நாக விகாராதிபதியின் தகனம் – கிந்துசிட்டி மயானம் – தமிழ் தேசியம் பேசும் அயோக்கிய அரசியல் (பகுதி 1): த ஜெயபாலன்


Naga_Viharathipathy_Body_and_Manivannanதேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது வெற்றிக்கு தொலைவில் உள்ளவர்கள் அவர்கள் உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்த பயன்படுத்தும் முக்கிய உபாயம், வாக்களிக்கும் மக்களின் இன, மத, சாதிய உணர்வுகளைத் தூண்டிவிடுவது. இந்த உபாயத்தையே 1970க்களில் தோல்வியைத் தழுவிய தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் தலைமைகள் கையிலெடுத்தன. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து இனவாதத்தைத் தூண்டி, தமிழீழப் பிரகடனம் செய்து தமிழ் இளைஞர்களை உசுப்பிவிட்டு வாக்கு வங்கியை நிரப்பின. தங்கள் நலன்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் சிங்கள இனவாதத்தைத் தூண்டும் கட்சிகளோடு கை கோர்க்கவும் தயங்கவில்லை.

சுதந்திர இலங்கையில் மிக மோசமாக ஒடுக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கத் துணைபோன; தமிழரசுக் கட்சி சமஸ்டி கேட்ட போது ஒற்றையாட்சியில் அழுங்குப் பிடியாக நின்றது தமிழ் காங்கிரஸ். அன்று அதன் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலத்தின் அரசியல் வாரிசு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது தமிழ் காங்கிரஸின் வாக்கு வங்கியை நிரப்ப பெருமுயற்சி எடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் காட்டிலும் தாங்கள் இனப்பற்றுள்ளவர்கள் என்பதைக்காட்ட இனவாதத்தை தூண்டி இளைஞர்களை உசுப்பேத்தி வருகின்றனர்.

Gajenthirkumar_PonnampalamKumar_PonnambalamG_G_Ponnambalam“என்றும் சிங்களத்துக்கு கழுவ நினைக்காத ஓர்மமிக்க இளைஞர்களின் பாதையே சைக்கிள்” என்று தம்பட்டம் அடிக்கும் இவர்கள் யார்? பெரும்பாலும் யாழில் படித்து உயர் தொழில்களில் செழிப்புடன் வாழ்வோரே. இவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியப் பேரவை என்ற பெயர்களில் தேவைக்கேற்ப தொப்பியை மாட்டிக்கொண்டு தமிழ் காங்கிரஸின் சைக்கிளில் தேசியம் பேசிக்கொண்டு வலம் வருவோரே. இவர்கள் தங்களை அர்ப்பணித்து போராட்டத்தை முன்னெடுக்கக் கூடியவர்களோ அல்லது போராடக் கூடியவர்களோ அல்லர். தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள அரசியல் பேசும் வாய்ச்சொல் வீரர்கள்.

தமிழரசுக் கட்சி 1970க்களின் பிற்பகுதியில் இளைஞர்களை உசுப்பியதாக தற்போது குற்றம்சாட்டும் தமிழ் காங்கிரஸ் சார்ந்த ‘குதிரை கஜேந்திரன்’ என்று அறியப்பட்ட கஜேந்திரன் செல்வராஜா, பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரை 2009இற்குப் பின் வந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியினர் ஆசனங்களை வழங்காமல் ஒரம்கட்டியது. ஆசனங்கள் வழங்கப்படாமல் கலைக்கப்பட்டதால், தமிழ் தேசிய உணர்வு பெற்ற இவர்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க கொள்கை முரண்பாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் தேசியத்தை பேரம் பேசி விற்று தங்களது வாக்கு வங்கியை நிரப்புவது ஒன்றே இவர்களுடைய அதி உச்ச இலக்கு.

Manivannan_V_Local_Election_Posterஇவர்களுக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போல் நாக விகாரை விகாராதிபதியின் மரணமும் அவரை யாழ் முற்றவெளியில் தகனம் செய்யும் முடிவும் அமைந்தது. தமிழ் காங்கிரஸ் நாக விகாராதிபதியின் இறுதிக் கிரியைகளை அரசியலாக்கி தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்த துரிதகதியில் செயற்பட்டது. தமிழ் காங்கிரஸில் யாழ் மாநகர முதல்வராவதற்காக போட்டியிடும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்டோர் நாக விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் முற்ற வெளியில் இடம்பெறுவதைத் தடுப்பதன் மூலம் தங்கள் தமிழ் தேசியப் பற்றை பறைசாற்ற முடியும் என நம்பினர்.

தமிழ் காங்கிரஸ் வேட்பாளர்(கள்) பார்தீபன் வரதராஜன், கமலக் கண்ணன் டிசம்பர் 21, 2017இல் யாழ் மாநாகரசபை ஆணையாளருக்கு எழுதிய முறைப்பாட்டில் நாக விகாராதிபதியின் உடலை முற்றவெளியில் தகனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அது பயனளிக்காத போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நீதி மன்றத்திலும் அவர்களுடைய கோரிக்கை தோல்வியடைந்து டிசம்பர் 22இல் நாக விகாராதிபதியின் உடல் யாழ் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது.

பெளத்த மத விகாராதிபதி ஒருவர் மரணமடைந்தால் அவருடைய தகனம் பொது இடத்தில் நடத்துவது என்பது அவர்களுடைய நடைமுறை. மேலும் அரசியல் தலைமைகள் மரணமடைகின்ற போது அவர்களுடைய மரணச் சடங்குகள் பொது இடங்களில் நடைபெறுவது வழமை. தென்பகுதியில் பெளத்த விகாராதிபதிகளின் தகனம் பாடசாலை மைதானங்களிலும் பொது வெளிகளிலுமே நடைபெறுகின்றது.

வட பகுதியிலும் மரணமடைந்த அரசியல் தலைவர்களின் மரணம் பொது இடங்களிலேயே நடைபெற்று உள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களின் தகனக் கிரியைகள் பற்றிய கலாநிதி ஜனார்த்தனன் எழுதிய கட்டுரையை அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தங்க முகுந்தன் வருமாறு மேற்கோள் காட்டி இருந்தார். 1989 யூலையில் “ஒரு இந்திய விமானப்படை ஹெலியில் அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடலும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் செல்ல மற்றொரு ஹெலியில் யோகேஸ்வரனின் பூதவுடலும் அவரது மனைவி மற்றும் சிலரும் செல்ல முறையே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்திற்கும் யாழ் முற்ற வெளி மைதானத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது. நானும் வட்டுக்கோட்டை செல்லும் ஹெலியில் பயணித்தேன். இதை ‘இலங்கைத் தமிழருக்காக 20 ஆண்டுகள்’ என்ற நூலில் டாக்டர் ஜனார்த்தனன் மிக அருமையாக ‘அண்ணன் அமிரை இழந்தோம்’ என்று அவர் இந்தியாவிலிருந்து இறுதிக் கிரியைகளில் பங்குபற்றியதை மிக அழகாக வர்ணித்து 54ஆம் பக்கத்தில் உள்ள கட்டுரையில் அமிரின் மரணச்சடங்கு பற்றி எழுதி உள்ளார்” (2013 செப்ரம்பர் 10இல் தேசம்நெற்.)

மேலும் யாழ் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பாவின் உடல் அவருடைய பெயரில் உள்ள விளையாட்டரங்கில் 1975 யூலையில் தகனம் செய்யப்பட்டது. தந்தை செல்வாவின் தகனக் கிரியைகள் 1977 ஏப்ரலில் அவருடைய நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்திலேயே நடைபெற்றது. பா உ டக்ளஸ் தேவானந்தாவின் வளர்ப்பு தந்தையான தொழிற்சங்கவாதி கே சி நித்தியானந்தனின் தகனம் முற்றவெளியிலேயே நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் போராளிகளின் உடல்களும் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டு உள்ளது.

நாக விகாராதிபதியின் தகனத்துக்கு எதிராக கிளர்ந்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி ஜி பொன்னம்பலத்தின் தகனம் 1977 பெப்ரவரியில் பருத்தித்துறை கடற்கரையிலேயே நடைபெற்றது.

ஆகவே 1991 முதல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாக விகாராதிபதியின் தகனக் கிரியயை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அரசியல் மயப்படுத்தி இன உணர்வுகளைத் தூண்டிவிடுவது தமிழ் தேசியத்தின் அயோக்கிய அரசியலே.

இன்றைய காலகட்டத்தோடு மட்டும் தொடர்புபடுத்தி பெளத்தத்தை சிங்கள மக்களின் மதமாகக் காட்டுவது தமிழ் மக்களின் வரலாற்றை இருட்டடிப்புச் செய்வதாகவே அமையும். இலங்கைக்கு பெளத்தத்தை கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் தமிழர்களே. பெளத்த மத காப்பியங்களான சீவக சிந்தாமணி, குண்டலகேசி இரண்டுமே தமிழில் தான் படைக்கப்பட்டன. கலாநிதி எஸ் தியாகராஜா வின் ‘பெளத்தம் வளர்த்த தமிழர்கள்’ ஆய்வுக் கட்டுரை தேசம் சஞ்சிகையில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டு தேசம்நெற் இணையத்தில் அதே தலைப்பில் மறுபிரசுரம் செய்யப்பட்டும் உள்ளது.

வடமாகாணம் சிங்கள மயமாகிறது பெள்த்த மயமாகிறது முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தின் வர்த்தகத்தை பிடிக்கிறார்கள் காணியைப் பிடிக்கிறார்கள் குறைந்த சாதியினர் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கின்றனர் போன்ற தமிழ் தேசியம் கட்டவிழ்த்துவிடும் வதந்திகளும் துவேசமும் வாக்கு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியலே. இவர்கள் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததும் தமிழ் பொலிஸார் தான் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இவர்கள் ஒரு போதும் கேட்பதில்லை.

சிங்கள இனவாதத்துக்கு தமிழ் இனவாதமும் மறுதலையாகவும் இரு பக்கத்திலும் இந்த தேசியவாத ஒட்டுண்ணி அரசியல் ஒன்று மற்றயதற்கு துணையாக இரு தரப்பு மக்களையும் எதிரிகளாக்கி ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கி கழிவுண்டு வாழ்கின்றன.

(தொடரும்)

உங்கள் கருத்து
 1. valli-puram on January 4, 2018 8:38 pm

  “ஆகவே 1991 முதல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாக விகாராதிபதியின் தகனக் கிரியயை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அரசியல் மயப்படுத்தி இன உணர்வுகளைத் தூண்டிவிடுவது தமிழ் தேசியத்தின் அயோக்கிய அரசியலே.”

  1991 முதல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாக விகாராதிபதி அந்த பிரதேச மக்களுக்காக்க செய்த புனித சேவைகள் பற்றி ஆசிரியர் கூற தவறிவிட்ட்து மனவருத்தத்தை தருகிறது. அவரது மரண சடங்கில் ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து விடுத்தேன். ஆனால் எமது சிங்கள இராணுவ சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகின்றது. இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதியும் அவர்கள் குழுக்களும் , ஈபிடிபி தலைவரும் கலந்து கொள்ளாதது ஏமாற்றத்தை தருகின்றது. பௌத்தமதத்திற்கு இந்த நாட்டில் முன் உரிமை வழங்கியும் ஒரு முக்கிய சமூக சேவகரானா இந்த விகாராதிபதிக்கு ஒரு மண்டபம் நல்லூர் ஆலயத்தினுள் எழுப்ப வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.


 2. T Jeyabalan on January 5, 2018 6:45 pm

  வடமாகாணம் முழுவதும் முழுவதும் ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றங்களைச் சேர்ந்தவர்கள் ஏன் வரவில்லை என்பது எனக்கும் தெரியவில்லை. அவர்கள் ஹொலிடே சென்றுவிட்டனரோ தெரியவில்லை. நல்லூரில் கிருஷ்ணபகவானின் 10வது அவதாரம் புத்தருக்கு மண்டபம் எழுப்ப வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே வல்லிபுரத்தின் தாழிமையான வேண்டுகோள் சிலசமயம் நிறைவேறலாம்.


 3. valli-puram on January 6, 2018 10:02 am

  “ஆகவே வல்லிபுரத்தின் தாழிமையான வேண்டுகோள் சிலசமயம் நிறைவேறலாம்.”
  வல்லி புரத்தின் வேண்டுகோள் நாகவிகாராதிபதிக்கு ஒரு மண்டபம் மட்டும் தான் , புத்தருக்கு மண்டபம் எழுப்புவது அல்ல. புத்தருக்கு சிலை வைப்பதற்கு மகிந்த தலைமையில் ஒரு குழு நியமித்து இருப்பதாக சோனியா காந்தி சொன்னதாகவும் பரவலாக பேசப்படுகிறது.


 4. BC on January 6, 2018 3:21 pm

  ஜெயபாலனின் நியாயபூர்வமான கருத்து.


 5. valli-puram on January 7, 2018 12:21 pm

  மன்னார் மாவடட குறுந்தேசிய இனவாதிகளான மன்னார் பிரஜைகள் குழுவின் அறிக்கையும் எமக்கு கவலை தருகிறது. புத்தர் எமது முதல் கடவுள். அவருக்கு யார் சிலை அமைத்தாலும் அதனை ஏன் நாம் எதிர்க்கவேண்டும். அதுவும் காலம் காலமாக தமிழ் நாட்டில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களை பாதுகாப்பது எமது சிங்கள இராணுவத்திற்கு எதிராக குரல் எழுப்புவது வேதனையை தருகிறது.

  “மன்னார் மடு தேவா­லய நுழை­வாயில் அரு­கா­மையில் இரா­ணுவத்தி­னரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கும் எடுக்கும் முயற்­சியை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறி மன்னார் பிர­ஜைகள் சங்­கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலா­சார அமைச்­ச­ருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்­வைத்­துள்­ளன.”


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு