“ஜே.ஆர்.ஜயவர்தன வழியை பின்பற்றும் ரணில் விக்கிரமசிங்க தேர்தலை பிற்போடமாட்டார்.” – மஹிந்த தேசப்பிரிய

“ஜே.ஆர்.ஜயவர்தன வழியை பின்பற்றும் ரணில் விக்கிரமசிங்க தேர்தலை நடாத்த காலம் தாழ்த்துவார் என்று நான் நம்பவில்லை.” என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் , தனியார் ஊடகமொன்றின் நிகழ்ச்சில் கலந்து கொண்ட போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதானால் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உள்ளுராட்சி சட்டத்திற்கமைய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படும் குழுவிற்கே அந்த பொறுப்பு உரித்தாக்கப்படும். எவ்வாறிருப்பினும் எல்லை நிர்ணய குழுவொன்று அமைக்கப்படும் போது அக்குழுவில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவைச் சேர்ந்த மூவரும் , ஏனைய இருவருமே உள்வாங்கப்படுவர்.

எனவே எதிர்வரும் மார்ச் 20 இற்கு முன்னர் தேர்தலை நடத்தும் அதேவேளை, உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டுமெனில் இம்மாதம் இறுதிக்கு முன்னர் எல்லை நிர்ணய செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.

அவ்வாறில்லை எனில் அது நிச்சயம் மார்ச் 20 இற்கும் அப்பாற்செல்லும். அவ்வாறெனில் மார்ச் 20 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்த வேண்டியேற்படும். ஆனால் அவ்வாறு தேர்தலை காலம் தாழ்த்த முடியாது என்று 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பிற்கமைய எவ்வித காரணியையும் குறிப்பிடாமல் அமைச்சரின் தன்னிச்சையான தீர்மானத்திற்கமைய இம்முறை தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை தவறாகும்.

இது இவ்வாறிருக்க உள்ளுராட்சி தேர்தல் காலம் தாழ்த்தப்பட மாட்டாது என்று நம்புகின்றேன். காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன முன்னுதாரணமாக செயற்பட்ட முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாவார்.

1970 ஆம் ஆண்டுகளில் 7 ஆண்டுகளுக்கு காலம் நீடிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவர் பதவி விலகி , இடைக்கால தேர்தல் மூலம் தென்கொழும்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முன்னுதாரணத்தை அவர் வழங்கியுள்ளமையால் தற்போதுள்ள ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவார் என்று நான் நம்பவில்லை. எவ்வாறிருப்பினும் அரசியல் கட்சிகளானாலும் சரி, சிவில் சமூக அமைப்புக்களானாலும் சரி, எல்லை நிர்ணயம் தொடர்பில் அவை காண்பிக்கும் ஆர்வம் மிக அற்பமாகும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *