வட – கிழக்கில் பிராந்திய நூலகச் சிந்தனைகள் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)


Logo_National_Library_SL27.10.2014 அன்று இலங்கையின் சிறந்த பொது நூலகத்துக்கான Swarna Purawara என்ற விருது யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி அமைச்சு> மாகாண அரசுகள் என்பனவற்றின் அனுசரணையுடன் களனிப் பல்கலைக்கழகத்தின் நூலகவியல், தகவல் விஞ்ஞானப் பிரிவு இவ்விருதினை வழங்கியுள்ளது. ஆளுநர் சந்திரசிரியின் ஆட்சிக்காலத்தில் இது இடம்பெற்றுள்ளது. மூன்று ஆண்டுப் பழமையான செய்திதான் என்றாலும் பத்திரிகைகளில் பரவலாக இச்செய்தி வந்திராத நிலையில் எமக்கு இது இன்று புதிய செய்திதான்.

இச்செய்தியின் பின்னணியில் சில கருத்துக்களை பகிர்வது காலத்தின் தேவையாகின்றது. அதுவே இக்கட்டுரையின் நோக்கமுமாகும். எனது கருத்துக்களுக்கான பின்னணி பற்றிய புரிதலுக்காக இலங்கையின் சமகால நூலக சேவை பற்றிய சில தகவல்களை அறிந்திருத்தல் பயனளிக்கும்.

இலங்கை தேசிய நூலகத்தின் 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

நூலக வகை                                                         வடக்கு     கிழக்கு     முழு இலங்கையில்
திணைக்கள நூலகங்கள்                                    0                    0                          34
பல்கலைக்கழக நூலகங்கள்                            5                     6                          58
பாடசாலை நூலகங்கள்                                   888                  972                     9623
பொது நூலகங்கள்                                               115                   139                     1180
பெளத்த பிரிவினா நுலகங்கள்                       0                     20                       712
ஆசிரியர் கல்லூரி நூலகங்கள்                       4                       4                         30
தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள்          2                       5                         37
விஷேட நூலகங்கள்                                              0                      0                         65
மொத்தம்                                                                 1014                 1146                    11739

(மூலம்: Statistical Handbook on Libraries in Sri Lanka, 2010. National Library)

இலங்கையின் நூலக சேவைகள் பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. நூலக சேவையின் பயனீட்டாளர் பிரதான மூன்று பிரிவுகளுக்குள் அடங்குகின்றனர். பொது மக்களுக்கான நூலக சேவைகள் பொது நூலகங்களின் வாயிலாகவும், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் வாயிலாகவும் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஆய்வாளர்களுக்குமாக கல்விசார் நூலக சேவை அந்தந்த நிறுவனங்களின் மூலமும் கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் மூலமும் வழங்கப்படுகின்றன. தனியார் அமைப்புகள்; தமது அங்கத்தவர்களுக்கான சிறப்பு நூலக சேவைகளை தத்தம் அமைப்புகளின் பிரிவுகளாக முன்னெடுக்கின்றன.

பொது நூலக சேவையை மேற்கொள்வதில் பிரதேச சபைகள், மாநகரசபைகள், நகரசபைகள் என்பன நிதிவளங்களுக்கேற்ப வரையறைகளுடன் தத்தமது பிரதேச மக்களுக்காக வழங்குகின்றன. இவர்களுக்கான நூலகர்களின் நியமனங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொள்கின்றது. அவர்களுக்கான வேதனத்திட்டத்தையும் இவ்வமைச்சே கையாள்கின்றது.

பாடசாலை நூலகங்களின் நூலகப் பணியாளர்களை கல்வி அமைச்சு கையாள்கின்றது. பாடசாலைகளின் தரத்துக்கேற்ப நூலகர்களை நியமிப்பதால் பெரும்பாலான நடுத்தரப் பாடசாலைகளில் தனியான நூலகர்கள் இருப்பதில்லை. சில இடங்களில் நூலகராகப் பணியாற்றச் செல்பவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகி ஆசிரியராக மாறிவிடுவதும் உண்டு. 2010இல் ஆசிரிய நூலகர்கள் 1000பேருக்கான நியமனங்கள் இலங்கையில் வழங்கப்பட்டன. இவர்களில் பலர் இன்று தமது உயர்கல்வி வசதிகளுக்காக நூலகர் பணியைக் கைவிட்டு ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள் என்பதும் கவனத்திற்கும் கவலைக்குமுரியது. பல்கலைக்கழக நிர்வாகம் அந்தந்தப் பல்கலைக்கழகப் பேரவையினால் நிர்வகிக்கப்படுகினறது. நூலகர்களுக்கான வேதனம் பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்படுகின்றது.

தனியார் நூலகங்களும், ஆய்வு நூலகங்களும் தத்தமது நிறுவன வருவாய்க்கும் தேவைக்கும் ஏற்ப தமது அங்கத்தினருக்கான நூலகசேவையை வழங்கும் தகுதிவாய்ந்த நூலகர்களை பணிக்கமர்த்திக்கொள்கின்றன.

இலங்கையின் பொது நூலக, பாடசாலை நூலக மற்றும் பல்கலைக்கழக நூலகங்களின் நிர்வாகத்தில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ளாது தேசிய நூலகம் ஒரு தேசிய மட்டத்திலான கண்காணிப்பு, துறைசார் ஆலோசனை வழங்கல் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டுள்ளது. நூலங்களுக்கும் அப்பால் இலங்கையின் அறிவார்ந்த பிரஜைகளை உருவாக்கும் பெரும்பொறுப்பு அதற்குண்டு. ஆக்க இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் வளர்த்தெடுப்பது, அவர்களுக்கு வேண்டிய நிபுணத்துவ உதவிகளை வழங்குவது, வெளியீட்டுத்துறையை கண்காணிப்பது, தேசிய மட்டத்தில் நூல் வெளியீடுகளை பதிவுசெய்வது எனப் பல வேலைத்திட்டங்களை தேசிய நூலகம் முன்னெடுக்கின்றது.

தேசிய நூலகத்தின் பல நல்ல திட்டங்கள் இலங்கையின் அனைத்துப் பிரஜைகளையும் சென்றடைவதில்லை. குறிப்பாக வட-கிழக்கில் வாழும் தமிழருக்கு அதன் சேவைத்திட்டங்கள் கரத்தரங்குகளுடன் நின்றுவிடுகின்றன. காரணம் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மும்மொழிகளிலும் பிரிந்துவாழும் பிரதேசங்களை சிங்கள மொழி மூலம் மாத்திரம் ஒன்றிணைப்பது எவ்வகையிலும் சாத்தியமானதொன்றன்று.

Logo_National_Library_of_SL இன்று இலங்கைத் தேசிய நூலகம் எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினை என்னவென்றால் இலங்கையின் தமிழ்ப்பிரதேசத்தின் வெளியீட்டுத்துறையை அதனால் கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் இயலாமையாகும். ஈழத்தமிழர்களின் தனித்துவமான வெளியீட்டுப் பபரம்பரியம் என்னவென்றால் ஈழத்தவர்களின் நூல்கள் சிங்கள நூல்களைப் போலல்லாது புவியியல் வரம்பு கடந்து உலக அரங்கில் வெளியிடப்படுவதாகும். கையளவு தமிழ் தெரிந்த சிற்றூழியர்களை வைத்துக்கொண்டு இலங்கைத் தேசிய நூலகம் தமிழ் இனத்துக்குச் சேலைவயாற்றுவது என்பது சாத்தியமற்றதாகும். இலங்கைத் தேசிய நூலகத்தின் எந்தவொரு தமிழ் ஊழியரும் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் துறைத் தலைமைத்துவம் அற்றவர்களாகவே இலங்கைத் தேசிய நூலகத்தில் உள்ளனர் என்பது சோகக் கதை.

தமது வசதிக்காக தமிழ்ப்பிரிவு என்று ஒரு பிரிவை வைத்திராமல் தமிழ் நூல்களையும் ஆங்கில மொழியில் தேடும்வகையில் transliteration செய்யப்பட்டு இலகுவில் நூலைக் கண்டறியமுடியாத நிலையை அங்கு செல்பவர்கள் அனுபவித்திருக்கலாம்.

கடந்த சில காலங்களுக்கு முன்னர் தேசிய நூலகத்தினால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் விபரத் தொகுப்பு இலங்கையின் தேசிய நூலகம் எவ்வளவுது}ரம் தமிழ் மக்களைச் சென்றடைந்திருக்கிறது அல்லது அம்மக்கள் பற்றி அறிந்திருக்கிறது என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இலங்கையர்களான எழுத்தாளர்களின் பெயர், நிரந்தர முகவரி, அலுவலக முகவரி, தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை அகரவரிசையில் இந்நூலில் தந்துள்ளார்கள். இந்நூலுக்கு மும்மொழிகளிலும் தலைப்பிடப்பட்டிருப்பினும் தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளர்களின் தனிப்பட்ட முகவரிகள், அலுவலக முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஆங்கில மொழியிலும், ஆங்கில அகரவரிசைப் பட்டியல் ஒழுங்கிலும் காணப்பட்டுள்ளமை தேடலுக்கு இலகுவாக உள்ளது. 692 மொத்தப் பதிவுகளில் தமிழ் எழுத்தாளர்களில் 94 பெயர்களும், முஸ்லிம் எழுத்தாளர்களில் 46 பெயர்களும் மாத்திரமே தேசிய மட்டத்தில், தேசிய நூலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் காணப்படுகின்றன. இப்பெயர்களில் ஒரு சில தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களே பரிச்சயமான எழுத்தாளர்களாக எம்மால் இனங்காண முடிகின்றது. தேசியமட்டத்தில் எழுந்துள்ள இந்த நூல் ஒரு சாதாரண ‘முகவரிப் பதிவேடாகவோ (Address Book),  தொலைபேசி இலக்கப் பதிவேடாகவோ (Telephone Directory) தான் எமக்குப் பயன்படப் போகின்றது என்பது கவலைக்குரியதாகும்.

இவ்வாறே இலங்கையின் பாடசாலை நூலகங்களின் வாசிப்புப் புள்ளிவிபரம் பற்றி Readership Survey of School Children in Sri Lanka என்ற ஆய்வினை 2014இல் தேசிய நூலகத்தினர் அறிக்கையிட்டிருந்தார்கள், (ISBN: 978-955-8383-90-2). பெருஞ்செலவில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் வடக்கு-கிழக்கு தவிர்ந்த பிற மாநிலங்களின் 500 பாடசாலைகளை மட்டுமே தேர்வுசெய்து அவற்றின் மாணவர்களை ஆய்வில் பங்கேற்க வைத்திருந்தார்கள். போர் முடிவுற்று ஐந்தாண்டுகளின் பின்னர்கூட வடக்குக் கிழக்கு தகவல்களைப் பெறமுடியாமைக்கு உள்நாட்டுப் போரையே காரணமாக்குகின்றனர். இந்நிலையில் இவ்வறிக்கையின் தரவுகளோ முடிவுகளோ வடக்கு கிழக்கு பாடசாலைகளின் பங்கேற்பு இன்றி, மொத்த இலங்கைத் தமிழ் மாணவ சமூகத்தின் பாடசாலை வாசிப்புப் பற்றிய ஆய்வுக்கு எவ்வகையில் உதவமுடியும் என்பதற்கு தேசிய நூலகத்திடம் பதில் ஏதும் இல்லை.

சர்வதேச அமைப்புகள் இலங்கை பற்றிய அறிவியல் தேடலுக்கு முதலில் நாடும் நிறுவனம் அந்நாட்டின் தேசிய நூலகமாகும். அவ்வகையில் இலங்கையில் வெளியிடப்படும் நூல்களை ஆவணப்படுத்திவைக்கும் பெரும்பணி தேசிய நூலகத்தினுடையது. அதற்கான தனிப்பிரிவே அங்கு இயங்குகின்றது. இலங்கையில் வெளியிடப்படும் மும்மொழி நூல்களையும் பாதுகாத்து வைப்பதுடன் அவற்றின் நூலியல் தகவல்களை ஒரு நூல்விபரப்பட்டியலாக இலங்கைத் தேசிய நூற்பட்டியல் என்ற பெயரில் மாதாந்தம் அச்சிட்டு விநியோகிப்பதும் தேசிய நூலகத்தின் கடமையாகும். மாதாந்தம் வெளிவரும் இந்நூற்பட்டியலைப் பார்ப்போமானால் அதில் ஈழத்துத் தமிழ் நூல்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளன. பெரும்பாலானவை அரசாங்கப் பாடநூல்களாகவும் பிற அரச திணைக்கள வெளியீடுகளாகவும் காணப்படுகின்றன. இது ஒரு தமிழ் நூலகத்தின் முழமையான நூல்கொள்வனவுக்கு எவ்வகையிலும் நம்பகத் தன்மையுடன் பயன்படுத்த இயலாது.

இந்நிலையில் இன்று நாம் மாகாண நூலகங்கள் அல்லது பிராந்திய தேசிய நூலகங்கள் பற்றிய சிந்தனையை விரிவாக்கிக்கொள்ளவேண்டும்.

பிராந்திய தேசிய நூலகமொன்று தேவை என்றதும், எமது மனதில் மதலில் தோன்றுவது யாழ்ப்பாணப் பொது நூலகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகமுமேயாகும். இவை இரண்டும் வரையறைக்குட்பட்ட நிறுவனங்கள். யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் பெயர் உலக அரங்கில் பேசப்பட்டாலும் அதன் வரையறைகள் யாழ்ப்பாண மாநகரசபை நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு உட்பட்டதேயாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேவைப்பரப்பு அதன் மாணவர்களினதும் அதன் ஆய்வாளர்களினதும் தேவைகளை பூர்த்திசெய்வதாகவே அமைகின்றது. எனவே இவ்விரண்டு நிறுவனங்களையும் பிராந்திய நூலக சேவைத்திட்டத்தில் பொருத்திக்கொள்வதை தவிர்த்தே நாம் சிந்திக்கவேண்டும்.

மாகாண அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளில் கல்விசார் நிறுவனங்கள்- நூலகங்களை நிறுவி வளர்த்தெடுக்கும் உரிமையும் உள்ளபோதிலும், மாகாண அரசின் எந்தவொரு துறையினரும் இதுபற்றிய திடடங்களை உருவாக்கி வருவதாகத் தெரியவில்லை. அத்தகைய சிந்தனைத் தெளிவைப் பெற நாம் பிராந்திய தேசிய நூலகச் சிந்தனையை தீவிரமாக உள்வாங்கியாக வேண்டும். இது இன்றைய சூழலில் எமது அறிவுசார் தேட்டங்களின் இழப்புகளைத் தடுக்க உதவும். ஏற்கெனவே இழந்துவிட்டதில் சிலவற்றையாவது மீளப்பெற பிராந்திய தேசிய நூலகம் அல்லது மாகாண தேசிய நூலகம் உதவும்.

இலங்கைத் தேசிய நூலகத்தை மாத்திரம் நம்பியிராமல் மாகாணமட்டத்தில் தேசிய நூலகமொன்று ஆவணக்காப்பகமாக வடக்கு மாகாணத்திலாவது மதலில் உருவாக்கப்படவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்துடன் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களையும் இணைந்ததாக இந்தப் பிராந்திய தேசிய நூலகத்தை உருவாக்கலாம்.

பிராந்திய தேசிய நூலகமொன்றின் பணிகளாவன:

1. வட பிராந்தியத்தில் உள்ள சகல நூலகங்களுக்கும் தாய்ச்சங்கமாக இயங்குதல், அப்பிரதேச நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் வழிகாட்டியாகவிருந்து கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், துறைசார் பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி அத்துறையில் நூலகர்கள் மேலும் முன்னேற வழிவகை செய்தல்.

2. வடபிரதேசத்தில் வெளிவரும் நூல்கள் மற்றும் ஆவணங்களின் அதிகாரபூர்வமான சேமிப்புக் காப்பகமாகத் திகழ்தல். வடக்கு மாகாண சபையின் சட்டபூர்வமான ஆவணச் சேர்க்கைக் களஞ்சியமாக இயங்குதல்.

3. ஈழத்தமிழர்களால் உலக அரங்கில் வெளியிடப்படும் நூல்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து பிராந்திய நூல்விபரப்பட்டியல் ஒன்றினை நம்பகத்தன்மை கொண்டதும், இற்றைப்படுத்தப்பட்டதுமான ஆவணமாக வெளியிடல்.

4. இன்றளவில் நூல்களையும் ஆவணங்களையும் பேணாது இயற்கை அழிவுக்கு உட்படுத்தப்படுவதை தடுத்து, அவற்றை பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் வகையில் நவீன பிராந்திய சுவடிகள் காப்பகப் பிரவொன்றினை இயக்குதல். பழுதடைந்த நூல்களை, ஏடுகளைப் புனரமைக்கும் பிரிவினை ஏற்படுத்தி பழைய ஆவணங்களைப் பாதுகாத்தல்.

5. பிராந்திய எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் வகையில் ஆக்கமும் ஊக்கமும் நிதி ஆதரவும் வழங்கி ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகச் சூழல் ஒன்றினை உருவாக்குதல். காலத்துக்குக் காலம் அவர்களத நூல்களை சந்தைப்படுத்தும் வகையில் கண்காட்சிகள், புத்தகச் சந்தைகளை மேற்கொள்ளத் தமது கட்டடத்திலேயே வழியமைத்துத் தருதல்> தாயக எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களிடையே அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளை அதிகாரபூர்வமாக மேற்கொள்ளல்.

6. தேசிய நூலகம் ஒரு பொது நூலகம் அல்ல என்பதை இங்கு கவனத்திற் கொள்ளவேண்டும். அங்கு பொது நூலகமொன்றின் ஆவணச் சேர்க்கைகள் போன்று அயலக ஜனரஞ்சகங்கள் அனைத்தையும் பெற்றுப் பேணப்படமாட்டாது. அதற்கென வடபிரதேசத்தில் உள்ள 115 பொது நூலகங்களும் இயங்கிவருகின்றன. அனைத்திலும் உள்ளுர் நூல்களைவிட அயலக நூல்களே அதிகம் என்பது அனைவரும் அறிந்த விடயம். பிராந்திய தேசிய நூலகம் அப்பிராந்தியத்தின் தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பேணியும், பிற அமைப்பகளுடன் சுமுகமான அறிவுசார் தொடர்புகளைப் பேணியும் ஒரு தாய் அமைப்பாக வட பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும். இதற்கான நிதியமொன்றினை உள்ளுர் வளங்களையும் புலம்பெயர் தமிழர்களின் நிதி ஆதரவையும் கொண்டு உருவாக்கிக்கொள்ளலாம்.

7. பிராந்திய தேசிய நூலகத்தின் செயற்பாட்டுக்கு உள்ளுர் அறிவுஜீவிகளுடன் புலம்பெயர்ந்துவாழும் ஈழத்து அறிவுஜீவிகள் மற்றும் நூலகத் துறைசார் ஆர்வலர்களின் அங்கத்துவத்தையும் உள்வாங்கி அரசியல் சார்பற்ற ஒரு ஆலோசகர் குழுவை உருவாக்குவது முக்கியமானதாகும். பிராந்தியத் தேசிய நூலகம் எவ்வித அரசியல், கட்சி, கொள்கை சார்பானதாகவோ இருக்கக்கூடாது.

8. இப்பிராந்திய நூலக சேவைக்கான ஊழியர்கள் துறைசார் கல்விசார்ந்த அடிப்படையில் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் அளிக்கப்படாமல் தேர்வுசெய்யப்படுவது மிகவும் இன்றியமையாததாகும்.

இத்தகைய பின்னணியில் உருவாகும் பிராந்திய தமிழ்த் தேசிய நூலகம் எதிர்காலத்தில் இலங்கையின் எஞ்சிய மாகாணங்களுக்கும் முன்னோடியாகத் திகழும் என்று நம்பலாம். இக்கட்டுரையின் அரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, இலங்கையின் முதன்மையானதும் முன்னோடியானதுமான பிராந்திய நூலகமொன்றை உருவாக்கிவளர்த்தெடுத்து மீண்டும் ஈழத்தமிழர்களின் அறிவுத்தேட்டத்தை மேலெழச்செய்வோமா?

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு