அரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் சந்திப்பு


thumb_large_mano_ganesanதமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும் இந்த நிலைமை காரணமாக இன்று வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் மனோகணேசன். ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அவர், தற்போதைய நிலைமைகள் குறித்து விபரித்தார்.

பேச்சுவார்த்தையின் போது, வடக்கில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதிபரும், இராணுவ தளபதியும் கூறியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லையானாலும் அரசியல் ரீதியாக இது பெரும் நெருக்கடி நிலைமையை வடக்கில் ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதிக்கு தான் எடுத்துக்கூறியதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சட்டமா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி இதுபற்றிய சட்ட மாஅதிபரின் கருத்தை கேட்டு தெரிந்துக்கொண்டார்.

இந்த வழக்கின் சாட்சிகளாக இருக்கின்ற முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களே தங்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவுக்கு செல்ல இயலாது என கூறுவதாகவும், இதனாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கூறுவதாக, ஜனாதிபதி தம்மிடம் குறிப்பி்ட்டதாக தெரிவித்தார்.

இன்று யுத்தம் நிறைவடைந்த நிலையில் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எவரும் சென்று வரக்கூடிய நிலையில், சட்டமாஅதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது தமிழ் மக்களுக்கு தவறான செய்தியை தருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள தமிழ்த் தின விழாவை பொறுப்பேற்று செய்யும் எமது கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி ராஜாங்க அமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று காலை பேசினார்கள்.

அவர்கள் இருவரும் கூட இது தொடர்பில் எனது கருத்தையே கொண்டுள்ளனர் என நான் மேலும் ஜனாதிபதியிடம் கூறினேன்.

இதுபற்றி தான் மேலும் ஆராய்ந்து முடிவை எடுப்பதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

இது இன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் திருப்திகரமான பதிலாக இல்லாமல் இந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியிலேயே இருப்பதை காட்டுகிறது.

இது நமது அரசாங்கத்துக்கு, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற நற்பெயரை பாதிக்கும். எனவே நியாயமான முடிவை எடுங்கள் என கூறிவிட்டு வந்தேன்.

இது தொடர்பில் தான் மேலும் ஆராய்ந்து பார்த்து முடிவுகளை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு