மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு


image_530a94eda4மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும், மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மீனவர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள், மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து, இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.

மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் இந்த உதவித் திட்டங்களை, நல்லாட்சி அரசாங்கம் அதிகரிக்கவேண்டும் எனவும் இங்கு மீனவர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இயற்கை சீற்றமான காலத்தில் கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுவதாகவும் இந்தக் காலப்பகுதியில் மீனவர்களின் குடும்பம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வரட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும் நிலையில், மீனவர்களுக்கு இடர் ஏற்படும் காலத்தில் எந்த நிவாரணங்களும் வழங்கப்படுதில்லையெனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், கடற்கரையை அண்டியுள்ள பகுதிகள் பெருமளவில் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்படுவதால் தாங்கள் தொழில் செய்யமுடியாத நிலையேற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, முகத்துவாரம் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவோர், நவம்பர், டிசெம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக உயிரிழப்புகளை சந்தித்துவருவதாகவும் அவர்களுக்கான எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லையெனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளியிடங்களில் இருந்துவரும் மீனவர்கள் தமது கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தமது பிரச்சினைகளை கவனத்தில்கொண்டு, நல்லாட்சி அரசாங்கம் தமக்கான திட்டங்களை வகுக்கமுன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை, மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதனிடம் இதன்போது மீனவர்கள் கையளித்தனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு