கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா; உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு

ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியீடு மிகச்சிறப்பாக கிளிநொச்சி லிற்றில் எய்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நூல் வெளியீடு முற்றிலும் இளம் தலைமுறைப் பெண்களினாலேயே நடாத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ‘மனிதம்’ குழவைச் சேர்ந்த இளம் பெண்கள் (படம்) இந்நிகழ்வை திறப்பட நடத்தினர்.

புத்தக வெளியீட்டுக்கு தலைமையேற்ற செல்வி வர்ஷனா வரதராசா இந்நூல் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தையும் இந்தப் பெண் ஆளுமைகள் பற்றிய அனுபவம் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

இப்பெண் ஆளுமைகள் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள். பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்க வாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்) இலக்கியம் (தாமரைச்செல்வி), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தபவன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து. இவர்கள் யாரும் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு வாழவில்லை. தங்களையும் சமூகத்தில் ஒருவராகப் பிணைத்துக்கொண்டு தங்களது நாளாந்த வாழ்வியலோடு சமூகத்திற்கான சேவையை வழங்கி வந்தனர் அல்லது வழங்கி வருகின்றனர்.

கிரேக்க தத்துவஞானிகள் பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை உரைநடையூடாகவே எடுத்துச் சென்றது போல் இந்நூலாசிரியர் ஹம்சகௌரியும் தன்னுடைய கருத்துக்களை உரைநடையூடாகவே எங்களைப் போன்ற இளம் சந்ததியினருக்கு கொண்டு சென்றுள்ளார் என நூலின் வெளியீட்டுரையை வழங்கிய செல்வி விராஜினி காயத்திரி இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நூல் ஒருவரில் அல்ல எம்போன்ற பலரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த காயத்திரியின் கருத்துக்கள் ஏனைய ஆய்வாளர்களின் உரைகளிலும் எதிரொலித்தது. இந்நூலின் முதற் பிரதி, இந்நூலில் குறிப்பிடப்பட்ட ஆளுமைகளில் ஒருவரான அமரத்துவமடைந்த கலாலக்ஷ்மி தேவராஜா அவர்களுடைய மகள் அபிலாஷா தேவராஜாவுக்கு வழங்கப்பட்டது.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா

‘உறுதிகொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம்’ என்ற தலைப்பில் செல்வி ஹர்த்தாயினி இராஜேஸ்கண்ணா தனது நூலாய்வை மேற்கொண்டார். ‘பெண்ணியம் சார்ந்து பேசுவதை பெண்ணியம் பற்றிப் பேசுவதை விரோதமாகப் பார்க்கின்ற போக்கு இன்னமும் காணப்படுகின்றது. பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு சில பெண்களுக்கே போதாமையாகவுள்ளது. போதைவஸ்துவுக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அதனைச் செய்வதை பெண்ணியம் என்று வியாக்கியானப்படுத்துபவர்களும் எம்மத்தியில் உள்ளனர்’ என உணர்ச்சி பூர்வமாக உரையாற்றிய ஹர்த்தாயினி ‘சமத்துவமின்மையின் மூலங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்’ என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘இந்த ஆடை அணிந்தால் தான் நீ என் காதலியாகலாம், மனைவியாகலாம் என்ற வரைக்கும் அன்பின் பேரில் கட்டளையிடும் ஆண்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் நாங்கள் பெண்கள் தான். நாங்கள் ஏன் அதற்குப் பணிய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பிய ஹர்த்தாயினி ‘பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். ‘இந்த நூலில் உள்ள பெண்கள், ஒரு தலைமுறைக்கு முன்னதாக பெண்கள் வெளியே செல்லவே தடைகள் இருந்த காலத்தில் சாதித்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எங்களால் முடியாது?’ என அவர் சபையில் இருந்த இளம் தலைமுறையினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தனதுரையில் ‘சாதாரணமான எங்கள் தாய்மாரை சகோதரிகளை பிள்ளைகளை ஏன் எங்களால் மாற்ற முடியாது?’ என்ற கேட்ட ஹர்த்தாயினி சமூகம் பாதிக்கப்பட்ட நலிந்த பெண்களுக்கே பாதிப்புகளைக் கொடுக்கின்றது. கணவரை இழந்து அல்லது கைவிடப்பட்ட பெண்கள் வாழும் அயல்வீடுகளைக் கேட்டால், இந்த சமூகம் இவர்களை எப்படிப்பார்க்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம். அப்படியிருந்தும் அப்பெண்கள் சவாலாக வாழ்கின்றனர். கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’ என ஆக்கிரோசமாக பெண்கள் தங்கள் சுயத்தில் நிற்பதற்கு கல்வியை வலியுறுத்தினார்.

அவர் தனது உரையின் இறுதியில் இதில் உள்ள பத்தது பெண் ஆளுமைகள் மட்டுமல்ல நூலாசிரியர் ஹம்சகௌரியோடு 11 பெண் ஆளுமைகளும் திருமணத்துக்கும் பின்னும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் உண்மையிலேயே முன்னுதாரணமானவர்கள். பெண்களுக்கு திருமணம் ஒரு தடையல்ல. எனது அடையாளத்தை தக்க வைக்க எனது பெண்ணியத்தை முன்னெடுக்க எனக்கு திருமணம் ஒரு தடையாக அனுமதிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்து தன்னுடைய விறுவிறுப்பான உரையை நிறைவு செய்தார்.

சாதியம் உணர்வு நிலையில் மாற்றம் நிகழவில்லை செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசா:

உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் செல்வி மயூரகா ஸ்ரீகந்தராசா உரையாற்றினார். பெண்களது நிலையென்பது கயிற்றில் கட்டப்பட்ட பட்டத்திற்கு ஒப்பானதாக இன்னும் சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டடினார். ‘பிரேமளா சிவசேகம் அவர்கள் அன்றைய சுழலில் இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளராக ஆனாது ஆச்சரியமானதாகவும் அதே சமயம் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை எங்களையே நாங்கள் கேட்க வைப்பதாகவும் இருக்கின்றது என மயூரகா தெரிவித்தார்.

இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆளுமையுமே ஒவ்வொரு நூல்கள். அவர்களுடைய அனுபவங்களை நூலாசிரியர் பகிர்ந்துகொள்ள எடுத்த முயற்சி அளப்பெரியது என விதந்துரைத்தார் மயூரகா. ‘புத்தக மூலமான இந்தப் பயணம் எங்களைப் போன்ற பெண்களை எங்கள் comfort zone கொம்போர்ட் சூனில் இருந்து வெளியே வர வைக்கின்றது. செல்வி திருச்சந்திரன் குறிப்பிட்ட சாதியம் பற்றிய குறிப்புகள் மிக அருமையான பதிவு. சாதியம் எவ்வாறு சமநிலையைக் குழப்புகின்றது என்பதை அது துல்லியமாகக் காட்டுகின்றது. நாங்கள் இதனையெல்லாம் கடந்துவந்துவிட்டோமா?’ என்று கேள்வி எழுப்பிய மயூரகா ‘உணர்வுநிலையில் மாற்றம் நிகழவில்லை’ என்ற உண்மையை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘தங்கைகளா எங்களாலும் முடியும். எழுந்து வாருங்கள்’ செல்வி நிவேதா சிவராஜா:

‘உறுதிகொண்ட நெஞ்சினரின் சமூகப் பார்வை’ என்ற தலைப்பில் செல்வி நிவேதா சிவராஜா நூல்பற்றிய தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார். தன்னை சமூகத்தின் மீது காதல் கொண்டவளாக ஒரு சமூகக் காதலியாக அறிமுகப்படுத்திய அவர் இந்த பத்து ஆளுமைகளும் அந்த அளுமைகளை ஆவணப்படுத்திய ஆளுமையும் தன் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டதாக நிவேதா தெரிவித்தார். ‘இவர்கள் எல்லோரும் எங்களைவிட ஒரு தலைமுறை கடந்தவர்கள். அவர்களுடைய சமூகம் பற்றிய பார்வை எங்களுக்கு ஒரு வழிகாட்டல். முன்ணுதாரணம். அதனையே இந்நூலைப் பதிப்பித்த தேசம் ஆசிரியர் த ஜெயபாலன் தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார் நிவேதிதா.

‘தேசம் த ஜெயபாலன் குறிப்பிட்டது போல பெண்கள் இன்னமும் இரண்டாம் நிலையில் நோக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவோடு தான் தேசம் ஜெயபாலன் இந்நூலை வெளியிட்டுள்ளார். அவருடைய அந்தக் கனவை நாங்களும் இன்று சுமக்கின்றோம்’ என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த நிவேதிதா ‘தம்பிகாளா! தங்கைகளா!’ உங்களுடைய பொறுப்புக்களை நீங்கள் சுமக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘இந்நூலை வாசித்த பின்னரே கிளிநொச்சியில் இப்படியொரு பாடசாலை – விவேகானந்தா வித்தியாலயம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் வாசிக்கும் போது ஜெயா மிஸ் என்று தோண்றியது. வாசித்து முடிக்கையில் ஜெயா அம்மா என்று அழைக்கத் தோண்றியது. அவருடைய சமூகப் பங்களிப்பு என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. நாங்கள் மனிதம் அமைப்பினூடாக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு விவாகானத்தா வித்தியாலயத்தை பாரக்க வேண்டும் அதிலிருந்து நாங்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியுள்ளது’ என நிவேதிதா உணர்வுபூர்வமாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘எங்களை நாங்களே 90’ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் (ருகெ கிட்ஸ்) என்று சொல்கின்றோம் ஆனால் நடக்கவே சலித்துக் கொள்கிறோம். ஆனால் எழுபதுக்களையும் கடந்து ஒடிவிட்டு வந்திருக்கிறார் அகிலத்திருநாயகி அமையார். இந்த ஆளுமைகள் எல்லாமே இன்னும் இம்மண்ணில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் இன்னும் வெளிநாட்டு மோகத்தோடு தான் இருக்கின்றோம். இங்கு எங்கள் முன்னுள்ள வாய்ப்புகளைப் பார்க்காமல் தடைகளை மட்டுமே பார்க்கின்றோம்’ என்று குறிப்பிட்ட நிவேதா மீண்டும் ‘தம்பிகளா! தங்கைகளா!’ என்று விழித்தார்.

‘இவர்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விட்டார்கள். அவர்களுடைய பொறுப்பை சரிவரச் செய்துவிட்டார்கள். நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறைக்கு முன்ணுதாரணமாக வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தங்கைகளா எங்களாலும் முடியும் என்பதைக் காட்டத் தயாராகுங்கள்’ என்று அழைப்பு அறைகூவல் விடுத்தார். ‘நாங்கள் இந்த பூமியில் இருந்துவிட்டு வாடகை செலுத்தாமல் சென்றுவிடக்கூடாது. எங்கள் வாடகையை நாங்கள் செலுத்த வேண்டும்’ என்ற பொறுப்பை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு நிவேதா தன்னுரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியில் ஹம்சகௌரி சிவஜோதி நூலில் உள்ள ஆளுமைகளோடு தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இருந்த உறவுபற்றி கனத்த இதயத்தோடு சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இறுதியாக சிவஜோதியின் தந்தையார் நன்றி தெரிவித்து நிகழ்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நவம்பர் 20இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இருநூறு பேருக்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்தவர்களும் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *