பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம்

மோசடிப் பல்கலைக்கிழகத்தின் துணைவேந்தர் – கலாநிதி செல்வின் குமார்

உலகத் தமிழ் பல்கலைக்கழகம் (யூஎஸ்ஏ) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பல்கலைகழகத்தில் ஆய்வாளர்களும் இல்லை. மாணவர்களும் இல்லை ஆனால் கலாநிதிப் பட்டம் வழங்கப் போகிறார்களாம். இன்றுள்ள மொழிகளிலேயே மூத்த மொழியாகவும் மக்களால் பரிபாஷிக்கப்படுகின்ற பயன்பாட்டில் உள்ள மொழி கடந்த 3500 ஆண்டுகளாக தன்னை நிலை நிறுத்தி வைத்துள்ளது. அம்மொழியின் பெருமையை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அதன் பெருமையை சிறுமைப்படுத்தாமல் ஆவது இருப்பதுவே சாலச் சிறந்தது. உலகத் தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் கடையைத்திற்ந்துள்ள ஒரு கூட்டம் தமிழ் கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் செயலில் இறங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் இயங்குவதாகக் கூறும் இயங்காத பல்கலைக்கழகம் ஒரு நூறுடொலருக்கு ஒரு இணையத்தை இயக்கிக் கொண்டு உலகத் தலைவர்கள் சிலரது படங்களையும் போட்டு சில பல்பலைக்கழகங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்விணையத்தளத்தில் இப்பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைக்கும் பல்கலைக்கழகங்களின் பகுதி இன்னமும் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மழைக்கு முளைக்கும் காளான்கள் போன்ற இவ்வமைப்புகள் தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்துகின்றன. இதுவொரு மோசடியான பல்கலைக்கழகம் என இந்தியாவில் இருந்து வெளிவரும் தி ஹிந்து இணையத்தளமும் சுட்டிகாட்டியுள்ளது.

ஆரம்பப் பள்ளியைக் கூட இயக்குவதற்கு லாயக்கற்றவர்கள் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கின்றோம் என்ற பெயரில் ரீல் விட்டுக்கொண்டு தற்போது கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்போகின்றனராம். இந்த கௌரவ கலாநிதிப்பட்டம் என்பது இறால் போட்டு சுறா பிடிக்கும் தந்திரமாக மாறியுள்ளது. முகவரியற்ற இந்த உலகத் தமிழ் பல்கலைக்கழகம் முகவரியுள்ள சிலருக்கு ஆசைகாட்டி கலாநிதிப்பட்டம் வழங்குவதாகக் கூறி தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர். இந்த வலையில் லண்டனில் அறியப்பட்ட சில நல்ல தலைகளும் வீழ்ந்துள்ளது. அல்லது வீழ்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 6ம் திகதி பிரித்தானியாவின் முக்கிய பலகலைக்கழகங்களில் ஒன்றான யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரில் இந்த கௌரவ கலாநிதப்பட்டம் வழங்கப்பட இருப்பதாக உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரின் ஹரோ கம்பஸில் நடைபெறும் இந்நிகழ்வுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்பல்கலைக்கிகத்தின் மண்டபத்தை வாடகைக்குப் பெற்றதைத் தவிர பல்கலைக்கழகத்திற்கு ஏதும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இது விடயமாக தேசம்நெற், யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரருக்கு ஒரு மின்அஞ்சலையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த மோசடிக் கலாநிதிப் பட்டத்திற்கு கொன்சவேடிவ் கட்சி அமைச்சர் போல் ஸ்கலி, லிபிரல் டெமொகிரட் கட்சிப் பா உ சேர் எட்டேவி பிரித்தானியாவின் முன்னணித் தமிழ் வழக்கறிஞர் அருண் கணநாதன், சட்ட ஆலோசகர் குலசேகரம் கீதார்தனன், கவுன்சிலர் பரம் நந்தா, ஈலிங் அம்மன் ஆலயச் செயலாளர் சொக்கலிங்கம் கருணைலிங்கம், அருணாசலம் ராஜலிங்கம், நாடுகடந்த அரசு சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகிய லண்டனில் அறியப்பட்ட நபர்களுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை விடவும் உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவி டாக்டர் சாந்தினி ஒமகாண்டம், ஏ ஆர் ரகுமானின் சகோதரி டாக்டர் ஏ ஆர் ரெகானா உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச இணைப்பாளர் டாக்கடர் எஸ் எம் ரஸ்மி ரூமி ஆகியோருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சிலருடன் தொடர்புகொண்ட போது அவர்கள் தங்களுக்கு மின் அஞ்சல் வந்ததாகவும் மேலதிக விபரங்கள் தெரியவில்லை என்றும் தங்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றின் அனுசரணையோடுதான் இந்த கௌரவப்பட்டம் வழங்கப்படுவதாக நினைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறான தோற்றப்பாடே அங்கு தெரிவிக்கப்பட்டது. இப்பட்டங்களை தமிழகப் பல்கலைக்கழகங்கள் கூட வழங்க முன்வந்திருக்வில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான மோசடியான கலாநிதிப் பட்டங்கள் தொடர்பாக என் செல்வராஜா “கலாநிதிகளும் கல்லாநிதிகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தர். தமிழர்கள் சிலர் இவ்வாறான மோசடியான பட்டங்களை காவிக்கொண்டு திரிவதன் மூலம் கல்வியைiயும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ‘கௌரவ கலாநிதிப்பட்டம்’ வாங்க அழைக்கப்பட்ட சிலர் தாங்கள் அதில் கலந்துகொள்வதுபற்றி முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். தங்களுடைய பெயர்களை ஒரு தலைப்பட்சமாக அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடியான பட்டங்களை கௌரவ கலாநிதி என்ற பெயரில் பெறுவதன் மூலம் அவர்கள் ஏற்கனவே பெற்ற கல்வித் தகமைகள் மீதும் சந்தேகம் ஏற்படும் நிலையை இப்பட்டங்கள் உருவாக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறான மோசடியான கல்வித் தகமைகளை நிரகரிப்பதும் ஒரு சமூகக்கடமையே.

இந்த கௌரவ கலாநிதிப் பட்டங்களுக்குப்பின் நாடுகடந்த அரசு இருப்பதாக நம்பப்படுகின்றது. நாடுகடந்த அரசு என்ற இந்தக் கருத்துரவாக்கம் கவிஞர் பேராசிரியர் சேரனால் முன்வைக்கப்பட்டு தற்போது இலங்கையில் கௌரவத் தடுப்புக்காவலில் உள்ள கே பி என்றறியப்பட்ட செல்லராசா பத்மநாதனால் (குமரன் பத்மநாதன்) ஏற்றுக்கொள்ளப்பட்டது. கெ பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுசெல்லப்பட விசுவநாதன் உருத்திரகுமாரனால் தற்போது இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த நாடுகடந்த அரசின் பிரதமராக உருத்திரகுமாரன் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து செயற்படுகின்றார். இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுபவர்களில் ஒருவரான சொக்கலிங்கம் யோகி நாடுகடந்த பிரதமர் அலுவலகத்தின் அமைச்சராக உள்ளார். நாடுகடந்த அரசு என்ற கருப்பொருள் ஆழமானதாக இருந்தபோதும் அதில் தங்களை எம்பிக்கள் அமைச்சர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் உள்ளடக்கமே இருப்பதில்லை. அதனால் நாடுகடந்த அரசு என்பது ஒரு கோமாளித் தனமாகவே பார்க்கப்படுகின்றது. சொக்கலிங்கம் யோகி தமிழர்களின் அகதி அந்தஸ்து விடயங்களில் நிறைய உதவுபவராக இருக்கின்றார். ஆனால் அவர் ஒரு அரசியல் உள்ளடக்கமற்றவராகவே கருதப்படுகின்றார். இந்த மோசடி காலாநிதிப் பட்டங்களுக்குப் பின் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் உள்ளது என்று தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments