“திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கி இருந்தால் இன்று இந்த பிரச்சினைகளே ஏற்பட்டிருக்காது.”- ஐக்கிய தேசிய கட்சி

“திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கி இருந்தால், நாடு இன்று எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.” என ஐக்கிய தேசிய கட்சி அநுராதபுர தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சஞ்ஜீவ செனவிரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் 2048ஆம் ஆண்டை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாகவே கடந்த வாரம் ஜனாதிபதி திருகோணமலை மாவட்டத்துக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுததிருக்கின்றார்.

ஏனெனில் உலக உணவு பாதுகாப்பு திட்டத்தில் உலகில் எமது நாடு 79 ஆவது இடத்திலேயே இருக்கின்றது. விவசாயத்துக்கு தேவையான சகல வசதிகளும் இருக்கும் நிலையில் எமது நாடு இந்தளவு பின்தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

2048 ஆகும் போது உகல சனத்தை தொகைக்கு அதிகரிப்புக்கு தேவையான உணவு போதாமல் போகும் அபாயம் இருக்கின்றது. அதனாலே தற்போதில் இருந்து உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டின் வளங்களை வெளிநாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

2003 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ள இடமளிக்க வில்லை.

நாங்கள் ஒப்பந்தம் செய்தவாறு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கி இருந்தால், நாடு இன்று எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

அரசியல்வாதிகளின் எதிர்ப்பு அரசியல் கலாசாரம் காரணமாகவே எமது நாடு இன்னும் அபிவிருத்தி அடைய முடியாமல் இருக்கின்றது.

அதேபோன்று  1987இல் கல்வி மறுசீரமைப்பு மேற்காெண்டு இலவச கல்வியை மேற்கொள்ளும்போது அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பிள்ளைகள் இன்று இலவச கல்வியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும்பொருளாதாரம் மற்றும் கல்வியில் குறிப்பிட்டதொரு காலத்துக்கு மாறுபடாத தேசிய கொள்கை ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *