புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்கள் பெற்றுக் கொள்ள முடியும்


image_8b1e5a851fஎமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே இருதரப்புக் கலந்துரையாடல்கள், ஹெல்சின்கி நகர ‘கெஸரன்தா’ பிரதமர் உத்தியோகபூர்வ இல்லத்தில், செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியானதன் பின்னர், இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்புக்களையும் பின்லாந்தின் பிரதமர் பாராட்டினார்.

கல்வி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, டிஜிட்டல் மயமாக்கல், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் போன்ற பல துறைகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனஞ் செலுத்தப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பின்லாந்தின் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

உலகின் முன்னேற்றகரமான கல்வி முறைமைகளை செயற்படுத்தும் பின்லாந்து உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்ப எப்போதும் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக பின்லாந்து தரப்பினர், இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக் காட்டினர்.

பின்லாந்தின் எரிசக்தி உற்பத்தித் தொழிநுட்பத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாகவும், இலங்கையில் பல்வேறுப்பட்ட கருத்திட்டங்களை செயற்படுத்த கொடைகள் மற்றும் மானிய வட்டி வீதங்களில் கடன் உதவிகளை வழங்க இணங்கியமை குறித்தும் விக்கிரமசிங்க, யுஹா சிபிலா அவர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலகளாவிய போக்குகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் கவனஞ் செலுத்தப்பட்டது. தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அயலிலுள்ள பெரிய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு, பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் பூர்த்தியடையும் எதிர்வரும் வருடத்தில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

இருதரப்புக் கலந்துரையாடலின் பின்பு இலங்கைத் தூதுக் குழுவினருக்கு பின்லாந்து பிரதமர் இராப்போசன விருந்தொன்றை வழங்கினார்.

அதன் பின்பு இரு நாடுகளின் பிரதமர்கள் ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தினர்.

அந்த ஊடகச் சந்திப்பில், அவ்விருவரும் தெரிவித்திருப்பதாவது,

இன்று எமக்கு முக்கியமான பல தீர்மானங்களை மேற்கொள்ள முடிந்தது. இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே காணப்பட்ட பழைய உறவுகளை மென்மேலும் உறுதிப்படுத்தி அந்த உறவுகளைப் பலப்படுத்துவதற்கு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும், உடன்படிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ளவும் எம்மால் முடிந்தது.

இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே எரிசக்தியை மேம்படுத்தவும், புதிய எரிசக்தி வழிமுறைகள் தொடர்பான ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவும் நாம் உடன்பட்டோம். அதே போன்று எமது கல்வி முறைமையை நவீனமயப்படுத்தவும், விசேடமாக 13 வருட பாடசாலைக் கல்வியைக் கட்டாயப்படுத்தவும், உலகின் மிகச்சிறந்த கல்வி முறை அமுலாகும் பின்லாந்தின் இரண்டாம் நிலை, தொழில்கல்வி நிறுவனங்களுடன் தொடர்புபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினோம். எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும். இவையனைத்தும் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

“இது முக்கியமானதோர் வருடமாகும். பின்லாந்துக்கு சுதந்திரம் கிடைத்து ஒரு நூற்றாண்டு கழியும் சந்தர்ப்பத்தில் எமது நட்புறவை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் பூர்த்தியாகும் எதிர்வரும் வருடத்தில் பின்லாந்து பிரதமர் உள்ளிட்ட ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தருவதன் ஊடாக அந்த உறவைப் மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும்” என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு