கிழக்கின் குழுப்பங்களுக்கு அரசியல் கட்சிகளே காரணம்


image_cf0ba38a58கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் உருவாகியுள்ள முறுகல் நிலைக்கு அரசியல் கட்சிகளே பிரதான காரணமாகவுள்ளன” என, கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எஸ்.எம். அஸீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு, கல்முனை பள்ளிவாயல் காரியாலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இனங்களுக்குள் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எல்லா மக்களும் சமமாக, சந்தோசமாக, சகோதரத்துவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வுத் திட்டமாகவே, முன்னர் இருந்தவாறு கல்முனை மாநகர சபையுடன் மேலும் மூன்று சபைகளை ஏற்படுத்துமாறு கோருகின்றோம்.

“1987ஆம் ஆண்டுக்கு முன்னர், கல்முனை பட்டின சபை மற்றும் கரவாகு மேற்கு, கரவாகு வடக்கு, கரவாகு தெற்கு என 3 கிராம சபைகளாகவே இருந்து வந்துள்ளன. 1987ஆம் கொண்டு வரப்பட்ட பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் இவைகள் இணைக்கப்பட்டன. 2001ஆம் ஆண்டு மாநகர சபையாகவும் மாற்றம் செய்யப்பட்டது.

“இது விடயமாக நாங்கள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களிடம் பேச்சுகளை நடத்திய போது, பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கதைத்து, இதனை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

“யாருடைய அனுமதியுமின்றி இணைக்கப்பட்ட இச்சபைகள், பாரிய பிரதேசங்களையும் சுமார் 01 இலட்சம் சனத்தொகையையும் கொண்டமைந்த மாநகர சபையாக இயங்கி வருகின்றமையால் அதன் நிர்வாகத்துக்கும் வளப்பங்கீடுகளுக்கும் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

“குறைந்தது குப்பைகளைக் கூட முறையாக அகற்றுவதற்கு அதன் நிர்வாகத்தினருக்கு முடியாமலுள்ளது.

“ஆகவேதான், அதனை முன்னர் இருந்தவாறு பிரிப்பதால் எந்தவொரு சமூகமும் பிரதேசமும் பாதிப்படையப் போவதில்லை. அவர்களை அவர்களின் அபிலாசைகள், தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இதன்மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

“எங்களது பிரச்சினைகளை நாங்களாகவே பேசித் தீர்க்க முடியும். இதற்காக சாய்ந்தமருது மக்களை நோக்கி அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம். இதற்காக அரசியல்வாதிகளும் ஒரு கொள்கை ரீதியான உடன்பாட்டுக்கு முன்வர வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு