அடுத்த தலைமுறையினரின் புதிய பயணம் – அவைக்காற்று கலைக்கழகம் : அ. சிவபாதசுந்தரம்


Balendra_and_Anandarani_1975கடந்த ஒக்ரோபர் மாதம் 8ந்திகதி, அல்பேர்ட்டன் சமூகப் பாடசாலையின் (Alperton Community School) அரங்கில் நடைபெற்றது தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினரின் 61வது நாடக விழா—-ஆமாம், 61வது நாடக விழா!

இனமுரண்பாடுகள் ஏற்பட்ட பாரிய கொந்தளிப்புகளினால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகவும், அகதிகளாகவும், இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, லண்டனிலும் எத்தனையோ சிறிதும் பெரிதுமான அரசியல், சமூகம், இலக்கியம், கலை சம்பந்தமான அமைப்புகள் தோன்றியிருந்தன. பல தோன்றிய வேகத்திலேயோ,  சில ஆண்டுகளிலேயோ மறைந்து விட்டன. மற்றும்  பல பெயரில் மட்டும் அல்லது தொடர்ச்சியற்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. புதுப்புது அமைப்புகள் இன்னமும் தோன்றியும், மறைந்து கொண்டும் இருக்கின்றன. 
ஆனால், ஆரம்பித்ததில் இருந்தே இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் அமைப்புகளில் ஒன்று, மிகவும் தரம் வாய்ந்த நாடகங்களை அரங்கேற்றுவதை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘தமிழ் அவைக்காற்று கலைக்கழகம்’ ஆகும்.
Tamil_Performing_Arts_Society_08October2017_03அந்த அமைப்பு 40 ஆண்டுகளை அண்மிக்கின்றது. அவர்கள் நடாத்தும் தமிழ் நாடகப் பள்ளி 15வது ஆண்டில் காலடி பதிக்கவுள்ளது. அன்றைய தினம் நடந்தது, புகலிடச் சூழலில் அவர்களது 61வது நாடக விழா. சிறுவர் நாடகங்களின் 27வது ஆண்டு பூர்த்தி என்பதெல்லாம் எத்தனை பெரிய சாதனைகள்!
பணபலம் இல்லாமல், பரந்துபட்ட ஆள் அணி என்று ஒன்றும் இல்லாமல், உடல் தரும் உபாதைகளைப் பொருட்படுத்தாது சோர்வின்றிச் செயலாற்றும் பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியினரதும், இப்பொழுது அவரது மகள் மானசியினதும், மற்றும் அவர்களுடன் சேர்ந்து ஒரு குடும்பம்போல்பரஸ்பர புரிந்துணர்வுடன் பல ஆண்டுகளாக அவர்களுக்குத் தொடர்ந்து ஒத்தாசைகள் வழங்கிவரும் ஒரு சிலரதும் ஈடுபாடும், அற்பணிப்பும், ஆற்றலும், கடின உழைப்பும் எத்தனை ஆழமானது என்பதைஇந்தச் சாதனைகள் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டுகின்றன.
தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினரால் அன்றைய தினம் மேடையேற்றம் பெற்ற நாடகங்கள் மூன்று. அந்த நாடகங்களைத் தொடர்ந்து அரங்கில் யுகதர்மம்—நாடகமும் பதிவுகளும்என்ற நூல் வெளியீடும், கானசாகரம் இசை நிகழ்ச்சியும்.
முதல் நாடகம்: ‘புதிய பயணம்’ பொதுவாகவே, தமிழ்ப் பாடசாலைகள் தவிர, இலண்டனில் இயங்கும் அனைத்து அமைப்புகளாலும், இளஞ்சந்ததியினரைக் கருத்தில் கொள்ளாமல், அடுத்த தலைமுறையினரைப் பற்றிய அதிகம் அக்கறை எடுக்காமல், அவர்களின் சீரிய ஈடுபாடுகளும் பங்களிப்புகளும் இல்லாமல், வயதானவர்களுக்கே முன்னுரிமை கொடுத்தும், அவர்களது பங்களிப்புகளே கொண்டதுமான நிகழ்ச்சிகளே அளிக்கப்படுகின்றன. இளஞ்சந்ததியினர், அடுத்த தலைமுறையினர்உள்வாங்கப்பட வேண்டும், அவர்களது ஈடுபாடுகளையும், பங்களிப்புகளையும் இந்த அமைப்புகள் அதிகரிக்க வேண்டும் என்று பேசுவார்கள். ஆனால், அது அவற்றை நோக்கிய எதுவித பிரயத்தனமும் எடுக்கப்படாத, நடைமுறைக்கு உள்ளாக்கப்படாத வெற்றுப் பேச்சாகவே முடிந்து விடுவது வழமை.
ஆனால், தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினர் அந்த வகையிலும் விதி விலக்காகி விட்டனர்.
அவர்கள் அன்று மேடையேற்றிய புதிய பயணம்இளஞ்சந்ததியினரின்அடுத்த தலைமுறையினரின் புதிய பயணமே. பாலேந்திரா -ஆனந்தராணி தம்பதியினர் கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து நடாத்தி வரும் லண்டன் தமிழ் நாடகப் பள்ளி என்னும் பாசறையில் நாடகப் பயிற்சிகள் பெற்ற, லண்டனில் பிறந்து வளரும் சில இளையவர்களாலேயே எழுதப்பட்டு, இயக்கப்பட்டு நடிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட நாடகமாகும். அதுவே பிரத்தியேகமான பாராட்டுக்குரியதாகும். அது மற்றைய அமைப்புகளுக்கு ஒரு நல்ல முன்னோடியாகும்.
Tamil_Performing_Arts_Society_08October2017_02இரண்டாவது நாடகம்ஈழத்துப் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் எழுதிய பரமார்த்த குருவும் சீடர்களும்நடித்தவர்கள் அனைவரும் 13 வயதிற்குட்பட்ட சிறார்கள். பாலேந்திரா – ஆனந்தராணி ஆகிய இருவரும் இணைந்து இயக்கியது. சிறார்களே நன்றாகப் புரிந்தும் உணர்ந்தும் கொள்ளும் தன்மைகளை அந்த நாடகக் கதைகொண்டிருந்தமையால், நடித்த சிறார்களே தம்மை முற்றாக ஈடுபடுத்தி நன்றாக நடிக்க முடிந்தமையும், அவர்களே நன்றாக ரசித்தமையும் அவர்களது முகபாவனைகளிலும், உடல் மொழிகளிலும் தெட்டத் தெளிவாகத் தெரிந்தது. அந்தச் சிறார்களுடன் இணைந்து அவையினரும் அனுபவத்து ரசித்த நாடகமாக அது அமைந்தது.
மூன்றாவது நாடகம்: ‘யுகதர்மம்ஜேர்மனியரான பேர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) என்ற நாடகாசிரியர் எழுதிய  “The Exception and the Ruleஎன்று ஆங்கிலத்தில் வெளிவந்த ஆக்கத்தைத் தமிழில் தழுவி யுகதர்மம்என்ற தலைப்பில், பாலேந்திரா அவர்களால் நெறிப்படுத்தப்பட்டு, தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினரால்1979ம் ஆண்டுஇலங்கையில் முதன்முதலாக அரங்கேற்றம் கண்டு, பற்பல இடங்களிலும் மேடையேற்றப்பட்ட பிரபலமான நாடகம் இது.
சுரண்டுபவர்களும், சுரண்டப்படுபவர்களும், சுரண்டுபவர்களுக்குத் துணைபோகும் ஆதிக்கச் சக்திகளும், நீதி பரிபாலனம் என்ற போர்வையில் அநீதிகளுக்கு முண்டு கொடுப்பவர்களும், அபலைகளை நிராகரிப்பவர்களும் இந்த நாடகம் எழுதப்பட்ட சென்ற நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த நாடகம் முதன்முதலில் தமிழிலில் மேடையேறப்பட்ட காலகட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் இருக்கிறார்கள். அவர்களது அதே போக்கும், அதே அக்கிரமங்களும், அதே அடாவடித்தனங்களும்,  இன்றும் நீட்சியாகத் தொடர்கிறது, இதனை யுகதர்மம்நாடகம்  புடமிட்டுக் காட்டுகிறது.
அந்த நாடகத்தின் கருவோ, தாற்பரியமோ சற்றேனும் பாதிக்கப்படாதவாறு இளைஞர்களுக்கேற்ப சுருக்கப்பட்டு, பாலேந்திரா அவர்களால் மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தப்பட்டு அன்று அரங்கேற்றப்பட்டது.  அந்த நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவருமே தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினரால் சிறுவர்களாகப் நாடகத்துறையில் பயிற்றுவிக்கப்பட்டு, இன்று இளைஞர்களாக வளர்ந்திருப்பவர்கள். வியாபாரியாக சந்தோஷ் ஆனந்தன், கூலியாக மானசி பாலேந்திரா, வழிகாட்டியாக ஜெனுசன் ரொபின்சன், பிரதம நீதிபதியாக சிந்து ஆனந்தன் ஆகியோரின் தத்ரூபமான முகபாவனைகள், வசனம் மற்றும் பாடல்களின் சிறந்த ஒப்படைப்புகள், அசைவுகள் நாடகத்திற்கு மெருகேற்றி ஓர் நல்ல ஆற்றுகையைப் பார்த்த நிறைவைத் தந்தன.
ச.வாசுதேவனும், நிர்மலாவும் இணைந்து தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நாடகத்தின் தமிழ்ப் பிரதியும், அது பற்றிய பதிவுகளும்,யுகதர்மம்—நாடகமும் பதிவுகளும்என்ற பெயரில் நூலாக  இவ்வருடம் இலங்கையில் கிழக்கு பல்கலைக் கழக விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தில் உலக நாடக தின விழா கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நூல் அன்றைய தினம் நூலகவியலாளர் செல்வராஜா அவர்களின் ஒரு விரிவான உரையுடன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நூலும் அதில் உள்ளடக்கப்பட்ட பதிவுகளும், அரங்கியல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் நாடக ஆற்றுகைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நாடக ரசனையாளர்களாளுக்கும் மிகவும் தேவையானதும் சுவையானதுமான பொருளடக்கங்களைக் கொண்டவையாகும்.
அந்நூலில் உள்ளடக்கப்பட்ட நாடக நெறியாளரின் தொகுப்புரை என்ற தலைப்பில் பாலேந்திரா அவர்களின் ஆக்கம், நாடகத்துறையில் அவரது பயணத்தையும், சவால்களையும் காட்டும் ஒரு சிறு ஜன்னல். அதனை விரித்து, அவரது தொகுப்புரையில் நாடக ஆற்றுகைகள் சமபந்தமான ஆவணங்களை நூலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கும் தனது பணியோடு சேர்த்தாரானால், நாடகத் துறையில் ஈடுபாடுகளும், வரலாற்றை அறிந்து கொள்ளும் விருப்புகளும் கொண்டிருப்போருக்குப் பயனுள்ளதாக அமையும். அவரும், அவருடன் இணைந்து காரியங்கள் யாவிலும் கைகொடுக்கும் ஆற்றல்கள் மிக்க அவரது மனைவி ஆனந்தராணியினாலுந்தான் முடியும். ஏனெனில், அவர்கள் இருவருந்தான் ஈழத்து நாடகத்துறையில் பலவருடங்களாகப் பாரிய பணிகளைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர்கள். சவால்களைச் சோர்வின்றி சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். தொடர்ந்தும் ஆற்றுகைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்.  
தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினர் மேடையேற்றும் நாடகங்களில் எனக்குப் பிடித்த ஒரு மேலதிகமான அம்சம், நடிகர்கள் பேசும் வசனங்களுடன் இணைக்கப்படும் பொருத்தமான, ஆழமான கருத்துள்ள, இனிமையான இசையுடனான பாடல்கள், கதையை நகர்த்துவதற்கு மேடையில் சம்பந்தப்பட நடிகர்களாலும், மற்றும் அரங்கத்திலேயே பக்கத்து மேடையில் அமர்ந்திருக்கும் பாடகர்களால் கோரசாகப் பாடப்படும் பாணி,அதற்கேற்ற ஹார்மோனியம் (வேந்தன்), வயலின் (ஜலதரன்), தபேலா (சிதம்பரநாதன்பின்னணி  இயல், இசை,  நாடகம் என்ற முத்தமிழையும் ஒரே சமயத்தில் அனுபவிக்கும் அலாதியான அனுபவம்.
Tamil_Performing_Arts_Societyஅந்நிகழ்வின் இறுதி நிகழ்வு—கானசாகரம் என்ற ஈழத்து மெல்லிசை, ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை இன்றும் ஈழத்தில் இசைப்பணியாற்றி வரும் இசைவாணர் யாழ் கண்ணனின் இசையில் அமைக்கப்பட்ட பாடல்களைக் கொண்ட கானசாகரம் நிழ்ச்சியை 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினர்ஆற்றுகை செய்து வருகின்றனர். அன்றைய அந்த நிகழ்வில், ஈழத்தக் கவிஞர்கள் மகாகவி, எஸ். வாசுதேவன், நீலாவா ணன், சண்முகம் சிவலிங்கம், சேரன் ஆகியோரது கவிதைகளைப் பாடல்களாக, எம் சத்தியமூர்த்தி, விஜயகுமாரி, தர்ஷினி, குகனேஸ்வரி, பவனுஜா ஆகியோரின் இனிய குரல்களின் வாயிலாக வழங்கப்பட்டது.
நேரம் காரணமாக, சில பாடல்களே வழங்கப்பட்டன. –பாடல் வரிகளின் அர்த்தமும்,  ஆழமும், இனிமையான இசையமைப்பும், காதுகளுக்கும் கருத்துக்களுக்கும் விருந்து—நெஞ்சிலும் ஈரம் கசிந்தது. –இன்னும் சில பாடல்கள் பாடமாட்டாரகளா என ஏங்க வைத்தது.
மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். மனம் நிறைந்த நிகழ்வு.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு