“தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை.” – தமிழ்தேசிய கட்சிகளுக்கு ரணில் அமைச்சரை் டக்ளஸ் அறிவுரை !

“தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய சபையில் இணைந்து கொள்ளுங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தேசியசபையின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றிருந்த நிலையில், பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் அதில் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும். உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த் தரப்புக்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைப்பதற்கான சாத்தியமான எந்தவொரு விடயங்களையும் எதிர்மறையாகவே கருதுகின்றார்கள்.

இதனால், பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீடித்துக்கொண்டே இருக்கின்றது. இதற்கு அவர்களின் சுயலாப அரசியலே காரணமாகின்றது. பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் அவர்களால் அரசியல் களத்தில் நிற்கமுடியாது என்பதற்காகவே எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.

தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை. ஆகவே, குணாம்ச ரீதியான அணுகுமுறைகள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக, கிடைக்கும் வய்ப்புக்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. 1987ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தாது எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ்த் தரப்புக்கள் மீண்டும் கிடைத்தள்ள வாய்ப்பினை இழந்து விடக்கூடாது.

1987ஆம் ஆண்டிலிருந்து வாய்ப்புக்களை எதிர்மறையாக விமர்சித்து தவறவிட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையில் பங்கேற்க வேண்டும். இந்த தேசிய சபையானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் தோற்றம் பெற்றுள்ளளது.

ஆகவே, நிச்சயமாக பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைவதற்கான வழிகளை எட்டுவதற்கு வாய்ப்பாக இருப்பதற்கு அதிகளவான சாத்தியப்பாடுகள் உள்ளன. அதனடிப்படையிலேயே தமிழ்த் தலைமைகள் தீர்மானங்களைச் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய சபையில் வாய்ப்பினை சாகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *