ரூபாய் ஒரு லட்சம் விருதை இயல்-இசை-நாடகக் கலைஞர் பார்வதி சிவபாதம் வெற்றிகொண்டார்! ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியிடப்பட்டது!!

2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதான ரூபாய் ஒரு லட்சம் பணப்பரிசையும் விருதுக்கான கேடயத்தையும் இயல்-இசை-நாடகக் கலைஞர் பார்வதி சிவபாதம் வெற்றிகொண்டார். இன்று நவம்பர் 20, கிளிநொச்சி திருநகரில் லிற்றில் எய்ட் ஆல் நடத்தப்பட்ட வருடாந்த சிவஜோதி ஞாபகார்த்த நிகழ்வில் இவ்விருதை பார்வதி சிவபாதம் அவர்களுக்கு, கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியின் தந்தையும் இணைந்து வழங்கினர். இவ்விருதுக்கு சிபார்ஸ்சு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் விந்தன் செல்லத்துரை, வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன் ஆகியோருக்கு ரூபாய் 5000 பணப்பரிசும் அவர்களது சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வையொட்டி இலைமறை காயாக, நாளாந்த வாழ்வோடு சேர்ந்து சமூகத்தின் முன்னுதாரணங்களாகவும் வாழ்ந்த, வாழ்கின்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை வளர்ந்துவரும் பெண் ஆளுமைகளே தலைமையேற்று நூலை அறிமுகம் செய்து விமர்சனமும் செய்தமை நிகழ்வுக்கு வந்திருந்த அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நூலில் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள் பதிவு செய்யப்பட்டனர்: பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்கவாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்), இலக்கியம் (தாமரைச்செல்வி,), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து.

‘2022 சிவஜோதி ஞாபாகர்த்த விருது’ சிவஜோதி என்ற ஆளுமை – கலைஞன் சமூத்தை நேசித்தை கொண்டாடுவதற்காக கலைத்துறையில் தங்களை அர்ப்பணித்து சமூக நேசத்துடன் செயற்பட்டவர்களுக்கு வருடாவருடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, 2021 சிவஜோதியின் முதலாம் ஆண்டு நினைவுமுதல் வழங்கப்பட்டு வருதாகத் தெரிவித்த லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன், சிவஜோதியின் இறுதியாண்டுகள் கிளிநொச்சி மண்ணில் நிலைபெற்றதால் இந்த ஆண்டுக்கான விருதை கிளிநொச்சி மண்ணில் இயல்-இசை-நாடகத்துறையில் வாழ்நாள் சேவையாற்றிய ஒருவருக்கு வழங்க சிவஜோதி ஞாபகார்த்தக் குழு தீர்மானித்து இருந்ததாகத் தெரிவித்தார். “தனது குழந்தைப்பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் குறிப்பிட்டு பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தலைமையில் சிவஜோதியின் ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் கருணாகரன் சமத்துவக் கட்சியின் செயலாளர் மு சந்திரகுமார் ஆகியோர் சிவஜோதியின் நினைவுகளை மீட்டினர். ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ நூல் அரங்குக்கு வர்ஷனா வரதராஜா தலைமை தாங்கினார். வெளியீட்டுரையை விராஜினி காயாத்திரி இராஜேந்திரன் வழங்கினார். உறுதி கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் எனும் தலைப்பில், யாழ்.பல்கலைக்கழக முகாமத்துவ பீட முதலாம் வருட மாணவி செல்வி ஹார்த்தியாயினி இராஜேஸ்கண்ணாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசாவும் உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை எனும் தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளரும் மனிதம் அமைப்பின் உருவாக்குநர் சபை உறுப்பினருமான நிவேதா சிவராஜாவும் நூல் ஆய்வை மேற்கொண்டனர். இந்நூல் அரங்கு முற்றிலும் பெண்களால் அரங்கேற்றப்பட்டது என்பதும் இளம் தலைமுறைப் பெண்கள் அதனைத் திறம்பட மேற்கொண்டதும் அங்கு முன்ணுதாரணமாக அமைந்தது. அத்தோடு இந்நிகழ்வின் வெற்றிக் கேடயத்தைத் தட்டிச் சென்றவரும் ஒரு பெண்ணாகவே அமைந்ததும் நிகழ்வின் சிறப்பம்சமாகியது.

மேலும் இளம் பெண்களுக்கு புத்துணர்வூட்டுவதாக அமைந்த இந் நிகழ்வில்  200க்கும் மேற்பட்ட கலை, இலக்கிய, நூல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *