“தொழிலாளர்களுக்கு காணிகளை பங்கிட்டு வழங்குவது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே.”- சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்

பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே என்றும் அந்த யோசனை அமுலுக்கு வராது என்றும் சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்தார்.

அவ்வாறு தோட்டக் காணிகளை பங்கீட்டால் அதுவே பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும் என்றும் அதனால் இத்திட்டத்தை தாம் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியா – ரதல்ல பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உரம் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அறிவிப்புகளை விடுத்து வந்தாலும், அதற்கான வேலைத்திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை. அது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தவும் இல்லை. இது தாமதிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கம்கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்.

தோட்டங்கள் காடாகி வருகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாமும் ஏற்கின்றோம். ஏனெனில் களைக்கொல்லி மற்றும் புற்களை அழிக்ககூடிய மருந்துகள் இல்லை.

தோட்டங்கள் காடாவதற்கு இதுவே காரணம். தோட்டங்கள் காடாகினால் கொழுந்து பறிக்க முடியாது. தற்போது 50 வீதமான தொழிலாளர்கள், இத்தொழியில் இருந்து வெளியேறியுள்ளனர். இரப்பர் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தோல்வி கண்ட பொறிமுறையாகும். பலரும் அது பற்றி கதைக்கின்றனர். ஆனால் பரீட்சாத்த நடவடிக்கைகூட தோல்வி கண்டுள்ளது. இதனை நாம் தேர்தல் கால வாக்குறுதியாகவே கருதுகின்றோம். அதனால்தான் இன்றளவில் நடைமுறைக்கு வராமல் உள்ளது.

தொழிலாளர்களுக்கு காணிகளை பங்கிட்டு வழங்கினால் அவர்கள் தேயிலை பயிரிடமாட்டார்கள். கிழங்கு, கரட் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளையே மேற்கொள்வார்கள். இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும்.

குறிப்பாக பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாகக்கூட இதனை பார்க்கலாம். பெருந்தோட்டத்துறையின் இருப்பை காக்க முடியாது என்பதே எமது மற்றும் தொழிலாளர்களின் கருத்தாகும்.” – என்றார்.

இதே நேரம் நேற்றைய தினம் மலையகத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச “மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்.” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *