சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரி – மடக்கிப்பிடித்த மக்கள்!

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் சங்கிலியை அறுத்த, இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

மடக்கி பிடிக்கப்பட்ட நபரை இராணுவத்தினர் அழைத்து செல்ல முற்பட்டமையால் அங்கு பதட்டமான சூழல் உருவாகிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமிக்கு பின்னல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனால் சிறுமி நிலைமை தடுமாறி கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளானார்.அதனை அவதானித்த ஊரவர்கள் ஒன்று திரண்டு வழிப்பறி கொள்ளை சந்தேக நபரை துரத்தி சென்று மடக்கி பிடித்ததுடன், சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மடக்கி பிடிக்கப்பட்டவரிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, குறித்த நபர் காங்கேசன்துறை கொல்லன்கலட்டி பகுதியை சேர்ந்தவர் எனவும் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்ததுடன், சிறுமியின் சங்கிலியும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ஊரவர்கள் அறிவித்த நிலையில், பொலிஸாருக்கு முன்னதாக இராணுவ தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, குறித்த நபரை மீட்டு தம்முடன் அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த பலாலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *