்து, இன்னமும் தீர்வில்லாமல் தவிக்கும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உடன்பிறப்புகளால் பாராளுமன்றத்துக்கு அனுப்பட்ட பதினாறு தமிழ் எம்பிக்களில் ஒருவர்.

சட்டத்தரணிகளான இந்த இருவரும், இன்று தாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதை மறந்து சட்டத்தரணிகள் என்பதை மாத்திரம் மனதில் கொண்டு செயற்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேவேளை பாராளுமன்றத்தையும் நீதிமன்றமாக எண்ணி செயற்படுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த சந்தேகங்கள் சிதறி வாழும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் பத்தொன்பது பாராளுமன்ற உறுபினர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பதை இவர்கள் இருவரும் சரிவர புரிந்துக்கொள்ள வேண்டும்.

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது நாம் கொண்டுவந்த திருத்த யோசனைகளினால், நமது கட்சிகள் தேசியரீதியில் நன்மதிப்பை இழந்துவிட்டன என்று சொல்லும் ஜயம்பதி விக்ரமரத்தின எம்பி, இடதுசாரி கட்சிகள் தொடர்பில் இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எப்போதோ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

எம். ஏ. சுமந்திரன் எம்பி, தான் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு விடுதலை இயக்க தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதி என்பதை மனதில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை மாத்திரம் உறுதி செய்ய விரும்பும் இனவாதிகள் மத்தியில் நாம் நன்மதிப்பை இழந்துவிடுவதையிட்டு நாம் கவலைப்பட போவதில்லை.

ஆனால், நல்லெண்ணம் கொண்ட பெருந்தொகையான சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் இன்று எம்மை புரிந்துக்கொண்டு விட்டார்கள் என்பதை இந்த இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கம் நாம் போராடி உருவாக்கிய அரசாங்கம். தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய எங்கள் கட்சிகளை சார்ந்த நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கிறோம். பெருந்தொகையான ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருக்கிறோம். பதினெட்டு எம்பிக்கள் இருக்கிறோம்.

எனவே இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய கரிசனை எமக்கு இருக்கிறது. அதை நாம் செய்கிறோம். மகிந்த ராஜபக்ச அணி மீண்டும் அரங்கேற நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அதேவேளை, நாம் பிரதிநிதித்துவம் செய்யும் சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை பலியெடுக்கும் எந்த ஒரு தேர்தல்முறை ஏற்பாட்டுக்கும் நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

இது இரண்டையும் ஒருசேர செய்திடும் ஆளுமையும், அறிவும் எமக்கு இருக்கிறது. இதுபற்றி எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து விட்டு ஜயம்பதி விக்ரமரத்தின, எம். ஏ. சுமந்திரன் ஆகிய இரண்டு எம்பிக்களும் தங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களினதும், கட்சியினதும் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் கருத்து
 1. Mohamed SR Nisthar on October 7, 2017 9:56 am

  மனோ கணேசன்!

  நீங்களும் ஒரு கலந்துரையாடலில் இருந்து கொண்டு தேர்தல் மேடையில் பேசுவதை போன்று பேசியுள்ளீர்கள் என்றே தோன்றுகின்றது. நீங்கள் இன்னும் இந்த கலப்பு தேர்தல் முறையினால் எந்தனை உறுப்பினர்களை இழக்கவுள்ளீர்கள். அப்படி இழக்கும் போது சமூகத்துக்கு என்னஎன்ன பாதிப்புகள் வரும் அல்லது வரலாம் என்ற உங்கள் எதிர்வு கூரலை விளக்காமல் வெறுமனே இந்த சிறுபான்மை கட்சிகள் தமது கட்சிக்கு கிடைக்கும் ஆசனங்கள் எத்தனை என்ற கணக்கீட்டிலும், அதன் பிறது எமது கட்சிக்கு, உள்ளூர் மட்டத்தில் இத்தனை பிரதிநிதிகள், மாகாண மட்டத்தில் இத்தனை உறுப்பினர், தேசிய மட்டத்தில் இத்தனை உறுப்பினர் ஆகவே எனக்கு, எனது குடும்பத்துக்கு,… என்று பேரம் பேசும்(?)உங்கள் சக்தி குறைந்துவிடுமோ என்று பயப்டுகின்றீர்கள். இனத்தைக் காப்பாற்ற புறப்பட்ட தலைவர் முதல் இன ஐக்கியம் என்று
  பேசிய அனைத்து நபர்களும், கட்சிகளும் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறைகளை பார்க்கும் போது என்ன செய்வது என்று பொது மக்கள் குழம்பிப்போய் உள்ளனர். மனோ இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுஙகள்.


 2. BC on October 7, 2017 1:43 pm

  இவர் இன்னொரு கதையும் சொன்னவர் குண்டும் பீரங்கியும் இரத்தத்தையும் சதைகளையும் தொலைத்துக் கொண்டு நடந்த யுத்தத்தை விட இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் அபாயகரமானது என்று அவர் கூறியுள்ளார்.குண்டும் பீரங்கியும் இரத்தத்தையும் சதைகளையும் துளைத்து இலங்கையர்கள் மக்கள் மிகவும் துன்புறுவதைவிட துன்பபடாத யுத்தத்தால் இவருக்கு என்ன பிரச்சனை?
  தான் இலங்கை ரஜனிகாந்து கமலகாசன் அரசியலுக்கு வரலாம் என்ற நினைப்பு இவருக்கு


 3. karuppan on October 10, 2017 9:10 am

  “”இவர் இன்னொரு கதையும் சொன்னவர் குண்டும் பீரங்கியும் இரத்தத்தையும் சதைகளையும் தொலைத்துக் கொண்டு நடந்த யுத்தத்தை விட இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் அபாயகரமானது என்று அவர் கூறியுள்ளார்.குண்டும் பீரங்கியும் இரத்தத்தையும் சதைகளையும் துளைத்து இலங்கையர்கள் மக்கள் மிகவும் துன்புறுவதைவிட துன்பபடாத யுத்தத்தால் இவருக்கு என்ன பிரச்சனை?”"

  அவர் சொல்வதில் ஒரு அர்த்தம் இருப்பதாகவே எனக்கு படுகிறது. குண்டும் பீரங்கியும் பாவித்து நடந்த யுத்தம் முடிந்து ஆண்டுகள் எட்டு ஆவதற்குள் குண்டும் பீரங்கியும் முழங்குவதற்கு என்ன காரணம் இந்துவோ, என்ன சூழ்நிலை இருந்ததுவோ அந்த சூழ்நிலை உருவாக்கி வருவதை யாரும் மறுக்க முடியாது. மஹிந்த தலைமையில் இடதுசாரிகள் படைசூழ மகாநாயகே தேரர்களின் ஆசையுடனும் அரவணைப்போடும், தயான் ஜயதிலக்க போன்று ஆலோசனையோடு புதிய அரசியல் சாசனத்திற்கு எதிரான பேரினவாத எழுச்சியும், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற நாம்திணை வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான எழுச்சியும் எங்கு கொண்டுசெல்லும் என்பதற்கு எமக்கு சரித்திரம் படிக்கவேண்டிய அவசியம் இல்லை.


 4. BC on October 10, 2017 11:57 pm

  மனோ கணேசன் கதை விட்டதை குண்டும் பீரங்கியும் இரத்தத்தையும் சதைகளையும் தொலைத்துக் கொண்டு நடந்த யுத்தத்தை விட இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் அபாயகரமானது என்பதை தான் சொன்னனான் குண்டும் பீரங்கியும் வெடித்து இரத்தமும் சதையும் வெளிப்பட்டு உறவினர்கள் இறக்கும் போது தான் வலிக்கிறது பாதிப்பு ஏற்படுகிறது குண்டும் பீரங்கி துவக்கு பாவிக்காமல் வாயால் சத்தம் போட்டு ஏசி இப்போது போல சண்டை போட்டு கொள்ளட்டுமே பாதிப்பு இல்லை இலங்கை உள்ள வரை வாய் சண்டை நடந்து கொண்டே இருக்கும்.


 5. karuppan on October 11, 2017 8:41 am

  வாயால் சத்தம் போடா ஆரம்பித்து தான் 1958 இல்,1970 இல் 1977 இல் 1983இல், 1989 இல், 1995இல் 2009இல் எல்லாம் இரத்த ஆறு நாடு முழுவதும் ஓடியது. இது தொடர்கதை அல்லவா?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு